திருமாற்பேறு


பண் :

பாடல் எண் : 1

பாரானைப் பாரினது பயனா னானைப்
படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தங்கட்
கனைத்துலகு மானானை அமரர் கோனைக்
காராருங் கண்டனைக் கயிலை வேந்தைக்
கருதுவார் மனத்தானைக் காலற் செற்ற
சீரானைச் செல்வனைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

இப்பூமி ஆனவனும் , பூமியின் பயன் ஆனவனும் , படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்றவனும் , பல்லுயிர் மேலும் இரக்கம் கொண்டவனும் , அடியார்க்குத் தெவிட்டாத இனிய அமுது ஆனவனும் , எல்லா உலகுகளாகவும் விரிந்தவனும் , தேவர் கோனாய்த் திகழ்பவனும் , கரிய கண்டமுடையவனும் , கயிலை மலைக்கு இறையவனும் , நினைவார் மனத்தில் நிற்பவனும் , இயமனை வெகுண்டொறுத்த புகழுடையவனும் , செல்வம் மிக்கவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன் .

குறிப்புரை :

பார் - பூமி . பயன் வித்துக்களின் விளைவைத் தருதல் . படைப்பு ஆகி - படைத்தல் தொழிலே தானாய் அதன்கண் நின்று . ` படைப்பானை ` என்பதும் பாடம் . பரிவோன் - இரங்குவோன் . ஆராத - தெவிட்டாத . ` அடியார்கட்கு அமுதை ` என்க . சீர் - புகழ் ; அது , மார்க்கண்டேயரைக் காத்து , என்றும் பதினாறு வயதினராய் இருக்க அருளியதனால் ஆகியது . ` நானே ` என்னும் பிரிநிலை ஏகாரம் , தாம் அடைதற்கு அரிதாதல் விளக்கி நின்றது . ` செம்பவளக் குன்று ` என்றது ; உவமையாகுபெயர் .

பண் :

பாடல் எண் : 2

விளைக்கின்ற நீராகி வித்து மாகி
விண்ணொடுமண் ணாகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளையாகிச் சோதி யாகித்
தூண்டரிய சுடராகித் துளக்கில் வான்மேல்
முளைக்கின்ற கதிர்மதியும் அரவு மொன்றி
முழங்கொலிநீர்க் கங்கையொடு மூவா தென்றுந்
திளைக்கின்ற சடையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

விளைவை உண்டாக்கும் நீராயும் , வித்தாயும் , விண்ணாயும் , மண்ணாயும் , செம்பொன்விளையும் சுரங்கமாயும் , அலகில் சோதியாயும் , தூண்டுதல் வேண்டா விளக்காயும் , அசைவில்லா வானத்தின்மேல் தோன்றி ஒளிர்பிறையும் பாம்பும் என்றும் மூவாது நின்று ஒலிமிக்க நீரையுடைய கங்கையுடன் விளையாடி மகிழ்கின்ற சடையனாகவும் ஆகித் திருமால் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

விளைக்கின்ற நீர் - வித்துக்களைப் பதப்படுத்தியும் , பின்னர் அவற்றினின்றும் தோன்றும் முளைகளை வளர்த்தும் பயன் தரச்செய்கின்ற நீர் ; இதனை எடுத்தோதியது , அவன் உலகிற்குச் செய்து வரும் நலத்தினது சிறப்பு . அதனை மறவாது ஊன்றி உணர்வார்க்கே புலனாவதாதலை நினைந்து என்க . ` விளைக்கின்ற நீராகி ` என்றதனால் , ` விளைகின்ற வித்துமாகி ` என்பதும் போதரும் . ` செம் பொற்றுளை ` என இயையும் ; ஈண்டு , ` துளை ` என்றது பொன்னின் பொருட்டு அகழப்படும் நிலச்சுரங்கத்தை ; இதனை , ` ஆகரம் ` என்ப . ` இது , தன்னை அடைந்தார்க்கு நிரம்பிய செல்வத்தைக் கொடுப்பது போல , இறைவன் தன்னை அடைந்தார்க்குப் பெரு நலத்தைத் தருபவன் ` என்பதாம் . ` துளைக்கின்ற ` என்றதும் , ` அகழ்கின்ற ` என்றவாறே யாம் , ` தூண்டரிய ` என்பதில் அருமை , இன்மை குறித்து நின்றது , ` தூண்டுதல் வேண்டாத சுடர் ` ( விளக்கு ) என்றபடி . துளக்கு இல் வான் - அசைதல் இல்லாத வானம் ; எல்லாப் பொருளும் தன்னிடத்தே போக்கு வரவு புரிய , தான் போக்கு வரவு இன்றி நிற்றலின் , ` துளக்கில் வான் ` என்றருளினார் . கதிர் - ஒளி . மூவாது - மூப்படையாது . திளைக்கின்ற - விளையாடி மகிழ்கின்ற . ` மதியும் அரவும் ஒன்றி என்றும் மூவாது நின்று கங்கையொடு திளைக்கின்ற ` என்க . இனி , ஒடு உருபைக் கண்ணுருபாகத் திரித்தலுமாம் . அன்றி , ஒடுவை , ` எண் ஒடு ` என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

