திருமுண்டீச்சரம்


பண் :

பாடல் எண் : 1

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே.
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், சினமிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும், அடியவர்களுக்கு அன்பனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடைமேல் கங்கையை ஏற்றவனும், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவனும், உலகங்கள் ஏழும் கலக்க முறாதபடி ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கழுத்திடத்தே சேர்த்தவனும் ஆவான். அவன் என் சிந்தை இடத்தவன் ஆயினான்.

குறிப்புரை :

ஆர்த்தான் - கட்டினான். ``அழல்`` என்றது, சினத்தை. `நாணா ஆர்த்தான்` எனவும், `கலங்கா வண்ணங் காத்தான்` எனவும் இயையும். ``கடல்வாய் நஞ்சதனைக் கண்டத்துள்ளே சேர்த்தான்`` என்றது, `பெரிய கடலில் தோன்றிய நஞ்சினைச் சிறிய கண்டத்துள்ளே அடக்கினான்` என்னும் நயத்தை உடையது. சிவலோகன் - சிவ லோகத்தைத் தன் உலகமாக உடையவன். `சிவலோகத்தில் இருப்பவன் என் சிந்தையன் ஆயினான்` என வியந்தருளிச் செய்தவாறு.

பண் :

பாடல் எண் : 2

கருத்தன்காண் கமலத்தோன் தலையி லொன்றைக்
காய்ந்தான்காண் பாய்ந்தநீர் பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத் தான்காண்
ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெய்யடியா ருள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் தலைவன் ஆவானும், பிரமன் தலைகளில் ஒன்றைக் கோபித்துக் கொய்தவனும், வேகமாகப் பாய்ந்த கங்கை வேகம் நீங்கிப் பரவிய தலையை உடைய ஒருத்தனும் உமையம்மை தங்கிய பங்கினனும், மூன்று வடிவங்களாய் நின்ற அரி, அயன், அரன் ஆகியோருடைய வடிவங்கள் ஒன்றாகித் தனது ஒருவடிவமாக அமைந்த பழையோனும், தேவர்களுக்கெல்லாம் மேலானவனும், மெய்யடியார் உள்ளத்தில் விரும்பி உறையும் தூயவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினான்.

குறிப்புரை :

கருத்தன் - தலைவன். ``காய்ந்தான்`` என்றது, `அறுத்தான்` என்னும் தன் காரியம் தோற்றி நின்றது. பாய்ந்த - வீழ்ந்த. பரந்த - நிறைந்த. மூவுரு - ``அயன், அரி, அரன்`` என்னும் முக் கடவுளர் வடிவம். ``மூவுருவாயும்`` என்னும் உம்மை தொக்கது. ``விருத்தன்`` என்றது, `பழையோன்` என்றவாறு. மூவுருவாய் நிற்றல் பொது வியல்பாக, ஒன்றாய் நிற்றலே உண்மை இயல்பாகலின், `ஒன்றாய் நின்ற விருத்தன்` என்றருளினார். ``மூவுருவாய்`` என்புழித் தொகுக்கப்பட்ட உம்மை, `இப் பொதுவியல்பு உடையனாயினும் தன் உண்மையியல்பு திரியாதவனே` என்பது தோற்றுவித்தது. `தீர்த்தன்` என்னும் வடசொல். ``திருத்தன்`` எனத் திரிந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 3

நம்பன்காண் நரைவிடையொன் றேறி னான்காண்
நாதன்காண் கீதத்தை நவிற்றி னான்காண்
இன்பன்காண் இமையாமுக் கண்ணி னான்காண்
ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்
கன்பன்காண் ஆரழல தாடி னான்காண்
அவனிவனென் றியாவர்க்கும் அறிய வொண்ணாச்
செம்பொன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் நம்புதற்குரியவனும், வெள்ளை விடை ஒன்றை ஊர்தியாகக் கொண்டவனும், தலைவனும், கீதத்தைப் பாடினவனும், இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்கள் உடையவனும், விரும்பி மனமுருகும் அடியார்களுடைய அன்பனும், அனலேந்தி ஆடினவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் அறிய ஒண்ணாதவனும், செம்பொன் அனையானும் ஆவான். அவன் என் சிந்தை யிடத்தவன் ஆயினான்.

