திருத்தலையாலங்காடு


பண் :

பாடல் எண் : 1

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும் , சூழும் நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும் , இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும் , ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும் , நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும் , அயன் , அரி , அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

தூநெறியாய் நிற்றல் - தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நிற்றல் . சூழ்நரகில் வீழாமே காத்தலும் தொண்டரையே யாம் . ` அண்டத்துக்கு அப்பாற்பட்ட பொருள் உயிர் ; அதற்கும் அப்பாற்பட்ட பொருள் சிவபிரான் ` என்க . ஆதரித்த - விரும்பிய . முண்டம் - நெற்றி . நெருப்பு சிவபிரானது நெற்றிக் கண்ணில் தோன்றிற்று . ஆகலான் , ` முண்டத்தின் முளைத்தெழுந்த தீயானான் ` என்று அருளிச்செய்தார் . மூவுருவம் - அயன் அரி அரன் உருவம் ; அவற்றுள் ஓர் உருவமாய் என்றது , அரனாகி நிற்றலை . முதலாய் - அம் மூவுருவிற்கும் முதலாய் ; என்றது , பரம சிவனாகி நிற்றலை . ` மூவுருவத்து ஓர் உருவாயும் முதலாயும் நின்ற தலையாலங்காடன் ` என்க . தண்டத்தின் - இலிங்க உருவத்தினை உடைய .

பண் :

பாடல் எண் : 2

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர்புர மொருநொடியில் எரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை யெண்ண ருஞ்சீர்ப் போகமெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

சங்குமணி கட்டிய இடையினனும் , தந்தை ஆனவனும் , அசுரர் புரங்கள் மூன்றையும் ஒருவிநாடியில் எரித்தவனும் , கொக்கிறகு செருகப்பட்ட சடைமுடிக்கூத்தனும் , குண்டலஞ்சேர் காதினனும் , தன்னை எண்ணி உருகுவார் மனத்துட்புக்கு அங்கிருந்து போகாத புனிதனும் , புண்ணிய உருவினனும் , அளவற்ற செல்வத்தான் ஆகும் இன்பமெல்லாம் வாய்த்திருந்தானும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

அக்கு - சங்குமணி . ` கொக்கு ` என்றது , அதன் இறகை . மகுடம் - ( சடை ) முடி . குண்டலம் - குழை . குழைவார் - உள்ளம் உருகுபவர் . சீர்ப் போகம் - செல்வத்தால் ஆகும் இன்பம் . தக்கிருந்த - வாய்ந்து இருந்த ; என்றது , ` எல்லா இன்பங்களும் இறைவனையே பற்றிநிற்பன ` என்றவாறாம் ; இனி , இதனைத் தலையாலங்காட்டிற்கு அடையாக்கலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 3

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
யிடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

உண்மைத் தவமாகி , வேதமுமாகி , வேதத்தின் முதலும் ஆகி , ஒளிரும் இளம்பிறையைச் சூடி , வேறுபட்ட இயல்பினனும் , வீணே அலைந்து இளைத்த அறிவற்ற என்னைத் துன்பக் கடலில் வீழாமல் கரையேற எடுத்துப் பொய்த்தவத்தார் அறிய முடியாத நெறியில் என்னை நிற்பித்தவனும் , கங்கையைச் சடையில் கரந்து உமையம்மையை ஒரு கூற்றிலே கொண்டு நின்றவனும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

சிவபிரானது பணிகளே உண்மைத் தவமாதலின் , அப்பணிகளைப் புரியுமாறு நிற்கும் அவனை , ` மெய்த்தவம் ` என்று அருளினார் . வேத வித்து - வேதத்திற்குக் காரணன் ; முதல்வன் . ` எய்த்து அவமே உழிதந்த ` என்றாரேனும் , ` அவமே உழிதந்து எய்த்த ` என்பதே திருவுள்ளமாகக்கொள்க . எய்த்தது , உடலை வருத்தியதன்றிப் பிறிது பயன் காணாதொழிந்தது . பொய்த்தவத்தார் - இறைவனுண்மை கொள்ளாது பிற சில செயல்களை மேற்கொள்பவர் ; அவர் சமணரும் சாக்கியரும் என்க . ` நிற்பித்தானை ` எனற்பாலது , ` நின்றானை ` எனப்பட்டது . ` புனல் ` என்பது , ` கங்கையாள் ` என்னும் பொருளது .