மலைமகள்தங் கோனவனை மாநீர் முத்தை
மரகதத்தை மாமணியை மல்கு செல்வக்
கலைநிலவு கையானைக் கம்பன் தன்னைக்
காண்பினிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை
விலைபெரிய வெண்ணீற்று மேனி யானை
மெய்யடியார் வேண்டுவதே வேண்டு வானைச்
சிலைநிலவு கரத்தானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

மலைமகளுடைய தலைவனும் , கடலில் படும் முத்தும் , மரகதமும் , சிறந்த மாணிக்க மணியும் போல்பவனும் , மான் கன்றையே மிக்க செல்வமாகக் கையிடத்துக் கொண்டவனும் , கச்சி ஏகம்பனும் , விலைமிக்க வெண்ணீற்று மேனியனும் , உண்மையடியார் கருதுவதையே தானும் கருதி முடித்தருளுபவனும் , வில் நிலவும் கரத்தவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

மா நீர் - மிக்க நீர் , இஃது , அன்மொழித் தொகையாய் , கடலைக் குறித்தது . மா மணி - பெருமை பொருந்திய மணி ; மாணிக்கம் . கலை - மான் . மல்கு - மிக்க ; ` மிக்க செல்வமாகிய கலை நிலவு கையான் ` என்றது , ` மான் கன்றையே மிக்க கைப்பொருளாக உடையவன் ` என்றபடி , கம்பன் - கச்சி ஏகம்பன் . காண்பு இனிய - காட்சிக்கு இனிய . கனகம் - பொன் . ` விலை பெரிய ` என்றது ` சிறிதும் விலைபெறாத ` என்பதனை எதிர்மறைவகையால் நகைதோன்ற அருளிச்செய்தவாறு . ஒன்றும் அறியாது உரைத்தவரை , ` நீயிர் பெரிதும் அறிதிர் ` என்றல்போல . இவை இரண்டானும் , சிவபிரானது பற்றற்ற தன்மையை வியந்தருளியவாறு . ` மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவான் ` என்றது , ` பிறராயின் , அவர் ஒன்று நினைக்கத்தான் வேறோன்று நினைத்தல் போலாது , மெய்யடியார் கருதியதையே தானும் கருதி முடித்தருளுவன் ` என்றதாம் ; இஃது ` என்னை ஆண்டருளினீராகில் அடியேன் பின் வந்தவனை ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்றும் எடுத்தாளவேண்டும் ` எனத் திருவதிகையில் திலகவதியாரும் ` ` வண்ணங்கண்டு நானும்மை வணங்கியன்றிப் போகேன் ` எனப் பழையாறை வடதளியில் சுவாமிகளும் , ` அடியேற்கு இன்று ஞாலம் நின் புகழேயாகவேண்டும் ` என ஆலவாயில் ஆளுடைய பிள்ளையாரும் வேண்டியவற்றையே தானும் வேண்டி முடித்தமை முதலியவற்றால் இனிது விளங்கிக் கிடந்தமை காண்க . சிலை - மேருமலையாகிய வில் .

