திருநாரையூர்


பண் :

பாடல் எண் : 1

சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்
சுடராழி நெடுமாலுக் கருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

சொல்லாகவும் பொருளாகவும் வேதங்களாகவும் திகழ்பவனும், ஒளிமிக்க சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருளியவனும், இரவாகவும் பகலாகவும் இருப்பவனும், அன்பர் அல்லா தார்க்கு அரியனாகவும் அடியார்க்கு எளியனாகவும் இலங்குபவனும் அசுரர்க்கு அரணாயமைந்த திரிபுரங்கள் அழிய அம்பு எய்த வில்லினனும், விசயற்குப் பாசுபதம் அருளிய அருளாளனும், சூரியனும் பெருந்தவமுனிவர்களும் விரும்பிப் போற்றும் நல்லவனும், தீயாடுபவனும், விரும்புதற்குரிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

சொல்லான் - சொல்லுவார் சொல்லும் சொற்கள் எல்லாமாய் இருப்பவன். பொருளான் - அச்சொற்களின் பொருளாய் இருப்பவன். சுருதியான் - வேதங்களாய் இருப்பவன். சுடர் ஆழி - ஒளிவீசும் சக்கரம். அல் - இரவு. ``அடியார்கட்கு எளியான்`` என்று அருளியதனால், ``அரியான்` என்றது பிறர்க்கு என்பது பெறப்பட்டது. சரம் - `பாசுபதம்` என்னும் அம்பு. சூரியனும் பெரு முனிவர்களும் இத்தலத்து வழிபட்டு நலம் பெற்றனர் போலும்! ``நன்னகர்`` என்றது, `சிவதலம்` என்பதனைத் தமிழாற் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 2

பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப்
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்
மதியாகி மதிசடைமேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் தன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட மெல்லிய பாதங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், நிலமும், நீரும், தீயும் வீசும் காற்றும் ஆனவனும், மேகம் தவழும் வானமும், அவ்வானத்தில் ஊரும் மதியும் ஆகி அம்மதியைத் தன் சடைமுடிமேல் தாங்கியவனும், என் மனத்தைத் தன் வழி நிறுத்தி அதன் நினைவுகள் எல்லாம் தானாகி நின்றவனும், நெடிய கடலைக் கடைந்தார் அனைவரும் ஓடி நீங்கும் வண்ணம் ஓங்கி எழுந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்கட்கு அமுதம் ஈந்தவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

`என்நெஞ்சு உண்டு அதன் நினைவாகி நின்றான்` என்க. நெஞ்சத்தை உண்டமையாவது, அவன்வழி நிறுத்திக் கொண்டமை; அதனால், அது நினைப்பனயாவும் அவன் நினைப்பித்த வாறே நினைக்கும் நினைவுகளாயினமையின், இவ்வாறு அருளிச்செய்தார். இதனால், சுவாமிகளது கரணங்கள் சிவகரணங்களே ஆயினமை தெற்றென விளங்கும். ``கடைந்தவர்`` என்பது, `கடைந்தவராகிய அவர்` எனச் சுட்டும் சுட்டுப்பொருள் உடையது; செய்யுளாகலின் சுட்டுச்சொல் முன்னிற்றல் பொருந்திற்று.

பண் :

பாடல் எண் : 3

மூவாதி யாவர்க்கும் மூத்தான் தன்னை
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் தன்னைத்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் தன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
நாவானை நாவினில்நல் லுரையா னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

யாவர்க்கும் முன்னே தோன்றி வைத்தும் மூப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் உள்ளவனும், தேவர்கட்குத் தலைவராகிய நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோருக்கும் தலைவனாய்த் திகழ்பவனும், நான்முகனுடைய சிரங்களில் ஒன்றைக் கொய்தவனும், காற்றெனக் கடிதியங்குவதும் வெற்றியையுடையதுமாகிய ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், ஆகி, அடியேன் நினையுந்தொறும் நாவான் நுகரப்படும் தித்திப்பாகும் சுவையாகவும், நாவிற்பயிலும் நல்லுரையானாகவும் விளங்கும் சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

