திருப்புத்தூர்


பண் :

பாடல் எண் : 1

புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண்
போர்விடையின் பாகன்காண் புவன மேழும்
விரிந்துபல வுயிராகி விளங்கி னான்காண்
விரைக்கொன்றைக் கண்ணியன்காண் வேதம் நான்கும்
தெரிந்துமுதற் படைத்தோனைச் சிரங்கொண் டோன்காண்
தீர்த்தன்காண் திருமாலோர் பாகத் தான்காண்
திருந்துவயல் புடைதழுவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

தேவர்கள் விரும்பித் துதித்து வணங்கும் புகழுக்கு உரியவனும் , போர்த்தொழில் வல்ல இடப ஊர்திக்குத் தலைவனும் , உலகங்கள் ஏழுமாகிப் பல உயிரும் ஆகி விளங்கியவனும் , மணமிக்க கொன்றைக் கண்ணியை உடையவனும் , வேதம் நான்கையும் உணர்ந்து முற்படப் படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரமனது சிரத்தைக் கொய்தவனும் , குற்றமற்றவனும் , திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிப் பண்படுத்தப் பட்ட வயல்கள் நாற்புறமுஞ் சூழ விளங்கும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழுஞ் சிவபெருமான் என்சிந்தையில் என்றும் நீங்காமல் நிற்பவன் ஆவான் .

குறிப்புரை :

புரிந்து - விரும்பி . ` அமரர் புரிந்து தொழுதேத்தும் ` என மாற்றியுரைக்க . ` புகழ்தக்கோன் ` ` புகழப்படுதற்கு உரியவன் அவன் ஒருவனே ` என்றவாறு ; ` பூமிமேல் புகழ்தக்க பொருளே ` ( ப .95 பா .7) எனப் பின்னர் வருவதுங் காண்க . ஏனையோரது புகழ் எல்லாம் பொருள் சேராதனவாய் ஒழிய , இறைவனது புகழே பொருள்சேர் புகழாதல் பற்றி , அவன் ஒருவனே புகழப்படுதற்கு உரியனாயினான் என உணர்க . விடையின் பாகன் - இடப ஊர்திக்குத் தலைவன் . ` உயிராகி ` என்பதில் உள்ள , ` ஆகி ` என்பதனை ` புவனம் ஏழும் ` என்பதனோடுங் கூட்டுக . விரை - வாசனை . முதல் - காத்தல் அழித்தல்களுக்கு முன்னர் . படைத்தோன் - உலகத்தைப் படைத்தவன் ; பிரமன் ; ` வேதம் நான்கும் தெரிந்தும் , முதற்கண் உலகைப் படைத்தமைபற்றி உலகத் தோற்றத்திற்குத் தன்னையே முதல்வனாக மயங்கி , அதனால் தலை ஒன்றை இழந்தான் ` என்பார் , ` வேதம் நான்கும் தெரிந்து முதற் படைத் தானைச் சிரங்கொண்டோன் ` என்று அருளிச் செய்தார் . தீர்த்தன் - முனிவன் . ` சிரங்கொண்டானாயினும் கொல்லாமையுடைய முனிவனே ` என்றவாறு . திருமால் ஓர் பாகத்தில் உடையனாதல் மேலே ( ப .58. பா .3) காட்டப்பட்டது ; அவ்வாறின்றி ` அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாறனார்க்கே ` ( தி .4. ப .40. பா .5) என அருளிச் செய்தவாறு , ` திருமாலையும் தனது சத்திகளுள் ஒரு சத்தியாகக் கொண்டு ஒரு பாகத்தில் உடையவன் ` என்று உரைத்தலுமாம் . ` சிவபிரானது சத்தி ஒன்றே செயலாற்றுதற்கண் நான்காய்ப் பிரிந்து நிற்கும் ; அங்ஙனம் நிற்குமாறு , இன்பத்தில் பவானியும் , ஆடவரிடத்துத் திருமாலும் , வெகுளியில் காளியும் , போரில் துர்க்கையும் , என்பது சிவாகமங்களின் துணிபு `. ` ஏகைவ சக்தி : பரமேஸ்வரஷ்ய பின்ன சதுர்த்தா விநியோக காலே போகே பவானி புருஷேசு விஷ்ணு : கோபேது காளீ சமரே து துர்க்கா .` ` திருத்தளி ` என்பது இத்தலத்துத் திருக்கோயிலின் பெயர் .

