திருஎறும்பியூர்


பண் :

பாடல் எண் : 1

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

தொல்லாசிரியர் ஆராய்ந்து சொல்லிய செவ்விதாகிய தமிழினது இலக்கணத்தை அறியேனும் , கவிபுனைய மாட்டேனும் , எண்ணாயும் திருத்தம்பெற்ற கலைகளாயும் நிற்கும் தன்னையும் தன் கூறுபாடுகளையும் அறிதற்குரிய விதியிலேனுமாகிய எனக்கு அவற்றைக் காட்டினவனும் , அடைந்தேனைத் தாய் தந்தையரைப் போல அன்பாய்த் தொடர்ந்து ஆளாகக் கொண்டவனும் , அழகிய எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன் .

குறிப்புரை :

பன்னிய - ( தொல்லாசிரியர் ) ஆராய்ந்து சொல்லிய . ` செந்தமிழ் ` என்றது , செவ்விதாகிய ( திருத்தமான ) தமிழினது இலக்கணத்தை . ` கவி ` என்றதும் கவியைப் ( பாடலைப் ) பாடுதல் குறித்தது . மாட்டேன் - ஆற்றலுடையேன் அல்லேன் . சுவாமிகள் இவ்வாறு அருளிச்செய்தது , தமிழின் இயல்பை ` இயல் , இசை , நாடகம் ` என்னும் மூன்று திறனும் பற்றி அறிய வேண்டிய அளவு அறியாதவராகவும் , கவிகளை அத்திறம் எல்லாம் அமையுமாறு சிறக்கப்பாட மாட்டாதவராகவும் தம்மைக் கருதியிருந்தமையாம் . தாம் அறிந்தவைகளினும் அறியாதவை மிகுதியாகத் தோன்றுதல் அறிவுடையாரது அறிவிற்கேயாம் . அறிவிலாரது அறிவிற்கு அவை மாறித்தோன்றும் . அத்தோற்றங்களின் வழி உளவாகும் இயல்புகளையே திருவள்ளுவ நாயனார் , பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து ( குறள் . 978) என அருளிச்செய்தார் . இறைவன் , எண்ணும் எழுத்துமாய் நிற்றல்பற்றி , ` எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய தான் ` என்று அருளினார் . பண் - பண்ணப்படுதல் ; திருத்தம் . ` பொறியிலேனைத் தன்னையும் தன் திறமும் அறிவித்து ` எனவும் , ` அடைந்தேனை அன்பால் தொடர்ந்து ` எனவும் கூட்டுக . ` திறத்தையும் ` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . நெறி - தன்னைப்பெறும் வழி . ` தொடர்ந்து ` என்றது , ஆள நினைந்து அதற்கு ஏற்ற செவ்விபார்த்து நின்றமையை . ` நினைத்ததை நினைத்தவாறே முடித்தான் ` என்பார் . ` என்னை ` என மறித்தும் விதந்து அருளிச்செய்தார் . தென் - அழகு . ` மாணிக்கம் , சுடர் ` என்பன உருவகங்கள் .

பண் :

பாடல் எண் : 2

பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் உள்ளந்
தெளிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

படிகமணியின் ஒளியுள்பதித்து விளங்கிய மாணிக்க ஒளியினனும் , பசுபதியும் , பாசுபத வேடத்தவனும் , அறை கூவிப் போருக்கு எழுந்த சலந்தரனை அழித்தவனும் , வேதியனும் , விண்ணவனும் , பொருந்தி வையத்தை அளந்த திருமாலும் , நான்முகனும் ஆனவனும் , துன்பந்துடைக்கும் ஆரமுது ஆனவனும் அவனே ஆமாறு அறிந்தமையால் என் உள்ளம் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகும் சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன் .

குறிப்புரை :

