பொது


பண் :

பாடல் எண் : 1

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.

பொழிப்புரை :

மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி , வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி , திருக்காட்டுப்பள்ளி , மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி , மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி , சிவப்பள்ளி , செம்பொன் பள்ளி , செழிப்புமிக்க நனிபள்ளி , தவப்பள்ளி புகழ்பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` பள்ளி ` எனவருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . சக்கரப்பள்ளி , நனிபள்ளி சோழநாட்டுத் தலங்கள் . காட்டுப் பள்ளி , சிராப்பள்ளி , செம்பொன் பள்ளி , கொல்லியறைப் பள்ளி மேலைத் திருப்பதிகத்துட் கூறப்பட்டன . ` சிராப் பள்ளி ` என்பது எதுகை நோக்கிக் குறுகிற்று . பொருப் பள்ளி , சிவப் பள்ளி , தவப் பள்ளி , பரப்பள்ளி இவை வைப்புத் தலங்கள் . வரை - மலை . புலந்து அழிய - பகைத்து அழிய . பொன் - அழகு . கள் ஆர் - தேன் நிறைந்த . ` கலவச் சாரல் ` என்பது மெலித்த லாயிற்று . கலவம் - மயில் . ` பரலோகத்து ` என்புழி , இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . பாலிப்பார் - காப்பார் ; ஆளுவார் .

பண் :

பாடல் எண் : 2

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவூர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே.

பொழிப்புரை :

காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம் , கடவூர் வீரட்டானம் , விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம் , வழுவூர் வீரட்டானம் , பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம் , இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம் , குறுக்கை வீரட்டானம் , தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து அவரைவிட்டு வெகு தொலைவு அகல நீங்குவர் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , அட்ட வீரட்டங்களை வகுத்து அருளிச்செய்தது . அவை , கண்டியூர் வீரட்டம் , கடவூர் வீரட்டம் , அதிகை வீரட்டம் , வழுவை வீரட்டம் , பறியலூர் வீரட்டம் , கோவலூர் வீரட்டம் , குறுக்கை வீரட்டம் , விற்குடி வீரட்டம் என்பனவாதல் அறிக . இவ்வீரட்டங்கள் முறையே , ` பிரமன் சிரத்தை அரிந்தது காலனை உதைத்தது , திரிபுரத்தை எரித்தது , யானையை உரித்தது , தக்கன் வேள்வியைத் தகர்த்தது , அந்தகாசுரனை அழித்தது , காமனை எரித்தது , சலந்தராசுரனை அழித்தது ` ஆகிய வீரச்செயல்களைச் சிவபிரான் செய்தருளிய இடங்களாகும் . இதனை , ` பூமன் சிரங்கண்டி , அந்தகன் கோவல் , புரம் அதிகை மாமன் பறியல் , சலந்தரன் விற்குடி , மாவழுவூர் , காமன் குறுக்கை , யமன்கட வூர்இந்தக் காசினியில் தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே ` என்னும் பழஞ்செய்யுளான் அறிக . இவற்றுள் , அதிகையும் கோவலும் நடுநாட்டில் உள்ளவை ; ஏனையவை சோழநாட்டில் உள்ளன . வழுவை , வைப்புத் தலம் . வழுவை , ` வழுவூர் ` எனவும்படும் . விற்குடியை , ` குடி ` என்றருளினார் , அவ்வாறருளினும் ஈண்டு , இனிது பொருள் விளங்குமாகலின் , ` கோத்திட்டை ` என்றதற்கு , விற்குடிக்கு அடையாகுமாற்றாற் பொருள்கொள்க ; என்னையெனின் , ஈண்டு வீரட்டமாயினவற்றையன்றிப் பிற தலங்களை அருளிச்செய்தல் திருவுள்ளமன்றாகலின் . காமரு சீர் - விரும்பத்தக்க புகழினையுடைய . நவின்றுரைத்தல் - பல்காலும் சொல்லுதல் . ` முன்னர் ஒருகால் அறிந்து சொல்லி , பின்னர்ப் பலகாலும் சொல்லிப் போற்றுவார்க்கு ` என உரைக்க . ` உரைப்பார்க்கு அகல்வர் ` என இயையும் . ` அகல்வர் ` என்றது , ` அகலுதலாகிய பயன் உளதாகும் ` என்னும் பொருளதாய் , ` உரைப்பார்க்கு ` என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று . இனி , ` உரைப்பாரை ` என உருபுமயக்கமாக்கி உரைத்தலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி
புதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே.