குறிப்புரை :

நம்பன் - நம்புதற்கு (விரும்புதற்கு) உரியவன். நரை - வெண்மை. நவிற்றினான் - பாடினான். இன்பன் - இன்பம் தருபவன். `சிவபிரானது முக்கண்களும் இமையாக் கண்கள்` என்பதனை, ``இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்`` (தி.11 திருமுருகாற்றுப்படை. 153. 54.) என நக்கீரதேவரும் கூறினார். ஏசற்று - விரும்பி. ``அழலது`` அது, பகுதிப் பொருள் விகுதி. ``அவன் என்று அறிய ஒண்ணாதவன்`` என்றது, `கருதியும் கேட்டும் உணர ஒண்ணா தவன்` என்பதனையும், ``இவன் என்று அறிய ஒண்ணாதவன்`` என்றது. `கண்டு உணர ஒண்ணாதவன்` என்பதனையும் குறித்து நின்றன.

பண் :

பாடல் எண் : 4

மூவன்காண் மூவர்க்கும் முதலா னான்காண்
முன்னுமாய்ப் பின்னுமாய் முடிவா னான்காண்
காவன்காண் உலகுக்கோர் கண்ணா னான்காண்
கங்காளன் காண்கயிலை மலையி னான்காண்
ஆவன்காண் ஆவகத்தஞ் சாடி னான்காண்
ஆரழலாய் அயற்கரிக்கு மறிய வொண்ணாத்
தேவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகன் மூவுருவாய் மூத்தவனும், மூவர்க்கும் முதல் ஆனவனும், உலகத்தோற்றத்திற்கு முன் ஆனவனும், உலக ஒடுக்கத்திற்குப்பின் ஆனவனும், வீடு பேறு ஆனவனும், உலகங்களைக் காப்பவன் ஆனவனும், உலகிற்குக் கண் ஆனவனும், இறந்துபட்ட பிரம விட்டுணுக்களுடைய என்புக்கூடுகளை அணிந்தவனும், கயிலை மலையினனும், ஆக்கந்தருபவனும், ஆன்ஐந்தில் விரும்பி மூழ்குபவனும், பிரமனுக்கும் திருமாலுக்கும் அறியமுடியாத அழற்பிழம்பாய்த் தோன்றிய தேவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

மூவன் - மூப்பினன்; முன்னோன்; `மூவுருவாயவன்` எனலுமாம். ``முன்பின்`` என்பன, உலகத் தோற்ற ஒடுக்கங்களை எல்லையாக உடையன. முடிவு - வீடு பேறு. `காவல்` என்பது அடியாக, `காவலன் என்பது வருதல் போல, அதன் முதனிலையாகிய `கா` என்பது அடியாக, ``காவன்`` என்பது வந்தது. ``காப்பவன்`` என்பது பொருள். ஆவன் - ஆக்கம் தருபவன். ஆ அகத்து - பசுவினிடத்து உள்ள. `அயற்கு` என்புழியும் எண்ணும்மை விரிக்க.

பண் :

பாடல் எண் : 5

கானவன்காண் கானவனாய்ப் பொருதான் றான்காண்
கனலாட வல்லான்காண் கையி லேந்தும்
மானவன்காண் மறைநான்கு மாயி னான்காண்
வல்லேறொன் றதுவேற வல்லான் றான்காண்
ஊனவன்காண் உலகத்துக் குயிரா னான்காண்
உரையவன்காண் உணர்வவன்காண் உணர்ந்தார்க் கென்றுந்
தேனவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் காட்டில் உறைபவனும், வேடனாகிப் பார்த்தனொடு பொருதவனும், கனல் ஆட வல்லவனும், மானைக் கையில் ஏந்தியவனும், நான்கு மறைகளாகவும் ஆனவனும், வலிய இடபமொன்றை ஏற வல்லவனும், பலவகை உடம்புகளாயும் நிற்பவனும், சீவான்மாக்களின் உயிர்க்குயிரானவனும், சொல் ஆனவனும் சொற்பொருள் உணர்வு ஆனவனும், தன்னை உணர்ந்தார்க்கு எக்காலத்தும் தேனாய் இனிப்பவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

கானவன் - காட்டில் உறைபவன். கானவனாய் - வேடனாகி; பொருதது (போர் செய்தது) அருச்சுனனோடு, வல் ஏறு - தன்னைத் தாங்க வல்லதாகிய விடை; அற விடை; அறம் அன்றி, `மறம் தாங்கலாற்றாது` என்பதாம். பிறர் அறத்தின் வழிப்படுவோராய் அதனைச் செலுத்தமாட்டாமை தோன்ற, `ஏறவல்லான்` என்று அருளினார். ஊன் உடம்பு; ஊனவன் - பலவகை உடம்புகளாயும் நிற்பவன். உரை - சொல். உணர்வு - சொற்பொருள் உணர்வு.