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியான் - படிக மணியின் ஒளியுள் பதிந்து தோன்றும்படி விளங்கிய ஒளியினையுடைய மாணிக்கம் போன்றவன் ; என்றது ; ஆன்மா , சார்ந்ததன் வண்ணமாய் நிற்கும் இயல்புடைய படிகத்தின் ஒளிபோன்றது ; அதனால் , பெத்த நிலையில் நீல மணியினைச் சார்ந்து நீல மணியாய் நிற்கும் படிகம் போல , மலத்தினைச் சார்ந்து மலமேயாய்க் கிடந்த அவ்வான்மாவை , சிவன் முத்திநிலையில் அம்மலத்தினின்றும் நீக்கி , மாணிக்கத்தைச் சார்ந்து மாணிக்கமாயே நிற்கும் படிகம்போல , தன்னைச் சார்ந்து தானாய் நிற்குமாறு தனது எண்குணங்களையும் அதனிடத்துப் பதிவித்து நிற்பனாகலின் , தமக்கு அவ்வாறு செய்தருளினான் என்பதனை உவமை வகையான் அருளிச்செய்தது என்க . ` சோதி ` என்றது , விடாத ஆகுபெயராய் , அதனை உடைய மணியைக் குறித்தது ; ` மாணிக்கம் ` எனப் பின்னர் வருதலின் வாளா மணி என்பது உணர்த்திச் சென்றார் . ஈண்டுக்காட்டிய ஆன்மாவின் இயல்பு முதலியவற்றை , சருவஞ்ஞானோத்தரம் முதலிய ஆகமங் களிலும் , சித்தாந்த நூல்களிலும் கண்டு கொள்க . ` விளித்தெழுந்த ` என்பது மெலித்தலாயிற்று . விளித்தல் , ஈண்டு அறைகூவல் . வையம் அளந்தவன் - திருமால் ; சிவபிரானை மாயோனாகவும் , பிரமனாகவும் கூறும் கருத்து மேலே பல இடங்களிலும் விளக்கப்பட்டன . ஆமாறு அறிதல் - தக்கதை உணர்தல் ; ` ஆமாறு அறிந்தமையால் உள்ளம் தெளிந்து ` என்க ; இத் தொடரினை , எல்லாவற்றிற்கும் முன்னே வைத்து உரைக்க .

பண் :

பாடல் எண் : 3

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமரர் ஏத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
யுலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கருத்திற்குக் கருவானவனும் , மனத்தில் நிலைத்த கருத்தானவனும் ஞானப்பெருஞ்சுடர் ஆனவனும் , அமரர்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்து தோத்திரிக்கும் அழகிய வடிவினனும் , உலகத்திற்கு ஒப்பற்ற வித்தானவனும் , அலையையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகில் நிறைந்தவனும் , முதல் , இடை , இறுதியாகிய தொழில்களை இயற்றுபவனும் , மலரின் மணத்தை வென்ற குழலினை உடைய உமையம்மையை உடம்பில் பாகமாக வைத்தவனும் , மயானத்து ஆடும் மாசிலாமணியும் திரு எறும்பியூர் மலைமேல் வாசம் செய்யும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

கரு - கருத்திற்கு ( அறிவிற்கு ) முதல் ; ` பின்னர் அதன் விளைவாகிய கருத்தாயும் உள்ளவன் ` என்று அருளினார் , ` ஞானச்சுடர் ` என இயையும் . கடுஞ்சுடர் - பேரொளியை உடைய விளக்கு . படிந்து - நிலத்தில் வீழ்ந்து . அண்டம் - உலகம் . ஓத வேலி - அலையை உடைய கடல் ஆகிய எல்லை . நிறை - மிகுதியாய்க் காணப்படுகின்ற . ` நடு இறுதித் தொழிலாய் நின்ற ` எனக் கூட்டுக . ` நடுவும் இறுதியும் கூறவே முதலும் கொள்ளப்படும் . ` தொழில் ` என்றது , தொழில் செய்பவன் மேல் நின்றது . ` நின்ற மணி ` என இயையும் . மரு - வாசனை ; என்றது அதனையுடைய மலர்களை ; ` அவற்றை வென்ற ` என்றது ` தனது இயற்கை மணம் அம்மலர்களது மணத்தின் மிக்கது ` என்றவாறு . வாசம் - வதிதல் . ` மலைமேல் வாச மாணிக்கத்தை ` என மாற்றியுரைக்க .

பண் :

பாடல் எண் : 4

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போத
உமிழும்அம் பொற்குன்றத்தை முத்தின் தூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்தும்
திகழெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அம்புகளைத் தூவி ஆற்றல் மிக்க அரக்கர்களுடைய மூன்று புரங்களையும் பாழ்படுத்த பரஞ்சுடரும் , தன்னை விரும்பிப் புகழும் அன்பர்க்கு இன்பத்தை மகிழ்ந்தளிக்கும் அமுதமும் , தேனும் , புண்ணியனும் , புவனிமுழுதும் வெளிப்பட ஒளி உமிழும் அழகிய பொற் குன்றமும் , முத்தின் தூணும் உமையவளின் தலைவனும் , எறும்பியூர் மலைமேல் திகழ்வதும் இமையோர்கள் ஏத்துவதும் ஆகிய மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

