திருவாலங்காடு


பண் :

பாடல் எண் : 1

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ யாகாச மானார் தாமே
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

தாமே கலந்து உலகங்கள் யாவும் ஆனவரும் , ஊழிகள் தோறும் பல உயிர்களை வீடேற்றி உயர்ந்தவரும் , ஒருநிலையே நின்று எல்லா இடங்கட்கும் உரியவராய்ப் பரந்தவரும் , நீரும் வளியும் தீயும் ஆகாசமுமாகி நின்றவரும் , கொன்று திரிகின்ற கூற்றுவனை உதைத்தவரும் , அழகிய பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தேடிச்சென்று மூழ்கும் தீர்த்தங்கள் ஆனவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

` உலகு அனைத்தும் ` என்பதனை , இடைநிலைத் தீவகமாக வைத்து , ` உலகம் முழுதும் தனது ஒரு வியாபகத்துள் அடங்கி நிற்கும் பொருளாகும்படி அவையனைத்துமாய் நிறைந்து நின்றார் ` என உரைக்க . இனி , ` ஒன்றாய் உலகனைத்தும் ஆனார் ` எனப் பாடம் ஓதி , ` முன்னர்த் தாமாகிய ஒரு பொருளாய் நின்று . பின்னர் உலகப் பொருள் பலவும் ஆயினார் , என்றுரைத்தலே சிறப்பென்க . ` இருள் உளதாய் , பகலும் இரவும் இலவாய் , சத்தும் அசத்தும் இலவாய் இருந்தபோது தனியே சிவபிரான் ஒருவனே இருந்தான் - ( சுவேதாசுவதரம் ) ` அவன் , நான் பலவாகுவேனாக என விரும்பினான் ` எது எது ( முன்பு ) இருந்ததோ அதை அதை எல்லாம் அவன் படைத்தான் - அதனைப் படைத்த பின்பு அதனுள் நுழைந்து , சத்தும் தியத்தும் ஆயினன் - ( தைத்ரீயம் ) என இவ்வாறு வரும் உபநிடதப் பகுதிகள் பலவும் ஈண்டுக் காணத்தக்கன . ` தொறு ` என்பதன் திரிபாகிய , ` தோறு ` என்பதனை , பின்னுள்ள ` ஊழி ` என்புழியும் விரிக்க . ஊழி தோறும் உயர்தல் , பல உயிர்களை வீடு பெறுவித்து என்க . நின்று - ஒரு நிலையே நின்று . ` எங்கும் ஆகி நிமிர்ந்தார் ` என்க . நிமிர்தல் , இங்குப் பரத்தல் மேலது . கொன்று ஆடும் - உயிர்களைக் கொன்று திரிகின்ற . கோலம் - அழகு . பழனை , ` பழையனூர் ` என்பதன் மரூஉ . ` பழையனூர் என்பது ஊர் ` எனவும் , ` ஆலங்காடு என்பது அதனை அடுத்த காடு ` எனவும் கருதப்படுதலின் , ஆலங்காட்டுப் பெருமானை அவ்வூரை உடையவனாகவும் அருளிச்செய்தார் . சென்று ஆடும் - தேடிச் சென்று மூழ்குகின்ற . ` மூர்த்தி , தலம் , தீர்த்தம் ` என்னும் மூன்று வடிவிலும் இறைவன் இருந்து , வழிபடுதல் , தங்குதல் , மூழ்குதல் ` என்னும் இச் செயல்களின்வழி உயிர்கட்கு அருள்புரிதல் நோக்கி , ` சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே ` என்று அருளிச் செய்தார் . திருவருளே உண்மைச் செல்வம் ஆதலின் , அதனை உடைய சிவபிரானே , ` செல்வன் ` என்றும் , ` திருவாளன் ` என்றும் சொல்லப்படுவான் . ` செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே ` ( தி .1. ப .80. பா .5.) அதர்வசிகை உபநிடதமும் , சர்வைஸ்வரிய சம்பந்நர் , ` சர்வேஸ்வரர் , சம்பு ` எனக் கூறிற்று .

