திருவலஞ்சுழி


பண் :

பாடல் எண் : 1

அலையார் புனற்கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்
தொலையாத வென்றியார் நின்றி யூரும்
நெடுங்களமும் மேவி விடையை மேல்கொண்
டிலையார் படைகையி லேந்தி யெங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த
மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.

பொழிப்புரை :

அலைபொருந்திய நீரையுடைய கங்கையை உமையம்மை காணுமாறு அம்பலத்தில் பிறர் ஆடுதற்கரிய திருக்கூத்தை ஆடி . அக்கூத்து வேடம் ஒரு காலும் விட்டு நீங்காத வெற்றியையுடைய சிவபெருமான் நின்றியூரையும் , நெடுங்களத்தையும் விரும்பிப் பொருந்தி , இடபவாகனத்தை ஏறி இலைவடிவு கொண்ட முனைகளையுடைய படைக்கலங்களைக் கையிலேந்தி , எல்லா இடங்களிலும் நிறைந்து , இமையவரும் , அருகிலிருந்து , உமையும் வணங்கித் துதிக்க மலையின் கண் நிறைந்து திரண்ட அருவியால் ஆகிய காவிரியாறு சூழ்ந்த வலஞ்சுழியைத் தாம் புகுந்துறையும் இடமாக விரும்பி மேற்கொண்டார் .

குறிப்புரை :

` கங்கையை நங்கை காண ` என உருபு விரித்துரைக்க . ` அருநட்டம் ஆடுங்கால் கட்டிய சடை நெகிழ்தலின் அதனுள் மறைத்து வைக்கப்பட்ட கங்கையை உமையம்மை காண்கின்றாள் ` என நகைச்சுவை தோன்ற அருளியவாறு . அவ்வேடம் எனச் சுட்டு வருவிக்க . வென்றியார் - வெற்றியை உடையவர் . நின்றியூர் , நெடுங்களம் சோழநாட்டுத் தலங்கள் . மலைஆர் - மலையின்கண் நிறைந்த ` மலை ஆர் அருவி , திரள் அருவி ` என்க . ` அருவியால் ஆகிய பொன்னி ` என்றவாறு . இமையவரே அன்றி , உமையவள் இறைஞ்சி ஏத்துதலும் இத் திருத்தாண்டகத்துள் அருளப்பட்டது . ` மன்னினாரே ` என்பதும் பாடம் .
சிற்பி