திருக்கோடிகா


பண் :

பாடல் எண் : 1

கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி யேகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே , நெற்றியிடத்துக் கண் சேர்ந்த இளங்காளையாய் , பக்கமலைகளான மதில்கள் சூழ்ந்த கந்தமாதனத்துறைவானாய் , பலவகைப் புவனங்களிலும் சென்று பிறத்தற்குக் காரணமாகிய மயக்கத்தை அறுக்கும் மருந்தாய் , மதிலாற் சூழப்பட்ட காஞ்சி மாநகரத்து ஏகம்பத்தை மேவியவனாய் , தேவருலகிற் சென்று எறிக்கும் விளக்கொளியாய் , மீயச்சூரில் நிலைத்து நிற்கும் வேறுபடு தன்மையனாய் , மேகத்தினது அழகு சேர்ந்த கண்டத்தனாய் எம் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

` கைத்தலம் ` என்பது போல , ` கண்டலம் ` என்பது இரு பெயரொட்டு : தலம் வடசொல்லாதலின் ணகரம் திரியாது நிற்றலும் பொருந்துவதாயிற்று : விண்டலம் என்பதும் அன்னது . ` நெற்றித் தலம் ` என மாறிக் கூட்டுதலும் ஆம் . கட்டிளமை வடிவமும் சிவ பிரானுக்கு உண்மையின் , ` இளங்காளை ` என்று அருளினார் . ` கல் ` என்றது , பக்க மலைகளை ; எனவே , ` கல் மதில் ` என்றது , உருவக மாயிற்று . கந்த மாதனம் , கயிலை போல்வதொரு மலை ; இது , வைப்புத் தலங்களுள் ஒன்று . மண்டலம் சேர் மயக்கு - பலவகைப் புவனங்களிலும் சென்று சேர்தற்கு ( பிறத்தற்கு ) க் காரணமாகிய மயக்கம் , விண்தலம் - தேவர் உலகம் . ` அதிற் சேரும் விளக்கொளி ` என்றது , தேவர்கட்குப் பெருமையைத் தருதல் கருதி . மீயச்சூர் , சோழநாட்டுத் தலம் . கொண்டல் அம் - மேகத்தினது அழகு . அமர்ந்து - விரும்பி . குழகன் - அழகுடையவன் .

பண் :

பாடல் எண் : 2

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே வண்டுகள் மொய்க்கும் பூக்களணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாய் , திருமறைக் காட்டில் வாழும் அழகினனாய் , பண்டு செய்த வினையான் வரும் துன்பத்தைத் தீர்ப்பவனாய் , வீட்டுலக வழியை யுணர்த்தும் பரமனாய் , செண்டு கொண்டு ஆடும் ஆட்டம் போல எவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாய் , திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

மணாளன் - அழகன் . பண்டு ஆடு - முற்பிறப்பில் செய்த , ` பழவினை ` என்றது , பெயரளவாய் நின்றது ; ` பண்டு செய்த பழவினையின் பயன் ` ( தி .5. ப .47. பா .1.) என்று திருக்குறுந் தொகையிலும் அருளிச் செய்தார் . பரலோகம் - எல்லா உலகங்களினும் மேலாய உலகம் ; வீட்டுலகம் ; அஃது இறைவனது திருவருள் ; ` வானோர்க்கு உயர்ந்த உலகம் ` ( குறள் - 346.) என்றதும் அது . உலகமும் வெளியும் அல்லாத அதனை ஓர் உலகமும் வெளியும் போல அடை கொடுத்து வழங்குதல் , மன மொழிகளுக்கு உட்படாத அதனை , ஒருவாறு அவற்றுக்கு உட்பட்ட பொருள்களோடு சார்த்தி உவமை வகையான் உணர்தற் பொருட்டு என்க . இந் நுட்பம் உணரமாட்டாதார் , ` வீட்டு நிலையும் ஓர் உலகமே ` என மயங்கிக் கொள்வர் . அது பொருந்தாமை , ` மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க - லுற்றார்க் குடம்பு மிகை ` ( குறள் -345) என முன்னே அருளிச் செய்தமையால் தெற்றென விளங்கும் ; எவ்வாறு எனின் , வீடாவது பிறப்பற்ற நிலையும் , பிறப்பாவது உடம்புமே என்பன எல்லார்க்கும் உடம்பாடாகலின் , வீடு பெற்றார்க்கு உடம்பு உளதாகாது என்பது தானே விளங்கிக் கிடப்பவும் , வீட்டு , நிலையை , ` உலகம் ` என வழங்கும் வழக்கினது கருத்தறியாது , எல்லா உலகங்களினும் மேலாய் உள்ள ஓர் உலகமே ,` வீட்டுலகம் போலும் ` எனவும் , ` அவ்வுலகம் போல அதன்கண் உள்ள இன்பத்தை நுகர்தற்கு ஏற்ப , ` வீட்டுடம்பு ` என்னும் ஒருவகை உடம்புகளும் உள்ளன போலும் ` எனவும் மலையாமைப் பொருட்டு அதனை எடுத்தோதி யருளினாராதலின் என்க . இதனானே வீட்டு நிலையும் ஒரு புவனமாயும் , அதன்கண் இன்பத்தை நுகர்தற்குக் கருவியும் தனுவாயும் ஒழியின் , உலக இன்பம்போல , வீட்டின்பமும் வரையறைப்பட்ட பொருளினால் உளதாவதாய் , உடம்பளவில் வரையறைப்பட்டு நின்று , காலம் . இடங்களாலும் வரையறைப்படுமாகலின் , வீட்டின்பத்தை , ` நிரதிசய இன்பம் ,` எனவும் , ` வரம்பிலின்பம் ` எனவும் , கூறும் சொற்கள் பலவும் பொருள்படா தொழியும் என்பதும் பொருந்துமாறு பற்றி உணர்ந்து கொள்ளப்படும் . சிவநெறி நூல்கள் சிவலோகம் முதலியவற்றைப் பதமுத்தி இடமாகக் கூறுதலன்றிப் பரமுத்தி இடமாகக் கூறாமை யறிக . இத்தகைய பரலோகத்தை அடையும் வாயில் , எவ்வகைத்தான உடம்பும் இல்லாது அருளே வடிவாகிய சிவபிரானை உணரும் உணர்வே யாகலானும் , அவ்வுணர்வும் அவன் தரவே பெறற் பாலதாகலானும் , ` பரலோக நெறி காட்டும் பரமன் ` என்றருளினார் . பரமன் - யாவர்க்கும் மேலானவன் . செண்டாடி - செண்டாடுதல்போல உழற்றி . கொண்டாடும் - பாராட்டுகின்ற .

