திருமுதுகுன்றம்


பண் :

பாடல் எண் : 1

கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்
கருதுவார்க் காற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவொன் றாட்டு வானைக்
கொல்வேங்கை யதளானைக் கோவ ணன்னை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

கண்ணின் கருமணியைப் போன்று அருமையானவனாய், பொற்குன்று ஒப்பவனாய், தியானிக்கும் அடியவர்களுக்கு மிகவும் எளியவனாய், நல்ல நிறமுடைய மாணிக்கமாய், கொடிய பாம்பு ஒன்றினை ஆட்டுபவனாய், வேங்கைத்தோலை உடுத்தவனாய், கோவணம் அணிந்தவனாய், சிந்தாமணியாய், தன்னைச் சரணம் புகுந்தவர்களுக்கு அமுதம் போன்று இனியனாய், பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், அடியேன் சரணடைந்த வீடுபேறாகிய செல்வத்தை நல்கும் மணியாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினையை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.

குறிப்புரை :

கருமணி, கண்ணில் உள்ளது. கனகம் - பொன். ``கனகத்தின்`` என்பதில் `இன்` அல்வழிக்கண் வந்த சாரியை. ``கருதுவார்க்கு ஆற்ற எளியான்`` என்பது மேலே (ப.23. பா.1) வந்தது. குருமணி - நிறம் வாய்ந்த மணி. ``கோவணவன் தன்னை`` என்பது பாடம் அன்று. அருமணி - கிடைத்தற்கு அரிய மணி. திருமணி - அழகிய மணி. ``கருமணி`` முதலியன உவமையாகு பெயர்கள். `அறியாதிருந்தமைக்குக் காரணம் தீவினை` என்பது உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. அறிதலினின்றும் பிரித்தலின், ``அறியாதே`` என்னும் ஏகாரம் பிரிநிலை. திகைத்தல் - மயங்குதல். `திகைத்தவாறு இரங்கத் தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 2

காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப்
பால்மதியஞ் சூடியோர் பண்பன் தன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப்
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப்படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளி வழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

கார்ஒளிய - கரிதாகிய ஒளியினை உடைய. ``கபாலி`` என்புழியும் இரண்டனுருபு விரிக்க. பாரின்கண் உள்ள ஒளி, ஞாயிறு திங்கள் விண்மீன்கள். பாதலத்தில் உள்ளது இருளாகலின், ``பாதாளனை`` என்பதற்கு, `அதன்கண் உள்ள இருளானவனை` என உரைக்க; `ஒளியும் இருளும் அவனே` என்றதற்கு இவ்வாறு ஓதியருளினார். ``பாதாளத் தானை`` என்பது பாடம் அன்று. `சூடிய` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``ஓர் பண்பு`` என்றது, சார்ந்தாரைக் காத்தலை. பேரொளி - எல்லா ஒளிகட்கும் முதலாய் உள்ள ஒளி. பேணுவார்- விரும்பிப் போற்றுவார். பேணி - குறிக் கொண்டு. சீர்ஒளி - (வினை தீர்க்கப்பெற்றார் புகழும்) புகழ்களை உடைய ஒளி; வினை, இருளோடொப்பது ஆகலின், அதனை நீக்குபவனை, ``ஒளி`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 3

எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை
முளைத்தெழுந்த செழும்பவளக் கொழுந்தொப் பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

எல்லாத் திசைகளிலும் தேவர்களால் தொழப்படுபவனாய், இடப வாகனனாய், அடியேன் என் தலைவன் என்று பக்தி யோடு பணியத் தன்னைப் பல நாளும் பாமாலை பாடப் பழகுவித்தவனாய், முத்து, மணி, மாணிக்கம், முளைத்தெழுந்த செம்பவளக் கொத்து என்பன போலக் கண்ணுக்கு இனியவனாய், எல்லாம் செய்ய வல்லவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

`வானவர்கள் எத்திசைக்கண்ணும் தொழ ஆங்கு நின்றானை` என்க; தேவர்கள் ஆங்காங்குத் தத்தமக்குரிய இடங்களில் நின்று தம் தம் தொழிலைச் செய்துவருதலின், அவர்கள் ஆங்காங்கு அத்தொழிலை இனிது நடாத்தி வாழ்தற்பொருட்டுத் தொழுவாராகலின், அவர்கட்கு ஆங்காங்கு நின்று அருளல் வேண்டுவதாயிற்று; `வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் - தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி`` (தி.8 திருவா. திருச்சதகம் - 16) என்று அருளியது காண்க. `பணிந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ``புகழ்புரிந்தில்`` (குறள் - 59) என்பதிற்போல. `பணிந்து பாட` என்று இயைத் துரைப்பினுமாம். பன்னாள் பாமாலை பாட அருளினமையை நினைந்து உருகி அருளிச்செய்தார். பவளம், `கொடி` எனப்படுதலின், ``முளைத்தெழுந்த`` என்று அருளினார். சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன்.