பொழிப்புரை :

நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும் , நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி , நல்லக்குடி , பெருமைமிக்க நாட்டியத்தான்குடி , கற்குடி , இனிய களக்குடி , செங்காட்டங்குடி , கருந்திட்டைக்குடி , கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி , வேள்விக் குடி , நன்மமைமிகு வேட்டக்குடி , வேதிகுடி , மாணிகுடி , விடைவாய்க் குடி , புற்குடி , மாகுடி ,, தேவன்குடி , நீலக்குடி , புதுக்குடி , என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` குடி ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . நாட்டியத்தான் குடி , செங்காட்டங்குடி , வேட்டக்குடி , நீலக்குடி இவை சோழநாட்டுத் தலங்கள் . வேள்விக்குடி , கற்குடி , வேதிகுடி , தேவன்குடி இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப் பட்டன . விற்குடியை , ` வீரட்டம் ` என்பது நோக்கி மேலைத் திருத்தாண்டகத்துள்ளும் , ` குடி ` என்பது நோக்கி இத்திருத்தாண்டகத்துள்ளும் அருளிச் செய்தார் . செம்பங்குடி , நல்லக்குடி , தென்களக்குடி , கருந்திட்டைக்குடி , கடையக்குடி , மாணிகுடி , விடைவாய்க்குடி , புற்குடி , மாகுடி , புதுக்குடி இவை வைப்புத் தலங்கள் . ` விடைவாய் திருப்பதிகம் ` என ஒரு திருப்பதிகம் , கல்வெட்டிலிருந்து மிக அண்மையில் கிடைத்து , சென்னை சைவசித்தாந்த சமாசத்தினரால் பதிப்பிக்கப் பெற்றது . அத்தலம் , விடைவாய்க்குடியே போலும் .

பண் :

பாடல் எண் : 4

பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர்
பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும்
நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும்
அளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும்
துறையூருந் துவையூருந் தோழூர் தானுந்
துடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே.

பொழிப்புரை :

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர் , பெரும் பற்றப்புலியூர் , பேராவூர் , நறையூர் , நல்லூர் , நல்லாற்றூர் , நாலூர் , சேற்றூர் , நாரையூர் , உறையூர் , ஓத்தூர் , ஊற்றத்தூர் , அளப்பூர் , ஓமாம்புலியூர் , ஒற்றியூர் , துறையூர் , துவையூர் , தோழூர் , துடையூர் , என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` ஊர் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . நல்லாற்றூர் , நாலூர் , சேற்றூர் , துவையூர் , துடையூர் இவை வைப்புத் தலங்கள் . ஆரூர் , பெரும்பற்றப்புலியூர் , பேராவூர் , நறையூர் , நல்லூர் , நாரையூர் , உறையூர் , ஓத்தூர் , ஊற்றத்தூர் , அளப்பூர் , ஓமாம் புலியூர் , ஒற்றியூர் , துறையூர் , தோழூர் இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன . பெரும்பற்றப்புலியூர் - தில்லை . பிறை ஊரும் சடை முடி - பிறை தவழ்கின்ற சடைமுடி .

