திருவாலம்பொழில்


பண் :

பாடல் எண் : 1

கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னைக்
கமலத்தோன் தலையரிந்த காபா லிய்யை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் தன்னை
மறைக்காடும் ஆவடுதண் டுறையும் மேய
திருவானைத் தென் பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும் , நுதலிடத்துக் கண் பெற்றவனும் , பிரமனது தலையை அரிந்து , அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும் , அழகிய உமையம்மை விளங்கும் உடலின் ஒரு கூற்றை உடையவனும் , உயிர்களுடைய உணர்வுகள் எல்லாம் ஆனவனும் , அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசைகளாகி வருபவனும் , வலஞ்சுழியில் மன்னும் எம்பெருமானும் , மறைக் காட்டிலும் , ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மை யுடையவனும் ஆகும் , தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழில் சிவபெருமானை , நெஞ்சே ! இடைவிடாது சிந்திப்பாயாக .

குறிப்புரை :

கரு - எல்லாவற்றிற்கும் முதல் . கண் நுதல் - கண்ணை உடைய நெற்றியை உடையவன் . கமலத்தோன் - பிரமன் . உரு ஆர்ந்த - அழகு நிறைந்த . உயிர்களும் , அவைகள் உணரும் பொருள்களும் எண்ணிறந்தனவாதல் பற்றி , ` உணர்வெலாம் ` என்று அருளிச் செய்தார் . `ஓ?` என்றது , எழுத்தைப் புலப்படுத்தும் ஓசையை . ` அவ் வோசையாகி வருவான் ` என்றது . உணர்வாய் நின்று அதனை வளர்க்குமாற்றினை விளக்கியபடி . வலஞ்சுழி , மறைக்காடு , ஆவடுதுறை இவை சோழநாட்டுத் தலங்கள் . மேய ( மேவிய ) - விரும்பி எழுந்தருளிய . திருவான் - மேன்மையை உடையவன் . ` பரம்பைக்குடி ` என்பது திருவாலம் பொழிற்குச் சார்பாய் உள்ள ஊர் ; ` பொழில் ` சோலையாதலின் , அஃது அவ்வூரைச் சார்ந்துள்ளது என்க .

பண் :

பாடல் எண் : 2

உரித்தானைக் களிறதன்தோல் போர்வை யாக
வுடையானை யுடைபுலியி னதளே யாகத்
தரித்தானைச் சடையதன்மேற் கங்கை யங்கைத்
தழலுருவை விடமமுதா வுண்டி தெல்லாம்
பரித்தானைப் பவளமால் வரையன் னானைப்
பாம்பணையான் தனக்கன்றங் காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

களிற்றின் தோலை உரித்தவனும் , அத்தோலைப் போர்வையாகவும் , புலியின் தோலை உடையாகவும் , உடையவனும் , சடைமேல் கங்கையைத் தரித்தவனும் , அழகிய கையிடத்து உருவத் தழலை ஏந்தியவனும் , ஆலகால விடத்தை அமுது செய்தவனும் , இக்கோலத்தையெல்லாம் மேற்கொண்டு நின்றவனும் , பவளப் பெருமலையன்னவனும் , ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு திருமாலுக்கு அன்று சக்கராயுதத்தை வழங்கி மகிழ்ந்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாது சிந்திப்பாயாக .

குறிப்புரை :

` களிறதன் தோல் உரித்தானை , ( அதனைப் ) போர்வையாகவும் புலியின் அதளே உடையாகவும் உடையானை , சடையதன் மேல் கங்கையையும் அங்கையில் தழல் உருவையும் தரித்தானை ` என்க . ` இதெல்லாம் ` என்றதற்கு , ` இக் கோலத்தை எல்லாம் ` என உரைக்க . பரித்தான் - மேற்கொண்டு நிற்பவன் . ` உண்டதெல்லாம் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . பாம்பணையான் - திருமால் . ஆழி - சக்கரம் . சிரித்தான் - மகிழ்ச்சியுற்றான் ; என்றது , ` அருள்பண்ணினான் ` என்றபடி .