மூவாது மூத்தல் - `தோன்றுவனவற்றிற்கெல்லாம் முன்னே தோன்றினான்` என்னுமாறு காலம்பற்றி வரும் பிற பொருள்களினது தோற்றம் போல்வதொரு தோற்றத்தால் மூத்தவனாகாது, இயல்பாக என்றும் உளனாதல், இவ்வாறு ஈண்டு அருளிச்செய்த இதனால், ``முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி`` (ப.19 பா.1) என்றாற்போல அருளிச்செய்தவற்றின் உண்மைப்பொருள் இது வென்பது இனிது விளங்கும். முடியாது - அழியாமல்; ஏகாரம் தேற்றம். மூவாது மூத்தமையின், முடிதல் இல்லையாயிற்று. `தான் இங்ஙனம் மூவாது மூத்து முடியாது நின்று, பிற பொருள்கட்கெல்லாம் முதலும் நடுவும் முடிவும் ஆயினான் என்க. தே ஆதி தேவர் - தேவர்களுக்குள் ஆதிதேவர்; காரணக் கடவுளர்; அயனும், மாலும்; `தே` என்பது, சொல்லால் அஃறிணையாதலின், ஒருமைபன்மை இரண்டிற்கும் பொதுவாய், ஈண்டுப் பன்மைப்பொருள் தந்தது. உம்மை, சிறப்பு, ``ஆ`` என்றதனை, ``ஏறு`` என்றதனோடு இயைத்து, ``ஆனேறு`` என்று பொருள் கொள்க. வாதம் - காற்று; `காற்றுப்போலும் கடுநடையை உடைய ஏறு` என்க. அண்ணித்தல் - தித்தித்தல். ``நா`` என்றது, அதன் புலமாகிய சுவையை; அது தித்திப்பை உணர்த்திற்று.

பண் :

பாடல் எண் : 4

செம்பொன்னை நன்பவளந் திகழும் முத்தைச்
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் தன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

செம்பொன், நற்பவளம், ஒளிமுத்து, செழுமணி என்றெல்லாம் ஒப்புக் கூறப்படுபவனும், வணங்குவார் சித்தத்தில் உறைபவனும், மணங்கமழும் மலர்களை கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனும், மதில் சூழ்ந்த கச்சியில் ஏகம்பனாய் மன்னுபவனும, கயிலாய மலையில் வாழும் எம் தலைவனும், சம்பாதி சடாயு என்ற கழுகுகளும் இராமனும் தமக்கு நன்மைதருவான் இவன் என்று ஆராய்ந்து வணங்கும் இறைவனும், எம்பெருமானும், தலைவனுமாகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

வம்பு அவிழும் - வாசனையோடு மலர்கின்ற. மலர்க் கணை வேள் - மன்மதன். உலக்க - அழியும்படி. மகிழ்ந்தது அவனது குற்றம் (சிவாபராதம்) நீங்கினமை குறித்து.
மலையான் - மலையின் கண் உள்ளவன். ``எம்`` என்பது `மலையான்` என்பதனோடு இயைந்தது. கழுகு, என்றது `சம்பாதி, சடாயு` என்னும் இரண்டினையும். இவை பூசித்த தலம் புள்ளிருக்கு வேளூர் என்பது,
``தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.``
(தி.2. ப.43. பா.1.) எனத் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளால் இனிதெடுத்து அருளிச்செய்யப்பெற்றது. காகுத்தன் - இராமன். `நாரை வழிபாடு செய்த தலம் நாரையூர்` என்பது தெளிவாதலின், கழுகுகள் வழிபாடு செய்தமையையும், அக்கழுகுகள் இவை என்பதும், அவற்றது பெருமையும் இனிதுணர்த்தியருளுவார் காகுத்தன் வழிபட்டமையையும் உடன் நினைப்பித்தருளி, அஃறிணை உயிர்களும் வானிடத்தவர்களும் மண்மேல் அரன்றனை அருச்சித்துப் பயன் பெற, ஊனெடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணராது, வாணாள் வீணாள் கழித்தல் இரங்கத்தக்கதன்றோ என அறிவுறுத்தருளினார் என்க. திருக்கழுக்குன்றமும் கழுகுகள் வழிபடும் தலமாதல் அறியத் தக்கது.