பண் :

பாடல் எண் : 4

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

சிவனாய் , நான்முகனாய்த் திருமாலாய் , சூரிய சந்திரராய் , தீயாய் , நீராய் , புவலோகமாய் , புவனங்கள் யாவுமாய் , பொன்னாய் , மணியாய் , முத்துமாய் , வேண்டுமிடங்களில் வேண்டிய வாறே தோன்றுபவனாய் , உயிர்கள் வாழ்தற்கேற்ற இடங்கள் யாவுமாய் , இடபத்தை ஊர்ந்து திரியும் ஒரு கோலத்தை உடையனாய் , தவ வேடந்தாங்கிநின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

` சிவனாகி ` என்றது , ` உருத்திரனாகி ` என்றபடி , ` சுடர் ` என்றது ஞாயிற்றையும் திங்களையும் . புவன் - புவலோகமாய் உள்ளவன் ; இது பூலோகத்தை அடுத்து நிற்றலின் வேறு ஓதியருளினார் . ` பொன்னாகி ` முதலிய மூன்றனாலும் , ` செல்வமாய் உள்ளவன் ` என்றவாறு . பவன் - வேண்டும் இடங்களில் வேண்டியவாறே தோன்றுபவன் . திரிவான் ஓர் பவன் - திரிபவனாகிய ஒரு கோலத்தை யுடையவன் . ` நின்ற தலையாலங்காடன் ` என இயையும் . தவன் - தவக்கோலம் உடையவன் .

பண் :

பாடல் எண் : 5

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

விரைந்து வரும் புனலையுடைய கங்கையைச் சடையில் கரந்தவனாய் , விரும்பத்தக்க அழகிய பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பனாய் , அழகிய கையில் மான்கன்றொன்றை ஏந்தியவனாய் , ஐயாறு மேயவனாய் , ஆரூரனாய் , குற்றமில்லா அடியார் மாட்டுப் பரிவுடையனாய் , பரிதி நியமத்தவனாய் , பாசூரினனாய் , சங்கரனாய் நின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

` கடும்புனலைக் கரந்தான் ` என்றது , அது கரக்கலாகா ஆற்றலது என்பது உணர்த்துதற்கு . காமரு - அழகிய . ` விரும்பத் தக்க ` என்றுமாம் . ஐயாறு , ஆரூர் , பரிதிநியமம் இவை சோழநாட்டுத் தலங்கள் . பாசூர் , தொண்டைநாட்டுத் தலம் . பங்கம் - குறைபாடு ; குற்றம் . பரிந்தான் - இரங்கினான் .

பண் :

பாடல் எண் : 6

விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

விடமுடைய பாம்பினை இடையின்மேல் கட்டியவனாய் , தேவர்களாலும் எண்ணுதற்கரிய அளவினனாய் , தன்னை அடைந்தவரைத் தேவருலகம் ஆளச் செய்பவனாய் , அழகிய பொன்னாய் , அசையும் பெரிய களிற்றியானையை அழித்தவனாய் , உமை திகழ் ஒருபாகனாய் , சடைமுடிமேல் ஒழுகும் நீரையுடைய கங்கையையும் , கொடிய பாம்பையும் , பிறையையும் வைத்தவனாய் அகன்ற கடலை ஒத்தவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண் நாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

வீக்கினான் - கட்டினான் . எண்ணரிய அளவினான் - அளத்தற்கரிய அளவினையுடையவன் ; என்றது , ` அளவின்மை யுடையனாகலின் , யாவராலும் அளத்தற்கரியவன் ` என்றபடி . ` அளவிலான் ` என்பதும் பாடம் . ` அமரர் உலகம் ` என்பது குறைந்து நின்றது . கம்பம் - அசைதல் . அட்டான் - அழித்தான் . மகுடம் - சடை முடி . வார் புனல் - ஒழுகும் நீர் . வாளரவு - கொடிய பாம்பு . தடங்கடல் , அடையடுத்த உவமையாகுபெயர் .

