திருஓமாம்புலியூர்


பண் :

பாடல் எண் : 1

ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்
ஏராரும் மதிபொதியுஞ் சடையி னானை
எழுபிறப்பும் எனையாளா வுடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டு வானை
உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னுஞ்
சீராரும் வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

கூர்மைபொருந்திய மூவிலை வேலை அங்கையிடத்துக் கொண்டவனும், அலையையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், தேவர்கள் புகழும் அழகு நிறைந்த மதியைத் தன்னுட்கொண்ட சடையனும், இனி எனக்கு எழ இருக்கும் பிறப்புக்களிலும் என்னை அடிமையாக உடையவனும், ஊரும் இயல்பினதாகிய படநாகத்தை ஆட்டுபவனும் ஆகி உயர்புகழ்சேரும் ஓமாம் புலியூரிடத்தே நிலைத்து நிற்கும் சிறப்பினை உடைய வடதளியில் விளங்கும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

ஆர் ஆரும் - கூர்மை பொருந்திய. மூவிலை வேல் - சூலம், ஏர் ஆரும் - அழகு நிறைந்த. ஊர் ஆரும் - ஊர்தல் பொருந்திய, ஓமாம்புலியூர்த் திருக்கோயில், `வடதளி` என்னும் பெயர் உடையது. திகைத்து - மயங்கி, செலுத்தினேன் - போக்கினேன். ஏகாரங்கட்கு மேலெல்லாம் (ப.54) உரைத்தவாறே உரைக்க.

பண் :

பாடல் எண் : 2

ஆதியான் அரிஅயனென் றறிய வொண்ணா
அமரர்தொழுங் கழலானை யமலன் தன்னைச்
சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன்
சுடர்இரவி அயிலெயிறு தொலைவித் தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன் றோம்பும்
உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
தீதில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

தன்னின்வேறு பிரித்து அரி என்றும் அயனென்றும் அறிய ஒண்ணாத ஆதியானவனும், தேவர்கள் தொழும் கழலினனும், இயல்பாகவே பாசமில்லாதவனும், ஒளியுமிழும் சந்திரனுடைய கலைகளைத் தொலையச் செய்தவனும், தக்கனையும் எச்சனையும் தக்கவாறு தண்டித்தவனும், ஒளிவீசும் இரவியுடைய கூரிய பற்களைத் தகர்த்தவனும் ஆகி, அந்தணர்கள் வேதங்களை மிக ஓதி மூன்று எரிகளையும் முறையே ஓம்புதலினால் உயர்ந்த புகழைப் பொருந்தும் ஓமாம்புலியூரில் திகழும் தீதில்லாத வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள்பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

சிவபிரானுக்கு உரிய `ஆதியான்` என்னும் பெயர் உருத்திரனுக்கும் உரியதாமாகலின், ஈண்டு உருத்திரனை, ``ஆதியான்`` என்று அருளினார் என்க, ``என்று`` என்பது எண்ணிடைச் சொல்; அஃது ஓரிடத்து நின்றே பலவிடத்தும் இயையு மாகலின், ``ஆதியான்`` என்றது முதலாக, ``அமரர்`` என்பது ஈறாக உள்ள எல்லாவற்றொடும் இயைக்க. இவ்வெண்ணிடைச் சொல்லின் தொகைப் பொருளைத் தரும், `இவர்` என்னும் சொல், இறுதிக்கண் தொகுத்தலாயிற்று. ``அறிய ஒண்ணா அமரர்`` என்றது, `அளவறியப் படாத எண்ணிறந்த - தேவர்` என்றருளியவாறு.
அமலன் - இயல்பாகவே பாசம் இல்லாதவன். எச்சன் - வேள்வித் தெய்வம். `இரவியது எயிறு` என்க. அயில் - கூர்மை. ``எயிறு`` என்றதனை, ``எச்சன்`` என்றதன்பின், செவ்வெண் வகையான் இயைத்து, `இவர்களை` என்னும் தொகைச் சொல் விரித்து, திணைவிராய் எண்ணின், பன்மை பற்றி உயர்திணை முடிவு கொண்டதாக உரைக்க. ``தொலைவித்தான்`` என்றதனை, ``கலை தொலைய`` என்றதற்கும் கூட்டுக. `அந்தணர்கள் (வேதத்தை) மிக ஓதி` என்க. எரி மூன்று, மேல் குறிக்கப்பட்டன. இத்தலம் அந்தணர்கள் மிக்கு வாழ்வது என்பது திருப்பதிகங்களுள் இனிது விளங்குவதாம்.