பண் :

பாடல் எண் : 4

ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்திரிந்து காண்டீப மேந்தி னானைக்
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்தெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு
தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த
தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

உடம்பில் கருவாகி நின்ற உயிருக்குள் ஒளி வடிவாய் உள்ளவனாய், உத்தமனாய், அடியார் மனத்தில் உறைபவனாய், காட்டில் வேடனாய்த் திரிந்து அருச்சுனன் பொருட்டுக் காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனாய், கார்மேகம் போன்ற நீலகண்டனாய், கனலாகவும், காற்றாகவும் உள்ளானாய், தானே ஆராய்ந்து அடியேனைத் தன் அடிமையாகக் கொண்டு தன்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்த கரும்பு போன்ற இனியனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

ஊன் - உடம்பு. அதனுள் நின்ற கரு, உயிர்; அதனுள் நின்ற சோதி இறைவன் என்க. கான் - காடு. காண்டீபம் - வில். `காண்டீபம் ஏந்திக் கான் திரிந்தான்` என்க; இது செய்தது அருச்சுனன் பொருட்டு. தெரிந்து - உரிய பொழுதைத் தெரிந்து. அங்கு - அப்பொழுது; `அங்கே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. அருள் பெறும் நிலையை உயிர்கள் அடையுமாயின் இறைவன் சிறிதும் தாழ்த்தல் இன்றி அப்பொழுதே அருளுவனாகலின், ``அங்கு ஆளாக் கொண்டு, தன்னுடைய திருவடி என் தலைமேல் வைத்த`` என்று அருளினார். `தீங்கரும்பு` இன எதுகை. `தீன்கரும்பை` எனப் பாடம் ஓதுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 5

தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சம்மாய்
மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்து, தாமரையில் உறையும் பிரமனும் தானேயாகி, ஐம்பூதங்களும், மேலுலகும், அதற்கு அப்பாலும் இப்பாலுமாய்ப் பரந்து, சங்கு மணியையும், முத்தையும் அணிந்து, அடியவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வைதிக சமயங்களாகிய வழியானவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

`தாமரையானாகிய நான்முகன்` என்க. உம்மை, ஏனை இருவரையுங்கொள்ளநிற்றலின் எச்சம். மேலுலகுக்கு அப்பாலாய் இப்பாலுமாம் நிலையை அருளுவதே திருவுள்ளமாகலின், தக்கன் வேள்வி தகர்த்தது முதலியவற்றை எச்சமாக்கி அருளினார். அக்கு - எலும்பு. `அக்கினையும் முத்தினையும் ஒப்ப அணிந்து` என்றது, வேண்டுதல் வேண்டாமை இன்மையைப் புலப்படுத்தி, அறுசமயத்தார்க்கு அருளும் அருள்வேறுபாட்டினால், அவன் கோட்டம் இலனாதலைத் தெரிவித்தற்பொருட்டு. ``அறுசமயங்கள்`` என்றது உட் சமயங்கள்; அவை (ப.50. பா.7 குறிப்புரை) குறிக்கப்பட்டன. சமயங்கள் அவரவரது அறிவு நிலைக்கு ஏற்ப அமைந்தனவாகலின், அவற்றால் அடையும் பயனும் வேறுபடுவவாயின; எனினும், `இறைவன் உண்மை கொள்வார் அனைவரும் தொண்டரே` என்பது, ``தொண்டர்க்கு`` என்றதனால் பெறப்பட்டது. சேக்கிழார் நாயனாரும், திருஞானசம்பந்த சுவாமிகளது திருமணத்தில், ``ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும்`` (தி.12 திருஞான. புரா. 1252) வீடுபெற்றமை தெளிவித்தருளினார். திக்கு - கதி; அறுசமயத்தவர்க்கும் அவனே கதியாகலின், ``அறுசமயம் ஆகி நின்ற திக்கு`` என்று அருளிச்செய்தார்.