பண் :

பாடல் எண் : 5

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் தன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உட்டொளை பொருந்திய கரத்தையுடைய யானையது தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடையின்மேல் கங்கையைச் செறித்துவைத்த புனிதனும், மணங் கமழும் வெள்ளெருக்கம்பூமாலையை அணிந்தவனும் வெள்ளிய நீறு செம்மேனியிடத்து விரவி விளங்குபவனும், பருவதராசன் மகள் தவம் செய்து அடையப்பெற்ற மணாளனும், வெள்ளிய விடையை உயர்த்திய நற்கொடியை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

புரை - கவிப்பு; யானையது உடலில் புரையாய் (கவிப்பாய்) அமைந்த உரிவை (தோல்) என்க. `புரை உடைய கரி` என யானைக்கு அடையாக்கி, `புரை - உயர்ச்சி அல்லது குற்றம்` எனலுமாம்.
அடைத்த - உட்செறித்த. விரை - வாசனை` `மலைமகள் தவஞ்செய்து அடைந்த மணாளன்` என்க. `செய் மணாளன்` என்னும் வினைத்தொகை, `இது பயனாக` என்னும் பொருள்மேல் தொக்கது. பிணி நோய், உம்மைத்தொகை. நோய் - துன்பம். நரை - வெண்மை.

பண் :

பாடல் எண் : 6

பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்
பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானை
மலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரா னானை
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பிறவாமையானும், இறவாமையானும் புகழ் பெருகியவனும், பேய்களின் பாட்டிற்கேற்பக் கூத்தாடும் பித்தனும், தன்னை மறவாத மனத்திடத்தே மன்னி நிற்பவனும், மலையிடத்தும் கடலின் கண்ணும் வானின் மேலும் விளங்குபவனும், உறவும் பகையும் உயிரும் ஆகுபவனும், அகத்தும், புறத்தும் திகழ்பவனும், தேனிறைந்த கொன்றைப் பூவைச் சூடியவனும் ஆகிய சிவபெருமானை நாரை யூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