பண் :

பாடல் எண் : 6

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன் உயிரோடு உடங்கியைந்து நின்றவனும், எல்லா உறவினருமாய் ஆனவனும், ஓரிடமும் எஞ்சுதலில்லா வகை எவ்விடத்தும் நிறைந்து நின்றவனும், அழிவில்லாதவனும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனும், நல்ல தவ வேடங்கொண்டவனும், சரணடைந்த பிரமசாரிக்காக அவனைக் கிட்டிய பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.

குறிப்புரை :

உற்றவன் - (உயிர்களோடு) உடங்கியைந்து நின்றவன். உறவு எல்லாம் - அப்பன், அம்மை, உடன் பிறந்தார் முதலிய பலரும். `ஒழிவு அற எங்கும் நின்று` என்க; `ஓரிடமும் எஞ்சுதல் இல்லாது எவ்விடத்தும் நிறைந்து நின்று` என்பது பொருள். ``ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி`` (தி.8 திருவா. போற்றித் - 215.) எனவும், ``உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த யோகமே`` (தி.8 திருவா. பிடித்த.1.) எனவும் அருளியவற்றை நோக்குக. உலப்பு - அழிவு. ``ஆடை`` என்றது, ஆடையின்மேற் கட்டப்படும் கச்சினை. `புறங்காட்டில் எரியின்கண் ஆடல் புரிந்தான்` என்க. நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன். ``நற்றவனாய் அடியடைந்த மாணிக்கு` என்பதும் பாடம், மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர்.

பண் :

பாடல் எண் : 7

உதைத்தவன்காண் உணராத தக்கன் வேள்வி
உருண்டோடத் தொடர்ந்தருக்கன் பல்லை [ யெல்லாந்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற
தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி
வந்தவியுண் டவரோடு மதனை யெல்லாஞ்
சிதைத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், மெய்யுணராத தக்கனுடைய வேள்விக்கண் திரட்டி வைக்கப்பட்ட திரவியங்களை உருண்டோட உதைத்தவனும், அருக்கனைத் தொடர்ந்து சென்று அவன் பற்களை எல்லாம் தகர்த்தவனும், தக்கனுடைய தலையைக் கொய்த தலைவனும், மலைமகளாகிய உமை யம்மையை மிக இகழ்ந்தவராய், மாட்சிமைப்பட்டவராய்த் தம்மை மதித்து வேள்விக்கண் வந்து அவியுண்டாருமாகிய வலிமைமிக்க தேவர்களொடு அவர்தம் அறியாமை முழுவதையும் அழித்தவனும் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

``வேள்வி`` என்றது, வேள்வியின்பொருட்டு நிறைத்து வைக்கப்பட்ட பொருள்களை. உருண்டோட உதைத்தவன் என இயையும். தொடர்ந்து - துரந்து சென்று. அருக்கன் - சூரியன். `சால ஒழிந்த` என இயையும்.
`மாண்டாராய்` என எச்சமாக்கி, `மாட்சிமைப்பட்டவராய் வேள்விக்கண் வந்து அவியை உண்டவர்` என உரைக்க. ``வந்து`` என்றது, இடவழுவமைதி. ``வல்லமரர் உண்டவரோடு`` என்றது, `உண்டவராகிய வல்லமரரோடு` எனப் பொருள் தந்தது. ஓடு எண்ணிடைச்சொல். மதன் - அறியாமை. `அவரது மதனை எல்லாம்` என்க. சிதைத்தவன் - அழித்தவன்.

பண் :

பாடல் எண் : 8

உரிந்தவுடை யார்துவரால் உடம்பை மூடி
உழிதருமவ் வூமரவர் உணரா வண்ணம்
பரிந்தவன்காண் பனிவரைமீப் பண்ட மெல்லாம்
பறித்துடனே நிரந்துவரு பாய்நீர்ப் பெண்ணை
நிரைந்துவரும் இருகரையுந் தடவா வோடி
நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித்
திரிந்துலவு திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன்காண் அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

திரு முண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவ லோகன், உடை இல்லாதவரும், துவர் தோய்ந்த ஆடையால் உடம்பை மூடுபவராய்த் திரியும் சமண புத்தர்கள் உணராவண்ணம் தன் அடியார்க்கு அருள் புரிந்தவன் ஆவான். குளிர்ந்த மலைமேல் உள்ள பண்டங்களையெல்லாம வாரிக்கொண்டு அவற்றோடு கூட முறைப்பட்டு வரும் பெண்ணையாற்றில் பாய்ந்துவரும் நீர், இணை ஒத்துவரும் இருகரைகளையும் தடவிக்கொண்டு ஓடிக்குற்றமற்ற இறைவனை வலங்கொண்டு இடமும் காலமும் நெடியவாக நோக்கி, மெல்ல அசைந்துலவும் அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

