திருச்செங்காட்டங்குடி


பண் :

பாடல் எண் : 1

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

பெருமையாம் தன்மை உடையானும் , பெறற்கு அரிய மாணிக்கம் போன்றவனும் , விரும்பி நினைந்தவாறே துயிலெழுவார் மனத்தில் நிலைபெற்றுநின்ற மணிவிளக்கு ஆனவனும் , நீர்நிலையில் தாள்மேல் நின்ற தாமரை மலரில் எழுந்தருளியிருந்தவனும் , எட்டுத்தோள்களையும் வீசி உலகத்தைத் தொழிற்படுத்தும் அரிய ஆற்றல் மிக்க பெரிய கூத்தினை இயற்றும் பெருமானும் , அழகிய கனகக் குன்று போல்வானும் , பண்டு ஆலின் கீழ் நால்வர்க்கும் திருந்திய மறைப்பொருளை உபதேசித்து அருள்செய்தானும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .

குறிப்புரை :

பெருந்தகை - பெருமையாகிய தன்மை ; அஃது பண்பாகு பெயராய் அதனை உடையானைக் குறித்தது . பேணி - விரும்பி , எழுதல் - துயில்நீங்குதல் . மணி விளக்கு - மணியாகிய விளக்கு . ` நின்ற ` என்றது , ` புறத்துக் காணப்பட்டு நின்ற ` என்றவாறு ; முன்னே கூறப்பட்ட மனம் தாமரை வடிவிற்றாக அதனுள் எழுந்தருளி யிருத்தல்போலப் புறத்தும் எழுந்தருளியிருப்பான் என்பார் , இவ்வாறு அருளினார் . உலகத்தைத் தொழிற் படுத்தும் பெருநடனமாதலின் , ` அருந்திறல் மாநடம் ` ஆயிற்று . ` கனகக் குன்று , சுடர்க் குன்று ` என்க . மாணிக்கம் முதலியன , உவமையாகு பெயர்கள் .

பண் :

பாடல் எண் : 2

துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
ஆரழலை அநங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உயர்ந்த நகத்தாலன்றிப் பிற கருவிகளால் அழியாதவனும் தன் ஆற்றலால் பலரையும் வென்று கூட்டிய வெற்றிகளை உடையவனும் ஆகிய இரணியனை மார்பைப் பிளந்தவனும் , அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்தவனும் ஆகிய திருமாலும் , நான்முகனும் தேடும் அணுகுதற்கரிய நெருப்புப் பிழம்பானவனும் , மன்மதன் உடல் எரிந்து சாம்பராய் உருக்குலைந்து மங்கவும் அவன் மனைவி இரதி அவனைப் பெற்று நகுமாறு செய்யவல்ல அமுதம் ஆனவனும் , வளவிய கயிலை மாமலைமேல் நிலைத்து நின்றவனும் , செம்பொன் நிறங்கொண்டு திரண்ட தோள்களைப்பெற்ற செல்வனும் ஆகிய சிவ பெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .

குறிப்புரை :

துங்கம் - உயர்வு . ` நகத்தால் அன்றிப் பிற கருவிகளால் அழியாதவனாகிய இரணியன் ` என்க . ` வென்றித் தொகுதிறல் இரணியன் ` என்பதனை , ` திறலால் தொக்க வென்றிகளை உடைய இரணியன் ` என மாற்றி யுரைக்க . ` பலரையும் வென்று கூடிய வெற்றிகளை உடையவன் ` என்றபடி ; ` வென்றி தொகு ` எனப் பாடம் ஓதுதலும் ஆம் . ஆகம் - மார்பு , கீண்ட - பிளந்த ` ` அம் கல் நகு அத் திருமால் ` எனப் பிரித்து ; ` அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்த அந்தத் திருமால் ` என உரைக்க . இனி , ` நரசிங்கம் பொன்னிறமாய் இருந்தது ` என்றலுமாம் . அழல் வடிவினனை , ` அழல் ` என்றது , பான்மை வழக்கால் . மங்க - கெடும்படி . நக - ( கண் ) மலர ; இனி , ` மங்கினமையால் மகிழ ` என்றலுமாம் ; இப்பொருள் , பிறர் அநங்கனால் வருந்துதல் அல்லது மகிழமாட்டாமையை விளக்கும் . தான் , அசைநிலை , மருந்து - அமுதம் ; இஃது அநங்கனையும் பின்னர் உயிர்ப்பித்தமை நினைக . ` கயிலை மாமலைமேல் சென்று காணற்பாலனாகிய அவனை இங்குத் திருச்செங்காட்டங்குடியில் கண்டேன் ` என்பது நயம் .