பண் :

பாடல் எண் : 2

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பிக் கொண்டவரும் , வானோரால் வணங்கப்படுபவரும் , கங்கையாளைத் தம் செஞ்சடைமேல் வைத்தவரும் , சரண்புக்குத் தம் செயல் அற்று இருப்பார்க்கு அன்பர் ஆனவரும் , பற்பல வேடங்களைப் புனைபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்தவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

சரண் என்று இருத்தலாவது , தமது அறிவு இச்சை செயல்கள் யாவும் அவரது அறிவு இச்சை செயல்களின் வழிப்படுவன அல்லது தனித்து நிற்கமாட்டாமையை உணர்ந்து , தம் செயலின்றி , எல்லாம் அவர் செயலாக நிற்றல் . ` பலபல வேடங்களும் ஆனார் ` என , உம்மையைப் பிரித்துக் கூட்டி , ` ஆனார் ` என்பதற்கு , ` உடையவர் ஆனார் ` என உரைக்க . அட்டார் - அழித்தார் .

பண் :

பாடல் எண் : 3

ஆவுற்ற ஐந்தும் உகந்தார் தாமே
அளவில் பெருமை யுடையார் தாமே
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே
புனிதப் பொருளாகி நின்றார் தாமே
பாவுற்ற பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேவுற் றடிபரவ நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

பசுவிடத்துப் பொருந்திய ஐந்து பொருள்களையும் விரும்பியவரும் . அளவிறந்த பெருமையுடையவரும் , மலரின்கண் மணம்போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றவரும் , பா என்னும் ஓசையாம் உறுப்புப் பொருந்திய பாட்டினை விரும்புபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

ஆ உற்ற ஐந்து - பசுவின்கண் பொருந்திய ஐந்து ; பால் , தயிர் , நெய் , நீர் , சாணம் என்பன . உகந்தார் - ஆடுதற்கு விரும்பினார் . பூவுற்ற நாற்றமாய் நின்றார் - மலரின்கண் மணம் போல எல்லாப் பொருள்களிலும் நுண்ணியராய் நிறைந்து நின்றார் . புனிதப் பொருள் - இயல்பாகவே மாசின்றித் தூய்தாய பொருள் . இத் தன்மையை , ` விசுத்த தேகம் ` என்னும் , சிவாகமம் . பா உற்ற பாடல் - ` பா ` என்னும் உறுப்புப் பொருந்திய பாட்டு ; ` பா ` என்னும் உறுப்புடைமையை எடுத்தோதியது , இசையிடத்து விருப்பம் உடையர் என்பது உணர்த்துதற்கு . ` தெய்வம் ` என்னும் பொருளதாகிய , ` தே ` என்னும் பெயர் , சொல்லால் அஃறிணையாதலின் , அத்திணை இருபாற்கும் பொதுவாய் , ஈண்டுப் பன்மைக்கண் வந்தது ; ` தேவர் பலரும் அடைந்து அடிபரவ நின்றார் ` என்பது பொருள் .

பண் :

பாடல் எண் : 4

நாறுபூங் கொன்றை முடியார் தாமே
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மணங்கமழும் கொன்றை மலரைச் சூடிய முடியினரும் , மறை நான்கும் அங்கம் ஆறும் சொன்னவரும் , நரைத்துத் திரைத்து மூத்து விளிதல் இல்லாத மேனியை உடையவரும் , அழகிய பிறையைத் தஞ்சடைமேல் வைத்தவரும் , அழிந்தாருடைய வெள்ளிய தலையோட்டில் பிச்சை ஏற்று உண்டவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , தம் இயல்புகளைத் தெளிவாக உணர்ந்த மெஞ் ஞானியரின் சித்தத்தில் இருந்தவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

மாறு இலா மேனி - அழிதல் இல்லாத உடம்பு ; எனவே , ` தோற்றம் இல்லாதது ` என்பதும் முடிந்தது ; ` மாயையின் கலக்கமாய்த் தோன்றி நின்றழியும் உடம்பின்றித் தம் இச்சையாற் கொள்ளும் அருளுடம்பு உடையவர் ` என்றதாம் . மா - பெருமை . பெருமையாவன , மாசின்மையும் , என்றும் ஒருபடித்தாய் நிற்றலும் முதலியன என்க . பாறினார் - அழிந்தவர் . தேறினார் - தமது உண்மையையும் பெருமையையும் ஐயுறாது தெளிந்து நின்றவர் .

