திருப்பள்ளியின் முக்கூடல்


பண் :

பாடல் எண் : 1

ஆராத இன்னமுதை அம்மான் தன்னை
அயனொடுமா லறியாத ஆதி யானைத்
தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச்
சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை
நீரானைக் காற்றானைத் தீயா னானை
நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த
பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

தெவிட்டாத இனிய அமுதமாய்த் தலைவனாய் , பிரமனும் திருமாலும் அறியாத முதலவனாய் , கொன்றை மாலை அணிந்த சடையனாய் , நன்மை தருபவனாய் , ஒப்பற்றவனாய் , நீராய் , தீயாய் , காற்றாய் , நீண்ட வானமாய் , ஆழ்ந்த கடல்கள் ஏழும் சூழ்ந்த நிலனாய்ப் பரந்து இருக்கும் பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

ஆராத - நிறையாத ; தெவிட்டாத . ` நீரான் ` முதலியவற்றிற்கு , ` நீராய் உள்ளவன் என்றாற்போல உரைக்க , பயிலுதல் , ஈண்டு . ` நூலைப் பயிலுதல் ` என்பது போலப் பலகாலும் சிந்தித்தல் முதலியன செய்து வழிபடுதல் . ` பாழ் ` என்றது , ஆகுபெயராய் பயனில்லாத நெறியை ( சமண சமயத்தை ) க் குறித்தது ; எப்பொருட்கும் முதல்வனாகிய இறைவனை உளன் என்று ஒருதலையாகத் துணியாது , ` உளனோ , இலனோ ` என ஐயுற்று நிற்றலின் சமண் சமயம் பாழ் நெறி ( பயனில்லாத நெறி ) ஆயிற்று . ` அஃது ஐயத்தை உடைய நெறியே ` என்பதனை , ` அத்தி நாத்தி ` ( உண்டு இல்லை ) என்னும் அதன் தத்துவக் கொள்கையே இனிது விளக்கும் . அதுபற்றியே , ` ஐயுறும் அமணரும் ` ( தி .1. ப .128. அடி . 36. ) என்று அருளிச் செய்தார் , ஆளுடைய பிள்ளையார் . ஐயத்தையுடையார் வீடுபேறு எய்தாமை , ` ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் - வானம் நணிய துடைத்து ` ( குறள் . 353.) என்னும் பொதுமறையான் இனிது விளங்கிக் கிடந்தது ; ஆகவே , சமண் சமயத்தை சுவாமிகள் . ` பாழ்நெறி ` என்று கூறி அதன் உண்மை யுணர்த்தி யருளினார் என்க . ` பாழின்கண்ணே ` என உருபு விரிக்க . ஏகாரம் பயனுடைய நன்னெறியினின்று பிரித்தலின் , பிரிநிலை . ` பாழே ` என்பதற்கு ( இவ்வாறன்றி , ` பாழாகவே பயனின்மை உண்டாகும்படியே )` என ஆக்கம் வருவித்து உரைப்பினும் ஆம் . ` உழன்றவாறு இரங்கத்தக்கது ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை
வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்
சடையானைச் சாமம்போல் கண்டத் தானைத்
தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை
அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க
அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்
படையானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

காளை வாகனனாய் , தேவர்களால் தியானிக்கப் படுபவனாய் , வேதம் ஓதுபவனாய் , வெண்பிறை சூடிய சடையனாய் , நீலகண்டனாய் , மெய்ப் பொருளாய் , ஒப்பற்றவனாய் , பகைவருடைய மும்மதிலும் தீயில் மூழ்க அழிக்கும் அம்பினைக் கோத்து எய்தவனாய் , கூரிய சூலப் படையை உடையவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

எண்ணத்தான் - தியானத்தின்கண் உள்ளவன் . சாமம் - கருமை . போல் , அசைநிலை . அயில் - கூர்மை .

