திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க் கோடீச்சரமும்


பண் :

பாடல் எண் : 1

கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமருங் கொட்டையூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

நிறம் வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும் , கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் , தலைவனுமாகிய சிவ பெருமான் நீலமணி போற்றிகழும் கரிய கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில் இருந்தவனும் , பருத்த மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும் , பவளக்குன்றுபோல் காட்சியளிக்கும் மேலோனும் , தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும் , தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும் , யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான் .

குறிப்புரை :

கருமணி - நீலமணி . பருமணி - பருத்த ( பெரிய மாணிக்கம் . மணி நீர் - அழகிய நீர் . மா தேவன் - ( தேவர்கட்கெல்லாம் ) பெரிய தேவன் . வரதன் - வரத்தைக் கொடுப்பவன் . குருமணி - நிறம் வாய்ந்த மணி . ` அழகமருங் கோமான் , கோடீச்சரத்துறையுங் கோமான் ` எனத் தனித்தனி முடிக்க . ` கோடீச்சரம் ` என்பது , திருக் கோயிலின் பெயர் .

பண் :

பாடல் எண் : 2

கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டையூரிற்
கோடீச்ச ரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான் மான்கன்றை ஏந்திய கரத்தனும் , கலைகளைப் பயில்வோருக்கு ஞானக் கண்ணாய் விளங்குபவனும் , அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும் , அண்டச் சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும் , மலைபடுபொருள்களை அடித்துக்கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான் .

குறிப்புரை :

கலை - மான் . ஞானக் கண் - அறிவாகிய கண் ; உருவகம் ; ` கற்பார்க்கு அக்கல்வியறிவாய் நின்று பயன் தருவோன் ` என்றபடி . கபாலம் - தலை ஓடு ; ` அண்ட கபாலம் ` என்றது , அண்டச் சுவரின் உச்சியை . மலைப் பண்டம் - மலையில் விளையும் பொருள்கள் ; அவை , ` அகில் , சந்தனம் , யானைத் தந்தம் ` முதலியன . தெங்கு - தென்னை .

பண் :

பாடல் எண் : 3

செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழ விளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும் , சிவன் என்னும் நாமம் தனக்கே உரியவனும் , தேவர்க்குத் தலைவனும் , பந்தாடும் மெல்லியவிரல்களையுடைய பார்வதியைத் தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும் , பால் , தயிர் , நெய் , தேன் இவற்றில் ஆடப் பெறுபவனும் , மந்தார மரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான் .

குறிப்புரை :

மலர்களுட் சிறந்தது தாமரை மலரும் , தாமரை மலர்களுள்ளும் சிறந்தது செந்தாமரையும் ஆதல்பற்றி , ` செந் தாமரைப்போ தணிந்தான் கண்டாய் ` என்று அருளினார் . ` பூவிற்குத் தாமரையே ` ( திருவள்ளுவமாலை - 36.), ` பூவெனப்படுவது பொறிவாழ் பூவே ` ( நால்வர் நான்மணிமாலை - 40) என வந்தனவுங் காண்க . சிவன் - மங்கலம் உடையவன் . மந்தாரம் , ஒருவகை மரம் . உந்தி - புரட்டி . கொந்து - ( மலர்க் ) கொத்து .

பண் :

பாடல் எண் : 4

பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புட்பாகற் காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கே றூர்ந்தான் கண்டாய்
எண்டிசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளுங் காவிரி வாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடைய புனிதனும் , கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும் , இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும் , எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும் , பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான் .

குறிப்புரை :

பொடி - திருநீறு . புள் பாகன் - பறவை ( கருட ) வாகனத்தை உடையவன் ; திருமால் . ஆழி - சக்கரம் . இடி ஆர் - இடிபோலும் ; ஆர் , உவம உருபு . ஏறு - இடபம் . எண்டிசைக்கும் விளக்கு - உலக முழுதிற்கும் ஒளியைத்தரும் விளக்கு . மடல் - பூ ; சினையாகுபெயர் . கொடி ஆடு - துகிற் கொடிகள் அசைகின்ற .

பண் :

பாடல் எண் : 5

அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைக ளாறங்க மானான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் [ கண்டாய்
மைக்கொண்மயிற் றழைகொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , சங்கு மணியையும் , பாம்பையும் இடையில் கட்டியவனாய் , உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய் , தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய் , சதாசிவனாய் , சலந்தரன் உடலைப் பிளந்தவனாய் , நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான் .

குறிப்புரை :

மைக் கொள் மயில் - கருமை ( நீல ) நிறத்தைக் கொண்ட மயில் ; இனி , ` மேகத்தை விரும்புகின்ற ` என்றும் ஆம் . ககர ஒற்று , விரித்தல் . ` தழை ` என்றது , தோகையை . ` கொக்கு அமரும் வயல் ` என்றது , ` நீர் நீங்காத வயல் ` என்பதைக் குறித்த குறிப்புமொழி .

பண் :

பாடல் எண் : 6

சண்டனைநல் லண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்சங் கரன்றான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்துங் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் [ கண்டாய்
மண்டுபுனல் பொன்னிவலஞ்சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையும் கோமான் தானே.