பண் :

பாடல் எண் : 2

வாராரும் முலைமங்கை பாகத் தான்காண்
மாமறைக ளாயவன்காண் மண்ணும் விண்ணுங்
கூரார்வெந் தழலவனுங் காற்றும் நீருங்
குலவரையும் ஆயவன்காண் கொடுநஞ் சுண்ட
காராருங் கண்டன்காண் எண்டோ ளன்காண்
கயிலைமலைப் பொருப்பன்காண் விருப்போ டென்றுந்
தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

கச்சணிந்த முலையினையுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் பெரிய வேதங்கள் ஆனவனும் , நிலமும் விண்ணும் , வெம்மைமிகு தழலும் காற்றும் நீரும் உயர்மலையும் ஆயவனும் , கொடிய நஞ்சையுண்டு கறுத்த கண்டத்தவனும் , எண்டோளினனும் , கயிலைமலையாகிய பொருப்பைத் தன் வாழிடமாகக் கொண்டவனும் ஆகித் தேரோடும் நெடுவீதிகளையுடைய திருப்புத்தூர்த் திருத்தளியில் என்றும் விருப்போடு விளங்கும் சிவ பெருமான் என் சிந்தையிலே என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் .

குறிப்புரை :

கூர் ஆர் - மறைந்து நின்று தோன்றி வளர்தல் பொருந்திய . மண் முதலியவற்றை அஃறிணையாக எண்ணிச் செல்லுதற்கு இடையே , ` அழலவன் ` என உயர்திணையாக எண்ணினார் , ` அனைத்தையும் சடப்பொருள்களாய் எண்ணினும் , அவற்றிற்குத் தலைமை பூண்ட கடவுளராய் எண்ணினும் , இறை நிறைவு பொருந்தும் ` என்றற்கு , தலைமைக் கடவுளரை , ` அதி தெய்வங்கள் ` என்பர் . கார் ஆரும் - கருமை நிறைந்த ; ` மேகம் போலப் பொருந்திய ` என்றுமாம் . ` விருப்போடு ` என்றது , ` திருத்தளியான் ` என்ற வினைக் குறிப்போடு முடிந்தது .

பண் :

பாடல் எண் : 3

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச்சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

மின்னலும் கொடியும் போன்ற இடையினை யுடைய உமையம்மையால் என்றும் விரும்பப்படும் கேள்வனும் , மலையாகிய வலிமை மிக்க வில்லை வளைத்த கையினனும் , நல்ல பாட்டுக்களை யாக்க வல்ல புலவனாய்ச் சங்கம் போந்து நல்ல பொற்கிழியைத் தருமிக்கு அருளியவனும் ஆகி , மணமிக்க கொன்றை மலர் பொன்னின் வனப்பைக் காட்ட , அருகே நின்ற மேட்டு நிலக் காந்தள் கைகளின் வடிவினைக் காட்ட , இவற்றைக் கண்டு வண்டு இசைபாடும் முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய வளமிக்க திருப் புத்தூர்த் திருத்தளியில் விளங்கும் சிவபெருமான் என் சிந்தையில் என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் .

குறிப்புரை :