பண் :

பாடல் எண் : 3

பூதியனைப் பொன்வரையே போல்வான் தன்னைப்
புரிசடைமேல் புனல்கரந்த புனிதன் தன்னை
வேதியனை வெண்காடு மேயான் தன்னை
வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்
ஆதியனை ஆதிரைநன் னாளான் தன்னை
அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்
பாதியனைப் பள்ளியின் முக்கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

நீறு அணிந்தவனாய் , பொன்மலை போல்வானாய் , முறுக்கேறிய சடையின் கங்கையை மறைத்த தூயோனாய் , வேதியனாய் , வெண்காட்டில் உறைவானாய் , வெண்மையான காளை வாகனனாய் , தேவர்களுக்கு எல்லாம் முற்பட்டவனாய் , திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவனாய் , தலைவனாய் , மை தீட்டிய கண்களை உடைய பார்வதிபாகனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

பூதியன் - வீபூதியை ( திருவெண்ணீற்றை ) அணிந்தவன் ; ` ஐசுவரியம் உடையவன் ` என்றலுமாம் . விண்ணோர்க்கு எல்லாம் ஆதியன் - எல்லாத் தேவர்கட்கும் முதலில் உள்ளவன் . ` முதற் கடவுள் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 4

போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும்
பொடியாக எய்தானைப் புனிதன் தன்னை
வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் தன்னை
மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்
தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்
சிறிதளவில் அவனுடலம் பொடியா வாங்கே
பார்த்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

யானையின் தோலைப் போர்த்தவனாய் , முப்புரங்களும் சாம்பலாகுமாறு அம்பு எய்தவனாய் , தூயனாய் , கச்சணிந்த முலையை உடைய பார்வதிபாகனாய் , அலைகள் கரையை அடைந்து மீண்டுவரும் கடலுள் தோன்றிய விடத்தை உண்டு , தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய் , மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத் தோன்ற விழித்தவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

` வார்த் தாங்கு ` என்பதில் தகரம் விரித்தல் . வார் - கச்சு . வனம் ( வன்னம் ) - அழகு . ` தென்றிசை` என்பது , காலன் ஊரைக் குறிக்கும் குறிப்பு மொழி . ` திசைக்கே ` , ` திசைக்கண்ணே ` என வேற்றுமை மயக்கம் . பொடியா - சாம்பலாகும்படி . ஆங்கே - அப்பொழுதே ; கண்ணுதற் கடவுளிடத்துக் காமன் , மலரம்புகளை ஏவித் தன் செயலைச் செய்தமை உலகம் அறிந்ததாகலின் , வாளா , ` ஆங்கே ` என்று அருளினார் ; எனவே , ` அவன் அம்பெய்த அந் நொடியிலே ` என்பது பொருளாயிற்று . பார்த்தான் - ( நெற்றிக் கண்ணால் நோக்கினான் ).

பண் :

பாடல் எண் : 5

அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்
அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்
கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்
கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே
தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத்
தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

தன்னைச் சரணாக அடைந்த அடியவர்பால் பாவங்கள் , துன்பங்கள் , நோய்கள் , பழைய தீவினைகள் , வறுமை என்பன அணுகாதவாறு அவற்றைப் போக்கியவனாய் , கார்முகில் போன்ற நீலகண்டனாய் , மிக்க வெகுளியை உடைய சலந்தரனுடைய உடலைச் சக்கரத்தாலே அழித்தவனாய் , ஒப்பற்றவனாய் , மெய்ப்பொருளாய் , உத்தமனாய் , தன்னைத் தியானிக்கும் அடியவர் நெஞ்சில் ஊன்றி யிருப்பவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

அடைந்தார் - தன்னை அடைக்கலமாக அடைந்தவர் . அல்லல் நோய்கள் - துன்பத்தைத் தரும் பிணிகள் . ` பாவங்கள் ` என்றது பிராரத்தத்தையும் , ` அருவினைகள் ` என்றது சஞ்சிதத்தையும் நோக்கி என்க . நல்குரவு - வறுமை . ` அவர்பாற் செல்லாவண்ணம் ` என உரைக்க . நேமி சக்கரம் . ` நேமியால் தடிந்தான் ` என்றதனால் , ` கடுஞ்சினத்தோன் ` என்றது , ` சலந்தரனை ` என்பது தெளிவு . ` சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடி ` என்றருளியதும் ( தி .8 திருவா . திருச்சாழல் . 18), கந்தபுராணம் ததீசி யுத்தரப் படலத்துள் சலந்தராசுரனைச் சிவபிரான் அழித்த வரலாற்றை விரித்துரைத்ததும் காண்க . படிந்தான் - ஊன்றியிருந்தான் .