பண் :

பாடல் எண் : 7

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை யந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

இடபமூர்ந்து வீட்டு வாயில்கள் தோறும் பிச்சை யேற்பவனாய் , வீரட்டங்கள் எட்டும் மேவினவனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , பிணம் எரிந்து முடைநாறும் சுடுகாட்டில் ஆடுபவனாய் , இறப்பு எதிர்வு நிகழ்வு ஆகிய முக்காலமும் ஆபவனாய் , அரையிலுடை புலித்தோலாகவும் மேலாடை யானைத் தோலாகவும் அமைய விரும்பினனாய் , உமைபொருந்திய பாகத்தோடுள்ள ஒருவனாய் , சடையவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

கடைதோறும் - வாயில்கள்தோறும் . பலி - பிச்சை . ` வீரட்டம் ` என்ற பொதுமையால் , எட்டனையும் கொள்க . முதுகாடு - சுடுகாடு . முன் - இறந்த காலம் . பின் - எதிர்காலம் . அந்நாள் - நிகழ் காலம் . உடை - அரையில் உடுக்கப்படுவது . ஆடை - மேலே இடப்படுவது . ` இவை இரண்டனையும் , புலியையும் யானையையும் உரித்த தோலேயாக விரும்பினான் ` என்க . ` உள் ஒருவன் ` என்றதனை , ` உள் பொருள் ` என்பது போலப் பண்புத்தொகையாகக் கொள்க . பாகத்து உள் ஒருவன் - பாகத்தோடு உள்ள ஒருவன் .

பண் :

பாடல் எண் : 8

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை
யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

கரும்பின்கண் இருந்த சாறுகொண்டு சமைத்த கட்டியையும் கனியையும் தேனையும் ஒப்பவனாய் , கன்றாப்பூரின் நடுதறியாய் , பன்றியின் வெண்மருப்பாலாகிய காறை அணியினனாய் , இரும்பாலான மூவிலை வேலை ஏந்தியவனாய் , எனக்கு முதல்வனாய் , அழகிய ஆனைக் காவனாய் , வண்டுமொய்க்கும் கொன்றை மலரைச் சூடியவனாய் , தூயவனாய் , தாயானவனாய் , உலகுக் கெல்லாம் பொருள் வழங்குபவனாய்த் திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

கரும்பு இருந்த - கரும்பின்கண் இருந்த ; என்றது , ` சாற்று வடிவாய் இருந்த ` என்றவாறு . ` கன்றாப்பின் நடுதறி , காறை , என்பவற்றை மேலே ( ப .61. பா .2; ப .4. பா .3.) காண்க . இரும்பு அமர்ந்த - இரும்பு பொருந்திய ; இஃது உருவ நிலையை விளக்கியது . என்னான் - எனக்கு முதல்வன் . ஆனைக்கா , சோழநாட்டுத் தலம் . சுரும்பு - வண்டு . ` உலகுக்கெல்லாம் நலம் தரும் பொருள் ` என்க .

பண் :

பாடல் எண் : 9

பண்டளவு நரம்போசைப் பயனைப் பாலைப்
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவிற் களிகூர்வார்க் கெளியான் தன்னைக்
காரணனை நாரணனைக் கமலத் தோனை
எண்டளவி லென்னெஞ்சத் துள்ளே நின்ற
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

பண்டுதொட்டுவரும் இசையிலக்கணத்தொடு பொருந்திய யாழிசையின் பயனாய் , பாலாய் , பாலின் சுவையாய் , பெரியவானமாய் , கனலாய் , காற்றாய் , தன்னைக் கண்ட அளவிலே மகிழ்ச்சி மிகுவார்க்கு எளியனாய் , முதல்வனாய் , திருமாலாய் , நான் முகனாய் , எட்டிதழ்த் தாமரை வடிவிலுள்ள இல்லமாகிய என் நெஞ்சத் துள்ளே நின்ற எம் தலைவனாய் , யானைத் தோற் போர்வையைப் பேணுபவனாய் , இலிங்க வடிவினனாய்த் திகழும் தலையாலங் காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன் .

