திருவாய்மூர்


பண் :

பாடல் எண் : 1

பாட அடியார் பரவக் கண்டேன்
பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக்
கோட லரவார் சடையிற் கண்டேன்
கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலையொன்று கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

அடியார்கள் பாடிப்பரவவும் பத்தர்கணம் சூழ்ந்து நிற்கவும் பூதங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அமைந்த சூழலில் அழகிய கையில் அனல் ஏந்தியவரும் , காந்தட் பூவும் , பாம்பும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும் , கொக்கிறகைச் சூடியவரும் , கொன்றைமாலையை அணிந்தவரும் , உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

` பாட , பரவ ` முதலிய செயவெனெச்சங்கள் தொழிற் பெயர்த் தன்மையனவாய் நின்று , ` கண்டேன் ` என்பதற்குச் செயப்படு பொருளாயின . ` அடியார் ` பாடவும் பரவவும் கண்டேன் ` என்க . ` பத்தர் கணங் கண்டேன் ` என்பதனை முதற்கண் வைத்து , ` அடியார் ` என்றதனைச் சுட்டளவாகக் கொள்க . கணம் - கூட்டம் . மொய்த்த - நெருங்கிய . ` பூதமும் அதிர்தலும் கண்டேன் ` என்க . ஆடல் முழவம் - நடனத்தில் முழக்கப்படும் மத்தளம் . முழவம் அதிர்தலை , ` கண்டேன் ` என்றது , ` நேர்பட அறிந்தேன் ` என்றபடி , இவ்வாறு மேலும் உரைக்க வேண்டுமிடம் அறிந்துகொள்க . கோடல் - காந்தட் பூ ; ` கோடலும் அரவும் பொருந்திய சடை ` என்க . ` இதழ் ` என்றது , சிறகினை . வாடல்தலை - உலர்ந்த தலை ஓடு ; ` வற்றல் ஓடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளம் கவர்கள்வன் ` ( தி .1. ப .1. பா .2.) என்றருளிச்செய்தார் , திருஞான சம்பந்த சுவாமிகளும் , ` வாய்மூர் அடிகளை நான் கண்டவாறு இது ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்
காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

பால்போன்று இனிக்கும் மொழியாளாகிய பார்வதி ஒரு பங்காகத் திகழப்பெற்றவரும் , பதினெண் கணத்தேவரும் சூழ்ந்து பணி செய்யக் கொண்டவரும் , நீலகண்டரும் , நெற்றிக் கண்ணரும் , பெற்றமூர்பவரும் , ஒளிஉமிழும் இளமதியைத் தரித்தவரும் , திருமுடி மேல் கரந்தை மலரைச் சூடியவரும் , மாலை அணிந்த சடையாலான முடியை உடையவரும் ஆக வாய்மூர் அடிகளை நான் கண்டேன் .

குறிப்புரை :

பதினெண் கணம் - பதினெட்டுக் கூட்டம் ; இக்கூட்டத்தினர் அனைவரும் தேவ இனத்தவர் ; அவர் இன்னர் என்பதனை , ` பதினெண்கணங்களாவார் , 1. தேவரும் , 2. அசுரரும் , 3. முனிவரும் , 4. கின்னரரும் , 5. கிம்புருடரும் , 6. கருடரும் , 7. இயக்கரும் , 8. இராக்கதரும் , 9. கந்தருவரும் , 10. சித்தரும் , 11. சாரணரும் , 12. வித்தியாதரரும் , 13. நாகரும் , 14. பூதரும் , 15. வேதாளமும் , 16. தாராகணமும் , 17. ஆகாசவாசிகளும் , 18. போகபூமியோரும் என இவர் ` என்னும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தின் உரையாலும் , ` விரவுசா ரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர் கருடர்கின் னரர்இயக்கர் காந்தர்வர் சுரர்த யித்தியர் உரகர்ஆ காச வாசர்உத்தர குருவோர் யோகர் நிருதர்கிம் புருடர் விண்மீன் நிறைகணம் மூவா றாமே ` எனும் சூடாமணி நிகண்டுப் பாவாலும் , பிறவாற்றாலும் அறிக . ( விஞ்சையர் - வித்தியாதரர் , பாசாசர் - வேதாளர் . சுரர் - தேவர் . தயித்தியர் - அசுரர் . உரகர் - நாகர் . உத்தரகுருவோர் - போக பூமியர் . யோகர் - முனிவர் . நிருதர் - இராக்கதர் .) பயிலுதல் - சூழ்ந்து பணிசெய்தல் . உண்ட - ஏற்றுக்கொண்ட . ` நெற்றிவிழி ` என்பதும் , ` சடையின் முடியும் ` என்பதுமே பாடமாதல் வேண்டும் . பெற்றம் - பசு ; இடபம் . காலை - இளமை . ` காலை மதியம் ` என்க . கரந்தை ஒருவகைப் பூ . மாலை - கொன்றை மாலை .