பண் :

பாடல் எண் : 6

கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங்
கனலாடு திருமேனிக் கமலத் தோன்தன்
சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்
திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்
வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்
மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்
பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

சிவந்த சடையின் மீது கங்கை வெள்ளத்தை மறைத்தவனாய் , தீப்போன்ற சிவந்த தன் திருமேனிக்கண் பிரமனுடைய மண்டையோட்டினைச் சுமக்கும் கையை உடையவனாய் , தேவர்களுக்குத் தலைமைத் தேவனாய் , விளங்குகின்ற ஞானப்பிரகாசனாய் , தன் திருவடிகளைத் தியானிப்பவர் வருந்தாத வகையில் அவரைக் காப்பவனாய் , ஐம்பூதங்களாகி எங்கும் பரவியுள்ளவனாய் , உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத் தக்கது .

குறிப்புரை :

` கங்கை வெள்ளம் செஞ்சடைமேல் கரந்தான் ` என்க . ` கனலாடு ` என்றதில் ஆடு உவம உருபு . ` திருமேனிக்கண் கையானை ` என இயையும் ; ` உயர்ந்த திருவுருவில் இழிந்த தலையையும் தாங்கியுள்ளான் ` என அவனது அருள்விளையாட்டை வியந்து அருளிச் செய்தவாறு . இவ்வாறன்றி , ` கனலாடு திருமேனி ` என்றதனை , கமலத்தோனுக்கு அடையாக்குதல் பொருந்தாமை அறிக . வருந்தாமை - துன்புறாதபடி .

பண் :

பாடல் எண் : 7

நதியாருஞ் சடையானை நல்லூ ரானை
நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை
மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை
மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை
நிதியாளன் தோழனை நீடூ ரானை
நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்
பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய சடையினனாய் , குபேரனுக்குத் தோழனாய் , நல்லூர் , நள்ளாறு , நல்லம் , தேன் ஒழுகும் பொழில்களால் சூழப்பட்ட வாய்மூர் , மறைக்காடு , ஆக்கூர் , நீடூர் , நெய்த்தானம் , ஆரூர் என்னும் திருத்தலங்களில் உறைபவன் ஆகிய பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

நதி ஆரும் - கங்கை பொருந்திய . ஆரூர்போல , ` நல்லூர் , நள்ளாறு , நல்லம் , வாய்மூர் , மறைக்காடு ( வேதாரணியம் ), ஆக்கூர் , நீடூர் , நெய்த்தானம் ` என்பனவும் சோழநாட்டுத் தலங்கள் . மது வாரும் - தேன் ஒழுகுகின்ற , நிதியாளன் - குபேரன் .

பண் :

பாடல் எண் : 8

நற்றவனை நான்மறைக ளாயி னானை
நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந்
திருவாரூர்த் திருமூலட் டானம் மேய
கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக்
குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க் கென்றும்
பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

பெருந்தவத்தை உடையவனாய் , நான்கு வேத வடிவினனாய் , பெரியவனாய் , பகைவர் மதில்கள் மூன்றையும் அழித்தவனாய் , சிவந்த சடையின் மீது பிறையைச் சூடித் திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறையும் வெற்றியனாய் , கொடிய பாம்புகளைப் பூண்டவனாய் , தம் தேவையைக் கருதித் தன் தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்த அடியவர்களுக்கு என்றும் பற்றுக்கோடாக இருப்பவனாய் , உள்ள பள்ளியின் முக்கூட லில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன் . கொற்றவன் - தலைவன் ; ` கொற்றம் ( வெற்றி ) உடையவன் ` என்றே உரைத்தலுமாம் . கூர் அரவம் - மிக்க பாம்புகள் . தன் திறமே கொண்டார் - தனது தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்தவர்கள் . பற்றவன் - துணையாய் இருப்பவன் .