``பெருகினான்`` என்றதற்குமுன், `புகழ்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `பிறவாது, இறவாது` என்னும் வினையெச்ச மறைகள் காரணப் பொருளவாகலின், `பிறவாமையாலும், இறவாமை யாலும் புகழ் பெருகினான்` என உரைக்க. பிறத்தல் இறத்தல்களினின்றும் நீங்கி வீடு பெற்றாரது பெருமைதானே ஏனையோரது பெருமைகள் எல்லாவற்றினும் மேம்பட்டு விளங்கிநிற்குமாயின், இயல்பாகவே அவைகளை இல்லாதவனுக்கு உளதாகும் பெருமை மிகுதி சொல்ல வேண்டுவதோ என்பது திருக்குறிப்பு. வீடு பெற்றாரது பெருமையே. ஏனையெல்லாப் பெருமையினும் மேம்பட்டு விளங்கும் என்பதனை,
``இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்றுலகு`` (குறள் - 23)
என்பதனால் அறிக. இனி, `கிணற்றுள் வீழ்ந்தாரை எடுக்கலுறுவார், அதன் பொருட்டுத் தாமும் கிணற்றுள் வீழுமாறு போல, பிறவியுட் பட்டாரை எடுத்தற்பொருட்டுப் பிறவியில்லாத இறைவன் தானும் பிறவியுள் வீழ்வனாகலின், அஃது அவற்குப் புகழாவதல்லது இகழாமாறு இல்லை` என்பாரது கூற்று, உவமப்போலியுடைத்து. எங்ஙனம் எனின், கிணற்றுட் கிடப்பார் இருவருள், மேல் எழமாட்டாது நீர்வயப்பட்டு அமிழ்ந்துவார் அதன் கண் அழுந்துவோரும், அவ்வாறன்றி மேலே மிதப்பார் அவரை எடுப்போருமாவர் என்பது தெளிவு; அங்ஙனமே உடம்புடைய இருவருள், `அவிச்சை, வினை, மாயை` என்ற இவற்றின் வயப்பட்டு, `முட்டை, வெயர்வை, விதை, கருப்பை` என்னும் நால்வகைத் தோற்றுவாய்களின் வழித் தோன்றும் உடம்பிற் கட்டுண்டு, குறித்த தொன்றாகமாட்டாக் குறையுற்று, எடுத்த உடம்பின் ஆற்றலளவிற்கேற்ற அறிவு இச்சை செயல்களையே உடையராய், உண்டு, உறங்கி, `பசி, பிணி, மூப்பு` முதலியன காலவயத்தான் ஒருதலையாக வந்து பற்ற, அவற்றைத் தவிர்க்க மாட்டாது தாங்கி, இடையே இன்பத் துன்ப நுகர்ச்சியால் விருப்பு வெறுப்புக்கள் மீதூர. உறவும் பகையும் கொண்டு நல்லன தீயன வற்றைச் செய்து இறப்பவர் பிறப்பின்கண் அழுந்துவோரும், அவ்வா றன்றி வேண்டிய உருவத்தை வேண்டியவாறே தமது இச்சையால் தோற்றுவாய் யாதுமின்றிக் கொண்டு இம்மெனக் கடிதில் தோன்றி, அத் தோற்றத்திற்குப் பயனாம் செயல் கடிதின் முடிய, இம்மெனக் கடிதின் மறைபவரே பிறவியின்கண் அழுந்துவாரை அதனினின்றும் எடுப் போரும் ஆவர் எனல் வேண்டும். அவ்வாறன்றி, வினைவயப்பட்டு நிற்கும் மேற்கூறிய பிறவியுடையார்க்கு அவர் அவ்வுவமை கூறுதல் பொருந்தாமையின் என்க. எனவே, உயிர்களின் பொருட்டு வேண்டிய உருவத்தை வேண்டியாங்குத் தோற்றுவாய் இன்றித் தனது இச்சையின் வழி அருளால் திருமேனி கொள்ளுதலுக்கு அஃது உவமையாம் அன்றி, உயிர்கள் வினையிற் கட்டுண்டு அதனால், நால்வகைத் தோற்றத்துட்பட்டு மாயா சரீரமாகிய பிறவி எடுத்தற்கு அஃது உவமை ஆமா றில்லை என்க. இதனானே, `பிறவியாவது இது` வெனவும், `அருள் தோற்றமாவது இது` வெனவும் வேற்றுமை தெரிந்து, `பிறவி`, மலமுடைய உயிர்கட்கு அன்றி நின்மலனாகிய இறைவற்கு ஒருவாற்றானும் ஒரு ஞான்றும் எய்துதல் இல்லை` எனவும், அஃது எய்தாமை பற்றி அவன் உயிர்களின் பொருட்டு அருட்டிருமேனி கொள்ளுதற்குத் தடை ஒன்றும் இல்லை எனவும், அதனால் நின்மல னாகிய இறைவனை எவ்வாற்றானும் மலமுடைய உயிர்க்கு உரிய பிறவியுடையனாகக் கருதுதலும், சொல்லுதலும் அவனுக்குப் பெரிய தோர் இழுக்குச் செய்தலாம் எனவும் கடைப்பிடித்து உணர்ந்து கொள்க.
`பித்தன்` என்றது, ஓர் வரையறையின்றித் தான் வேண்டியது செய்வன் என்னும் கருத்தினதாய், அவனது தன்வயமுடைமையைப் பழித்ததுபோலப் புகழ்ந்ததாம்.
இந்நிலை, `செய்தல் (கர்த்திருத்துவம்), செய்யாமை (அகர்த் திருத்துவம்), வேறொன்று செய்தல் (அந்யதாகர்த்திருத்துவம்)` என மூன்றாய் விளங்கும்; இவற்றை, ``ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்``
என (நல்வழி) விளக்கினார், ஔவையார்.
வனம் - காடு. ``உள்ளான்`` என்றது, `கலந்து நிற்பவன்` என்றபடி, ``உறவானைப் பகையானை`` என்றது, `உயிர்கள் தமக்கு உறவாக நினைக்கப்படுபவராயும், பகையாக நினைக்கப்படுபவராயும் நிற்பவன் அவனே` என்றவாறு, உள்ளான் புறத்தான் - எல்லாப் பொருள்களின் உள்ளும் புறமும் நிறைந்துள்ள வியாபகன். ஓசை, பூதங்களுட் சிறந்த விசும்பின் பண்பாகலின், அதனை எடுத்தோதி யருளினார். நறவு - தேன்.

பண் :

பாடல் எண் : 7

தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
அறுமுகனோ டானைமுகற் கப்பன் தன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

தக்கனது வேள்வியை அதன் பயன் கெடுமாறு அழித்தவனும், பிரமனது தலையைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்ற தலைவனும், கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் கரத்தினனும், உயிரைக் கொள்ளுதலையுடைய நாகத்தை அணியாகப் பூண்டவனும், உருத்திராக்கம் என்பு இவற்றை அணிந்த அழகனும், ஆறுமுகன், ஆனைமுகன் ஆகிய இருவருக்கும் தந்தையும், ஆடை அணியாதவனும், வக்கரை நள்ளாறு என்னுந் தலங்களில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

சாடினான் - அழித்தான். சச்சரி, ஒருவகை வாச்சியம். அக்கு - சங்குமணி. நக்கன் - உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தை நோக்கி அருளியது. இனி ` பற்றற்றவன்` என்ற உண்மைப் பொருளும் உடையது என்க. வக்கரை, தொண்டை நாட்டுத் தலம். நள்ளாறு, சோழநாட்டுத் தலம்.