பொழிப்புரை :

கொடிகள் கட்டப்பட்டு , மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும் , சதாசிவனும் , சங்கரனும் , தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும் , பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும் , மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும் , பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான் .

குறிப்புரை :

` சண்டன் ` என்றது , சண்டேசுவர நாயனாரை , அண்டர் - தேவர் . ` அரிதாய் ` என்பதற்கு , ` அரிய பொருளாய் , என உரைக்க . ` மாமுனிவர் தம்முடைய மருந்து ` என்றது ` ` தேவர்கள் அமுதத்தை இறப்பை நீக்கும் மருந்தாக விரும்பி உண்பர் ; பெருமை பொருந்திய தவத்தோர் அவ்வாறன்றிச் சிவபிரானையே அம் மருந்தாக அறிந்து அடைவர் ` என்றதாம் . கொண்டல் - மேகம் .

பண் :

பாடல் எண் : 7

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாயண் டத்தான் கண்டாய்
பணமணிமா நாக முடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் லடியார்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டை யூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , எட்டுதற்கரியவனாய் , குற்றமற்றவனாய் , அழிவில்லாதவனாய் , மேலுலகத்து உள்ளவனாய் , படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய் , பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய் , ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய் , மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான் .

குறிப்புரை :

அணவுதல் - எட்டுதல் . ` அணைவரியான் ` என்பதும் பாடம் . அவிநாசி - அழிவில்லாதவன் . அண்டத்தான் - மேல் உலகத்தில் இருப்பவன் . பணம் - பாம்பின் படம் . மாதவன் - திருமால் . வரதன் - வரத்தைக் ( அவர்கள் விரும்பிய அதிகாரத்தை ) கொடுப்பவன் .

பண் :

பாடல் எண் : 8

விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியத ளுடையான் கண்டாய்
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவ பெருமான் . மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும் , வேதங்களால் போற்றப்படும் தலைவனும் , புள்ளிகளை உடைய புலித் தோலை இடையில் உடையாக உடுத்தியவனும் , அழலாடுபவனும் , அழகனும் , தொடர்ந்து வரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகிய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும் , வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான் .

குறிப்புரை :

விரை - வாசனை . வேதங்கள் தொழநின்ற நாதன் - வேதங்களால் போற்றப்படும் முதல்வன் . ` குரா ` என்பது , குரவு ` என நின்றது . குரா , ஒருவகை மரம் . அமரும் - பொருந்தியுள்ள .

பண் :

பாடல் எண் : 9

தளங்கிளருந் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்றன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட் டிருங்கலையு மானான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

குளிர்ந்த குளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய் , தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய் , இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும் . தன் பழைய சடையில் வைத்தவனாய் , கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய் , வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான் .

குறிப்புரை :

தளம் - இதழ் . தசரதன் மகன் - இராமன் . அசைவு - தளர்ச்சி ; அது , சீதையை இழந்து பின்னர் அடைந்த துன்பத்தையும் சீதையை மீட்ட பின்னர் இராவணனைக் கொன்ற பழியினால் எய்திய துன்பத்தையும் குறிக்கும் . இவ்விரு துன்பங்களையும் இராமன் , சிவபிரானைப் பூசித்து நீங்கப்பெற்றனன் என்பதே உண்மை இராமாயணம் . என்பது இன்றைய இராமாயணத்திலும் காணப்படுவது , பிற வாக்கியங்கள் இஞ்ஞான்று அதன் கண் காணப்படாதொழியினும் அவற்றை அறிவிக்கும் தலங்கள் அவற்றிற்கு என்றும் சான்றாய் நின்று நிலவும் . எட்டு எட்டு இருங்கலைகள் - ` அறுபத்து நான்கு ` என வரையறை கூறப்படும் பெரிய கலைகள் . ` மா முனிகள் ` என்றது , தல வரலாற்றின்படி , ஏரண்டரையும் , மார்க்கண்டேயரையும் சிறப்பாகக் குறிக்கும் . ` குளம் கிளர் என இயையும் , ஏழாவதன் தொகையில் மகரம் , கெடாது நின்று திரிந்தது . கிளர் - மிக்கு விளக்குகின்ற .

பண் :

பாடல் எண் : 10

விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

பொழிப்புரை :

ஓதிய நான்மறை ஆறங்க , வழிஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , பகைவர் புரமூன்றையும் எரித்தவனும் , வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும் , குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும் , வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள் மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும் , தேவர்க்குத் தேவனும் ஆவான் .

குறிப்புரை :

விண்டார் - பகைவர் . விலங்கலில் - ( கயிலாய ) மலையின்கீழ் . அடர்த்தான் - சிதைத்தான் . இறைவனது ஆற்றலை ( சத்தியை ) த் திருவடியாகக் கூறும் மரபு பற்றி , ` கழலான் ` என்று அருளிச் செய்தாராகலின் , அதற்கு ` சத்தியை உடையவன் ` எனப் பொருள் கூறுக .
சிற்பி