பகழி - அம்பு . அம்புகளைப் பொழிந்தது , முப்புரத் தலைவர் எதிர்வருமுன் காட்டிய வீரத் திருவிளையாட்டின்கண் என்க . ` இன்பமாய் அமரும் ` என ஆக்கம் வருவிக்க . அது , பகுதிப்பொருள் விகுதி . ஒருமையாற் கூறியது இனம்பற்றி . போத - வெளிப்பட . உமிழும் - வெளிப்படுத்தும் , முழைஞ்சு முதலியவற்றிலிருந்து பொன் முதலியவைகளையும் , சுனைகளிலிருந்து அருவிகளையும் வெளிப்படுத்தும் மலைபோல உலகத்தைத் தோற்றுவித்தல் பற்றி மலையாகவும் , தோற்றுவித்தவற்றைத் தாங்குதல் பற்றித் தூணாகவும் உருவகிப்பார் , சிறப்புத் தோன்ற , ` அம்பொற் குன்றத்தை முத்தின் தூணை ` என்று அருளிச்செய்தார் . ` பெருமான் ` என்றது , ` தலைவன் ` என்றவாறு .

பண் :

பாடல் எண் : 5

பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

பூதங்கள் பலவும் சேர்ந்து பலமுறையும் பாடுதற்கு இயையக் கூத்தாடுபவனும் , கூரிய வாயினை உடைய சூலத்தைக் கையிற் கொண்டு எதிர்ப்படும் போரை வெல்லுதல் மிக வல்ல நிமலனும் , நின்மலனும் , அயன் அன்னமாய் மேலே உயர்ந்து சென்றும் மால் பூமியை அகழ்ந்து சென்றும் காணமுடியாதபடி ஒளியாக நீண்டு எங்கும் பரவினவனும் , அழகிய மலர்களைக் கொண்டு முனிகணங்களால் ஏத்தப்பட்டுப் புகழ்மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செஞ்சுடருமாகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

பாரிடம் - பூதம் . உடன் பாட - பலவும் சேர்ந்து பாட . ` பயின்று பாட ` எனக் கூட்டுக . பயிலுதல் - பலமுறையும் செய்தல் . அயில் வாய் - கூர்மையான வாயினையுடைய . ` நேரிடும் ` என்றதில் இடு , துணைவினை . நேர்தல் - எதிர்ப்படுதல் . வடமொழியில் உள்ள ` நிர் ` என்னும் இடைச்சொல் இன்மைப் பொருளையும் , ` நி ` என்னும் இடைச்சொல் பல பொருளையும் தருமாகலின் , ` நிமலன் ` என்றதற்கு ` மலத்தை நீங்கச் செய்பவன் ` எனப்பொருள் கொள்க . ` போர் மிக வல்ல நிமலன் ` என்றது , ` போர் செய்வான் போல , முரணி நின்றாரது குற்றத்தைத் தீர்க்க வல்லவன் ` என்றபடி . அம் மலர் - அழகிய மலர் ; ` அம்மலர் கொண்டு ` என்பதனை , முனிகணங்கள் என்பதன்பின் கொண்டு கூட்டுக . ` அம்மலங் கொண்டு ` எனப் பாடம் ஓதி , அதனை , ` காணாவண்ணம் ` என்றதனோடு இயைத்துரைத்தலே பொருந்துவ தாம் என்க . ` நிமிர்ந்து பரந்தான் ` என இயைக்க . பரத்தல் - எங்கும் ஒளியாக விளங்குதல் .

பண் :

பாடல் எண் : 6

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரன்மந் திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

கரிய மேகமாய் நீரைப் பொழிபவனும் , முன்பு முகிலாய்ப் பொழிந்த நீரைப் பின்பு கதிரவனாய் நின்று சுவற்றுபவனும் , விரைந்த நடையுடைய விடை ஒன்றை ஊர்ந்து ஊர்பலவும் திரிபவனும் , தனக்கு உரிய ஊரை ஒற்றியாகவே வைத்துக்கொண்டு உலகம் முழுதும் ஆள்பவனும் , ஓங்காரமாகிய ஒரெழுத்தையே பெயராக உடையவனும் , நான்முகன் , திருமால் , இந்திரன் ஆகியோரால் மந்திரம் கூறித் துதிக்கப்பட்டுப் புகழ் மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செழுஞ்சுசுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன் .