பண் :

பாடல் எண் : 5

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

பொழிப்புரை :

நீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான் திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன் , கடம்பூர் கரக்கோயில் , மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்த ஞாழற்கோயில் , கருப்பறியலூரில் மலைபோன்று விளங்கும் கொகுடிக்கோயில் , அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில் , மணிக்கோயில் , ஆலக்கோயிலாகிய திருக் கோயில் , என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்து படிமீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும் தீரும் .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் , ` கோயில் ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . பிற்காலத்தில் , ` தஞ்சைப் பெருங்கோயில் ` என்பதுபோல , அக்காலத்தில் , ` பெருங்கோயில் ` என எழுபத்தெட்டுக் கோயில்கள் இருந்திருத்தல்வேண்டும் . ` அம்பர்ப் பெருங்கோயில் ` என்பது ஒன்று திருப்பதிகத்தாற்றானே காணப்படுகின்றது . இனி , ` பெருங்கோயில் எழுபதினோடு எட்டு ` என்று அருளப்பட்டவை கோச்செங்கட்சோழ நாயனாரால் எடுக்கப்பட்ட கோயில்கள் ` என்றலும் பொருந்தும் . ` கரக்கோயில் ` என்பது , கடம்பூர்க்கோயில் ; ` கொகுடிக் கோயில் ` என்பது கருப்பறியலூர்க்கோயில் ; இவை சோழ நாட்டில் உள்ளவை . ` கரக்கோயில் ` என்பது , ` இந்திரன் கரத்தால் அகழ்ந்த கோயில் ` எனவும் , ` கொகுடி ` என்பது ` ` முல்லைக் கொடியின் வகை ` எனவும் கூறுவர் . இளங்கோயிலும் , ஆலக்கோயிலும் மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன . ஞாழற் கோயில் , மணிக் கோயில் இவை வைப்புத் தலங்கள் . இருக்கு - வேதம் ; மந்திரமுமாம் . ` திருக்கோயிலாகிய , சிவன் உறையும் கோயில் ` என்க . இதனால் , இத்திருப்பெயர் சிவன் கோயிலுக்கே உரித்தாதல் அறிக . இவ்வாறாகவே , ` திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும் ` ( தி .6. ப .95. பா .5.) ` திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனி தன்னை ` ( சிவஞான சித்தி . சூ . 12-4) என்றவற்றின் பொருள் இனிது உணர்ந்து கொள்ளப்படும் . சூழ்தல் - வலம் வருதல் .

பண் :

பாடல் எண் : 6

மலையார்தம் மகளொடுமா தேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூ ழந்தண்
சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூ ராலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே.

பொழிப்புரை :

மலையரசன் மகளாகிய பார்வதியொடு மகா தேவன் மகிழ்ந்துறையும் மறைக்காடு , வளப்பம் மிக்க சோலைகள் சூழ்ந்த தலைச்சங்காடு , தலையாலங்காடு , பரந்த கடலால் சூழப் பட்டதும் , அழகியதும் , குளிர்ந்ததுமாகிய சாய்க்காடு , மோதித்தள்ளும் நீரையுடைய கொள்ளிக்காடு , பலரும் புகழும் பழையனூர் ஆலங்காடு , பனங்காடு , பாவை போன்ற பெண்கள் தங்கள் பாவம் நீங்குதற்காக விலை ஏறப்பெற்ற தம் வளையல்கள் கலந்து ஒலிக்கும்படி ஆடும் பொய்கைகளை உடைய வெண்காடு ஆகியவற்றை அடைந்து வணங்க வினைகள் விட்டு நீங்கும் .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் , ` காடு ` என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது . சாய்க்காடு , கொள்ளிக்காடு இவை சோழநாட்டுத் தலங்கள் . பனங்காடு , வைப்புத் தலம் . மறைக்காடு , தலைச்சங்காடு , தலையாலங்காடு , ஆலங்காடு , வெண்காடு இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன . பழையனூர் , ஆலங்காட்டிற்குச் சார்பாய் உள்ளது . விலை ஆடும் வளை - விலை ஏறப்பெற்ற வளையல்கள் .