` மின் காட்டும் மருங்குல் , கொடி மருங்குல் ` எனத் தனித்தனி இயைக்க . ` மின்னலைத் தன்னிடத்தே காட்டும் ` என்பது சொற்பொருளாயினும் , ` காட்டும் ` என்பது உவம உருபேயாம் . மருங்குல் - இடை . ` விருப்பவன் ` என்பது ` கேள்வன் ` என்னும் பொருளுடைத்து ; அகரம் , சாரியை ` பொருப்பாகிய வலியை உடைய சிலை ` என்க . பொருப்பு - மலை . சிலை - வில் . ` தருமி ` என்னும் அந்தணச் சிறுவனுக்கு , ` கொங்கு தேர் வாழ்க்கை ` ( குறுந்தொகை -2) என்னும் அகப்பாட்டைப் பாடி ஈந்து , அதனை அறியாது குற்றங்கூறிய நக்கீரர் முன் புலவனாய்ச் சங்கத்திற் சென்று வாதிட்டு , பாட்டுக் குற்றம் அற்றதாதலையும் , அதனைக் குற்றங் கூறியதே குற்றமாதலையும் தெளிவித்து பாண்டியன் வைத்திருந்த பொற்கிழியை அவ்வந்தணச் சிறுவன் பெறச் செய்து மறைந்தமையின் , ` நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி , நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண் ` என்று அருளிச்செய்தார் . கனகம் - பொன் . கிழி - முடிப்பு . இவ்வரலாற்றின் விரிவை , திருவிளையாடற் புராணத்துட் காண்க . இவ்வருட் செயலை ஈண்டு அருளிச் செய்தமையால் , ` தருமி ` என்பவன் ` இத்தலப் பெருமானை வழிபட்டோனாகவும் கருத இடம் உண்டு . ` கொன்றை பொன்காட்ட ` என்க . கடி - வாசனை . கொன்றையும் காந்தளும் பொன்னையும் , கையையும் காட்டுதல் தம்தம் பூக்களின் வண்ணத் தானும் , வண்ணத்தொடு வடிவத்தானும் என்க . ` கொன்றை சொரிகின்ற பொன்னை , காந்தள் கையேந்தி வாங்கும் ` என அணிந்துரைத்தல் கருத்து . புனம் - காடு . கொன்றையையும் காந்தளையும் இயைத்து அருளிச்செய்தமையின் , ` செழும்புறவு ` என்றது , முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய நிலத்தை என்க . தென் - இசை . ` இசை பாடுவது வண்டாக , அதற்குச் சொரியப்படும் பொன்னைக் காந்தள் பெறுகின்ற திருப்புத்தூர் ` என்றது , ` பாட்டை ஆக்கினோன் சிவபிரானாக , அதற்குப் பாண்டியனால் வைக்கப்பட்ட பொற்கிழியைத் தருமி பெற்றான் ` என்பதனைத் தோற்றுவிக்கும் குறிப்பு மொழியாய் நின்று , சிவ பிரானது அமைதி ( திருத்தி ) யையும் , அருள் நிலையையும் விளக்குவ தாம் என்க .

பண் :

பாடல் எண் : 4

ஏடேறு மலர்க்கமலத் தயனும் மாலும்
இந்திரனும் பணிந்தேத்த இருக்கின் றான்காண்
தோடேறு மலர்க்கடுக்கை வன்னி மத்தந்
துன்னியசெஞ் சடையான்காண் துகள்தீர் சங்கம்
மாடேறி முத்தீனுங் கானல் வேலி
மறைக்காட்டு மாமணிகாண் வளங்கொள் மேதி
சேடேறி மடுப்படியுந் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

இதழ்கள் நிறைந்த தாமரை மலரில் விளங்கும் நான்முகனும் , திருமாலும் இந்திரனும் , பணிந்து துதிக்கும் வண்ணம் இருப்பவனும் , இதழ்களையுடைய கொன்றை , வன்னி , ஊமத்தை ஆகிய மலர்கள் செறிந்த செஞ்சடையினனும் , குற்றமற்ற சங்கம் பக்கத்தே ஏறி முத்தை ஈனும் கடற்கரையை எல்லையாக உடைய மறைக்காட்டில் வாழ் மணியும் ஆகி , வளவிய பயிர்களை மேயும் எருமை கரை மீது ஏறி நீர் நிலையில் படியும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

ஏடு ஏறு , தோடு ஏறு - இதழ்கள் பொருந்திய . ` ஏடு தோடு ` என வந்தது , பொருட்பின் வருநிலை , கடுக்கை - கொன்றை , துகள்தீர் - குற்றம் அற்ற ; நல்ல . சங்கம் - சங்கு . மாடு - கரை . கானல் - கடற்கரை . மேதி - எருமை . சேடு - மேடு ; என்றது , கரையை , ஏறி - கடந்து சென்று . படியும் - மூழ்குகின்ற , ` மேதி சேடு ஏறி மடுப் படியும் ` என்றது . ` மருத நிலஞ் சூழ்ந்த ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 5

கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்
காமருபூங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும்
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டிகாண்
தருமருவு கொடைத்தடக்கை யளகைக் கோன்றன்
சங்காதி ஆரூரில் தனியா னைகாண்
திருமருவு பொழில்புடை சூழ்திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