பண் :

பாடல் எண் : 3

உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
பேணியஅந் தணர்க்குமறைப்பொருளைப்பின்னும்
முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும்
முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

நினைந்துருகும் அடியாருடைய மனத்தில் ஊற்றெடுக்கும் தேன் ஆனவனும் , தேவர்களுடைய மணிகள் இழைத்த மகுடங்களுக்கு அணியாய் நிற்கும் திருவடிகளை உடையவனும் , உண்மைக் கண்ணே நின்றாராய் உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களை ஏற்றுப் பெருகுநிலையாகிய வீடு அடைதலையே குறிக் கோளாய்க் கொண்டவருடைய அறிவாய் விளங்குபவனும் , தன்னை விரும்பித் தொழும் அந்தணருக்கு விளங்கித் தோன்றும் மறைப் பொருள் ஆனவனும் , பிற்படுவோராம் மணங்கமழும் தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் முற்பட்ட பரமகாரணன் ஆனவனும் , மெய்யான தவத்தைச் செய்வார்க்கு அமைந்த உறுதுணைவனும் , சுருண்ட குழலினையுடைய உமைநங்கைக்கு வாய்த்த பங்கனும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .

குறிப்புரை :

ஊறும் - ( உருகுகின்ற அம்மனத்தின்கண் ) சுரக்கின்ற . மணிமுடி - மணிகள் இழைத்த மகுடங்கள் . ` உண்மைக் கண்ணே நின்ற குறி ` என இயைக்க , உண்மைக் கண்ணே நிற்றல் , மெய்ப்பொருளை உணர்தல் ஒன்றிலே நிலைபெறுதல் . குறி - குறிக்கோள் . இக் குறிக்கோளை உடையவர் , தாம் தம் சிற்றறிவுகொண்டு கண்டவாறே கண்டு சிறுகி நில்லாது உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொல்லை ஏற்றுப் பெருகிச் செல்வர் ஆகலான் , அவரை , ` பெருகுநிலைக் குறியாளர் ` என்று அருளிச் செய்தார் . அவர்க்குச் சிவபிரான் அவ்வந் நிலையிலும் அவ்வவ்வறிவாய் நின்று முன்னை அறியாமையை அகற்றியருளுதல் பற்றி , அவனை அவரது அறிவாக அருளிச் செய்தார் . தன்னையே விரும்பித் தொழுகின்ற மேலாய அந்தணர்கட்கு வேதப் பொருளை ஐயமறத் தெளிவித்தருளுதலின் , ` பேணிய அந்தணர்க்கு மறைப் பொருளை ` என்றருளினார் . இதனைச் சனகர் முதலிய நால்வர்க்கு அருளியவாற்றால் அறியலாகும் . முழுமுதல் - மேலான காரணம் . சில கற்பங்களில் அயனைத் திருமால் தோற்றுவித்தலும் , மற்றும சில கற்பங்களில் திருமாலை அயன் தோற்றுவித்தலும் எக்கற்பத்திலும் அவர் இருவருள் ஒருவரை முன்னே சிவபிரான் தோற்றுவித்தலும் கூறப்படுதலால் , இருவர்க்கும் பரமகாரணன் சிவபெருமானேயாதல் அறிக . ` அடியவர்கட்கு இன்பப் பொருளாகியும் , அமரர்கட்குத் தலைவனாகியும் , உண்மைகாணும் உள்ளம் உடையவர்க்கு ஞானமாகியும் , சீரிய அந்தணர்க்கு ஞானாசிரியனாகியும் , அயன் மால்கட்குப் பரம காரணனாகியும் , உண்மைத் தவத்தோர்க்கு உற்ற துணைவனாகியும் , உமையம்மைக்குக் கணவனாகியும் நிற்பவன் ` என்றருளிச் செய்தவாறு அறிக .