பண் :

பாடல் எண் : 7

கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுதலோன்நண்ணுமிடம்அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறைவயல்சூழ் நெய்தல் வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

பொழிப்புரை :

கடுக்காயைத் தின்னும் வாயினராகிய சமணரை நீக்கி என்னை அடிமை கொள்ளும் கண்ணுதற் கடவுளாகிய சிவ பெருமான் விரும்பித் தங்கும் இடங்களாகிய அண்ணல்வாயில் , நெடு வாயில் , பயிர் நிறைந்த வயல் சூழ்ந்த நெய்தல்வாயில் , நிலவும் முல்லைவாயில் , ஞாழல்வாயில் , வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில் , அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில் , மாடங்கள் உயர்ந்து தோன்றும் குடவாயில் , குண வாயில் , ஆகிய இவற்றுள் எல்லாம் புகுந்து வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` வாயில் ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது . ` முல்லை வாயில் ` என்னும் பெயருடைய தலங்கள் தொண்டைநாட்டில் ஒன்றும் , சோழநாட்டில் ஒன்றும் உள்ளன ; அவை முறையே , ` வட திருமுல்லைவாயில் , தென் றிருமுல்லை வாயில் ` என வழங்கப்படும் . ` ஆலவாய் ` என்பதே மதுரைத் திருக்கோயிற் பெயராயினும் ` ஆலவாயில் ` என்றலும் வழக்காதல் பற்றி , ` மதுரை நகர் ஆலவாயில் ` என்று அருளிச்செய்தார் ; ` நீள்கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே ` ( தி .3. ப .52. பா .1) என்று அருளிச் செய்த திருஞானசம்பந்த சுவாமிகள் திருப்பாடலிலும் , ` ஆலவாயில் ` என வந்தது என்றலே சிறப்புடைத்தாதல் அறிக . புனவாயில் , பாண்டிநாட்டுத் தலம் . குடவாயில் சோழநாட்டுத் தலம் . அண்ணல்வாயில் , நெடுவாயில் நெய்தல்வாயில் , ஞாழல் வாயில் , குணவாயில் இவை வைப்புத் தலங்கள் . கடு வாயர் - கடுக்காயைத் தின்னும் வாயினை யுடையவர் ; சமணர் . கடுக்காயை அவ்வப்பொழுது வாயிலிட்டுத் தின்னுதல் சுவைப் புலனை விரும்பச் செய்யும் நாவினது ஆற்றலைக் கெடுத்தற் பொருட்டு . ` மடு ` என்றது வையை ஆற்றினை . ` மடுவார் ` என்றாயினும் , ` மடு ஆர் ` என்றாயினும் கொள்க . ` ஆன ` என்புழி , ` வாயில் ` என்பது எஞ்சி நின்றது .

பண் :

பாடல் எண் : 8

நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்
சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான
கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்
குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்
ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர
மத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்
ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி
யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.

பொழிப்புரை :

கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம் , மாகாளேச்சுரம் , நாகேச்சுரம் , நாகளேச்சுரம் , நன்மை பொருந்திய கோடீச்சரம் , கொண்டீச்சரம் , திண்டீச்சரம் , குக்குடேச்சுரம் , அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம் , அகத் தீச்சுரம் , அயனீச்சுரம் , அத்தீச்சுரம் , சித்தீச்சுரம் , அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போகடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` ஈச்சரம் ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது . ` ஈச்சுரம் ` என்றும் , ` ஈச்சரம் ` என்றும் இருவகையாகவும் ஆங்காங்கு ஏற்றபெற்றியாற் பாடம் ஓதுவர் . ` இறைவன் ` எனப் பொருள் தரும் . ` ஈஸ்வரன் ` என்னும் ஆரியச்சொல் , தமிழில் வடசொல்லாய் வந்து வழங்குமிடத்து , ` ஈச்சுவரன் ` எனத் திரிந்து , பின் , ` அவன் இருக்கும் இடம் ` எனப் பொருள் தருதற் பொருட்டு . அம்முப் பெறுங்கால் . இங்ஙனம் இருவகையாகச் சிதைந்து வழங்குகின்றது . கோடீச்சரம் - கொட்டையூர் ; இது சோழநாட்டுத் தலம் . நாகேச்சுரம் , கொண்டீச்சுரம் , திண்டீச்சுரம் , சித்தீச்சுரம் , இராமேச்சுரம் இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . நந்திகேச்சுரம் , மாகாளேச்சுரம் , நாகளேச்சுரம் , கோடீச்சுரம் , குக்குடேச்சுரம் , அக்கீச்சுரம் , ஆடகேச்சுரம் , அகத்தீச்சுரம் , அயனீச்சுரம் . அத்தீச்சுரம் இவை வைப்புத் தலங்கள் . ` நாடகம் ஆடி ` என்னும் பெயரினது ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று . நன்கு ஆன - நன்மை பொருந்திய . கானல் - கடற்கரை . ` இடுதிரை ` என்பது நீட்டலாயிற்று . சுரம் , ` ஈச்சரம் ` என்பதன் முதற்குறை .

பண் :

பாடல் எண் : 9

கந்தமா தனங்கயிலை மலைகே தாரங்
காளத்தி கழுக்குன்றங் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமா மலைநீலம் ஏம கூடம்
விந்தமா மலைவேதஞ் சையம் மிக்க
வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசே கரனுறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர்கெடநின் றேத்து வோமே.

பொழிப்புரை :

கந்தமாதனம் , கயிலைமலை , கேதாரம் , காளத்தி , கழுக்குன்றம் , இடமகன்ற அண்ணாமலை , தென்றல் தவழும் பொழில்களை உடைய சரிவுகளுடன் கூடிய வடபற்பதம் , மகேந்திரமாமலை , நீலமலை , ஏமகூடமலை , விந்தமாமலை , வேதமலை , சையமலை , சோலைகள் மிக்க அகன்ற பொதியின் மலை . மேருமலை , உதயமலை , அத்தமலை ஆகிய இவையும் பிறவுமாகிய சந்திரனை முடியிலணிந்த சிவபெருமானுடைய மலைகளைப் புகழ்வோம் . எம் இடர்கெடத் திசைநோக்கி நின்று அவற்றைப் புகழ்ந்து போற்றுவோம் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , மலையாய் உள்ள தலங்களை வகுத்து அருளிச்செய்தது ; ` மலை ` என்பதனை எடுத்தோதியும் , ஓதாதும் அருளிச்செய்தார் , அஃதின்றி நிற்கும் சொற்கள் தாமே பெரும் பான்மையும் , அவற்றின் சிறப்புப் பெயராய் நிற்றலின் . பற்பதம் , கயிலை இவை வடநாட்டுத் தலங்கள் . ` வடபற்பதம் ` என்றதனால் , திருப்பருப்பதம் இந்திர நீலப்பருப்பதம் இரண்டுங் கொள்க . கேதாரம் , காளத்தி , கழுக்குன்றம் , அண்ணாமலை , ஏமகூடம் , பொதியில் இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . கந்தமாதனம் , மகேந்திரம் , நீலமலை , விந்தம் , சையம் , மேரு , உதயமலை , அத்தமலை இவை வைப்புத் தலங்கள் . வைப்புத் தலங்களுள் , ` வேத மலை ` எனவும் ஒன்று உளது போலும் ! மந்தம் - மந்தானிலம் ; தென்றற் காற்று . ` ஏத்துவோம் ஏத்துவோம் ` என அடுக்காக இயைக்க .

பண் :

பாடல் எண் : 10

நள்ளாறும் பழையாறுங் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறுந் திருவை யாறுந்
தெள்ளாறும் வளைகுளமுந் தளிக்குளமு நல்
லிடைக்குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம்வேட் களம்நெல் லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளம்களங்கா என அனைத்துங் கூறுவோமே.

