திருப்பாசூர்


பண் :

பாடல் எண் : 1

விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை மேகமாகவும் , நிலனாகவும் , ஆகாயமாகவும் , கடல் சூழ்ந்த பூமியிலுள்ளார் விரும்புகின்ற எண்ணாகவும் , எழுத்தாகவும் , தமக்கென வேறுபட்ட இயல்புகளை உடைய எல்லாப் பொருள்களுமாகவும் , ஏழுலகத்தாரும் வணங்கித்துதித்துக் காணுதற்கமைந்த கண்ணாகவும் அக்கண்ணுள் மணியாகவும் அதனால் காணப்படுகின்ற காட்சியாகவும் , அடியார்கள் விரும்பித் துதித்தற்குரிய பண் நிறைந்த பாடலாகவும் , இன்னமுது ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

விசும்பு - மேகம் . வேலை - கடல் . ` விரும்புகின்ற ` என்றது , எண் எழுத்து இரண்டனையும் என்க . ` இயல்பு ` என்றது , பண்பாகு பெயராய்ப் பல இயல்புகளையுடைய பல பொருள்களையும் உணர்த்தி நின்றது ; உம்மை . எச்சம் . மணி - கண்ணின் மணி . காட்சி - காணுதற்றொழில் . ` கண்ணாகி ` என்பது மூன்றிலும் உள்ள , ` ஆகி ` என்பன உவமை குறித்து நின்றன ; உவமைகள் , சிறப்பு நிலைக்களனாகத் தோன்றின என்க . ` பண் ` என்றது , முன்னர்ப் பாடலையும் , பின்னர் அதன் பொருளையும் குறித்து நின்ற இருமடியாகு பெயர் . ` இன்னமுதாம் ` என்றதும் உவமையே யாம் ; இவ்வுவமை பண்பும் பயனும் பற்றி வந்தது என்க . ` அடியேன் உய்ந்தவாறு நன்று ` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க .

பண் :

பாடல் எண் : 2

வேதமோர் நான்காய்ஆ றங்க மாகி
விரிகின்ற பொருட்கெல்லாம் வித்து மாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரி யாகிக்
குவலயங்கள் முழுதுமாய்க் கொண்ட லாகிக்
காதலால் வானவர்கள் போற்றி யென்று
கடிமலர்கள் அவைதூவி ஏத்த நின்ற
பாதியோர் மாதினனைப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை நான்கு வேதங்கள் ஆகவும் , அங்கங்கள் ஆறு ஆகவும் , பெருகிவளர்கின்ற பொருள்களுக்கெல்லாம் அடியான வித்து ஆகவும் , விடாது தூற்றும் சிறு திவலைகளைப் பொழியும் மாரியாகவும் , உலகங்கள் யாவும் ஆகவும் , கீழ்க்காற்று ஆகவும் , அன்பு மேலீட்டால் தேவர்கள் ` போற்றி ` என்று உரைத்து மணமலர்களைத் தூவித் தோத்திரிக்க நின்ற மாதொரு பாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

விரிகின்ற - தோன்றுகின்ற . ` விரிக்கின்ற ` என்பதும் பாடம் . கூதல் - விடாது தூற்றும் சிறுதுவலை ; இதனை , ` சோனை ` என்ப . கொண்டல் - கீழ்க் காற்று ; இதுவே , மழையைக் கொணர்வது என்பர் . கடி - நறுமணம் .