பண் :

பாடல் எண் : 6

புகழொளியைப் புரமெரித்த புனிதன் தன்னைப்
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் தன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக்
கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

புகழாகிய ஒளியை உடையவனாய், திரிபுரத்தை எரித்த தூயோனாய், பொன்னிறம் அமைந்த திருமேனியனாய், பழமையானவனாய், விண்ணின் பண்பாகிய ஒளியும் திருவிழாக்களில் கேட்கப்படும் ஒலியும் ஆகியவனாய், வெண்காட்டில் உறையும் விகிர்தனாய், கால்களில் அணிந்த கழல்களின் ஒலியும் கைவளைகளின் ஒலியும் சிறக்க வீடுகள் தோறும் பிச்சைக்கு என்று சஞ்சரிக்கும் மேம்பட்ட ஒளியை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

புகழ் ஒளி - யாவரும் புகழும் ஒளி. பொன் பொதிந்த - பொன்னை நிறைத்து வைத்தது போலும். புராணன் - பழையோன். விண் ஒலி - விண்ணினது பண்பாகிய ஒலி; அஃது எடுத்தோதிய விழவொலி ஒழித்து ஒழிந்த எல்லாவகை ஒலிகளையும் குறித்து நின்றது. ``கைவளை`` என்றது, கங்கணத்தை. பிட்சாடன வடிவத்தில் அழகிய அணிகளும் கொள்ளப்பட்டன என்க. கடைதோறும் - வாயில்கள் தோறும். திகழ்ஒளி - தானே விளங்கும் ஒளி.

பண் :

பாடல் எண் : 7

போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்
புலியதளே உடையாகத் திரிவான் தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும்
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் தன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்
வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

யானையை உரித்த தோலைப் போர்த்துத் திருமேனியின் ஒளி சிறக்குமாறு புலித்தோலை உடுத்துத் திரிவானாய், பொறிவாயில் ஐந்தவித்தானாய், முப்புரங்களையும் வெகுண்டவனாய், காலனைத் திருவடியால் உதைத்தவனாய், மேம்பட்ட கூத்தினை நிகழ்த்துபவனாய், பத்தர்களாய் வணங்கும் அடியார்களுடைய வலிய வினைகளும், அவற்றால் நிகழும் நோய்களும், நீங்குமாறு மருந்தாகி அவற்றைப் போக்கியவனாய், திருமுது குன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

`ஆனையின் உரிதோல் பொங்கப் பொங்கப் போர்த்துத் திரிவான்` எனக் கூட்டுக. ``ஆனையின்னுரிதோல்`` என்பதில் னகரம், விரித்தல். பொங்குவது, திருமேனியின் ஒளி; `ஆனையை உரித்த ஞான்று கொண்ட திருமேனியின் பேரொளியைக் காணமாட்டாது தேவர்கள் கண்ணொளி இழக்க, அத்துன்பம் நீங்குதற் பொருட்டுச் சிவ பிரான் அவ்யானையின் தோலைத் திருமேனிமறையப் போர்த்துக் கொண்டான்` என்பதே புராணம் ஆதல் உணர்க. காத்தான் - அடக்கினான். மாத்து ஆடி - மகத்தாக (பெரிதாக) ஆடல் புரிந்து. ``ஆடி`` என்பதனை, ``ஆகி`` என்பதனோடாயினும், ``வணங்கும்`` என்பதனோடாயினும் முடிக்க. மணி மந்திரங்களையும் கொள்ள நிற்றலின், ``மருந்தும்`` என்னும் உம்மை, எச்சம்; சிறப்புமாம்; ஏததேச உருவகமாகலின், `வல்வினையாகிய நோய்` என உரைக்க. `வினை வேரறும் வண்ணம்` எனச் சினைவினை முதலொடு சார்த்தி அருளப்பட்டது; `வினையது வேர்` என்றும், `வேரோடறும் வண்ணம்` என்றும் உரைப்பினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 8

துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் தன்னை
மறவாதே தன்திறமே வாழ்த்துந் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