பண் :

பாடல் எண் : 4

கந்தமலர்க் கொன்றையணி சடையான் தன்னைக்
கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவை யொரு பாகத்தானைச்
சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
பந்தமறுத் தாளாக்கப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்தென்
சிந்தைமயக் கறுத்ததிரு வருளினானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பொன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒரு பாகத்தொடு தன் பாகம் விளங்குபவனும் , இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும் , நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்த இலக்கண நெறியின் அமைந்த தமிழ் மாலையை யான் பாடச் செய்து அதனால் என் மனத்துமண்டிய மயக்கத்தைப் போக்கிய திருவருளைச் செய்தவனும் ஆகிய சிவ பெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

கந்தம் - நறுமணம் . ` மணி ` என்றது , மரகதத்தை . ` மரகதமணியின் ஒளியோடு விளங்குகின்ற பொன்னொளிபோல , தெரிவையை ஒரு பாகத்தில் உடையவன் ` என்க ; ` மரகதக்குவாஅல் மாமணிப் பிறக்கம் - மின்னொளி கொண்ட பொன்னொளி திகழ ` என்று அருளியது திருவாசகமும் ( தி .8 திருவண் . 124. 152.) சந்தம் - அழகு . ` சர அசரங்கட்கு நற்றாய் போன்றவன் ` என்க . ` நாயேனது முன்னைப் பந்தம் ` என விரியும் . ` பந்தம் ` என்றது , வினையை . ஆள் ஆக்கி - அடிமையாகச் செய்து . பணி - தொண்டு . நூல் தமிழ் - இலக்கண நெறியின் அமைந்த தமிழ் .

பண் :

பாடல் எண் : 5

நஞ்சடைந்த கண்டத்து நாதன் தன்னை
நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
வியன்கெடில வீரட்டம் மேவி னானை
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
மதிலாரூர் இடங்கொண்ட மைந்தன் தன்னைச்
செஞ்சினத்த திரிசூலப் படையான் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

நஞ்சுபொருந்திய கண்டத்தை உடைய தலைவனும் குளிர்ந்த மலர்களாகிய அழகிய அம்புகளைக் கொண்ட மன்மதன் அழியுமாறு கொடிய சினமாகிய நெருப்பு எழ விழித்த ஒரு நெற்றிக் கண்ணினனும் , கெடில நதிக்கரையில் விளங்கும் பரந்த அதிகை வீரட்டம் மேவினவனும் , மேகம் தவழும் நீண்ட சோலைகளை உடையதும் மாடவீதிகள் நிறைந்ததும் மதிலால் வளைப்புண்டதுமாகிய ஆரூரைத் தனது இடமாகக் கொண்ட மைந்தனும் , சினத்தால் சிவந்து தோன்றும் திரிசூலப் படையினனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியிற் கண்டேன் .

குறிப்புரை :

நளிர் - குளிர்ச்சி . ` சினத் தீ எழ ` என ஒரு சொல் வருவிக்க . கெடில வீரட்டம் - திருவதிகை வீரட்டம் , மஞ்சு - மேகம் . அடுத்த - பொருந்திய . சிவப்பை உண்டாக்குவதாய சினத்தை , ` செஞ்சினம் ` என்றும் , படையை உடையவனது சினத்தைப் படைமேல் ஏற்றியும் , ` செஞ்சினத்த திரிசூலப் படையான் ` என்று அருளிச் செய்தார் . இனிச் சிவபிரானது சினம் செம்மையிற் ( திருவருளிற் ) பிறழாமையின் , ` செஞ்சினத்த ` என்று அருளினார் என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

கன்னியையங் கொருசடையிற் கரந்தான் தன்னைக்
கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் தன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

கங்கையைத் தன் ஒப்பற்ற சடையின் ஒரு பால் மறைத்தவனும் , கடவூர் வீரட்டானத்தைச் சிறந்த இடமாகக் கருதினவனும் , காவிரி சூழும் ஐயாற்றில் விளங்கும் எம் புனிதனும் , பூந்துருத்தி நெய்த்தானம் ஆகிய பதிகளில் நிலைபெற்றவனும் , தான் உரைத்த நான்மறைகளின் பொருளைத் தக்கவர்க்கு விளங்க விரித்து உரைக்கும் இயல்பினனும் , தேவர்கள் அன்பு கொண்டு வணங்கிப் புகழ்ந்து ` பரனே ` என்று முழங்கித் தம் தலைமீது அணியாகச் சூடிக் கொள்ளும் சிவந்த அடிகளை உடையவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

` கன்னி ` என்றது , கங்கையை . ஒரு சடை - ஒப்பற்ற சடை ; அன்றி , மிகப்பெருகிவந்த கங்கை புல்நுனிமேல் நீர்போல் ஆயினமையின் , ` ஒரு சடை ` என்றே உரைத்தலுமாம் . கடவூர் வீரட்டம் , ஐயாறு , பூந்துருத்தி , நெய்த்தானம் சோழ நாட்டுத் தலங்கள் , பொன்னி - காவிரி நதி . பரிந்து - அன்பு கொண்டு .