பண் :

பாடல் எண் : 3

தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சி யாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞால மாகிக்
காண்கின்ற கதிரவனும் கதியு மாகிக்
குடமுழவச் சரிவழியே அனல்கை யேந்திக்
கூத்தாட வல்ல குழக னாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை பெரிய ஏழு குலமலைகள் ஆகவும் , காற்றாகவும் , தீ ஆகவும் , குளிர்ந்த விசும்பாகவும் , குளிர் விசும்பின் உச்சி ஆகவும் , கடல்வட்டம் சூழ்ந்ததொரு ஞாலம் ஆகவும் , காண்பதற்குத் துணை நிற்கும் கதிரவன் ஆகவும் , வீடடைதற்குரிய வழியாகவும் , குடமுழவு சச்சரி இவற்றின் முழக்கிற்கு ஏற்ப அனலைக் கையில் ஏந்திக் கூத்தாடவல்ல அழகன் ஆகவும் , படமெடுத்தாடும் பாம்பொன்றினை ஆட்டுவான் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

தடவரை - பெரிய மலை . ` தட வரை ஏழ் ` ஏழு தீவிலும் உள்ளன என்க . கடல் வலயம் - கடலாகிய வட்டம் . காண்கின்ற - ( பொருள்களைக் ) காண்பதற்குத் துணையாக நிற்கின்ற . சரி - ` சச்சரி ` என்னும் வாச்சியம் . ` குடமுழவும் சச்சரியுமாகிய வாச்சியங்களின் வழியே கூத்தாட வல்ல ` என்க . ` குடமுழவச் சதிவழியே ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 4

நீராருஞ் செஞ்சடைமேல் அரவங் கொன்றை
நிறைமதிய முடன்சூடி நீதி யாலே
சீராரும் மறையோதி யுலக முய்யச்
செழுங்கடலைக் கடைந்தகடல் நஞ்ச முண்ட
காராருங் கண்டனைக் கச்சி மேய
கண்ணுதலைக் கடலொற்றி கருதி னானைப்
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப்
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாரிடத்து மக்களும் விண்ணிடத்துத் தேவரும் புகழும் பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை கங்கை பொருந்திய செஞ்சடை மேல் பாம்பு , கொன்றை , அழகுநிறைந்த பிறைமதி ஆகியவற்றைச் சூடியவன் ஆகவும் , சிறப்புமிக்க மறைகளை , அறத்தின் வழி உலகம் ஒழுக ஓதியருளியவன் ஆகவும் , வளவிய கடலைக் கடைந்த பொழுது எழுந்த கடல் அளவு கொடுமை மிக்க நஞ்சினை உண்டதனால் கருமை பொருந்திய கண்டனாகவும் , கச்சி நகரில் விளங்கும் கண்ணுதலாகவும் , கடலை அடுத்துள்ள ஒற்றியூரை உயர்வாக மதிப்பவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

நிறை மதியம் - நிறைதற்கு உரிய சந்திரன் ; ` பிறை ` என்றவாறு . இனி , ` அழகு நிறைந்த மதியம் ` என்றலுமாம் . உடன் சூடி - ஒருங்கு அணிந்து . நீதியால் - அறத்தின் வழி . ஓதி - செய்து ; ` உலகம் உய்ய ஓதி ` என்க . ` அறத்தைத் தான் இயல்பாகவே உணர்ந்தமையின் , அதனை உலகம் உணர்ந்து உய்தற்பொருட்டு வேதத்தைச் செய்தருளினான் ` என்க . நஞ்சைத் தான் உண்டதனைத் தன் கண்டம் உண்டதாகப் பான்மை வழக்கினால் அருளினார் . ஒற்றி - ஒற்றியூர் . பரசும் - துதிக்கின்ற .

பண் :

பாடல் எண் : 5

வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்
விற்பிடித்துக் கொம்புடைய ஏனத் தின்பின்
கூடினார் உமையவளுங் கோலங் கொள்ளக்
கொலைப்பகழி உடன் கோத்துக் கோரப்பூசல்
ஆடினார் பெருங்கூத்துக் காளி காண
அருமறையோ டாறங்கம் ஆய்ந்து கொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரை தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் விசயனது மருட்கையைக் காண வேண்டி உமையவளும் வேட்டுவக்கோலம் கொள்ளத்தாமும் ஒரு வேடனாய் வில்லை ஏந்திக் கொலையிற் பழகிய பகழியையும் வில்லிற்கோத்துக் கொம்பினையுடைய பன்றியைத் தொடர்ந்து சென்று கொடிய பூசலைச் செய்தவர் ஆகவும் , காளி காணப் பெருங்கூத்தினை ஆடினார் ஆகவும் , அரிய மறைவாகிய பொருளையுடைய வேதங்களையும் ஆறங்கப் பொருளையும் ஆராய்ந்து மனத்திற்கொண்டு நான்கு வேதங்களையும் பாடினவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