பண் :

பாடல் எண் : 3

மண்ணைத் திகழ நடம தாடும்
வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்
விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்
வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்
நாலு மறையங்கம் ஓதக் கண்டேன்
வண்ணம் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

நிலவுலகம் நின்று நிலைக்க நிகழ்த்தும் கூத்தாட்டில் கட்டப்பட்ட சிலம்பு ஒலிக்கின்ற பாதங்களை உடையவராய் , விண்ணிற் சென்று விளங்கும் முடியினராய் , ஏற்கும் பலவகை வேடங்கட்கும் பொருந்திய செயல்களைச் செய்பவராய் , பிரியாது விளங்கும் மழுவினராய் , நான்கு மறைகளையும் ஆறு அங்கங்களையும் ஓதுபவராய் , பலவகை நிறங்களும் அழகுபெறத் திகழும் தோற்றத்தினராய்த் திருவாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

` மண்ணை என்னும் ஐகாரம் சாரியை . வரை - ஏற்றுக் கொண்ட ; அணிந்த . விண்ணின் - செவ்வானத்தைப் போல ; ` வானை அளாவி விளங்கும் ` என்றுமாம் . சரிதை - செயல்கள் . ` பலவாய வேடங்கட்கும் ஏற்ற செயல்கள் ` என்க . வண்ணம் - ( பலவகை ) நிறம் ; ` வண்ணப் பொலிந்திலங்கு கோலம் ` என்பது பாடமாயின் , ` வண்ணக் கோலம் ` என இயைத்து உரைக்க .

பண் :

பாடல் எண் : 4

விளைத்த பெரும்பத்தி கூர நின்று
மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்
இளைக்குங் கதநாக மேனி கண்டேன்
என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்
திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்
சேணார் மதில்மூன்றும் பொன்ற அன்று
வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

முன்னைத் தவம் விளைத்த பத்தி மிக நின்று உண்மை அடியார்கள் தம்மை விரும்புமாறு திகழ்பவராய் , கருடனுக்கு அஞ்சுவனவும் இயல்பாகக் கோபம் மிக்கனவும் ஆகிய நாகங்களை அணிந்து விளங்கும் மேனியராய் , எலும்பாலான அணிகலன்களைப் பூண்டு திகழுபவராய் , திருநீற்றில் மூழ்கும் திருமார்பினராய் , வானிடத்து மதில்கள் மூன்றும் அன்று அழியுமாறு வளைத்த வரிந்து கட்டப்பட்ட சிலையைக் கையில் கொண்டவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

விளைத்த - முன்னைத் தவத்தினால் விளைவிக்கப்பட்ட . கூர் - மேன்மேல் மிக . ` மெய்யடியார் தம்மை விரும்ப ` என்றதில் நின்ற , ` தாம் ` என்பது , இறைவன்மேற்றாகிய பெயர் . இளைக்கும் - கருடனுக்கு அஞ்சும் ; ` கருடனுக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த பாம்புகளைச் சிவபிரான் அணிகலங்களாக அணிந்து கொண்டான் ` என்பது புராணம் . கதம் - சினம் . கலம் - அணிகலம் . ` என்பின் அகலம் திகழ்ந்து ` எனவும் பாடம் கொள்வர் . திளைத்தல் - நீற்றில் மூழ்குதல் . சேண் ஆர் - வானத்தில் பொருந்திய . பொன்ற - அழிய . ` வரிசிலை ` என்பது இன அடை .

பண் :

பாடல் எண் : 5

கான்மறையும் போதகத்தி னுரிவை கண்டேன்
காலிற் கழல்கண்டேன் கரியின் தோல்கொண்
டூன்மறையப் போர்த்த வடிவுங் கண்டேன்
உள்க மனம்வைத்த உணர்வுங் கண்டேன்
நான்மறை யானோடு நெடிய மாலும்
நண்ணி வரக்கண்டேன் திண்ண மாக
மான்மறி தங்கையின் மருவக் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