பண் :

பாடல் எண் : 7

எத்திக்கு மாய்நின்ற இறைவன் தன்னை
ஏகம்பம் மேயானை யில்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

எல்லாத் திக்குகளுமாய் நின்ற இறைவனும் , ஏகம்பத்தில் பொருந்தி நிற்பவனும் , தெய்வத்தன்மை இல்லாத ஒன்றைத் தெய்வமாக மனத்துட் கொண்டு தம் மயிரைப் பறிக்கும் சமணருடைய பொய் ஒழுக்கப் படுகுழியில் நான் புக்கழுந்தி வீழாமல் , தன் திருவடியாகிய கரையில் புகும்படி என்னைஎடுத்துப் பத்திக்குரிய வழியைக் காட்டிப் பாவத்தைத் தீர்த்து பழைய வினைப் பயனாக விளைவன எல்லாவற்றையும் விலக்கி என் மனத்துள்ளே ஊறுந் தேனாய்த் தித்திப்பவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங் குடியில் கண்டேன் .

குறிப்புரை :

எத் திக்குமாய் - எவ்விடத்திலும் நிறைந்து , ` இல்லாத் தெய்வம் ` என்றதில் உள்ள இன்மை , ஒன்றின் ஒன்று இன்மை . ` அவ்வின்மையை உடைய தெய்வம் ` என்றது . ` தெய்வத் தன்மை இல்லாத ஒரு பொருள் ` என்றபடி . தெய்வத் தன்மையாவது வினையைத் தொழிற் படுத்துதலாகலானும் , ` சமணர் கூறும் தெய்வம் , அது செய்யமாட்டாது ` என்பதனை அவரே உடம்பட்டுக்கொள்ளுத லானும் அவரது தெய்வத்தை , தெய்வத்தன்மை இல்லாத ஒரு பொருள் என்று அருளிச் செய்தார் . பொத்தி - மூடி ; பொதிந்து ; உள்ளத்துள் இருத்தி ` என்றவாறு . இனி ` தமக்குத் தெய்வம் ` ( தெய்வக்கொள்கை ) இல்லாமையை மறைத்து ` என்று உரைப்பினும் ஆம் . இனி அவர் , அதுபற்றிக் கூறுவனவெல்லாம் உண்மையல்ல ஆதலின் , ` அவர் பொய்யிற் புக்கழுந்தி வீழாமே ` என்றருளினார் . வீழ்தல் - ஆழ்ந்து போதல் ; ` வீழ்தல் ` என்றதனால் , ` பொய்யாகிய படுகுழி ` என்பது பெறப்பட்டமையின் ` போத வாங்கி ` என்பதற்கு , ` தன் திருவடியாகிய கரையிற் புகுதும்படி எடுத்து ` என உரைக்க . ` போத வாங்கி ` என்றது , ` தூண்டில் வேட்டுவன் வாங்க வராது ` என்றாற்போல இடவழு வமைதி ; பத்தி - இறையன்பு ; அதற்கு உரிய வழி இறையுணர்வு ( சிவ ஞானம் ), அதனைச் சூலைநோய் தீர்க்கும் வகையால் அருளினமையால் , ` பத்திக்கே வழிகாட்டி ` என்று அருளினார் . வினைப் பயம் - வினையை அஞ்சும் அச்சம் , இனி , ` பயம் - பயன் ` எனினுமாம் . மனத்துள்ளே ` தித்தித்து ஊறும் தேன் ` என்க .