பண் :

பாடல் எண் : 3

உருமூன்றாய் உணர்வின்கண் ஒன்றா னானை
ஓங்கார மெய்ப்பொருளை உடம்பி னுள்ளால்
கருவீன்ற வெங்களவை யறிவான் தன்னைக்
காலனைத்தன் கழலடியாற் காய்ந்து மாணிக்
கருளீன்ற ஆரமுதை அமரர் கோனை
யள்ளூறி யெம்பெருமான் என்பார்க் கென்றுந்
திருவீன்ற தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

அயன் , அரி , அரன் என்னும் நிலைகளால் மூவுருவாகியும் உண்மையை உணருமிடத்து அம்மூவுருவும் ஓருரு ஆனவனும் , ஓங்காரத்தின் மெய்ப்பொருளாய்த் திகழ்பவனும் , உடம்பின் உள்ளே கருவாய்த் திகழும் மனம் எண்ணும் வஞ்சனையான கொடிய எண்ணங்களை அறிபவனும் , இயமனைக் கழலணிந்த தன் திருவடியால் உதைத்து மாணியாகிய மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த பெறுதற்கரிய அமுது அன்னவனும் , தேவர்களுக்குத் தலைவனும் அன்புமிகப் பெருகி எம்பெருமானே என்று விளித்து அடி அடைவார்க்கு என்றும் நன்மைகளை உண்டாக்குபவனும் ஆகிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே இடைவிடாது சிந்திப்பாயாக .

குறிப்புரை :

உருமூன்று - ` அயன் , அரி , அரன் ` என்னும் நிலைகள் , உணர்வின்கண் - உண்மையை உணருமிடத்து . ஓங்காரத்து மெய்ப் பொருள் , எப்பொருளின் தோற்றம் நிலை இறுதிகட்குக் காரணன் என்பது . ` உடம்பு ` என்றது பருவுடம்பையாகலின் , ` கரு ` என்றது , அதற்கு முதலாய் உள்ள நுண்ணுடம்பாகிய மனத்தை என்க . ` அஃது ஈன்ற வெங்களவு ` என்றது , வஞ்சனையாகிய எண்ணத்தை . அதனை உடம்பினுள்ளால் ஈன்ற என்றது பருவுடம்பு போலப் புலனாகாது நிற்றல் பற்றி . ` அருள் ஈன்ற ` என்றது , ` அருளை அவன் பொருட்டு ஆக்கிய ` என்றபடி , அள் ஊறி - அன்புமிகப் பெருகி . திரு - நன்மை .

பண் :

பாடல் எண் : 4

பார்முழுதாய் விசும்பாகிப் பாதா ளமாம்
பரம்பரனைச் சுரும்பமருங் குழலாள் பாகத்
தாரமுதாம் அணிதில்லைக் கூத்தன் தன்னை
வாட்போக்கி யம்மானை யெம்மா னென்று
வாரமதாம் அடியார்க்கு வார மாகி
வஞ்சனைசெய் வார்க்கென்றும் வஞ்ச னாகுஞ்
சீரரசைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

முழுப்பூமியும் , விசும்பும் , பாதாளமும் ஆகிய மூவுலகங்களாய் நின்ற மிக மேலானவனும் , வண்டுகள் மொய்க்கும் குழலினையுடைய உமையம்மையைப் பாகத்திற்கொண்ட ஆரமுதம் போன்றவனும் , அழகிய தில்லையிடத்து ஆடும் கூத்தனும் , வாட் போக்கித் திருத்தலத்துத் தலைவனும் , எம் தலைவன் என்று பாராட்டி அன்பு கூரும் அடியார்பால் அன்புடையவனும் , வஞ்ச மனத்தார்க்கு என்றும் வஞ்சனும் , சிறந்த அரசனும் ஆம் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

` பார் முழுதாய் விசும்பாகிப் பாதாளமாம் ` என்றது , ` மூவுலகமாய் நின்றவன் ` என்றபடி . பரம்பரன் - மிகமேலானவன் . ` வாட்போக்கி ` என்னுந்தலத்திற்குப் பிற்காலத்தில் இப்பெயரே சொல்லப்படினும் , சுவாமிகள் காலத்தில் , ` ஆட் போக்கி ` என்ற பெயரே சொல்லப்பட்டது எனக் கருத இடம் உண்டு ; இத்தலம் சோழ நாட்டில் உள்ளது . வாரம் - அன்பு , சீர் அரசு - சிறந்த அரசன் .

பண் :

பாடல் எண் : 5

வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவ மார்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்தெம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூ ரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

மலையில் தங்கி வளர்ந்த இளமங்கையைப் பங்கில் ஏற்றவனும் தேவர்க்குத் தேவனும் , மணி போன்றவனும் , முத்து அனையானும் , அரையிற் பொருந்திய புலித்தோல் மேல் பாம்பைக் கட்டிய தலைவனும் , அடியார்க்கு என்றுந் தலைவனாய் நின்று அருளு பவனும் , வெள்ளிதாய் உயர்ந்த கோவணத்தை அணிந்த புனிதனும் , பூந்துருத்தி வாழ்வானும் , புகலூரானும் ஆகும் , அலை எழும் நீர்நிலைகளை உடைய தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

வரை ஆர்ந்த - மலையில் தங்கி வளர்ந்த . அம்மான் - எப்பொருட்கும் தலைவன் . ` அடியார்க்கு என்றும் தம்மானை ` என்க . அடியார்க்குத் தலைவனாய் நின்று அருளுதல் சிறப்பு வகையான் ஆதலின் அதனை வேறெடுத்தோதியருளினார் . புரை - உயர்வு ; வெண்மை . பூந்துருத்தி , புகலூர் சோழநாட்டுத் தலங்கள் . திரை - அலை ; அஃது ஆகுபெயராய் நீரைக்குறித்தது .