காட்டில் மறைந்து வாழும் யானையின் தோலை உரித்தவராய் , காலிற்கட்டிய கழலினராய் , அவ் யானைத் தோலின் புலாற் பொல்லாங்கு மறையும் வண்ணம் அதனை , போர்வையாகப் போர்த்திக் கொண்ட வடிவினராய் , உயிர்கள் தம்மை நினைத்தற்கு உரிய மனத்தை உபகரித்து அருளினவராய் , நான்மறையானாகிய பிரமனும் நெடியானாகிய திருமாலும் தம் வலப்பாலும் இடப்பாலும் நண்ண வருபவராய் , மான் கன்று நிலையாகப் பொருந்தி நிற்கும் கையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

கான் மறையும் போதகத்தின் உரிவை - காட்டில் மறைந்து வாழும் யானையின் தோல் ; யானைக்குக் கொடுக்கப்பட்ட இவ்வடை இன அடை . ` அக் கரியின் தோல்கொண்டு ` என எடுத்துக்கொண்டு உரைக்க . ஊன் மறைய - யானைத் தோலினது புலால் தன்மை நீங்கித் தனக்கு உரியதாந் தன்மை அடைய ; இங்கு , ` செய்து ` என ஒரு சொல் வருவிக்க , உள்க . தன்னை நினைத்தற்கு ; மனத்தை வைத்தது ( தந்தது ) உயிர்கட்கு என்க . உணர்வு என்றது , அருளை . மறையோனும் மாலும் நண்ணி வருதல் , வலப்பக்கத்தும் இடப்பக்கத்தும் என்க . திண்ணமாக மருவுதல் - நிலையாகப் பொருந்துதல் .

பண் :

பாடல் எண் : 6

அடியார் சிலம்பொலிக ளார்ப்பக் கண்டேன்
அவ்வவர்க்கே யீந்த கருணை கண்டேன்
முடியார் சடைமேல் அரவ மூழ்க
மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்
கொடியா ரதன்மேல் இடபங் கண்டேன்
கோவணமுங் கீளுங் குலாவக் கண்டேன்
வடியாரும் மூவிலைவேல் கையிற் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

திருவடிகளிற் கட்டிய சிலம்பு ஒலிகளின் ஆரவாரத்தை உடையவராய் , அவரவர்க்கு ஏற்குமாறு ஈந்த கருணையினராய் , சடைச்சுற்றின் நெருக்கினிடை பாம்பு புகுந்து மறைய , அப்பாம்பு தன்னைப் பற்றக் கரந்து வருவதாகக் கருதிப் பெருமை மிக்க பிறையும் அச்சடையின் வேறோர் இடுக்கில் புக்குமறையக் கண்டவராய் , கொடியிடத்துப் பொருந்திய இடபத்தினை உடையவராய் , கோவணமும் கீளும் கொண்டு விளங்குபவராய் , கூரிய மூவிலை வேலினைக் கையில் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

அடி ஆர் சிலம்பு ஒலிகள் - அடியின்கண் பொருந்திய சிலம்பினது ஒலிகள் ; பன்முறையாக ஒலித்தலின் , ` ஒலிகள் ` எனப் பன்மை கூறப்பட்டது . ` அவ்வவர்க்கு ஈந்த ` என்றது , ` அவரவர்கட்கு ஏற்குமாற்றான் ஈந்த ` என்றபடி . முடி ஆர்சடை - மகுடமாகப் பொருந்திய சடை . ` அரவம் ஊர ` என்பதே பாடமாதல் வேண்டும் . மூரி - பெருமை . ` ஆர் கொடியதன் மேல் ` என மாற்றி யுரைக்க ; அது , பகுதிப் பொருள் விகுதி ; ` கொடியாக ஆர்ந்த அதன்மேல் ` எனச் சுட்டுப் பெயராக் கொண்டு உரைத்தலுமாம் . குலாவுதல் - விளங்குதல் . வடி - கூர்மை .

பண் :

பாடல் எண் : 7

குழையார் திருத்தோடு காதிற் கண்டேன்
கொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்
இழையார் புரிநூல் வலத்தே கண்டேன்
ஏழிசையாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்
தக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்
மழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

குழையும் நிறைந்த அழகினையுடைய தோடும் விளங்கும் காதுகளை உடையவராய் , கொக்கரை சச்சரி ஆகிய வாச்சியங்களைப் பயன் கொள்பவராய் , இழைகள் பொருந்திய முறுக்கப்பட்ட பூணூலை வலம்வர அணிந்தவராய் , ஏழிசையும் பயிலும் யாழ் வீணைகளின் இசையை நுகர்வாராய் , தழைத்த சடை யினராய் , தம்வயத்தினராய் , தக்கை தாள முழக்கினராய் மேகம் போன்று கறுத்த திருமிடற்றினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