பண் :

பாடல் எண் : 8

கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

உண்மை நூல்களைக் கல்லாதார் மனத்தை அணுகாது அகலும் கடவுளும் , மெய்ந்நூல்களைக் கற்றவர்கள் ஆராய்ந்து அடையும் அன்பனும் , பிறர்க்குத் துன்பமிழைத்தலாகிய பிழைபட்ட நெறியை விரும்பினவருடைய புரங்கள் மூன்றும் அழிந்து விழுமாறு போர் செய்யவல்ல அம்பினைத் தொடுத்தவனும் நிலையற்ற புலாற்குடிலாகிய உடலிடத்து நரைதிரை மூப்புப் பிணி இறப்பு முதலியவற்றால் நிகழும் மாறுபாடு நீங்க நலங்கள் நிறைவதற்குரிய தவத்தை என்பால் செய்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லாத செவ்விய நெறியிலே என்னைச் செலுத்துபவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

உண்மை நூல்களைக் கல்லாதவர்க்கு இறையுணர்வு உண்டாதற்கு வாயில் இன்மையின் , ` கல்லாதார் மனத்து அணுகாதவன் ` என்றருளினார் , இது பற்றியே தந்தை தாயர் தம் புதல்வர்க்கு உரிய பருவத்தே தீக்கை செய்வித்து இறைவன் நூல்களை ஓதுவித்தல் அவர்கட்கு இன்றியமையாக் கடனாயிற்று . ` கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன் ` ( தி .3. ப .40. பா .3.) என்று அருளினார் , திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளும் . கண்ணப்பநாயனார் முதலியோர்க்குக் கல்வியின்றியும் இறையுணர்வு உண்டாயிற்றன்றோ ` எனின் , அவரெல்லாரும் முற்பிறப்பிற் கற்ற பெருங்கல்வியும் , அக் கல்வியறிவின் பயனாக வாலறிவன் நற்றாளைத் தொழுத பெருந் தவமும் உடையார் ` என்பதற்கு ; அவர்க்கு உண்டாகிய உணர்வு தவத்தவர் உணர்வினும் மிக மேம்பட்ட உணர்வாய்க் கடிதின் வீடுபயந்தமை தானே போதிய சான்றாம் என்க . தி .12 கண்ணப்ப நாயனார் புராண (102) த்தில் , சேக்கிழார் நாயனார் , ` முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான - அன்பினை எடுத்துக்காட்ட ` என்றருளினார் . கண்ணப்பர்க்கு அன்னதொரு பெருந்தவம் இல்லையாயின் , ` சேணுயர் திருக்காளத்தி மலைமிசை எழுந்து செவ்வே - கோணமில் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் ` என்று ஒருவன் கூறிய அளவில் , மேவிய நெஞ்சும் வேறோர் விருப்புற அவர் விரைந்து செல்லுதலும் , சென்று காளத்தி மலையை அடைந்த பொழுது தமக்கு முன்னே தம் அன்பு அம்மலை மேற் செல்லுதலும் , சென்று தாம் இறைவரைக் காணாத முன்பே இறைவர் தம்மை நோக்கிய கருணை கூர்ந்த அருட்டிருநோக்கம் வந்து எய்தப் பெறுதலும் , அது பெற்ற ஞான்றே தாம் பிறந்த குலச்சார்பு தம்மை அறவே விட்டு அகன்று போகத் தாம் பொருவில் அன்பே உருவாதலும் , பிறவும் எவ்வாறு இயலும் என்க . இனி , இறைவன் நூலைக் கற்றவர்கள் அவற்றின் பொருளைப் பலகாலும் சிந்தித்துப் பிறரொடு வினாதல் , விடுத்தல்கள் செய்து பயின்றும் இறைவனை உணர்வராகலான் , ` கற்றார்கள் உற்று ஓரும் காதலான் ` என்று அருளினார் . உற்று ஓர்தல் - மனம் பற்றி ஆராய்தல் . காதலான் - அவர்களிடத்துக் கொள்ளும் அன்பினை உடையவன் . ` கற்றல் கேட்ட லுடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்த ` ( தி .1. ப .1. பா .2.) என்றருளினார் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும் . பொல்லாத நெறி , புத்த மதம் . உகந்தார் - ( சிவநெறியை விடுத்து அதனை ) விரும்பியவர் . பொன்றிவிழ - கெட்டொழிய . நில்லாத - நிலையாத . நிணக் குரம்பை - புலாற் குடில் ; உடம்பு . பிணக்கம் - மாறுபாடு ; அவை பிணி முதலிய துன்பங்கள் . நிறை தவம் - நிறைய வேண்டுவதாய தவம் . ` தவம் நிரம்பாதிருந்தமையானே சமண் சமயம் புகுதல் உண்டாயிற்று ` என்பதும் , பின்னர் அக்குறையினைச் சூலைநோய்த் துன்பத்தெழுந்த உணர்வினால் நீக்கி ` நிறைவித்தான் ` என்பதும் நினைந்து , ` நிறைதவத்தை நிறைவித்து ` என்றருளினார் . இதனையே சேக்கிழார் , ` முன்னமே முனியாகி எமை அடையத் தவம் முயன்றான் - அன்னவனை இனிச்சூலை மடுத்தாள்வம் ` ( தி .12 திருநாவுக் . புரா . 48.) என்பதனால் விளக்கினார் . செல்லாத செந்நெறி - புடை பெயர்ந்து போகாத செவ்விய நெறி ; ` அறிவினால் அறியும் முறை ` என்றதாம் .