பிறப்பைப் பொருந்துவதற்கு ஏதுவாகிய வலிய வினை நோயை நீக்கியவனும் , விருப்பம் வருதற்குரிய பொலிவுடன் விளங்கும் கச்சி ஏகம்பனும் , நிலையாமைப் பெருமை மேவும் பெரிய நிலவுலகில் பொருந்தும் பிணிகளைத் தீர்க்கும் குளிர்ச்சிமிக்க பெரும் பற்றப் புலியூர் மன்றாடியும் , கற்பகத்தருப் போலக் கொடுக்கும் பெருமை மிக்க கையினையுடைய அளகைக் கோன் ஆகிய குபேரனுக்கு மிக்க நண்பனும் , ஆரூரில் அமர்ந்த ஒப்பற்ற யானையும் ஆகித் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

கரு மருவு - பிறப்பில் பொருந்துதற்கு ஏதுவாகிய காற்றினான் - உமிழ்வித்தான் ; நீக்கினான் . ` அகற்றினான் ` என்பதும் பாடம் . ` பெருமை ` என்னும் பண்புப் பெயரின் ஈறு தொகுத்தலாயிற்று . ` பெருமை மருவு ` என்றது , ` நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் - பெருமை யுடைத்திவ் வுலகு ` ( குறள் . 336) என்றதனை உட்கொண்டு அருளிய இகழ்ச்சிக் குறிப்பு . ` பிணிகள் தீர்க்கும் மன்றாடி ` என இயையும் . பெரும்பற்றப்புலியூர் - தில்லை . மன்று - சபை . தரு மருவு - கற்பகத் தருவைப்போலும் . அளகைக் கோன் . குபேரன் . சங்காதி - மிக்க நண்பன் ; ( சங்காதம் - மிக்க நட்பு .)` சங்காதி ` என்பதன்றிப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல , ஆரூரில் - திருவாரூரில் ; உள்ள ஒப்பற்ற யானை போன்றவன் , ` யானை ` என்றது , காதற் சொல் . திரு - அழகு .

பண் :

பாடல் எண் : 6

காம்பாடு தோளுமையாள் காண நட்டங்
கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய
பாம்பாடப் படுதலையிற் பலிகொள் வோன்காண்
பவளத்தின் பருவரைபோல் படிவத் தான்காண்
தாம்பாடு சினவிடையே பகடாக் கொண்ட
சங்கரன் காண் பொங்கரவக் கச்சை யோன்காண்
சேம்பாடு வயல்புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

மூங்கில் போன்ற தோளுடைய உமையம்மை காணுமாறு பல கூத்து விகற்பங்களையும் கலந்து ஆடியவனும் , சீற்றம்மிக்க பாம்பு கையிற் கங்கணமாய்ப் பொருந்தி ஆடத் தலைஓட்டில் பிச்சை ஏற்பவனும் , பவளத்தால் ஆன பெரிய மலை போன்ற வடிவினனும் , கயிற்றால் பிணித்தற்குரிய சினமிக்க இடபத்தையே யானை என மதிக்கத்தக்க ஊர்தியாகக் கொண்ட சங்கரனும் , பொங்கும் சினப் பாம்பையே அரைப்பட்டிகையாகப் புனைந்தவனும் ஆகி நீர்ச் சேம்புகள் நிறைந்த வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

காம்பு - மூங்கில் . ஆடு உவம உருபு . படிவத்தான் - வடிவத்தை உடையவன் ; படிமத்தான் ` என்பது பாடம் அன்று , தாம்பு ஆடு - கயிற்றிற் பொருந்தும் ; என்றது ` பசுவாந் தன்மை உடைய ` என்றபடி . ` தாம்பாடு , சினம் ` என்றவை இன அடைகள் . பகடு - யானை ; சிறந்த ஊர்தி யானையே யாகலின் , அதனையே அருளினார் . பொங்கு - சினம் மிக்க ; இதுவும் இன அடை . சேம்பு ஆடு - நீர்ச் சேம்புகள் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 7

வெறிவிரவு மலர்க் கொன்றை விளங்கு திங்கள்
வன்னியொடு விரிசடைமேல் மிலைச்சி னான்காண்
பொறிவிரவு கதநாகம் அக்கி னோடு
பூண்டவன்காண் பொருபுலித்தோ லாடை யான்காண்
அறிவரிய நுண்பொருள்க ளாயி னான்காண்
ஆயிரம்பே ருடையவன்காண் அந்தண் கானல்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண் அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