` குழை தோடு இரண்டும் கண்டேன் ` எனச் செவ்வெண்ணாக்கி யுரைக்க . ஆர் திருத்தோடு - நிறைந்த அழகினையுடைய தோடு ; இனி , ` குழையொடு ஆர்ந்த திருத்தோடு ` எனினுமாம் . குழை ஆடவர் அணிவதாகலின் அது தன் கூறாகிய வலக்காதினும் , தோடு பெண்டிர் அணிவதாகலின் அஃது அம்மை தன் கூறாகிய இடக் காதினும் உள்ளன என்க ; ` தோலும் குழையும் துகிலும் சுருள்தோடும் ` ( தி .8 திருவாசகம் . கோத்தும்பி . 18) என்று அருளியதுங் காண்க . கொக்கரை , சச்சரி , தக்கை , தாளம் இவை வாச்சிய வகைகள் . இழை ஆர் புரி நூல் - இழைகள் பொருந்திய புரியினையுடைய பூணூல் ; பூணூலை வலம்வர அணிதல் மங்கலம் உள்ள காலத்தாகலின் , என்றும் நீங்காத மங்கலத்தை உடையவனாகிய சிவபிரானது பூணூல் வலமாகியே தோன்றுவதாயிற்று . தழை ஆர் சடை - தழைத்தல் பொருந்திய சடை . இனி , தழை தளிரைக் குறித்தது எனக் கொண்டு . ` தளிர்போலப் பொருந்திய சடை ` என்றுரைத்தலுமாம் . தன்மை - பிறிதொன்றன் வழிப்படாது தானேயாய் நிற்கும் இயல்பு ; இது ` தன்வயம் அல்லது சுதந்திரதை ` எனப்படும் . கறங்க - ஒலிக்க . மழை ஆர் - மேகம்போலப் பொருந்திய .

பண் :

பாடல் எண் : 8

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

உலகத்தார்க்கு ஏலாத செய்கைகள் ஆம் நஞ்சுண்ணுதல் , பாம்பணிதல் போன்றனவும் , பொருத்தமற்ற செய்கைகள் ஆம் சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் தம்பால் பொலியக் கொண்டவராய் , போற்றி என்று கூறி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய் , அன்பருக்கு அருளும் தன்மையாராய் , நிலனொடு நீராய் நிற்பவராய் , புதியராய் வந்து பரவிய பூதவேதாளக் கணங்களிடையே திகழ்பவராய் , மெல்லியல் உமையும் விநாயகனும் மனைவியும் மகனுமாம் உறவு முறை கொண்டவராய் , பிணிதீர்க்கும் மருந்தாம் தன்மையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

பொருந்தாத செய்கை - உலகத்தார்க்கு ஏலாத செய்கை ; அவை , சாம்பல் பூசுதல் , எலும்பும் தலைமாலையும் அணிதல் , தலை ஓட்டில் இரத்தல் , நஞ்சை உண்ணுதல் முதலியனவாகக் கொள்க . இன்னோரன்னவை , அவன் பற்றற்றானாதலை உணர்த்தும் . இனி , பொருந்தாத செய்கை , ஒன்றோடொன்று ஒவ்வாத செயல்களுமாம் ; அவை , சடை தரித்துக் கல்லாடை உடுத்தும் பெண்ணொரு பாகனாதல் , ` ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் ` அமரர்க்கு வென்றி தந்து ` ( புறம் - 55) பலவிடத்தும் இரந்து திரிதல் முதலியனவாம் இப்பெற்றியன , அவன் உலகத்துள் யாதொரு கூற்றினும் படாமையை உணர்த்தும் , ` போற்றி ` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று , ` போற்றி இசைத்து ` என்றது , ` போற்றி எனச் சொல்லி என்றவாறு ; இனி , ` போற்று இசைத்து ` எனவே கொண்டு , ` போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி ` என உரைத்தலுமாம் . பரிந்தார் - அன்பு செய்தவர் . பரிசு - தன்மை : உம்மை , சிறப்பு ` பாராய்ப் புனலாகி ` என்றதனால் , ஏனைய பூதங்களும் கொள்ளப்படும் ; அவையாகி நிற்றல் , அப் பூதங்கட்குத் தலைவராக எண்ணப்படும் தேவர்கள் அவனது குறிப்பின்வழி நிற்குமாற்றால் காணப் பட்டது . விருந்து - புதுமை ; ` புதியனவாய்ப் பரந்த தொகுதி ` என்றது . வேறிடங்களிற் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் ; அவை பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாம் . மெல்லியல் - உமை . ` விநாயகனும் ` என எண்ணின்கண் நின்ற எச்ச உம்மையானே ` முருகனும் ` என்பது தழுவப்பட்டது . பிணி , உடல் நோயும் , உயிர் நோயும் என்க . எனவே ` மருந்து ` என்றதும் அவை யிரண்டற்கும் ஏற்றவாற்றாற் கொள்ளப்படும் .