பண் :

பாடல் எண் : 9

அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை
அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

கிடைத்தற்கரிய பெரும்பொருளாய்த் திகழ்பவனும் , அலையை உடைய கடலிடத்துத் தோன்றிய ஆலால நஞ்சினை உண்ணக் கழிந்த கண்டத்தினனும் , சிவந்த கண்களையுடைய இடபத்தின் மேலேறி ஒளிவிடும் சிறந்த மாணிக்க மணிபோல் விளங்குந் தோற்றத்தை உடையவனும் , தத்தம் நிலைக்கு ஏற்ற தொண்டினைச் செய்யும் அடியார்க்கு உலகங்களைக் கற்பம் முடியுமளவும் ஆள அளிப்பவனும் , அழிவில்லாதவனும் , உமையம்மை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானை நான் செங் காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

அரிய பெரும் பொருள் - கிடைத்தற்கு அரிய பெரும் பொருள் . ` செங்கண் ஏற்றின்மேல் , கரியதொரு கண்டத்தின் கண் கதிர் விடுகின்ற பெரிய நீலமணி விளங்குவது போலும் காட்சி தோன்ற நிற்பவன் ` என்க . உரிய - தம் நிலைக்கு ஏற்ற , ` தொழில் ` என்றது தொண்டினை . ` முழுது ` என்றது , ` கற்பம் முழுதும் ` எனக் காலத்தின் மேல் நின்றது . உலப்பு - அழிவு . ` தெரிவை ` என்புழி இரண்டனுருபு தொகுத்தலாயிற்று .

பண் :

பாடல் எண் : 10

போரரவ மால்விடையொன் றூர்தி யானைப்
புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்தானை நிமலன் தன்னைப்
பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
பிறங்கொளிவாள் அரக்கன்முடி யிடியச் செற்ற
சீரரவக் கழலானைச் செல்வன் தன்னைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

பொழிப்புரை :

போரிடத்து எழுப்பும் ஒலியையுடையதும் பெருமை மிக்கதும் ஆகிய ஒரு விடையை ஊர்தியாக உடையவனும் , புறம்பயத்தும் புகலூரிலும் நிலைத்து நின்றவனும் , கங்கையும் , பாம்பும் நிலவும் செஞ்சடைமேல் நிலாக்காலும் வெண்டிங்கட்பிறையை என்றும் நீங்காதவாறு வைத்தவனும் , நிமலனும் , மிக்க ஒலியுடைய புட்பக விமானத்தையுடையவனாய் , வெற்றியால் மூவுலகங்களிலும் விளங்கிய புகழுடைய கொடிகள் அரக்கனாகிய இராவணனுடைய முடிகள் பொடியாகும்படி ஒலிக்கும் அழகிய கழலினனும் , செல்வனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .

குறிப்புரை :

போர் அரவம் - போருக்காக எழுப்பும் ஒலி . ` ஒன்றாகிய ஊர்தியை உடையவன் ` என்க ; ` ஒரு விடை ஊர்தி ` எனற் பாலது , ` விடை ஒன்று ஊர்தி ` எனப்பட்டது . புறம்பயம் , புகலூர் சோழநாட்டுத் தலங்கள் . நீர் அரவச் செஞ்சடை - நீரையும் பாம்பையும் உடைய செம்மையாகிய சடை . நிலா வெண்டிங்கள் - நிலவை வீசுகின்ற வெள்ளிய பிறை . பேர் அரவம் - மிக்க ஒலி . புட்பகத் தேர் - புட்பகமாகிய ஊர்தி , ` வென்றி வாளரக்கன் பிறங்கொளி முடி ` எனக் கொண்டு கூட்டுக . இடிய - பொடியாகும்படி . சீர் - அழகு . அரவம் - ஒலி .
சிற்பி