பண் :

பாடல் எண் : 8

அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை
நரிவிரவு காட்டகத்தி லாட லானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மாலும் நான்முகனும் ஏத்தி வணங்கும் தந்தையும், இயமனுக்கு இறுதியை ஆக்கும் மகாசங்காரக் கடவுளும், அளந்தறிய இயலாத எரிப்பிழம்பாம் இலிங்கத்தினது இயல்புவிரிக்கும் இலிங்க புராணத்து விளங்கித் தோன்றுபவனும், அருமைமிக்க எண்ணும் பண்ணும் எழுத்தும் ஆனவனும் , திரிபுரங்களை அழித்து ஆண்டுத் தன்னை மறவாத மூவர்க்கும் அருள் செய்தவனும், சிலந்திக்குப் புவிபுரக்கும் அரசனாம் பேற்றையளித்த செல்வனும் ஏனை விலங்குகளொடு நரிகள் கலந்து திரியும் சுடுகாட்டில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

அந்தகன் - அந்தத்தை (இறுதியை)ச் செய்பவன்; இயமன்; `அவனுக்கு அந்தத்தைச் செய்பவன்` என்றதனால், `மகா சங்காரக் கடவுள்` என்றவாறு. இனி, `அந்தகாசுரனுக்கு அந்தத்தைச் செய்தவன்` என்றலுமாம். `அளக்கலாகா இலிங்கம், எரிபுரியும் இலிங்கம். எனத் தனித்தனி இயையும். ``அளக்கலாகாமை, மாலும் அயனும் அடிமுடி தேடி அறியலாகாமையான் விளங்கும். இவ்வரலாற்றைக் கூறும் புராணமே இலிங்க புராணம். இது, சிவபிரானே முதற்பொருள் என நிறுவுதலையே பொருளாக உடைமையின், அதன்கண் இனிது விளங்கி நிற்பவன் என்பார். சிவபிரானை, ``இலிங்க புராணத்துளான்`` என்று அருளிச்செய்தார். இச்சிறப்பு நோக்கியே, சுவாமிகள், இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையை (தி.5. ப.95.) உலகிற்கு அருளிச்செய்து உதவினார் என்க. இப்புராணப் பொருளே.
``பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால்
பரம மியாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ``
எனத் திருவாசகத்துள் (தி.8 திருத்தோணோக்கம் - 12) தொகுத்து அருளிச் செய்யப்பட்டது. இவ்வரலாற்றின் விரிவை, கந்த புராணம், அடிமுடி தேடு படலத்துள் விரித்துக் கூறிற்று. இது பற்றியே, சிவனடியாரை இகழவந்தவரும், அவர்கட்கு, ``இலிங்கத் திட்ட புராணத்தீர்`` (திரு வாய்மொழி 4. 10.5.) என இப்புராணத்தாற் பெயர் கொடுத்தார் என்க. எரி புரியும் - நெருப்பின் ஒளியை வீசும். இலிங்கம் - குறி; அது, கை கால் முதலிய உறுப்பின் பகுப்பு யாதும் அற்ற பொதுப் பிழம்பினைக் குறித்தது; `தாணு` எனவும், `கந்து` எனவும் வருவதும்இது, `எண்ணும் எழுத்தும் ஆனானை` என்றாற்போலவே, `பண் ஆனானை` என்பார், ``பண் ஆரெழுத்தானானை`` என்று அருளிச்செய்தார். ``ஆரெழுத்து`` என்புழி நின்ற, `அருமை` என்பதனை, `எண், பண்` என்பவற்றிற்குங் கூட்டுக. திரிபுரம் எரித்த ஞான்று மூவர்க்கு அருள்செய்தமையை மேலே (ப.60. பா.9 குறிப்புரை) காண்க.