பண் :

பாடல் எண் : 9

மெய்யன்ப ரானார்க் கருளுங் கண்டேன்
வேடுவனாய் நின்ற நிலையுங் கண்டேன்
கையம் பரணெரித்த காட்சி கண்டேன்
கங்கணமும் அங்கைக் கனலுங் கண்டேன்
ஐயம் பலவூர் திரியக் கண்டேன்
அன்றவன்றன் வேள்வி யழித்து கந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

மெய்யன்பர்க்கு அருளுபவராய் , வேட்டுவக் கோலம் கொண்டு நின்றவராய் , கையிடத்துக்கொண்ட அம்பால் அரண்களை அழித்த காட்சியினராய் , பாம்புக்கங்கணராய் , அங்கையில் அனல் ஏந்தியவராய் , பல ஊர்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவராய் , பகைத்த தக்கன் வேள்வியை அழித்தவராய் மகிழ்ந்து உலகம் பரவ இருந்தவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கணடேன் .

குறிப்புரை :

` மெய்யன்பரானார்க்கு ` என்புழி , ` செய்யும் ` என ஒருசொல் வருவிக்க ; அன்றி , ` அருள் - அருளுதல் ` என்றலுமாம் . ` கங்கணம் , பாம்பினால் ஆயது ` என்க . அன்று அவன் - பகைத்த அவன் ; தக்கன் . ` பரவ உகந்து இருத்தல் ` எனக் கூட்டுக . வேடுவனாய் நின்ற நிலை முதலியன , வீரக் குறிப்பு , கபாலம் ஏந்தி நிற்றல் முதலியவற்றால் காணப்பட்டன ; அன்றி , அவற்றை எல்லாம் சுவாமிகள் காணுமாறு இறைவன் அங்கே காட்டியருளினான் எனினும் இழுக்காகாது .

பண் :

பாடல் எண் : 10

கலங்க இருவர்க் கழலாய் நீண்ட
காரணமுங் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்துகந்த பண்புங் கண்டேன்
பாடல் ஒலியெலாங் கூடக் கண்டேன்
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்
இறுத்தவனுக் கீந்த பெருமை கண்டேன்
வலங்கைத் தலத்துள் அனலுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

பொழிப்புரை :

மாலும் அயனும் கலங்குமாறு நீண்ட தழற் பிழம்பாய்த் தோன்றிய காரணராய் , முதலாய் நின்று பயன்களைத் தன்னுட் கொண்டு மகிழ்ந்த பண்பினராய் , பாடல் இசையும் ஏனைய ஒலியும் தாம் ஆம் தன்மையராய் , இலங்கைக் கிறை இராவணனுடைய பத்துத் தலைகளும் நசுங்கச் செய்து பின் அவனுக்கு வரங்கள் ஈந்த பெருமையராய் , வலக்கையிடத்து அனல் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

குறிப்புரை :

கலங்க - திகைக்க . இருவர் , மாலும் அயனும் ; அவர் திகைத்தது , அளவறியப்படாது நீண்டு நின்றமை கண்டு . காரணமாவது , அவர் தமது மயக்கம் நீங்கித் தனது முதன்மையை உணருமாறு செய்ய நினைந்தமை ; அஃது அதன் பயனாய் விளைந்த விளைவைக் குறித்தது ; அவ்விளைவாவது , அவ்விருவரும் அவன் அடியாராய் ஏவல் கேட்டு நின்றமையை . கரு - முதல் . பலங்கள் - பயன்கள் . தரித்து உகத்தல் - தாங்கியருளுதல் . ` எல்லா விளைவுகட்கும் முதற்பொருளாய் , அவ்விளைவுகள் அனைத்தும் முன்னே தன்னிடத்து அடங்கி நின்று பின்தோன்றுமாறு செய்யுந் தன்மை ` என்றபடி . கூட - ஒத்து இயைய . இலங்கைத் தலைவனுக்கு ஈந்த பெருமையைக் கண்டது , அதுபோலும் பல நிகழ்ச்சிகளால் என்க . ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது ; ` வலத்தின்கண் கையின் ` என அடுக்காக்கி உரைத்தலுமாம் . ` அனல் ` என்றது , மழுவை .
சிற்பி