விசயன் - அருச்சுனன் . வியப்பு - தமது திருவிளையாடலின் நிலையை உணர்ந்து வியக்கும் வியப்பு ; இதனைக் காண விரும்பியது , அவனுக்கு ( அருச்சுனனுக்கு ) வரும் தீங்கினை யறிந்து அவனைக் காக்க விரைந்த தமது முற்றறிவு பேரருளோடு பேராற்றலையும் , அத்தீங்கினை அறியாத தனது சிற்றறிவோடு சிறிதாய ஆற்றலையும் அவன் உணர்ந்து , மேலும் மெய்யன்பு செய்து உய்தற் பொருட்டு . ஏனம் - பன்றி ; அதனது கொடுமையை உணர்த்துவார் ` கொம்புடைய ஏனம் ` என்றருளினார் ; ` நிராயுதத்தது அன்று ` என்பது நயம் . கோலம் - வேட்டுவக் கோலமே . ` உமையும் வேட்டுவக் கோலங்கொண்டு உடன் சென்றாள் ` என்பது வியாச பாரதத்தினுங் கூறப்பட்டது ; மற்றும் பெண்டிர் பலரும் சென்றனர் என்பதும் அதனுட் கூறப்படுவது . இதனைத் தமிழில் வில்லிபுத்தூரார் தெரிவித்தது ஓர் நயம் மிக்க பாட்டு ; அஃது , ` ஓரேனம் தனைத்தேட ஒளித்தருளும் இருபாதத் தொருவன் அந்தப் போர்ஏனந் தனைத்தேடிக் கணங்களுடன் புறப்பட்டான் புனங்க ளெல்லாம் சீர்ஏனல் விளைகிரிக்குத் தேவதையாங் குழவியையும் செங்கை ஏந்திப் பார்ஏனை உலகனைத்தும் பணிவுடனே புகழ்ந்திடத்தன் பதிபின் வந்தாள் .` என்பது . வந்தவள் ` வரையரசன் திருமடந்தை ` என , அவள் வேட்டு விச்சிக் கோலங் கொண்டமையையும் மற்றும் எண்ணிறந்த மாதர் அவளைச் சூழ்ந்து நின்றமையையும் அணிந்துரைக்கும் முன்னைப் பாட்டினுள் இனிது விளங்கக் கூறினார் . அம்மையோடு எண்ணிறந்த பெண்டிரும் சென்றனர் என்பது வியாசபாரதத்துட் கூறப்படுவது . இவ்வாறு முதனூலை வழிநூல் இலக்கணம் பிழையாது மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்த செய்யுள்களில் , நயம் கருதித் தொன்மை வரலாறு ஒன்றனை ஆண்டுத் தந்துரைப்பாராய் , ` ஓர் ஏனந் தனைத் தேட ஒளித்தருளும் இருபாதத் தொருவன் ` எனக் கூறிய அவ்வொன்றனையும் கேட்கப் பொறாத சிலர் , மேற்காட்டிய செய்யுளையே தம் பதிப்பில் மறைத்துப் பதிப்பித்தனர் ; முன்னைப் பெருநூல்களில் இவ்வாறு சிலவற்றை மறைத்தலும் , புகுத்தலும் , திரித்தலும் செய்தல் அவர்க்கு இயல்பு என்க . ` விசயன்றன் வியப்பைக் காண்பான் , உமையவளுங் கோலங் கொள்ள , வேடனாய் , விற்பிடித்து , கொலைப்பகழி உடன் கோத்து , ஏனத் தின்பின் கோரப் பூசல் கூடினார் ` எனக் கொண்டு கூட்டுக . ` காளி காணப் பெருங்கூத்து ஆடினார் ` என்க . அருமறை - அரிய மறைவாகிய பொருள் ; ` அங்கம் ` என்றதும் அவை கருதிய பொருளை என்க . ` கொண்டு ` என்றது , ` பின்னர் ` என்பதனை உணர்த்துங் குறிப்பினதாய் நின்றது . ` கூடினாரும் ஆடினாரும் பாடினாருமாகிய பரஞ்சுடரை ` என்க . ` பரஞ்சுடர் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 6

புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால்
புதுப்பந்தர் அதுஇழைத்துச் சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச்
சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு
விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய பரஞ்சுடரைப் பெற்ற ஞானத்தினால் உயர் சிலந்தி தன் வாயிலிருந்து வரும் நூலால் மக்களால் செய்யலாகாத பந்தலை இயற்றி அதனைச் சருகால் மூடிய திருத் தொண்டைச் சிந்தித்துச் செய்தமையால் பின் அரசனாகி நிலவுலகை ஆண்டு அப்பிறப்பிலும் சிறந்த தொண்டு செய்யச் சிவகணங்களுள் புக்கு இன்புறுமாறு சேர்த்தருளினவர் ஆகவும் , வலிமையும் , திறமையும் கொண்டு வெள்ளானை , செய்த செயலிடத்து மிக்க அன்பு விரவி யிருந்தமை கண்டு அதற்கு வீடு அருளியவர் ஆகவும் , பத்தர்களுக்கு இன்னமுதம் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்றாம் .

குறிப்புரை :

புத்தி - ஞானம் ; சிலந்தி ஞான முடைத்தாயினமை , முன்னைப் பிறவித் தொடர்பினால் என்க . புதுப் பந்தர் - மக்களாற் செய்யலாகாத பந்தல் ; வாய்நூலாற் செய்த பந்தல் . ` பொதுப் பந்தர் ` என்பது பாடம் அன்று . மேய்ந்த - மூடிய . சித்தி - பேறு ; இவ்வாறு சிவபிரானுக்குத் திருத்தொண்டு செய்யப் பெற்றமை சிறந்த பேறாதல் அறிக . சிறப்பு - முன்னையினும் சிறந்த தொண்டு ; அது சிவபிரானுக்குப் பல இடங்களில் மாடக்கோயில் எடுத்தமை , ` சித்தியினால் அரசாளப் பெற்று , பின்னும் சிறந்த தொண்டு செய்ய சிவகணங்களுள் ஒன்றாகி இன்புறுமாறு சேர்த்தருளினார் ` என்க . இது , கோச்செங்கட் சோழநாயனாரது வரலாறு ; இதன் விரிவைத் திருத்தொண்டர் புராணத்துட் காண்க . திறல் - வலிமை . வித்தகம் - திறமை . வெள்ளானை , திறலும் வித்தகமும் உடையதாய்ச் செய்த அன்பாவது , சிலந்தி செய்தவாய் நூற்பந்தர் எச்சில் முதலிய இழிவுகளை உடையது எனக்கருதி அதனை அழித்தொழித்துத் தூய நீரினால் ஆட்டி வழிபட்டமை . ` விரவியவாறு ` என்பது கடைக் குறைந்து நின்றது . விரவுதல் - பொருந்துதல் . ` சிலந்திக்கும் வெள்ளானைக்கும் அருளிய இவற்றானே , அவர் பத்தர்களுக்கு இன்னமுதாதல் நன்கறியப்படும் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 7