பண் :

பாடல் எண் : 4

உற்றானை யுடல்தனக்கோர் உயிரா னானை
ஓங்காரத் தொருவனையங் குமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவா தானைப்
பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவுந் தானே யாய
கச்சியே கம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

உறவானவனும் , உடலிடத்து உயிர் ஆனவனும் , ஓங்காரத்தில் முழுப்பொருள் தான் ஒருவனே ஆனவனும் , உமை ஒரு பாகத்தைப் பெற்றவனும் , தலைக்கோலச் சிறப்பினனும் , பிறவாதவனும் , பெரியனவும் அரியனவும் ஆகிய எல்லாப் பொருள்களையும் பிறர் எல்லார்க்கும் முன்னே கற்றவனும் , கற்றவனாகிய தானே கற்கப்படும் பொருளுமாய் ஆனவனும் , கச்சி ஏகம்பனும் , இயமன் இறந்துபடச் சினந்தவனும் , தானே விளங்கும் ஒளியினனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்று அடைந்தேன் .

குறிப்புரை :

உற்றான் - உறவானவன் . உடல் தனக்கு - உடம்பு நிலைபெறுதற் பொருட்டு ; உயிராகி அதன்கண் நிற்பவன் என்க . ஓங்காரத்து ஒருவன் - ஓங்காரத்தின் முழுப்பொருள் தான் ஒருவனே ஆகியவன் . ` உமையது ஒரு பாகத்தைப் பெற்றான் ` என்க . எல்லாம் - எல்லாப் பொருள்களையும் . ` முன்னே கற்றான் ` என்றது . ` யாவர்க்கும் முன்னே தான் உணர்ந்தான் ` என்றவாறு . ` கற்பனவும் தானே ஆயினான் ` என்றது , ` கற்றவனாகிய தானே கற்கப்படும் பொருளுமாய் உள்ளான் ` என்றதாம் . திகழ் ஒளி - தானே விளங்கும் ஒளி .

பண் :

பாடல் எண் : 5

நீறாகி நீறுமிழும் நெருப்பு மாகி
நினைவாகி நினைவினிய மலையான் மங்கை
கூறாகிக் கூற்றாகிக் கோளு மாகிக்
குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்
ஆறாத ஆனந்தத் தடியார் செய்த
அனாசாரம் பொறுத்தருளி அவர்மே லென்றுஞ்
சீறாத பெருமானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

சாம்பலாயும் , சாம்பலை உமிழும் நெருப்பாயும் , நினைவாயும் , நினைவில் நின்று இனிக்கும் உமையம்மை நிலவு கூறாயும் , இயமனாயும் , தீயனவும் நல்லனவுமாய் நிற்கும் அவ் வினைகளாயும் , நிறைந்த அன்புக் கண்ணீரினராய் நீங்காத ஆனந்தத்தையுடைய அடியார்கள் செய்த அனாசாரமாகிய சிறு குற்றங்களைப் பொறுத்து அவர்களை என்றுஞ் சினவாத பெருமானாயும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

நீறு - சாம்பல் ; இஃது உலகம் ஒடுங்கிய நிலையையும் , ` நீற்றை உமிழும் நெருப்பு ` என்றது , உலகத்தை ஒடுக்குவதாகிய அவனது சத்தியையும் , ` நினைவு ` என்றது உலகத்தை மீளப் படைக்கும் அவனது சங்கற்பத்தையும் , ` கூறாகி ` என்றது , அச்சங்கற்பத்தின் வழியே படைக்கும் நிலையையும் , ` கூற்றாகி ( கூற்றுவனாகி )` என்றது , வினைகளை ஊட்டுவித்தலையும் , ` கோளுமாகிக் குணமாகி ` என்றது , தீயனவும் நல்லனவுமாய் நிற்கும் அவ்வினைகளுந் தானேயாய் நிற்றலையும் , குறிக்கும் என்க . ` உவகை ` என்றது , அன்பினை . ஆறாத - நீங்காத , ஆனந்தத்து ( அவ்வன்பினால் வரும் ) இன்ப மேலீட்டினால் , ` ஆசாரம் ` என்னும் வடசொல் , தமிழில் பெரும் பான்மையும் புறத்தூய்மையையே குறித்து வழங்கும் என்பது , ` அச்சமே கீழ்கள தாசாரம் ` ( குறள் - 1075.) என்பதனால் அறியப்படும் ; அதனால் , இங்கு ` அனாசாரம் ` என்றது , அறியாமையாலும் மாட்டாமையாலும் , செயல் இழப்பினாலும் மனத்தொடு படாது செய்யும் சிறு குற்றங்களையே யாம் என்பது விளங்கும் .