பண் :

பாடல் எண் : 6

விரிந்தானைக் குவிந்தானை வேத வித்தை
வியன்பிறப்போ டிறப்பாகி நின்றான் தன்னை
அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறா
ஆழ்கடல்நஞ் சுண்டிமையோ ரெல்லா முய்யப்
பரிந்தானைப் பல்லசுரர் புரங்கள் மூன்றும்
பாழ்படுப்பான் சிலைமலைநாண் ஏற்றி யம்பு
தெரிந்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

படைப்புக் காலத்து விரிந்தவனும் , அழிப்புக் காலத்துக் குவிந்தவனும் , வேதத்தின் வித்தானவனும் , பரந்த பிறப்பும் இறப்பும் ஆகி நின்றவனும் , சலந்தரன் உடல் இருகூறாய் வேறாக அரிந்தவனும் , ஆழ்கடலிலிருந்து தோன்றிய நஞ்சையுண்டு இமையோ ரெல்லாரும் உய்ய அருள்புரிந்தவனும் , பலவாகிய அசுரர்கள் வாழ் புரங்கள் மூன்றையும் பாழ்படுத்தற்கு மலையாகிய வில்லில் பாம்பாகிய நாணை ஏற்றித் திருமாலாகிய அம்பைத் தெரிந்து எய்தவனும் ஆகும் தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம் பொழிற் சிவ பெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

விரிந்தது - படைப்புக் காலத்திலும் , குவிந்தது அழிப்புக் காலத்திலும் என்க . ` விரிந்தனை குவிந்தனை விழுங்குயிர் உமிழ்ந்தனை ` ( தி .2. ப .30. பா .3.) என்றது மேலும் காட்டப்பட்டது . ` பிறப்பு இறப்பு ` என்றதும் , தோற்ற ஒடுக்கங்களை ; அவற்றிற்கு நிமித்தமாய் நிற்பவனை அவையேயாக அருளிச் செய்தார் . ` வேறா ( க ) அரிந்தானை ` என்க . பரிந்தான் - அருள் கூர்ந்தான் . ` சிலையாக மலையில் நாண் ஏற்றி ` என்க . சிலை - வில் .

பண் :

பாடல் எண் : 7

பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப்
புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாருந் தன்னை யிகழ அந்நாள்
இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச்
சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத்
தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச்
செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

குற்றமிக்க என்னுடம்பில் புகுதற்பொருட்டு என் உடம்பின் புறத்தே நின்று பலகாலும் ஆராய்ந்து குற்றங்களைந்து தூய்மை செய்த புனிதனும் , தாருகாவனத்து முனிவர் எல்லாரும் தன்னை இகழ , அந்நாள் அவரகத்தார் இடுபலி என்ற ஒன்றை முன்னிட்டுக் கொண்டு அங்கே திரிந்தவனும் , தன்னைப் புகழாதாரைத் தான் என்றும் நினையாதவனும் , இடைவிடாமல் தன் பொன்னடி களையே விரும்பி ஒழுகுவாரை மற்றவர் செல்லாத ஞான நெறியிலே செலுத்த வல்லவனும் ஆகும் திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

` அழுக்கு ` என்றது , உடம்பை ; மலம் நீங்கிய முத்தரது தனுவையும் கரணங்களையும் இறைவன் தன்னுடையனவாகக் கொண்டு அவற்றின்கண் தனது அருளாற்றல் வெளிப்பட நிற்பனாகலின் , ` என் அழுக்கிற் புகுவான் ` என்று அருளினார் . ` நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே ` ( ப .95. பா .4.) எனவும் பின்னர் வரும் . ` புறம் புறம் `, என்னும் அடுக்கு , ` கையைக் கையை நீட்டு கின்றான் ` என்றல் போல , இடைவிடாமைப் பொருட்டு . ` புறத்தைப் புறத்தை ` என உருபுவிரிக்க ; ஏகாரம் தேற்றம் . சோதித்தல் - ஆராய்தல் ; குற்றங்களைந்து தூய்மை செய்தல் . ` அந்நாள் ` என்றது , தாருகாவனத்து முனிவர் - பத்தினியர்பாற்சென்ற காலத்தை . ` என்று ` என்றது , ` என்பதை முன்னிட்டுக் கொண்டு ` என்றவாறு . ` அகங்களில் ( இல்லங்களில் ) திரியும் ` என்க . ` திரியும் ` என்றது . இறப்பில் நிகழ்வு . சொல்லாதார் - வாழ்த்தாதவர் . ` சொல்லாதான் ` என்றது , ` நினையாதவன் ` எனத் தன் காரணந் தோற்றி நின்றது . செல்லாத நெறி - செல்லுதற்கு அரிய நெறி ; ஞான நெறி ; ` அழியாத நெறி ` என்றும் ஆம் .