பண் :

பாடல் எண் : 9

ஆலாலம் மிடற்றணியா அடக்கி னானை
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

ஆலால நஞ்சினைத் தன் கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத் தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும் தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய் விளங்குபவனும், வேள்வியின் பயனாய் விளைபவனும், குற்ற மற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப் போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

நஞ்சை வைத்ததனால் ஆகிய நீலநிறம், செம்மேனியனாகிய சிவபிரானுக்குக் கண்டத்தை நீலமணிபோல அழகு செய்து நிற்றலின், ``ஆலாலம் மிடற்று அணியா அடக்கினான்`` என்று அருளிச் செய்தார். `பால் முதலியவுமாகி, அவற்றின் சுவைகளும் ஆயினான்` என்க. உம்மை, எச்சம். வேதியருள் மேலாவார். ``எரியலால் உருவம் இல்லை....ஐயன் ஐயாறனார்க்கே`` (தி.4. ப.40. பா.5.) என்று அருளியவாறு, எரி, சிவபிரான் உருவேயாதலை யறிந்து வேட்பவரே யாகலின், `மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி` என்று அருளினார்; ``விருப்புறும் அங்கி யாவார் விடை உயர்த் தவரே`` (தி.12 பெ. புரா. திருஞா. 1241) என்று திருஞானசம்பந்தர் சிந்தையில் தெளிந்தமை அறிக.
இக்கருத்தினையும், மற்றும் பகலவனையும் சிவபிரானது உருவாகவே அறிந்து காலை, மாலை, நண்பகற் பொழுதுகளில் வழி படுதலே உண்மைப் பொழுது வழிபாடு (சந்தியாவந்தனம்) என்பதனையும் சுவாமிகள்
``எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்``
எனவும்,
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்க னாவான் அரன்உரு அல்லனோ``
எனவும் அருளிச்செய்தார்கள். (தி.5. ப.100. பா.7,8.) இதனானே, காயத்திரி மந்திரத்தின் பொருளும் சிவபிரானே என்பதும் தெளியப் படும்; இதனை, ``உயர்காயத்திரிக்கு உரிப்பொருளாகலின் என்னும் பொருளதாக வடமொழியில் ஓதினார், அரதத்தாசாரியர். ஆகவே, திருவைந்தெழுத்தின் பொருளே காயத்திரியின் பொருளாக அறிதலும், அதனால் திருவைந்தெழுத்தினையே முதற்றிருமந்திரமாக உணர்ந்து ஓதுதலும் மேலாய வேதியர்க்கு உரியனவாதல் விளங்கிற்று. இதனை,
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே``
(தி.3. ப.22. பா.2.) என இனிது விளங்க அருளிச்செய்தார். திருஞான சம்பந்த சுவாமிகள். இவ்வருளிச் செயலைச் சேக்கிழார் சுவாமிகள்,
``மந்திரங்க ளானஎலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிக நூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயம் தெளிய எல்லாம்
செழுமறையோர்க் கருளிஅவர் தெளியு மாற்றால்
முந்தைமுதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம்அஞ் செழுத்து மேயென்று
அஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்``
(தி.12 பெ. பு. திருஞா. 266.) என விரித்தோதியருளினார்.
இவ்விரிவினுள் ``வைதிகநூற்சடங்கு`` என்றது, ``எரி பெருக்குவர்`` எனவும், ``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்`` எனவும் மேற்காட்டிய சுவாமிகள் திருமொழியுட் குறிக்கப்பட்டவற்றை எனவும், ``அச்சடங்கினால் வந்த சிந்தை மயக்குறும் ஐயம்`` என்றது, எரியையும் அருக்கனையும் அன்னபிறவற்றையும் சிவபிரான் உருவாக அறியாது பிறவாறு மயங்கிக்கொள்ளுதலை எனவும், ``அவ்வையமெல்லாம் தெளிய அருளி` என்றது, எரி ஈசனது உருவருக்கமே என்றும், அருக்கனாவான் அரனுருவே என்றும், பிறவும் அன்ன என்றும் இவ்வாறு தெளிவித்தருளினமையை என்றும் நாயனார் திருமொழியோடு கூட்டி உணர்ந்துகொள்க.
இதனானே, திருஞானசம்பந்தரது தொகைத் திருமொழிகட்கு நாயனார் திருமொழி விரியாக நின்று விளக்கந்தந்தருளுதலையும், அவ்விளக்கத்தின்வழி நின்றே சேக்கிழார் விளக்கம் தந்து செல்லுதலையும் அறியலாகும்.
இவ்வாற்றால் எரியைச் சிவபிரான் உருவருக்கமாக உணராது, எல்லாத் தேவர்கட்கும் அவரவர்க்கும் உரிய அவியைச் சுமந்து சென்று கொடுக்கும் ஒரு தேவனது உருவாகவும், பிறவாறும் கொண்டு வேட்டல் வேட்பித்தல்களைச்செய்வோரும், அவ்வாறே பகலவன் வழிபாடு முதலியவற்றைப் பிறவாற்றாற் செய்வோரும் மேலாய வேதியர் ஆகாமை பெறப்பட்டது. இம்மேலாய வேதியர் ஆகாதாரைத் திருமூல நாயனார், ``பேர்கொண்ட பார்ப்பான்`` (தி.10 திருமந்திரம் - 519) என்று அருளிச்செய்தார். இன்னோரன்ன அருமைத் திருமொழிகள் பலவற்றான், ``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்`` (தி.3. ப.54. பா.1.) என்புழி. ``அந்தணர்`` என அருளிச்செய்யப் பட்டவரும், திருமுறையும் பிறவுமாகிய சைவநூல்களுள் `அந்தணர்` எனப் போற்றப்படுவோரும் இன்னர் என்பது ஐயமற விளங்கும்.
ஈண்டு, ``மேலாய வேதியர்`` என்றதில், மேலாய என்னும் அடையை, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாகக் கொண்டு `வேதியருள் மேலாய வேதியர்` எனவும், இயைபின்மை நீக்கிய விசேடணமாகக் கொண்டு, `மக்களுள் மேலாய வேதியர்` எனவும் எவ்வாறுரைப்பினும் மேற்கூறிய எல்லாம் பொருந்துமாறு அறிந்து கொள்க.
இனி, மேலாய வேதியரால் வேட்கவும் வேட்பிக்கவும்படும் வேள்விகள் அப்பொழுதேயாயினும், வழிமுறைக்கண் ஆயினும் சிவபிரானை அடைவிக்கும் ஆகலின், அவனை அவ்வேள்விகளின் பயன் என்று அருளிச்செய்தார். இச் சைவநெறி, வைதிக நெறிக்குச் சிறிதும் மாறானது அன்றென்பது உணர்த்துதற் பொருட்டு, ``நாலாய மறைக்கிறைவன் ஆயினான்`` என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 10