பண் :

பாடல் எண் : 3

வருமிக்க மதயானை யுரித்தான் தன்னை
வானவர்கோன் தோளனைத்தும் மடிவித் தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச்
சங்கரன்எம் பெருமானைத் தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
உத்தமர்வாழ் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
திருமிக்க வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

எதிர்த்துவரும் மதமிக்க யானையின் தோலை உரித்தவனும், தக்கயாகத்தில் இந்திரனுடைய தோள்களை முற்றிலும் துணித்தவனும், நறுமணத்தைத்தரும் செறிந்த குழல் உமையாளின் பாகனும், சங்கரனும், எம்பெருமானும் ஆகி, பூமியின்மேல் ஒளிமிக்க மணிகளானியன்ற மாடங்கள் நிலவுகின்ற வீதிகளை உடையதும், மேலோர்கள் வாழ்வதும் ஆகிய ஓமாம்புலியூரில் அழகுமிக்க வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

வரும் - ஒழுகுகின்ற. `வரும் மதம், மிக்க மதம்` எனத் தனித் தனி இயையும். வானவர்கோன் - இந்திரன்; அவனது தோளைச் சிவபிரான் துணித்தமையை மேலே (ப.31. பா.2.) காண்க.
தோள்கள் நான்காதலின், ``அனைத்தும்`` என்றருளினார். `தருதல்` என்பது, இங்கு `தன்னை விளக்குதல்` என்னும் பொருட்டாய், வளர்தலைக் குறித்து, `வளர்தல் மிக்க` எனக் குழலுக்கு (கூந்தலுக்கு) அடையாயிற்று. ``சங்கரன்`` என்புழியும் இரண்டனுருபு விரிக்க. உரு - ஒளி; இதனை மணிக்கு அடையாக்குக. திரு - அழகு.

பண் :

பாடல் எண் : 4

அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
அழல்விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ
விளங்குதிரு வடியெடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ யோம்பும்
உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் நாளும்
தென்றல்மலி வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

பகைத்தவர் புரமூன்றும் வெந்து பொடியாமாறு அழல் உண்டாக விழித்த கண்ணினனும், தேவர்கட்குத் தலைவனும், வெற்றியால் மிக்கு விளங்கிய காலன் உயிரிழந்து விழ விளக்கம் மிக்க தன் திருவடியால் உதைத்த விகிர்தனும் ஆகி, புகழ்பொருந்திய அந்தணாளர் நாளும் முத்தீயையும் ஓம்புதலினால் வரும் உயர் புகழையும் நான்மறை முழக்கத்தையும் உடைய ஓமாம்புலியூரில் தென்றற்காற்று மிக்குத் தவழும் வடதளிவாழ் எம் செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

அன்றினவர் - பகைத்தவர். `அழல் உண்டாக விழித்த` என்க. வென்றி, எவ்வுயிர்மேற் செல்லினும் அதனைக் கைக் கொண்டே மீளுதல்; `அச்செயல் இங்குச் செல்லாதாயிற்று` என்றதாம். ``எடுத்து`` என்றது, `எடுத்து உதைத்த` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. ஒன்றிய சீர் - பொருந்திய புகழ். இருபிறப்பர் - அந்தணர். `நான்மறையை உடைய ஓமாம்புலியூர்` என்க. ``தென்றல்மலி வடதளி`` என்றது. அதனது பரப்பும், சோலை வளமும் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 5

பாங்குடைய எழில்அங்கி யருச்சனைமுன் விரும்பப்
பரிந்தவனுக் கருள்செய்த பரமன் தன்னைப்
பாங்கிலா நரகதனைத் தொண்ட ரானார்
பாராத வகைபண்ண வல்லான் தன்னை
ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர்
உயர்புகழந் தணரேத்த வுலகர்க் கென்றும்
தீங்கில்திரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