பண் :

பாடல் எண் : 3

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே , அலைகளுடன் கூடிய நீரையுடைய கங்கை தங்கும் சடையனாய் , அடியார்களுக்கு ஆரமுதாய் , மலையில் தோன்றி வளர்ந்த இளமங்கை பார்வதியின் பங்கனாய் , வானோர்தம் முடிக்கணியாய்த் தன் திருவடிகளைத் தந்து நின்றவனாய் , இலைபோன்ற திரிசூலப்படையினனாய் , ஏழுலகுமாய் வியாபித்த எந்தையாய் , கொலைத் தொழிலிற் பழகிய யானையது தோலைப் போர்த்துக் கொண்டவனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

அலை ஆர்ந்த - அலைகள் நிறைந்த , ` கங்கை ` பெயர் . மலை ஆர்ந்த - மலையிற் பொருந்திய : தோன்றி வளர்ந்த . அணி - அணிகலம் . இலை ஆர்ந்த - இலைபோலப் பொருந்திய . கொலை ஆர்ந்த குஞ்சரம் - கொல்லுதல் பொருந்திய யானை .

பண் :

பாடல் எண் : 4

மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயா றகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனே தனக்கு ஒப்பார் யாரும் இலனாய் , மயிலாடுதுறையைத் தனக்குப் பொருந்திய இடமாகக் கொண்டு மகிழ்ந்தவனாய் , புற்றில் வாழ் அரவுகளை அணிந்த புனிதனாய் , பூந்துருத்தியில் பொய்யிலியாய் , பற்றற்ற அடியார்க்கு மறைதலின்றி வெளிப்பட்டு நிற்பானாய் , ஐயாறு அகலாத ஐயனாய் , குற்றாலத்து விரும்பி உறையுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

` மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான் ` என்பது முதற்றிருப் பதிகத்தே கூறப்பட்டது . மயிலாடுதுறை , பூந்துருத்தி , ஐயாறு - இவை சோழநாட்டுத் தலங்கள் . குற்றாலம் , பாண்டிநாட்டுத் தலம் . பூந்துருத்திப் பெருமானை , சுவாமிகள் யாண்டும் , ` பொய்யிலி ` என்றே அருளுதல் காணப்படும் . அற்றார்கட்கு அற்றான் - மற்றுப் பற்றுச் சிறிதும் இலராய் நீங்கியவர்கட்கு , மறைந்து நிற்கும் தன்மை சிறிதும் இன்றி நிற்பவன் ; இடையீடில்லாத அனுபவப் பொருளாய் நிற்பவன் என்றபடி . ` அற்றவர்க் கற்ற சிவன் ` ( தி .3. ப .120. பா .2) என ஆளுடைய பிள்ளையாரும் அருளினார் .