மணம்நாறும் கொன்றை மலரையும் விளக்க முடைய திங்களையும் வன்னியையும் விரிந்த சடைமேல் சூடியவனும் , புள்ளிகள் பொருந்திய கோபிக்கும் நாகத்தையும் , எலும்பினையும் அணியாகப் பூண்டவனும் , போர்க்குணமுடைய புலியினது தோலை ஆடையாகக் கொண்டவனும் , அறிதற்கரிய நுண்பொருள்களாய் ஆனவனும் , ஆயிரம் பேர் உடையவனும் ஆகி , அழகியதும் , குளிர்ந்ததும் ஆகிய கடற்கரையிடத்தே நெருங்கி விளங்கும் பொழில்கள் சூழ்ந்ததும் , வரிசையாயமைந்த மாடங்களை உடையதுமாகிய திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

வெறி - வாசனை . மிலைச்சினான் - சூடினான் . பொறி - புள்ளி . கதம் - சினம் . அக்கு - எலும்பு , ` கானல் செறிபொழிலைச் சூழும் ` என்றதனை , நெய்தல் மருதத்தொடு மயங்கியதாக உரைக்க .

பண் :

பாடல் எண் : 8

புக்கடைந்த வேதியற்காக் காலற் காய்ந்த
புண்ணியன்காண் வெண்ணகைவெள் வளையாளஞ்ச
மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்
வெண்மதியைத் தலைசேர்த்த தண்மை யோன்காண்
அக்கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை
ஆரூருக் கதிபதிகாண் அந்தண் தென்றல்
திக்கணைந்து வருமருங்கின் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

தன்பால் அடைக்கலம் புக்க வேதியன் மார்க் கண்டேயனுக்காக இயமனைக் கோபித்துக் கொன்ற புண்ணியனும் , வெள்ளிய பற்களையும் வெள்ளிய வளையல்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு சினம் மிக்கு எதிர்த்த யானை நடுங்க அதன் தோலை உரித்தவனும் , வெள்ளிய மதிப்பிறையைத் தலையில் தரித்து அருளியவனும் , மன்மதன் வில்லாகக் கொள்ளுதற்கு வாய்ப்புடைய அக்கரும்பும் , பெருமைமிக்க புன்னையும் நெருங்கிய சோலைமிக்க ஆரூர்க்கு அதிபதியும் ஆகி , மெல்லிதாய்க் குளிர்ந்த தென்றல் வடக்குத் திக்கினை அணையவரும் இடத்தில் உள்ள திருப்புத்தூர்த் திருத் தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

வேதியன் - மார்க்கண்டேயர் . வெள்வளை - சங்க வளை . தண்மை - அருள் . ` அக் கரும்பு ` என்பதில் அகரம் பண்டறி சுட்டாய் , பெருமை குறித்து நின்றது . ` கரும்பும் புன்னையும் நெருங்கு சோலை ` என்றதனால் , நெய்தலும் மருதமும் மயங்கியதாக உரைக்க . அதிபதி - தலைவன் . மருங்கு - இடம் .

பண் :

பாடல் எண் : 9

பற்றவன்காண் ஏனோர்க்கும் வானோ ருக்கும்
பராபரன்காண் தக்கன்றன் வேள்வி செற்ற
கொற்றவன்காண் கொடுஞ்சினத்தை யடங்கச் செற்று
ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன் றத்தெம்
பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காம வேளைச்
செற்றவன்காண் சீர்மருவு திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

அண்டினார்க்குத் துணையானவனும் , தேவர்க்கும் மற்றையவர்க்கும் அவரின் வேறுபட்டு மேலானவனும் , அவரோடு கலந்து நின்று அவரைப் போலக் கீழானவனும் , தக்கனது வேள்வியை அழித்த வெற்றியினனும் , கொடிய சினத்தை முற்றிலும் அழித்தவனும் , ஞானத்தை மேன்மேலும் வளரச் செய்தலைத் தன்கொள்கையாகக் கொண்டவனும் , அருவி விளங்கும் கழுக்குன்றில் யாம் வணங்கும் தலைக்கோலம் உடையவனும் , மிக்க எழில் படைத்த மன்மதனை விழித்து அழித்தவனும் , ஆகி , புகழ்மிக்க திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