பண் :

பாடல் எண் : 9

ஊனவனை உடலவனை உயிரா னானை
உலகேழு மானானை உம்பர் கோவை
வானவனை மதிசூடும் வளவி யானை
மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனைக் கயிலாய மலையு ளானைக்
கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே
பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

ஊனாய் , உடலாய் , உயிராய் , ஏழுலகமுமாய் , தேவர்கள் தலைவனாய் , பரமபதமாகிய வீட்டுலகில் இருப்பவனாய் , பிறை சூடியாய் , வளவி என்ற தலத்தில் உறைபவனாய் , பார்வதி காணப் பன்றியின்பின் போன வேடனாய் , கயிலாய மலையில் உள்ளவனாய் , ஒன்றுபட்டு இளகி உருகும் அடியவருடைய நெஞ்சில் , அப்பொழுது கறந்த பால் போல் இனியவனாய் , பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

ஊனவன் - தசை முதலியனவாய் உள்ளவன் . உடலவன் - அத்தசை முதலியவற்றால் இயன்ற உடம்பாய் உள்ளவன் . உயிர் ஆனான் - அவ்வுடலின்கண் உள்ள உயிராய் இருப்பவன் . உலகு ஏழும் ஆனான் - அவ்வுயிர்கள் மாறிச் செல்லும் பல உலகங்களாய் இருப்பவன் . ` வானவன் ` என்றது , பிறவிப் பெயர் ; ` தேவராய் இருப்பவன் ` என்பது பொருள் ; இதனை , ` உம்பர் கோ ` என்றதற்கு முன்னர் வைத்து உரைக்க . உம்பர் கோ - தேவர்கட்குத் தலைவனாய் இருப்பவன் . வளவியான் - ` வளவி ` என்னும் தலத்தில் இருப்பவன் ; இது வைப்புத் தலம் . ` மலைமகள் முன் ` என்றது . ` அவள் காண ` என்றவாறு : ` காண்டலால் அவன் வருத்தத்திற்கு அவள் வருந்துமாறு ` என்பது திருக்குறிப்பு . வராகம் - பன்றி ; இஃது அருச்சுனனை அழிக்க வந்தது . கானவன் - வேட்டுவன் . கலந்து - ஒன்றுபட்டு . உருகி நைதல் , ஒருபொருட்பன்மொழி ; ` உருகி நினைவார் ` என்பதும் பாடம் . பானவன் - பருகப்படுபவனாய் உள்ளவன் ; இது , ` பானம் ` என்பது அடியாகப் பிறந்த பெயர் . ` பால் நவன் ` எனப் பிரித்து , ` நவமாய ( புதிய - கறந்த ) பால்போல்பவன் ` என்றுரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித்
தடவரையை இருபதுதோள் தலையி னாலும்
எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி
எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்
கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்
குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று
படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப்
பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

பொழிப்புரை :

தன்னைத் தடுத்த தேர்ப்பாகனை வெகுண்டு , தன் தோள்களைக் கொட்டிக் கயிலை மலையைப் பத்துத் தலைகளாலும் இருபது தோள்களாலும் பெயர்த்த தசக்கிரிவனைத் தன் கால் விரலால் நசுங்குமாறு அழுத்தி , அவன் நரம்பு ஒலியோடு இசைத்த பாடலை மகிழ்வோடு கேட்டு , இராவணன் என்ற பெயரையும் , கூரிய வாளையும் கொடுத்தவனாய் , கழல் ஒலிக்கும் திருவடியால் கூற்றுவன் மாளுமாறு ஒரு காலத்தில் உதைத்தவனாய் , உள்ள பள்ளியில் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல் , பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது .

குறிப்புரை :

இராவணனது செயலைத் தடுத்து அவனுக்கு அறிவுரை கூறினவன் அவன் அமைச்சன்; அவனை இராவணன் முனிந்தான் என்க. `தோள்` என்புழியும் உருபும் உம்மையும் விரிக்க. `மாள ஊன்றி` என்றது, ஊன்றியவாறே இருப்பின் அவன் மாளுதல் ஒருதலையாதல் பற்றி. `பேரோடும்` என்னும் உம்மை, எச்சம். `வாள்தன்னைக் கொடுத்தானை` என்க. படுத்தான் - கொன்றான்.
சிற்பி