பண் :

பாடல் எண் : 5

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அடிகளே கச்சுப் பொருந்திய அழகிய முலையாளின் பங்கனாய் , மாற்பேற்றைத் தனக்குரிய இடமாகக் கொண்டு மகிழ்ந்தானாய் , போர்ச் செயலில் பழகிய பெரிய விடை ஒன்றை ஊர்தியாக உடையானாய் , புகலூரை நீங்காத புனிதனாய் , கங்கைபொருந்திய நீண்ட ஒப்பற்ற சடையை உடையானாய் , நினைக்கும் அடியாருடைய வினைச்சுமையை இறக்கி வைப்பானாய் , கூர்மை பொருந்திய மூவிலை வேற்படையை உடையானாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

வார் ஆர்ந்த - கச்சுப் பொருந்திய . மாற்பேறு , தொண்டை நாட்டுத் தலம் . காப்பு - இடம் . புகலூர் - சோழநாட்டுத் தலம் . ` சடை ` என்றதனை , ` சடைமுடி ` எனக் கொள்க . இழிப்பான் - இறக்குவான் .

பண் :

பாடல் எண் : 6

கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே ! மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையனாய் , கண்ணை அப்பிய செயற்கு விண்ணைப் பொருந்துதலை ஈடாகக் கொடுத்தானாய் , உலகில் நிறைந்த பல பிறவிகளிலும் பிறத்தலை அறுப்பானாய் , பற்றற்ற அடியார்க்குத் துணை நின்றானாய் , திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு ஒலிப்பத் திரிவானாய் , தேவர் கூட்டம் வணங்கிப் பரவும் தலைவனாய் , மிகுதியான கொடிகள் கட்டப்பட்ட மதில்களையுடைய தில்லையில் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

கடி மலிந்த - மணம் நிறைந்த . கண் அப்பினார் கண்ணப்ப நாயனார் என்பது வெளிப்படையாகலின் அஃது அருளாராயினார் . விண் அப்பு - வானத்திற் பொருந்துதல் . படி மலிந்த - உலகில் நிறைந்த . பற்று - துணை . ` பற்றவன் ` என்பதில் அகரம் , சாரியை . அலம்ப - ஒலிக்க . ` திரிதல் , பலிக்கு ` என்க .

பண் :

பாடல் எண் : 7

உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
என்நெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே , மான்கன்று பொருந்தியதொரு கரதலத்தனாய் , ஒற்றியூரைப் பொருந்தி நிற்கும் இடமாக உடையானாய் , மூங்கிலசையும் கழுக்குன்றில் அமர்ந்தானாய் , காளத்திக்கண் திகழும் கற்பகமாய் , பூணூல் கிடந்தசையும் தோள்கள் எட்டுடைய இறைவனாய் , என் நெஞ்சைவிட்டு நீங்கா எந்தலைவனாய் , காதணி ஆட நடன மாடுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

உழை ஆடு கரதலம் - மான் பொருந்தியகை . ஒற்றியூர் , கழுக்குன்றம் , காளத்தி இவை தொண்டை நாட்டுத் தலங்கள் . ஒற்றியா உடையான் - ஒற்றித்து ( பொருந்தி ) நிற்கும் இடமாக உடையவன் . கழை - மூங்கில் . இழை - பூணநூல் . குழை ஆட - காதில் உள்ள குண்டலம் அசைய .

பண் :

பாடல் எண் : 8

படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் விரும்புயுறையும் அழகனே படமெடுத்தாடும் பாம்பினைக் கச்சாகக் கட்டியவனாய் , பராய்த் துறையிலும் பாசூரிலும் பொருந்தியவனாய் , ஏழுலகுஞ்சென்று ஆங்காங்கே நடனமாடுவானாய் , நான்மறையின் பொருளினனாய் , எல்லார்க்கும் தலைவனாய் ( நாததத்துவனாய் ) மதநீர் ஒழுகுங் களிற்றினை உரித்த வீரனாய் , கயிலை மலையில் விரும்பி உறைவா னாய் , குடமாடியாம் திருமாலை இடப்பாகமாகக் கொண்டானாய் விளங்குவான் ஆவான் .

குறிப்புரை :

பன்னகம் - பாம்பு , ` படமாடு பன்னகம் ` எனச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டது . அசைத்தான் - கட்டினான் . பராய்த்துறை , சோழநாட்டுத்தலம் . பாசூர் , தொண்டை நாட்டுத் தலம் . ஏழுலகிலும் சென்று நடனமாடுதல் , அதனை ஆங்கு உள்ளவர்கள் கண்டு உய்தற் பொருட்டு என்க . நாதன் - தலைவன் ; ` நாத தத்துவத்தில் உள்ளவன் ` என்றுமாம் . கடம் ஆடு - மதநீர் ஒழுகுகின்ற . குடம் - திருமால் ஆடிய ஒருவகைக் கூத்து . அதனால் , ` குடம் ஆடி ` என்றது திருமாலின் பெயராயிற்று . சிவபிரான் திருமாலை இடப்பாகத்திற் கொண்டவாற்றை மேலே ( ப .76. பா .1.) காண்க . * * * * * * * 9, 10 9, 10 : * * * * * * * * குறிப்பு : இத்திருப்பதிகத்தின் ஏனைய திருப்பாடல்கள் கிடைத்தில .
சிற்பி