இணையொருவர் தாமல்லால் யாரு மில்லார்
இடைமருதோ டேகம்பத் தென்றும் நீங்கார்
அணைவரியர் யாவர்க்கும் ஆதி தேவர்
அருமந்த நன்மையெலாம் அடியார்க் கீவர்
தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர் மேனித்
தத்துவனைச் சாந்தகிலின் அளறு தோய்ந்த
பணைமுலையாள் பாகனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரைத் தமக்குத் தாம் அல்லால் இணையாவார் ஒருவரும் இல்லார் ஆகவும் , இடை மருது , ஏகம்பம் என்றிவற்றை என்றும் நீங்காதார் ஆகவும் , யாவர்க்கும் அணைவதற்கு அரியார் ஆகவும் , ஆதி தேவர் ஆகவும் , அடியார்க்கு அரிய அமுதம் போன்ற நல்லன எல்லாம் ஈவார் ஆகவும் , நெருப்பில் மூழ்கினமையால் உண்டான சாம்பற்பூச்சைக் கொண்ட செவ்வானன்ன மேனித் தத்துவன் ஆகவும் , சந்தனம் அகில் ஆகியவற்றின் சேறு தோயப்பெற்ற பருத்த தனத்தினையுடைய பார்வதியின் பாகன் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

` தமக்குத் தாம் அல்லால் இணையார் ஒருவரும் இல்லார் ` என்க . இடை மருது - திருவிடைமருதூர் . ஏகம்பம் - கச்சி ஏகம்பம் ` யாவர்க்கும் அணைவரியர் ` என்க . அணைதல் - சார்தல் . ஆதி தேவர் - முதற்கடவுள் . ` அருமருந்தன்ன ` என்பது , ` அருமருந்த ` என மருவிற்று ; ` அரிய அமுதம் போன்ற ` என்பது பொருள் . தணல் முழுகு பொடி - நெருப்பில் மூழ்கினமையால் ஆகிய சாம்பல் . நெருப்பில் மூழ்கியவை உலகனைத்தும் என்க . செக்கர் - சிவப்பு . சாந்து - சந்தனக் கட்டை ; சந்தனக் கட்டையும் , அகிற்கட்டையும் தேய்த்த அளறு என்றதாம் . அளறு - சேறு ; குழம்பு . ` நீங்காரும் , தேவரும் , ஈபவருமாகிய பாகனை , பரஞ்சுடரை ` என்க . ` பாகன் , பரஞ் சுடர் ` என்பன , பன்மை யொருமை மயக்கம் .

பண் :

பாடல் எண் : 8

அண்டவர்கள் கடல்கடைய அதனுள் தோன்றி
அதிர்த்தெழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக் கண்டு
இமைப்பளவி லுண்டிருண்ட கண்டர் தொண்டர்
வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று
வானவர்கள் தானவர்கள் வணங்கி யேத்தும்
பண்டரங்க வேடனையெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய எம் பரஞ்சுடரை மேலுலகத்தார் கடலைக் கடைய அதனிடத்து அனைவரையும் நடுங்கச்செய்து எழுந்த ஆலால நஞ்சு கடல் சூழ்ந்த உலகை எட்டுத் திசைகளிலும் சுடுகின்ற தன்மையைக் கண்டு இமைப்பளவில் அதனை உண்டு அதனால் கறுத்த கண்டர் ஆகவும் , தேவர்களும் அசுரர்களும் வண்டுகள் மொய்க்கும் தேன் நிறைந்த மலர்களைத் தூவி நின்று வணங்கித் துதிக்கும் பண்டரங்கக் கூத்தனாம் வேடம் கொண்டவர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

` அண்டர்கள் ` என்பது , அகரம் விரித்தலாய் , ` அண்டவர்கள் ` என வந்தது . அதிர்த்து - ( அனைவரையும் ) நடுங்கச் செய்து , ` அதிர்ந்து என்பதும் பாடம் . வேலைஞாலம் - கடலை உடைய உலகம் . ` ஞாலத்தை எண்டிசையை சுடுகின்றவாற்றைக் கண்டு ` என்க . ` ஞாலத்தை எண்டிசையைச் சுடுகின்ற ` என்றதனை , ` யானையைக் கோட்டைக் குறைத்தான் ` என்பது போலக் கொள்க . ` அதனை உண்டு ` எனச் சுட்டு வருவித்து உரைக்க . ` வண்டுபடு மதுமலர்கள் தூவி நின்று ` என்றதனை , ` தானவர்கள் ` என்றதன் பின்னர்க் கூட்டுக ` தானவர்கள் - அசுரர்கள் .