முன்செய்த நன்மையுடையனாகிய அழகிய அக்கினிதேவன் அருச்சனை செய்ய விரும்ப அவன் மேல் இரக்கங் கொண்டு அவன் அதனை இயற்ற அருள் செய்த பரமனும், தன் தொண்டரானார், தீங்குடைய நரகினைப் பாராதவாறு பண்ண வல்லவனும் ஆகி, நாற்புறமும் உயர்ந்தமதில் தழுவி நிற்கும் அழகுடைய ஓமாம்புலியூரில் உயர்ந்த புகழினையுடைய அந்தணர்கள் புகழுமாறு பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுவதால் உலகோர்க்கு என்றும் தீங்கின்றி நிலவும் அழகிய வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

இத்தலத்தில் அக்கினிதேவன் வழிபட்டு அருள் பெற்றமை இத் திருத்தாண்டகத்தால் அறியப்படுகின்றது. பாங்கு - நன்மை. `நரகதனில்` என்பது பாடம் அன்று. இத்திருத்தாண்டகத்தின் மூன்றாம் அடியின் முதற்றூக்கு நாற்சீராகியும், மூன்றாஞ்சீர் மூவசைச் சீராய் நின்றது. `உலகர்க்கு என்றும் தீங்கில்லாமைக்கு ஏதுவாகிய வடதளி` என்க; அஃது அன்னதாதல் அங்குப் பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுதலாம்.

பண் :

பாடல் எண் : 6

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை
மணவாள நம்பியைஎன் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்
பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

அரிய தவமுடையோர் வணங்க வாழ்த்தும் தலைவனும், தெவிட்டாத இன்னமுதன்னவனும், அடியார்க்கு வரும் துயரங்களை விலக்குபவனும், நங்கை உமையாளின் கணவனாகிய நம்பியும், எனக்கு அமுதும் ஆகி, பயிர் வளர்ச்சிக்குப் பொருத்தமான புனலால் தழுவப்படும் வயலும், உயர்ச்சி நிலவும் பொழிலும் பொருந்தி விளங்கும் ஓமாம்புலியூரில் நாளும் நடைபெறுவன திருத்தமுற அமையும் அழகிய வட தளி வாழ் எம் செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

ஆராத - தெவிட்டாத. `உமையாளாகிய நங்கைக்கு ஏற்ற மணவாளனாகிய நம்பி` என்க. `நங்கை` என்பது பெண்டிருட் சிறந்தாட்கும், `நம்பி` என்பது ஆடவருட் சிறந்தாற்கும் பெயராதல் அறிக. மருந்து - அமுதம்; `என் மருந்து` என்றது, தமக்கு அநுபவ மாகிய உவகைபற்றி. துங்கம் - உயர்ச்சி. திருந்து - எல்லாம் இனிது அமைந்த.

பண் :

பாடல் எண் : 7

மலையானை வருமலையொன் றுரிசெய் தானை
மறையானை மறையாலும் அறிய வொண்ணாக்
கலையானைக் கலையாருங் கையி னானைக்
கடிவானை அடியார்கள் துயர மெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்
புலியூர்எம் உத்தமனைப் புரம்மூன் றெய்த
சிலையானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

கயிலை மலையவனும், யானை ஒன்றின் தோலை உரித்தவனும், வேதத்தில் உள்ளவனும், அவ்வேதத்தாலும் அறியப் படாத தன்மையனும், மான் கன்று பொருந்திய திருக்கரத்தினனும், அடியார்களுடைய துயரங்களை நீக்குபவனும், எம்மால் வணங்கப்படும் உத்தமனும், திரிபுரங்களை எரித்த வில்லினனும் ஆகி ஒழுக்கத்தில் தளராத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் வடதளி வாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

மலையான் - மலையின்கண் (கயிலையில்) இருப்பவன். வருமலை - யானை. மறையான் - வேதத்தில் உள்ளவன்; `எனினும் அதனால் அறியப்படாத தன்மையுடையவன்` என்றபடி.
கலை - கூறு; தன்மைகள்; என்றது, அவனது அருளின் கூறுகளையேயாம். இது பற்றியே, வேதத்துட் சொல்லப்பட்ட ஈசானாதி ஐந்து பெருமந்திரங்களை முப்பத்தெட்டுக் கலைகளாக (கூறுகளாக) வைத்து நியசித்துச் சிவபெருமானை வழிபடும் முறையைச் சைவாகமங்கள் விதிக்கின்றன. கலை ஆரும் கையினான் - மான் பொருந்திய கையை உடையவன். `அடியார்கள் துயரம் எல்லாம் கடிவான்` என்க. உலையாத - (ஒழுக்கத்தில்) தளராத.