பொழிப்புரை :

நள்ளாறு , பழையாறு , கோட்டாறு , நன்மை நிலவும் , நாலாறு , திருஐயாறு , தெள்ளாறு , வளைகுளம் , தளிக்குளம் , நல்ல இடைக்குளம் , திருக்குளம் , அஞ்சைக்களம் , குறையாத சிறப்புடைய நெடுங்களம் , வேட்களம் , நெல்லிக்கா , கோலக்கா , ஆனைக்கா , பரந்து திகழும் கோடிகா என்றெல்லாம் தேன் நிறைந்த கொன்றைப் பூ மாலை அணிந்த சிவபெருமான் விளங்கும் ஆறு , குளம் , களம் , கா ஆகிய எல்லாவற்றையும் கூறுவோம் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` ஆறு , குளம் , களம் , கா ` என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது . நள்ளாறு , கோட்டாறு , ஐயாறு இவை மேலைத் திருப் பதிகத்திற் சொல்லப்பட்டன . பழையாறு , நாலாறு , தெள்ளாறு இவை வைப்புத் தலங்கள் . வளைகுளம் , தளிக்குளம் , இடைக்குளம் , திருக்குளம் ஆகிய அனைத்தும் வைப்புத் தலங்கள் . தளிக்குளம் - தஞ்சைத் தளிக்குளம் . அஞ்சைக்களம் , நெடுங்களம் , வேட்களம் மூன்றும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . நெல்லிக்கா , ஆனைக்கா , கோடிகா இவையும் மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . கோலக்கா , சோழநாட்டுத் தலம் .

பண் :

பாடல் எண் : 11

கயிலாய மலையெடுத்தான் கரங்க ளோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறைதென் பாலைத் துறை
பண்டெழுவர் தவத்துறைவெண் டுறைபைம் பொழிற்
குயிலாலந் துறைசோற்றுத் துறைபூந் துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையி னோடு
மயிலாடு துறைகடம்பந் துறைஆவடு
துறைமற்றுந் துறையனைத்தும் வணங்கு வோமே.

பொழிப்புரை :

கயிலாய மலையை எடுத்த இராவணனுடைய கரங்களும் சிரங்களும் வலிமை சிதையும் வண்ணம் தன் கால் விரலால் அழிவுண்டாக்கிய சிவபெருமான் பயின்றுறையும் பராய்த்துறை , தென்பாலைத்துறை , எழுமுனிவர் பண்டுதவம் செய்த தவத்துறை , வெண்டுறை , பசிய சோலையிடத்துக் குயில்கள் வாழும் ஆலந்துறை , சோற்றுத்துறை , பூந்துறை , பெருந்துறை , குரங்காடுதுறை , மயிலாடு துறை , கடம்பந்துறை , ஆவடுதுறை ஆகியவற்றையும் துறை என்னும் பெயர் தாங்கும் மற்றைத் திருத்தலங்களையும் வணங்குவோம் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , ` துறை ` என வருவனவற்றை வகுத்து அருளிச்செய்தது . பராய்த்துறை , சோற்றுத்துறை , பெருந்துறை , கடம்பந்துறை , ஆவடுதுறை , இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன . பாலைத்துறை , வெண்டுறை , ஆலந்துறை , குரங்காடுதுறை , மயிலாடுதுறை இவை சோழ நாட்டுத் தலங்கள் . ` குரங்காடுதுறை ` என்ற பொதுமையால் , வடகுரங்காடுதுறை , தென் குரங்காடுதுறை இரண்டும் கொள்க . ஆலந்துறை - அன்பிலாலந்துறை . குயில் - குயில்களை உடைய . தவத்துறை , பூந்துறை இவை வைப்புத் தலங்கள் . ` தவத்துறை , ஏழு முனிவர் தவம் செய்த இடம் ` என்பது ` பண்டெழுவர் தவத்துறை ` என்பதனால் விளங்கும் .
சிற்பி