பண் :

பாடல் எண் : 5

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

இரவும் பகலுமாய் நின்றவரும் , அந்தியும் சந்தியும் ஆனவரும் , சொல்லும் , பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனவரும் , தோத்திரமும் சாத்திரமும் ஆனவரும் , மற்றை உலகியலுரைக்கும் எல்லாப் பாக்களும் ஆனவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , செல்லுதற்குரிய வழியைக் காட்ட வல்ல வரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

அல் - இரவு . அந்தி - மாலை . சந்தி - ` காலை , நண்பகல் ` என்னும் ஏனைய இருபொழுதுகள் ; இம் முப்பொழுதுகளும் இறைவனை நினைந்து வழிபடுதற்கு உரிய பொழுதுகளாகலின் , அவ்வாறு வழிபடுவார்க்கு , அப் பொழுதுகளின் தலைமைத் தெய்வங்களாய் நின்று அவரவர் விரும்பும் உலகின்பத்தையும் வீட்டின்பத்தையும் ( புத்தி முத்திகளைத் ) தருபவன் சிவபெருமான் ஒருவனே யாகலின் , ` அந்தியும் சந்தியும் ஆனார் தாமே ` என்று அருளிச் செய்தார் . ` பொருள் ` என்புழித் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க . உலகனைத்தும் சொல்லும் பொருளும் என்னும் இருகூற்றின் உள்ளே அடங்கலின் , ` சொல்லும் பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ` என்று அருளினார் . இனி , ` பொருள் ` என்றது , பொருளுணர்வை எனக் கொள்ளுதலுமாம் . தோத்திரம் , இறைவனது புகழ்ப் பாடல்கள் . சாத்திரம் , இறைவனது இயல்பையும் , அவனுக்கு அடிமையும் உடைமையும் ஆகிய உயிர் உலகங்களது இயல்பையும் , ஐயமும் மருட்கையும் இன்றித் தெளிவிப்பன , அதனால் , அவை இரண்டும் இறைவனையே பொருளாக உடைமையின் , ` தோத்திரமும் சாத்திரமும் ஆனார் ` என்று அருளிச் செய்தார் . அவையிரண்டனாலும் அஞ்ஞானந்தேய , ஞானம் மிகும் என்க . திருவள்ளுவ நாயனாரும் , ` இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு ` ( குறள் - 5) என்பதனால் தோத்திரத்தினது இன்றியமையாமையையும் , ` ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு ` ( குறள் - 357) என்பதனால் சாத்திரத்தினது இன்றியமையாமையையும் உணர்த்தியருளினார் . ` பல் உரைக்கும் ` என்புழி , ` உரை ` என்றது பொருளை . ` உரைக்கும் ` என்பதன்பின் , ` உரிய ` என ஒருசொல் வருவிக்க . பா - பாட்டு . வீடுபற்றிய மெய்ந்நெறிச் செய்யுளும் நூலும் ஆகிய தோத்திர சாத்திரங்களேயன்றி ` அறம் , பொருள் , இன்பம் ` என்பவை பற்றிய உலகியற் செய்யுளும் நூல்களுமாகிய அவைகளாய் நிற்பவரும் அவர்தாமே என்பார் , ` பல் உரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே ` என்று அருளிச்செய்தார் . சிறப்புப் பற்றிப் பாட்டினை எடுத்தோதி அருளினாராயினும் , ` உரை எலாம் ஆனார் ` என்பதும் கொள்ளப்படும் . இவற்றுள் , தோத்திர சாத்திரங்களாய் நிற்றல் இடையீடின்றி நேரே எனவும் , பல்லுரைக்கும் உரிய பாவெலாம் ஆகி நிற்றல் ` அறம் , பொருள் , இன்பம் ` என்னும் உறுதிப் பொருள்கள் வாயிலாக எனவும் கொள்க . ஆல் நிழல் இருந்து அறம் முதலிய நான்கினையும் நால்வர் முனிவர்கட்கு முதற்கண் உணர்த்தி , உலகியலும் மெய்ந்நெறியும் ஆகிய இரண்டனையும் தெரிவித்தருளிய முதல் ஆசிரியன் சிவ பிரானே யாகலின் , ` செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே ` என அருளிச்செய்தார் ; ` அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ ` என்று அருளிச்செய்ததுங் காண்க . ( தி .8 திருவா . திருச்சாழல் . 20)