உரிந்த உடையார் - நீங்கிய உடையினை யுடையவர்; உடை இல்லாதவர்; சமணர். துவர் - துவர் தோய்த்த ஆடை; அதனால் உடம்பை மூடுபவர், புத்தர். உழிதரும் - திரிகின்ற. ஊமர் - உணர் வில்லாதவர், பரிந்தவன் - (தன் அடியார்க்கு) அருள் புரிந்தவன் `சமணரும் புத்தரும் இறைவனை இல்லை என்றே சொல்லிக் காலம் போக்கினும் அவன் தன் அடியார்க்கு அருள் செய்தே நிற்கின்றான்` என்றதாம்; `புத்தரும் சமணரும் புறனுரைக்கப் - பத்தர்கட் கருள் செய்து பயின்றவனே`` (தி.3. ப.4. பா.10.) என்றருளினார், திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள். பனி வரை மீப்பண்டம் - குளிர்ந்த மலைகளின் மேல் உள்ள பொருள்கள்; அவை, சந்தனம், அகில், மூங்கில் முதலியன. பறித்து - வாரிக்கொண்டு; `பரித்து` என்பதும் பாடம். உடன் - அவற்றோடு கூட. நிரந்து - முறைப்பட்டு. `பெண்ணைப் பாய்நீர்` என மாற்றுக. நிரைந்து - இணையொத்து. தடவா - தடவிக் கொண்டு. ``நின்மலனை`` என்றது, `நின்மலனாகிய தன்னை` எனப் பொருள் தந்தது. `நீள நோக்கி` இடம் நெடிதாக நோக்கி; `நோக்குவதும் நின்மலனையே` என்க. `அணித்தாய் ஓடும் பெண்ணையாற்று நீரினை, இறைவனை வலம் செய்து கண்டு கொண்டே ஓடுவதாக அருளிச் செய்தார்` என்க.
இதனை அடுத்து நின்ற திருத்தாண்டகம் கிடைக்கவில்லை. இதன் பின் இறுதித் திருத்தாண்டகமே கிடைத்துள்ளது.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

அறுத்தவன்காண் அடியவர்கள் அல்ல லெல்லாம்
அரும்பொருளாய் நின்றவன்காண் அனங்க னாகம்
மறுத்தவன்காண் மலைதன்னை மதியா தோடி
மலைமகள்தன் மனம்நடுங்க வானோ ரஞ்சக்
கறுத்தவனாய்க் கயிலாய மெடுத்தோன் கையுங்
கதிர்முடியுங் கண்ணும் பிதுங்கி யோடச்
செறுத்தவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே.

பொழிப்புரை :

அடியார்களுடைய அல்லல்களை யெல்லாம் நீக்கியவனும், அடைவதற்கு அரிய பொருளாய் நின்றவனும், மன்மதனது உடலை அழித்தவனும், மலைமகளாம் உமையம்மையின் மனம் நடுங்கவும் தேவர்கள் அஞ்சவும் கயிலை மலையை மதியாது வெகுண்டு ஓடி அதனைப் பறித்தெடுக்க முற்பட்டவனுடைய கைகளும் ஒளிவீசும் முடிகளை உடைய தலைகளும் கண்களும் பிதுங்கிச் செருக்குக்கெடுமாறு ஒறுத்தவனும், திருமுண்டீச்சரத்துக் கோயில் கொண்ட சிவலோகன் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆயினன்.

குறிப்புரை :

`அல்லல் எல்லாம் அறுத்தவன்` என்க. ``அரும் பொருளாய் நின்றவன்`` என்றது, அடைந்த பின்னரும், அடைந் தார்க்கு இன்பம் மேன்மேல் விளைத்தலால், அன்னதொரு பொருள் பிறிதில்லாமை உணர நிற்றல் பற்றி. மறுத்தவன் - ஒழித்தவன். `நடுங்கவும் அஞ்சவும் எடுத்தோன்` என்க. கறுத்தல் - வெகுளல். கதிர் முடி - மகுடத்தால் ஒளிபெற்ற தலை. பிதுங்கி - பிதுங்கினமையால். ஓட - (செருக்குக்) கெட.
சிற்பி