மீளாத ஆளென்னை உடையான் தன்னை
வெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து
வன்கூற்றி னுயிர்மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்
தோள்வலியுந் தாள் வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

விட்டுப்பிரியாத அடிமையாக என்னை உடையவனும், அறிவு ஒன்றிச் செய்த வழிபாட்டை விரும்புபவனும், மார்க்கண்டேய மறையவனுக்கு ஒருகாலும் மாளாதவாறு உயிரளித்து வலிய கூற்றின் உயிர் நீங்கும் வண்ணம் உதைத்தவனும், தன் தோள் வலிமையை மதித்துக் கயிலை மலையை எடுக்க முயன்ற காமுகனாகிய இராவணனுடைய தோள்வலியும் முயற்சி மிகுதியும் கெடச் செய்து, அவன் தன்னை உணர்ந்த அப்பொழுதே அவனுக்கு மிகுந்த வாழ்நாளையும் வாளையும் வழங்கிய தலைவனும் ஆகிய சிவ பெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.

குறிப்புரை :

``ஆள்`` என்பதில், `ஆக` என்பது விரித்து. `என்னை மீளாத ஆளாக உடையான்` என உரைக்க. வெளி - ஒளி; அறிவு; அது சிவபிரானையே. முதல்வனாக அறிவது. `வெளியோடு செய்த வழிபாடு` என்க. மேவினான் - விரும்பினான். ``வெளி`` என்றது ஆகு பெயராய், `வெளிதாகிய நாரை செய்த வழிபாட்டை விரும்பினவன்` என்னும் பொருளையும் தோற்றுவித்தல் காண்க. மறையவன், மார்க்கண்டேயர். `மாளற்பாலதாய மறையவன் உயிரை மாளாமை வைத்து, மாளாததாய வன்கூற்றின் உயிரை மாள வைத்தான் என்றது, அவனது எல்லா முதன்மையும் உடைமையை வியந்தருளிச்செய்தவாறு. இராவணனை, `தூர்த்தன்` என்றல், பிறன்மனை நயந்தமைபற்றி. நாள் - வாழ்நாள்; ``நீண்ட வாழ்நாள்`` என்பது, எடுத்தோதியதனாற் பெறப்படும்.
சிற்பி