பண் :

பாடல் எண் : 6

மருவினிய மறைப்பொருளை மறைக்காட் டானை
மறப்பிலியை மதியேந்து சடையான் தன்னை
உருநிலவு மொண்சுடரை உம்ப ரானை
உரைப்பினிய தவத்தானை உலகின் வித்தைக்
கருநிலவு கண்டனைக் காளத்தியைக்
கருதுவார் மனத்தானைக் கல்வி தன்னைச்
செருநிலவு படையானைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

மருவுதற்கினிய மறைப்பொருள் ஆனவனும் , மறைக்காட்டில் உறைபவனும் , மறப்பில்லாதவனும் , பிறை சூடிய சடையினனும் , நிலவுகின்ற தன் நிறத்தால் ஒளிரும் சுடர் ஆனவனும் , மேலிடத்து உள்ளவனும் , பேசுதற்கினியவனும் , தவக்கோலம் தாங்கியவனும் , உலகிற்கு வித்தானவனும் , கறுத்த கண்டத்தவனும் , காளத்தி நகரினனும் , நினைப்பவர் உள்ளத்தில் நிற்பவனும் , போர்த் தொழில் பயின்ற படைக்கலங்களை ஏந்தியவனும் ஆகித் திருமாற் பேற்றில் திகழும் எம் செம்பவளக்குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

மருவு இனிய - பொருந்துதற்கு இனிய . ` இனிய பொருள் ; மறைப்பொருள் ` என்க . மறப்பு - மலத்தால் உளதாவ தாதலின் , மலம் இலனாகிய இறைவனுக்கு மறப்பு இலதாயிற்று ; அதனால் - அவன் எல்லாவற்றையும் அறிந்தாங்கு அறிந்து நிற்பன் என்க . உரு - நிறம் . உம்பரான் - மேலிடத்து உள்ளவன் . உரைப்பு இனிய தவத்தான் - ` பேசுதற்கு இனியவன் ; தவக்கோலத்தை உடையவன் ` என்க . ` வித்து ` என்றது . ` காரணம் ` என்னும் பொருளது . ` உலகில் வித்தை ` என்பது பாடம் அன்று . ` கருமை ` என்பது கரு எனக் குறைந்து நின்றது . மறைக்காடு , சோழநாட்டுத் தலம் . காளத்தி , தொண்டை நாட்டுத் தலம் . காளத்தியில் உள்ளவனை , ` காளத்தி ` என ஆகு பெயரால் குறித்தருளினார் என்க . கல்வி - உறுதிப் பொருளைக் கூறும் நூல்கள் ; அவற்றின் பொருளாய் நிற்றல் பற்றி , ` கல்வி ` என்றருளினார் . படை - படைக்கலம் ; மழு , சூலம் முதலியன .

பண் :

பாடல் எண் : 7

பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்
பெரியானை அரியானைப் பெண்ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையா தாரை
நினையானை நினைவோரை நினைவோன் தன்னை
அறத்தானை அறவோனை ஐயன் தன்னை
அண்ணல்தனை நண்ணரிய அமர ரேத்துந்
திறத்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

பலவகைப் பிறப்புகளாய் உள்ளவனும் , வினை வயத்தால் பிறவாத பெருமையுடையவனும் , தோற்றம் ஆற்றல் முதலியவற்றில் மிகப் பெரியவனும் , உணர்தற்கு அரியவனும் , பெண்ணும் ஆணுமாகிய வடிவினனும் , குற்றமற்றவனும் , தன்னை நினையாதாரைத் தான் நினையாதவனும் , தன்னை நினைப்போரைத் தான் நினைப்பவனும் , அறமேயாய் நின்று அதனை நிலை பெறுவிப்பவனும் , நன்மை தீமைகளை அடைவிக்கும் அறவோனும் , வியக்கத் தக்கவனும் , தலைவனும் , தேவர்கள் வணங்கும் தன்மையனும் , திகழ்சோதியும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