பண் :

பாடல் எண் : 8

ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ
டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப்
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப்
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்
சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத்
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

பொழிப்புரை :

ஐந்தலைப் பாம்பாகிய படுக்கையில் கிடந்த திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாத தலைவனும் , பந்து பொருந்தும் மெல்லிய விரலினளாகிய பார்வதியைப் பாகமாகக் கொண்டவனும் , பராய்த்துறையிலும் , வெண்காட்டிலும் பயின்று நிற்பவனும் , ஓட்டைகளுடைய வெள்ளிய தலையில் பிச்சை ஏற்பவனும் , பூவணத்தும் புறம்பயத்தும் பொருந்தி நிற்பவனும் , துன்புறுத்திய எம் கொடுவினைகளைத் தீர்ப்பவனும் ஆகிய திருவாலம்பொழிற் சிவ பெருமானை நெஞ்சே ! இடைவிடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

பராய்த்துறை , வெண்காடு , புறம்பயம் இவை சோழ நாட்டுத் தலங்கள் . பூவணம் , பாண்டி நாட்டுத் தலம் . பொந்து - புழை . சிந்திய - சிதறிக் கிடந்த ; என்றது , ` பல பிறப்புக்களில் பல இடங்களில் செய்யப்பட்டுக் கிடந்த ` என்றவாறு ; இனி , ` சிந்திய - துன்புறுத்திய ` என்றுமாம் . ` சிந்திய வெந்தீவினைகள் தீரநின்ற ` என்பதும் பாடம் .

பண் :

பாடல் எண் : 9

கையிலுண் டுழல்வாருஞ் சாக்கியருங்
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப்
பொய்யிலா தவர்க்கென்றும் பொய்யி லானைப்
பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்
கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

பொழிப்புரை :

கையில் உணவை ஏற்று உண்ணும் சமணரும் சாக்கியரும் ஆகிய கல்விப்பயனடையாத வலிய மூடர்க்கு நல்லன் அல்லனும் , நெஞ்சில் கரவு இல்லாதார்க்குக் கரவாது வெளிநின்று அருள்பவனும் , பூணாக அணிகின்ற நாகமே நாணாகவும் , மலையே வில்லாகவும் , அக்கினிதேவனும் வாயுதேவனும் கையிற் பொருந்திய அம்பினுடைய ஈர்க்கும் கோலுமாகக் கொண்டு கொடிய தவத்தைச் செய்து வரங்களைப் பெற்ற அசுரர்களுடைய நெடிய புரங்கள் மூன்றையும் நெருப்பில் வீழ்த்தவனும் , வயல்கள் நிரம்பிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே ! இடை விடாமல் சிந்திப்பாயாக .

குறிப்புரை :

கையில் உண்டு உழல்வார் , சமணர் . சாக்கியர் - புத்தர் , ` உழல்வாரும் சாக்கியரும் ஆகிய கல்லாதார் ` என்க ; மெய்ந்நூல்களைக் கல்லாமையின் , அவர் கல்லாதவராயினர் . அல்லாதான் - நல்லனல்லா தான் . பொய் - கரவு . ` கரவு இல்லாதவர்க்குக் கரவாது வெளிநின்று அருளுபவன் ` என்றபடி . ` பூணுகின்ற நாகமே நாணாகவும் ` பொருப்பே ( மலையே ) வில்லாகவும் எரியும் ( அக்கினி தேவனும் ) காலுமே ( வாயு தேவனுமே ) கையிற் பொருந்திய அம்பினது ஈர்க்கும் கோலுமாகவும் கொண்டு புரங்களை வீழ்த்திய திருவாலம் பொழிலான் , என்க . ` பூண் நாகமே நாணாக ` என்றது , இனம் நோக்கி . ` ஈர்க்குக் கோல் ` என்றதனை , ` எரிகால் ` என்பவற்றோடு எதிர் நிரனிறையாக இயைக்க . ` கோல் ` என்றது , கூர்மையை . ஈர்க்கு - சிறகு . கடுந்தவம் - மிக்க தவம் . திரிபுரத்தவர் மிக்க தவம் செய்தே அவைகளைப் பெற்றமை யறிக . நெடும் புரம் - பெரிய ஊர் ; அரண் . செய்யின் ஆர் - வயல்களால் நிரம்பிய .
சிற்பி