பண் :

பாடல் எண் : 9

ஞாலத்தை யுண்டதிரு மாலும் மற்றை
நான்முகனும் அறியாத நெறியார் கையிற்
சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத்
தொல்லுலகிற் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக்
காலத்தா லுதைசெய்து காதல் செய்த
அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற்பொருந்திய பரஞ்சுடரை ஞாலத்தை உண்ட திருமாலும் நான்முகனும் அறியாத நிலையினை உடையவராகவும் , அந்தகாசுரன் மடிய அவனைச் சூலத்தாற் குத்தியவர் ஆகவும் , பழைய இவ்வுலகில் பல்லுயிரையும் கொல்லும் இயமனைக் காலால் உதைத்து உருட்டித் தன்பால் உண்மை அன்பு கொண்ட அந்தணனைக் கைக்கொண்டு காத்த செவ்வான் அன்னமேனி நிறத்தவர் ஆகவும் , பால்போன்ற வெண்ணீற்றுப் பூச்சினர் ஆகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

நெறியார் - நிலையினையுடையவர் . அந்தகன் - அந்தகாசுரன் . சுருள - மடிய . ` காலதனால் ` என்பது , ` காலத்தால் ` என மருவி நின்றது . காதல்செய்த அந்தணன் , மார்க்கண்டேயர் , கைக் கொண்ட - அடியாராக ஏற்றுக்கொண்ட . செவ்வான் - செவ்வானம் . செவ்வானம் போலச் சிவந்த திருமேனியில் , பால் போல வெளுத்துள்ள நீற்றினை அணிந்துள்ள அழகினை வியந்தருளியவாறு .

பண் :

பாடல் எண் : 10

வேந்தன்நெடு முடியுடைய அரக்கர் கோமான்
மெல்லியலாள் உமைவெருவ விரைந்திட் டோடிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலை வெற்பைத்
தடக்கைகளா லெடுத்திடலுந் தாளா லூன்றி
ஏந்துதிரள் திண்டோளுந் தலைகள் பத்தும்
இறுத்தவன்தன் இசைகேட்டு இரக்கங் கொண்ட
பாந்தளணி சடைமுடியெம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.

பொழிப்புரை :

பாசூரிற் பொருந்திய எம்பரஞ்சுடரை நெடிய முடியை அணிந்த அரக்கர் கோமானாகிய வேந்தன் விரைந்து ஓடிச் சந்தனம் ஒப்பத்திருநீற்றினை அணிந்த தனது கயிலை மலையைப் பெரிய கைகளால் பெயர்த்திடவும் மெல்லியல் உமைவெருவ , அவ்வளவில் , அவனுடைய வலிமை மிக்கு உயர்ந்து திரண்ட தோள்களும் பத்துத்தலைகளும் இறும் வண்ணம் தன் தாள் விரலை ஊன்றிப் பின் அவனது இசையைக் கேட்டு இரக்கங்கொண்டவன் ஆகவும் சடையாலாகிய முடியிடத்துப் பாம்பை அணிந்தவனாகவும் அடியேன் கண்டு உய்ந்தவாறு நன்று .

குறிப்புரை :

` அரக்கர் கோமானாகிய வேந்தன் ` என்றபடி . ` மெல்லியலாள் ` என்றது , வெருவுதற்கு உரிய இயைபு உணர்த்தியவாறு . சாந்தம் - சந்தனம் . ` நீறணிந்தான் ` என்றது , ` நீறணிந்த தன் ` எனப் பொருள் தந்து நின்றது . தாள் - கால் விரல் ; ஆகுபெயர் . ஏந்து - உயர்ந்த , பாந்தள் - பாம்பு .
சிற்பி