குறிப்புரை :

பண்டு அளவு - தொன்று தொட்டு வரும் அளவு ; என்றது , இசை இலக்கணத்தை . படு பயன் - பாலின்கண் பொருந்திய பயன் ; சுவை . கடு வெளி - பெரிய வானம் . ` கண்ட அளவில் ` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று . மெய்யன்புடையார் பிறிது பயன் வேண்டாது காட்சியையே விரும்பி நிற்பராகலின் , அவரே கண்ட அளவிற் களிகூர்வார் என்க . காரணன் - முதல்வன் . அதிகார சத்தியால் நாரணனாகியும் கமலத்தோனாகியும் நிற்பவன் என்றதாம் . எண்டளம் - எட்டுத் தளம் ; தளம் - இதழ் . ` எட்டிதழ்த் தாமரை வடிவில் உள்ள இல்லமாகிய என் நெஞ்சம் ` என்க . ` இருதய கமலம் எட்டிதழ்த் தாமரை வடிவிற்று ` என்பது , மெய்ந்நூல்களின் துணிபு . தண்டு அரன் - இலிங்க வடிவாய் உள்ள சிவபிரான் ; ` துன்பத்தை நீக்குகின்ற உருத்திரன் ` என்றுமாம் , இனி , ` பண்ணளவு , எண்ணளவு , தண்ணரன் ` என்பன , எதுகை நோக்கித் திரிந்தன என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 10

கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமத்
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே.

பொழிப்புரை :

இருபது கைகளையுடைய அரக்கர் கோமான் தோள்வளைகளைப் புடைத்து ஓடிச்சென்று ஆராயாது கயிலை மலையை விரைந்தெடுக்க அவன் முத்து விளங்கும் முடிகள் பத்தும் நடுங்கும் வண்ணம் திருவிரல் ஒன்றை அவன்மேல் வைத்து ஊன்ற அவன் தன் பத்து வாயாலும் பாடிய சாமகீதப் பாடலைக் கேட்டு இரக்கம் மிக்கவனாய் அவனுக்கு இராவணன் என்ற பெயரை ஈந்த தத்துவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேனே .

குறிப்புரை :

அது , பகுதிப் பொருள் விகுதி . தன் , சாரியை . கருதாது - ஆராயாது . முடி - மகுடம் . ` துளங்க ` என்புழி , ` அசைத்து ` என ஒரு சொல் வருவிக்க . வளைகள் - தோள்வளைகள் . அவைகளை ` எற்றி ` என்றது , ` தோள்களைப் புடைத்துக்கொண்டு ` என்றவாறு . முடுகுதல் - விரைதல் ; அது , விரைந்து எடுத்த செயல்மேல் நின்றது . ` அவன் மேல் ஆக ` என ஆக்கம் வருவித்து , ` வைப்பு அவன் மேலதாகும்படி ` என உரைக்க . வைப்ப - ஊன்ற . பாடல் - இசை பாடுதல் . பரிந்து - இரங்கி . ` ஈந்த நாமத் தத்துவன் ` என்று அருளினாராயினும் , ` நாமம் ஈந்த தத்துவன் ` என்றலே திருவுள்ளம் என்க . நாமம் - பெயர் ` இராவணன் ` என்னும் பெயர் , ` அழுதவன் ` என்னும் பொருளுடையதாய் , அவன் அஞ்ஞான்று அடைந்த துன்பத்தினை என்றும் நினைப்பித்து நின்றமை யறிக .
சிற்பி