` பிறப்பான் ` என்பது , ` பிறப்பு ` என்னும் பெயரடியாகப் பிறந்த பெயர் . ` பலவகைப் பிறப்புக்களாயும் உள்ளவன் ` என்பது பொருள் . ` நிறம் `` என்றது , வடிவத்தை , பெண் ஆண் ஆய வடிவம் - மாதிருக்கும் பாதியனாய வடிவம் . ` நினைவான் , நினையான் ` என்பன , ` தன் தமராக நினைவான் , நினையான் ` என்பதாம் . அறத்தான் - அறமேயாய் நின்று அதனை நிலைபெறுவிப்பவன் . அறவோன் - அறத்தினை உடையவனாய் நல்லதற்கு நலனும் , தீயதற்குத் தீமையும் அளிப்பவன் . ஐயன் - வியக்கத்தக்கவன் . அண்ணல் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 8

வானகத்தில் வளர்முகிலை மதியந் தன்னை
வணங்குவார் மனத்தானை வடிவார் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவா தானை
ஒற்றியூர் உத்தமனை ஊழிக் கன்றைக்
கானகத்துக் கருங்களிற்றைக் காளத் தியைக்
கருதுவார் கருத்தானைக் கருவை மூலத்
தேனகத்தி லின்சுவையைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

வானில் வளர் முகிலாயும் , மதியமாயும் , வணங்குவார் மனத்தில் உறைபவனாயும் , அழகிய பொன்னாயும் , உடம்பில் உயிர்க்குற்ற உறுதுணையாயும் , அழிவில்லாதவனாயும் , ஒற்றியூர் வாழ் உத்தமனாயும் , ஊழிக்கு ஊழியாயும் , கானகத்து வாழ் கருங் களிறாயும் , காளத்தி வாழ்வானாயும் , கருதுவார் கருத்துள் நிலவுபவனாயும் , முதன் முதலாயும் , தேனில் இனிய சுவையாயும் , நிலவித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

வளர் - மிகுகின்ற ; இதனை மதிக்குங் கூட்டுக . ` முகில் , மதி , சுவை ` என்பன உவமையாகு பெயர்கள் . ` முகில் ` என்றது , கைம்மாறு கருதாது உதவுங் கடப்பாடு உடைமை பற்றியும் , ` மதி ` என்றது , அகவிருளைச் சிறிது சிறிதாக நீக்கி இறுதியில் முற்றும் நீக்குதல் பற்றியும் ` தேனகத்தில் இன்சுவை ` என்றது , பேரின்பஞ் செய்தல் பற்றியும் என்க . வடிவு - அழகு . ஊன் - உடம்பு , உயிர் உடம்பொடு கூடித் தொழிற்படுங்கால் , அத்தொழிற்பாட்டிற்கு இறைவன் உடனாய் நின்று உதவி வருதல் பற்றி , ` ஊனகத்தில் உறுதுணை ` என்று அருளினார் . உலவாதான் - அழியாதவன் . ஒற்றியூர் , காளத்தி தொண்டை நாட்டுத் தலங்கள் . ` காளத்தி ` என்றதற்கு மேல் ( பா .6.) உரைத்தவாறே உரைக்க . ஊழிக்கு அன்று - ஊழிக்கு ஊழி ; ` அன்று ` என்னும் இடைச் சொல் பெயர்த்தன்மைத்தாய் நின்று இரண்டனுருபு ஏற்றது . கருங் களிறு - யானை ; என்றது காதல் பற்றி . ` வானகத்து வளர் முகில் ` என்றாற்போல , ` கானகத்துக் கருங்களிறு ` என்றதும் , அதன் தன்மையை விதந்தருளிச் செய்தவாறு . ` மூலக் கருவை ` என மாற்றி , ` முதல் முதலினை ` என உரைக்க . தோற்றம் எய்தியவற்றுள்ளும் , தம்மால் தோன்றுவனவற்றை நோக்கத் தாம் முதல் எனப்பட்டு வழிநிலை முதலாய் நிற்பனவும் சில உளவாதல்பற்றி , ஒன்றாலும் தோன்றாது , எல்லாவற்றின் தோற்றத்திற்கும் தானே முதலாய் நிற்கும் இறைவனை , ` முதல் முதல் ` என்று அருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 9