பண் :

பாடல் எண் : 6

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

தொண்டராய்ப் பணிவார்க்கு அருகில் உள்ள வரும் , தூய வெண்ணீற்றையணிந்து நல்லநிறமுடையவரும் , குளிர்ந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் திருமாலும் தேடத் தழற் பிழம்பாய் நிமிர்ந்து ஓங்கியவரும் , பழைமையான இசையில் பாட அது கேட்டு மகிழ்ந்து நின்றவரும் , பழையனூரைத் தமக்கு உரியதாக உடையவரும் , வலியதோள்கள் எட்டும் உடையவரும் திருவாலங் காட்டுறையும் அடிகளே ஆவார் .

குறிப்புரை :

தொண்டாய் - தொண்டராய் . சுவண்டர் - சுவண்ணர் ( நல்ல நிறம் உடையவர் ) என்பதன் மரூஉ . ` பண்டான ` என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று ; ` பண்டு ஆன ( பழைமையான )` என்று ஆயினும் , ` பண் தான ( பண்களுக்குரிய தானங்களிலே - இடங்களிலே - பொருந்திய )` என்றாயினும் பிரித்துப் பொருள் கொள்க . இங்குக் கூத்தப்பெருமான் எட்டுத் தோள்களை உடையவராய் இருத்தல் நினைவு கூரத்தக்கது .

பண் :

பாடல் எண் : 7

மையாருங் கண்ட மிடற்றார் தாமே
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும்
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

கருமைபொருந்திய மிடற்றினை உடையவரும் , சுடுகாட்டில் மகிழ்ந்து ஆடினவரும் , ஐயாறும் , ஆரூரும் , ஆனைக்காவும் தில்லையம்பலமும் கோயிலாகக் கொண்டவரும் , படம் விரித்தாடும் பாம்பைக் கச்சையாகவும் கங்கணமாகவும் பிறவாகவும் கட்டியவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , திருமகள் வழிபட அவட்கு வரமளித்து நின்றவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே யாவர் .

குறிப்புரை :

மை ஆரும் - கருமை நிறம் பொருந்திய , ` மையாருங் கண்ட மிடறு ` என்றதனை , ` இடைச்சொற் கிளவி , உரிச்சொற் கிளவி ` ( தொல் . சொல் . 159.) என்பனபோலக் கொள்க . அம்பலம் - தில்லை யம்பலம் . ஐயாறு முதலிய நான்கும் சோழ நாட்டுத் தலங்கள் . அம்பலத்தை நினைந்தருளியது , இத்தலத்திலும் பெருமான் ஆடும் பெருமானாய் நின்றருளுதலைக் கண்டு என்க . இங்குள்ள அம்பலம் அரதன அம்பலமாகும் . செய்யாள் - திருமகள் ; இவள் , இந்திரனால் தலையற்று வீழ்ந்த தன் கணவன் திருமாலை உயிர்ப்பித்துத் தர வேண்டிச் சிவபிரானை வழிபட்டு , அவ்வேண்டுதல் நிறைவுறப் பெற்றாள் என்பது திருவாரூர்த் தல வரலாறு .