இயல்பாகவே உடம்பு இன்றி இருப்பவனாய், சோதி வடிவினனாய், தான் பிறப்பெடுக்காமல் பிறவி எடுக்கும் உயிர்களுக்கெல்லாம் தானே நலன் செய்பவனாய், பெண்ணுருவும், ஆண் உருவுமாக இருப்பவனாய், தன்னை மறவாமல், தன் பண்பு செயல்களையே வாழ்த்தும் அடியவர்களின் உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்றிருக்கும் பண்பினை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

யாக்கையைத் துறவாதே துறந்தமையாவது, இயல்பாகவே உடம்பின்றி இருத்தல். ``தானே ஆகி`` என்னுமிடத்து, `துணை` என்பது வருவிக்க. பிறவாதே எவ்வுயிர்க்கும் தானே துணையாதலாவது, தோன்றாது நின்றும் ``இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்`` (தி.7. ப.29. பா.1.) என வியக்குமாறு, அருளாலே வேண்டும் வடிவங்கொண்டு, இம்மெனத் தோன்றியும் இம்மென மறைந்தும் உயிர்கட்கு வேண்டும் நலங்களைப் புரிந்தருளுதல்; இதனால், கருவாய்ப்பட்டுப் பிறந்து, உணவினால் வளர்ந்து வாழ்ந்து மாயும் உடம்புகளைத் தம்வயத்தாலன்றி வினைவயத்தாற் பெற்றுப் பிறந்தே நிற்பார் உயிர்கட்கு மெய்த்துணைவர் ஆகாமை பெறப்பட்டது. அனவரதம் - எப்பொழுதும். ``திறல்`` என்றது, அறிந்தாங்கறிதலை.

பண் :

பாடல் எண் : 9

பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்
புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் தன்னைக்
கருதாதார் புரமூன்றும் எரிய அம்பால்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

பொன்மயமான தூண்போல்பவனாய், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டினை ஏந்தி மேல் உலகம் எல்லாம் திரிபவனாய், பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், முழுமுதற் கடவுளாய், எல்லா உலகங்களிலும் விரவி நின்று, தனக்கு இறுதி யில்லாது கற்றூண்போல அவற்றைத் தாங்குபவனாய்க் காளத்தி மலையில் உறைபவனாய், பகைவருடைய மும்மதில்களையும் எரியுமாறு வில்லால் அழித்தவனாய், திருமுதுகுன்றம் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

``பொற்றூண்`` என்றது, உயர்வுபற்றி அருளிய உவமை; ``மாசொன்றில்லாப் பொற்றூண்காண்`` (ப.8. பா.1) என மற்றோர் இடத்தினும் அருளிச்செய்தார். ``புவலோகம்`` என்றது, அதனை முதலாக உடைய மேலுலகங்களைக் குறித்த ஆகுபெயர். உழிதந்தது, பிச்சை ஏற்றற் பொருட்டு. `மூவுலகின் கண்ணும்` என உருபு விரிக்க. ``கற்றூண்`` என்றது உருவகம்; `எல்லா உலகங்களிலும் விரவி நின்று அவற்றை நிலைபெறுவிக்கின்றவன்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 10

இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி
யெழுநரம்பி னிசைபாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப்
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

பொழிப்புரை :

தன்னை இகழ்ந்து, கயிலையை அசைத்த இராவணனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு விரலை ஊன்றி, அவன் ஏழுநரம்புகளைக் கொண்டு இசைபாட, அதனை இனிது கேட்டு, அவன் இசை ஞானத்தைப் புகழ்ந்தவனாய், பூந்துருத்தியில் உறையும் புண்ணியனாய், தேவர்களுக்குச் செல்வமாய், பார்வதி பாகனாய் மகிழ்ந்தவனாய், பிறையைச் சடையில் சூடித் திருமாலைத் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

குறிப்புரை :

இகழ்ந்தான் - அவமதித்தவன்; மதியாது கயிலையைப் பெயர்த்தவன்; இராவணன். `அவன் பாட` என எடுத்துக்கொண்டு உரைக்க. புகழ்ந்தான் - மகிழ்ந்தான். பூந்துருத்தி, சோழநாட்டுத் தலம்.
நிதி - நிதிபோன்றவன்; அம் தன் சாரியைகள். மகிழ்ந்தான் - இன்புற்றான்; `பாகம் வைத்து மகிழ்ந்தான்` என்க. திருமாலை ஒரு பாகத்தில் திகழக் கொண்டமை, மேலே காட்டப்பட்டது.
சிற்பி