பற்றவன் - துணையாய் இருப்பவன் . ` வானோருக்கும் ஏனோர்க்கும் பற்றவன் ` என்க . பராபரன் ` மேலான பொருளாயும் , கீழான பொருளாயும் இருப்பவன் ; ` மேல் ` என்றது தன்னையும் , ` கீழ் ` என்றது பிறவற்றையும் , பொருட்டன்மையால் தானே ஆகியும் , கலப்பினால் பிற பொருள்களாகியும் இருப்பவன் என்றதாம் . கொற்றவன் - வெற்றியை உடையவன் . ` சினம் ` என்றது , வெறுப்பினை ; அதனானே , அதன் மறுதலையாகிய விருப்புங் கொள்ளப்படும் ; படவே , ` உயிர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு முதலாகிய அறியாமையை நீக்கி அறிவை மேன்மேல் மிகுவித்தலையே குறிக்கோளாகக் கொண்ட தன்மையை ( பெருங்கருணையை ) உடையவன் ` என்று அருளியவாறாம் . இவ்வாறு இறைவன் உயிர்களிடத்து அவற்றிற்கு உயிராய் உள் நின்று செய்துவருதலை , ` மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின் மன்னும் அரனே மலந்துரந்து ` எனச் சிவஞான போதமும் , ( சூ . 11. அதி . 2) ` அந்த அருள்உனக்கிங் காதார மாய்அல்லின் இந்து வெனஎறித்திட் டேகமாய் - முந்தி உனை உனக்குத் தான்விளக்கி ஓவா துணர்த்தும் தனைஉனக்குக் காட்டுமே தான் ` எனத் துகளறுபோதமும் (36) விளக்கின . அவ்விடத்து , ` மதி ` எனவும் , ` இந்து ` எனவும் போந்தவை , வளர்பிறைச் சந்திரனைக் குறித்தன என்பது அச்சிவஞானபோத வெண்பா வுரையான் அறிக . பிறங்கு - விளங்குகின்ற . கழுக்குன்றம் , தொண்டைநாட்டுத் தலம் . பேரெழில் ஆர் - மிக்க அழகு பொருந்திய . சீர் - புகழ் .

பண் :

பாடல் எண் : 10

உரம்மதித்த சலந்தரன்தன் ஆகங் கீண்ட
வோராழி படைத்தவன்காண் உலகு சூழும்
வரம்மதித்த கதிரவனைப் பற்கொண் டான்காண்
வானவர்கோன் புயம்நெரித்த வல்லா ளன்காண்
அரமதித்துச் செம்பொன்னி னாரம் பூணா
அணிந்தவன்காண் அலைகடல்சூழ் இலங்கை வேந்தன்
சிரம்நெரித்த சேவடிகாண் திருப்புத் தூரில்
திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

தனது வலியைப் பெரிதாக மதித்த சலந்தரனின் உடலைப் பிளந்த ஒப்பற்ற ஆழியைப் படைத்தவனும் , உலகினைச் சூழவருவோனாய் எல்லாராலும் மேலாக மதிக்கப்பட்ட சூரியனுடைய பல்லைப் பறித்தவனும் , இந்திரனுடைய புயத்தை நெரித்த வன்மை யுடையவனும் , பாம்பினைச் செம்பொன் ஆரமாகவும் பூணாகவும் மதித்து அணிந்தவனும் , அலைகடல் சூழ் இலங்கைக்கு இறையாகிய இராவணனுடைய சிரங்களை நெரியச் செய்த சேவடியினனும் ஆகி , திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் .

குறிப்புரை :

உரம் மதித்த - தனது வலியையே பெரிதாக மதித்த . பின்பு கீண்ட ஆழியைப் படைத்தவன் ( உண்டாக்கியவன் ) என்றதாம் ; ஆகவே , ` ஆகம் கீளுதற்கு ஓர் ஆழியைப் படைத்தவன் ` என்பது கருத்தாயிற்று . வரம் மதித்த - யாவராலும் மேலாக மதிக்கப் பட்ட ; ` பலர் புகழ் ஞாயிறு ` ( தி .11 திருமுருகாற்றுப் படை -2) என்றது காண்க . ` அரவினைப் பொன்னாரமாகவும் , பூணாகவும் மதித்து அணிந்தவன் ` என்க . ` அரா ` என்பதன் ஈற்று ஆகாரம் குறுகி நின்றது . ` சேவடி ` என்பது , சினையாகு பெயராய் அதனை உடையவன்மேல் நின்றது .
சிற்பி