முற்றாத முழுமுதலை முளையை மொட்டை
முழுமலரின் மூர்த்தியை முனியா தென்றும்
பற்றாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னைப்
பராபரனைப் பரஞ்சுடரைப் பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர்கருப்புச் சிலையோன் நீறாய்
ஒள்ளழல்வாய் வேவவுறு நோக்கத் தானைச்
செற்றானைத் திரிபுரங்கள் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

மூவாத முதற்பொருளாயும் , முளையாயும் , மொட்டாயும் , மலரின் வடிவினனாயும் , எக்காலத்தும் வெறுப்பிலனாய்ப் பல்லுயிர்க்குந் துணையாகி இரக்கமுடையனாயும் , மேற் பொருளும் , கீழ்ப்பொருளும் தான் ஆனவனாயும் , மேலான ஒளிப் பிழம்பாயும் , எண்ணுவார் மனத்தில் பொருந்தியிருப்பவனாயும் , உயர்ந்த கரும்பு வில்லையுடைய மன்மதன் ஒள்ளிய நெருப்பிடத்து வெந்து நீறாகுமாறு செய்த பார்வையனாயும் திரிபுரங்களை அழித்தவனாயும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம்செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

முற்றாத முதல் - இளையவேர் . முழுமுதல் - அனைத்து வேர் . மொட்டு - அரும்பு . முழு மலர் - மலர்ந்த மலர் . ` மலரின் ` என்னும் , இன் , வேண்டாவழிச் சாரியை ; ` மலராம் மூர்த்தி ` என்பதே பொருள் . ` பல்லுயிர்க்கும் பற்றாகிப் பரிவோன் ` என்க . பற்று - துணை . பரிவோன் - இரங்குவோன் . ` பற்றாகிப் பரிவோன் ` என்றதனை , ` ஓடி வருபவன் ` என்பது போலக் கொள்க . பரஞ்சுடர் - மேலான ஒளி . பரிவோர் - அன்பு செய்வோர் . உற்றான் - பொருந்தியிருப்பான் . உறு நோக்கம் - உற்ற நோக்கம் ; பார்த்த பார்வை . இங்குப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல என்க .

பண் :

பாடல் எண் : 10

விரித்தானை நான்மறையோ டங்க மாறும்
வெற்பெடுத்த இராவணனை விரலா லூன்றி
நெரித்தானை நின்மலனை யம்மான் தன்னை
நிலாநிலவு செஞ்சடைமேல் நிறைநீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத்
தரியலர்கள் புரமூன்றுந் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற் பேற்றெஞ்
செம்பவளக் குன்றினைச்சென் றடைந்தேன் நானே.

பொழிப்புரை :

நான்மறைகளையும் ஆறங்கங்களையும் விரித்தவனும் , கயிலை மலையை எடுக்க முயன்ற இராவணனை விரலூன்றித் துன்புறுத்தியவனும் , குற்றமற்றவனும் , தலைவனும் , பிறைதங்கிய செஞ்சடைமேல் நீர்நிறைந்த கங்கையைத் தரித்தவனும் , இன்பத்தைச் செய்யும் சங்கரனும் , இன்ப காரணனான சம்புவும் பகைத்தார் புரங்கள் மூன்றும் நெருப்பிடத்து வேகுமாறு சிரித்தவனும் , ஒளிப்பிழம்பாய் விளங்கியவனும் ஆகித் திருமாற்பேற்றில் திகழும் எம் செம்பவளக் குன்றினை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

அம்மான் - தலைவன் . சங்கரன் - இன்பத்தைச் செய்பவன் . சம்பு - இன்பத்தை உண்டாக்குபவன் . தரியலர்கள் - பகைவர்கள் .
சிற்பி