பண் :

பாடல் எண் : 8

சேர்ந்தோடு மணிக்கங்கை சூடி னானைச்
செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானைச்
சார்ந்தோர்கட் கினியானைத் தன்னொப் பில்லாத்
தழலுருவைத் தலைமகனைத் தகைநால் வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார்வாழ் தருமோமாம் புலியூர்
உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சிற்
சேர்ந்தானை வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

மணிகளைக் கொழித்து ஓடும் கங்கையைச் சூடியவனும், அழகிய மதியையும், படநாகத்தையும உடன் தங்குமாறு வைத்தவனும், அடியடைந்தார்க்கு இனியனும், தன்னொப்பார் பிறரில்லாத தழல் நிறத்தவனும், எல்லார்க்கும் தலைவனும், பெருமை மிக்க நால் வேதங்களையும் ஓதி ஆராய்ந்து அவற்றிலேயே பழகுவார் வாழும் ஓமாம்புலியூர் உள்ளவனும், அடியாருடைய களவில்லா நெஞ்சில் சேர்ந்தவனும் ஆகி வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

குறிப்புரை :

`மணியோடு சேர்ந்து ஓடும் கங்கை` என்க. `மணிகளைக் கொழித்து ஓடும்` என்பது பொருள். உடன் - ஒருங்கு. `மதியும் அரவும் தம்முள் இயையாத பகைப்பொருள்களாய் இருப்ப அவைகளை அவ்வாறின்றி இயைய வைத்தவன்` என்றபடி, ``உரு`` என்றது ஆகுபெயராதலின், `தழல் போலும் உருவினானை` என்க. தலைமகன் - தலைவன். இறைவனை, ``மகன்`` என்றது, பான்மை வழக்கால் என்க. தகை - பெருமை. ஓர்ந்து - ஆராய்ந்து. கள்ளாத - களவு செய்யாத; என்றது, `அறிவையும் பிறரை வஞ்சித்துப்பெறாத` என்றவாறு. இதனையே, `எனைத்தொன்றும் - கள்ளாமை காக்க`` என்றருளினார் திருவள்ளுவ நாயனார். (குறள் - 281.)
இத்திருத்தாண்டகத்தை அடுத்து, இறுதித் திருத்தாண்டகமே உள்ளது.

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

வார்கெழுவு முலையுமையாள் வெருவ அன்று
மலையெடுத்த வாளரக்கன் தோளுந் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே
இன்னிசைகேட் டிருந்தானை இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
பைம்பொழில்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
சீர்கெழுவு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

பொழிப்புரை :

கச்சணிந்த தனத்தினள் ஆகிய உமையாள் அஞ்சுமாறு அன்று கயிலை மலையைப் பெயர்த்த கொடிய அரக்கனுடைய இருபது தோள்களையும் இருதாள்களையும் அழகிய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அச்சினத்தினின்றும் மீண்டு அவனது இன்னிசையைக் கேட்டு உவந்தவனும், தேவர்களின் தலைவனும் ஆகி, புவிமுழுதும் பரவும் புகழினையுடைய மறையோர் மிக்கு வாழ்கின்றதும் மாடங்கள் நிறைந்ததும், பசியபொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய ஓமாம்புலியூரில், சிறப்புமிக்க வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண்போக்கினேன்.

குறிப்புரை :

வார் - கச்சு. கெழுவு - பொருந்திய. ஏர் - அழகு. இறுத்து - நெரித்து. ``கேட்டிருந்தான்`` `உவந்தான்` என்னும் குறிப்பினது.
பயிலும் - மிக்கு வாழ்கின்ற. `பயிலும் புலியூர், மாடப்புலியூர். `பொழில் சேர்தரும் புலியூர்` என்க. சீர் - புகழ்.
சிற்பி