பண் :

பாடல் எண் : 8

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாக் காமனையுங் காய்ந்தார் தாமே
காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

விண்முழுதுமாய் மண்முழுதுமாய் வியாபித்து நின்றவரும் , உயர்ந்தோர்கள் புகழும் குணத்தினரும் , நெற்றிக் கண்ணை விழித்துக் காமனைக் காய்ந்தவரும் , காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தவரும் , பண்கள் உலவுதற்கு இடமாகிய பாடல்களை விரும்புபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , வலிய மழுவாயுதத்தை ஏந்திய கரத்தவரும் திருவாலங்காட்டுறை செல்வரே ஆவார் .

குறிப்புரை :

மிக்கோர்கள் - உயர்ந்தவர்கள் ; அவர்கள் அவரது குணத்தை ஏத்துதல் அவை பிறரிடத்து இல்லாத பேரருட் குணங்களாதல் பற்றி . விழியால் - விழித்தற் செயலால் . ` காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தார் ` என்க . பண் இயலும் பாடல் - பண்கள் உலாவும் பாடல்கள் .

பண் :

பாடல் எண் : 9

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை உடையார் தாமே
ஊராஏ கம்ப முகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய கரிய நஞ்சை உண்டவரும் , கயிலை மலையை உடையவரும் , தமக்குரிய ஊராக ஏகம்பத்தை விரும்பிக் கொண்டவரும் , தமக்குரித்தல்லாததாய் ஒற்றியாகப் பெற்ற ஊர் என்று கொள்ளத்தகும் ஒற்றியூரை நிலையாகப் பற்றி நின்றவரும் , உலகத்தாரால் உயர்த்துப் புகழப்படுபவரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , வலிய வினையாகிய தீராத நோயைத் தீர்ப்பவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரேயாவர் .

குறிப்புரை :

கார் ஆர் - கருமை பொருந்திய ; ` மேகங்கள் உண்கின்ற ` என்றுமாம் . ` ஒற்றியூர் பற்றி இருந்தார் ` என்றது , ` தமக்கு உரித்தல்லாது ஒற்றியாகப் பெற்ற ஊரை நிலையாகப் பற்றியிருக்கின்றார் ` என்னும் நயந்தோற்றி நின்றது . வினை , எளிதில் பிறிதொன்றால் நீங்குவதன்றாகலின் , ` தீராத வல்வினை நோய் ` என்று அருளினார் .

பண் :

பாடல் எண் : 10

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொழிப்புரை :

மாலைக் காலத்துப் பிறையைச் சென்னியில் சேர்த்தவரும் , வளமிக்க கயிலை மலையை வணங்காதவனும் கரிய கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனுமாகிய இராவணனுடைய உடல் நெரியுமாறு கால்விரலை ஊன்றி வருத்தினவரும் , பால்போலும் நிறங்கொண்ட மேனியினரும் , பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும் , ஒழுக்கமுடைய உயர்ந்தோர் ஏத்தும் கூறுபாட்டில் அமைந்த அறக்கருணை உடையவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார் .

குறிப்புரை :

மாலைப் பிறை - மாலைக் காலத்தில் தோன்றும் பிறை . வந்தியாத - வணங்காத . அடர்த்தார் - வருத்தினார் . ` பாலொத்த நிறத்தார் ` என இயையும் . மேனி நிறம் - மேனியது நிறம் . ` மேனி பாலொத்த நிறத்தார் ` என மாற்றி உரைப்பினும் ஆம் . இந்நிறம் ; திரு நீற்றினால் ஆயது என்க . சீலத்தார் - ஒழுக்கமுடையவர் ; அவர்கட்கே சிவபிரானது அறக் கருணை உரியது ஆகலின் , அவன் அவர்கள் ஏத்தும் திறம் உடையனாயினான் என்க .
சிற்பி