குறிப்புரை :

கார்முகில் - கருமையான மேகம் . ` முன்பு முகிலாய்ப் பொழிந்த நீரைப் பின்பு கதிரவனாய் நின்று சுவற்றுவோன் ` என்க . ` முந்நீர் ` என்பதும் பாடம் ஆகாமை யறிக . ` தனக்கு உரிய ஊரை ஒற்றியாகவே வைத்துக்கொண்டு , உலகம் முழுதும் ஆள்கின்றான் ` என நகைதோன்ற அருளியவாறு . எழுத்து ஒன்று ( ஓர் எழுத்து ) என்றது , ஓங்காரத்தை ; அதன் பொருள் சிவபிரானேயாகலின் , அவ்வாறு அருளிச்செய்தார் . எழுத்து ஒன்றை ( ஓர் எழுத்தை ) யே பெயராக உடையவன் என்க . இதனானே , திருவைந்தெழுத்தும் , பிரணவமும் பொருளால் ஒன்றேயாதல் அறிக . இனி , ` அசபை ` எனப்படும் அம்சமந்திரமும் பிரணவத்தின் வேறுபாடே யாகலின் , அதுவும் திருவைந்தெழுத்தின் வேறாகாமை யுணர்க . ` இந்திரன் ` என்புழியும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க . ` இந்திரனும் ` என்றே பாடம் ஓதுவாரும் உளர் . திருமால் முதலியோர் மந்திரத்தால் ஏத்துதலைக் குறிப்பார் , அம்மந்திரங்கள் இவை என்பதை அருளிச் செய்தார் .

பண் :

பாடல் எண் : 7

நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சம்மும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாய் செம்பொன்
ஆணியென்றும் மஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

ஒளிமிக்க சந்திரனும் , அழகிய நெருப்பும் , நீரும் , வன்மை , மென்மை ஆகிய இரு நெறிபற்றி விளங்கும் வன்காற்றும் மென்காற்றும் , ஆகாசமும் , ஒளி நிலவும் விண்மீனும் , மண்ணிடத்தும் விண்ணிடத்தும் , மன்னுமுயிர்களும் , என்னுயிரும் தானாய் விளங்குபவனும் , செம்பொன் உரையாணி என்றும் அஞ்சனமாலை என்றும் , அழகிய பவளத் திரட்சி என்றும் அறிந்தோரால் ஏத்தப்பட்டு உயர்ந்த எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன் .

குறிப்புரை :

நீள் நிலவு - ஒளிமிக்க சந்திரன் ; ` நிறைமதி ` என்றபடி . அம் தீ - அழகிய நெருப்பு . இரு கால் - வன்கால் , மென்கால் ; ` கடுமையாகவும் , மென்மையாகவும் வீசுகின்ற காற்று ` என்றதாம் ; ` இருங்கால் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . வாள் நிலவு - ஒளி விளங்குகின்ற . தாரகை - விண்மீன் . மன்உயிர் - பலவாகிய உயிர்கள் . அன்புமீதூர்வினால் என் உயிர் என தம்மை வேறு எடுத்தோதினார் . ` என் உயிர் ` என்பது , ` இராகுவினது தலை ` என்பதுபோல , ஒற்றுமைக் கிழமையில் வந்த ஆறாம் வேற்றுமைத் தொகை . ` தானாம் மாணிக்கம் , ஏத்தும் மாணிக்கம் ` எனத் தனித்தனி இயையும் . ஆணி - உரையாணி . அஞ்சனம் - நீலம் ; ` நீலமலை ` என்றல் , அம்மையைக் குறித்து . சேண் - உயரம் ; இது , மலையைச் சிறப்பித்தது .

பண் :

பாடல் எண் : 8

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
யாரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா ஈசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அறத்தைத் தெரியாதவரும் , ஊத்தை வாயினரும் , அறிவில்லாத சிந்தையினரும் ஆரம்பவாதத்தை உடையவரும் ஆகிய சமணக் குண்டரோடும் கூடி , அரன் திருவடிகளை மறந்து , பழக்கத்தால் என்னை அறியாது அவற்றை நினைத்தலையும் ஒருநாளும் செய்யாது அறிவற்றேன் . வாழ்வெல்லாம் பயனில்லாத வாழ்வாய் ஒழியவும் , மண்மேற்பிறந்த நாளெல்லாம் நாளல்லவாய் வாளா ஒழியவும் இறுதியிற் சிலகாலம் ஈசன் பேர் பிதற்றிச் சிறப்புமிக்க அடிமைக் கூற்றில் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் , செழுஞ் சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப் பெற்றேன் .

குறிப்புரை :

` அறந் தெரியாக் குண்டர் ` என இயையும் . ` அறந் தெரியா ` என்று அதன் உண்மையைச் சிறிதும் உணராது , ` முற்றும் உணர்ந்தவர் தாங்களே பிறர் இல்லை ` எனப் பிதற்றித் திரிந்தமை பற்றி . அதனானே வாயை எடுத்தோதினார் . ஊத்தைவாய் , பல் துலக்காமையால் அமைந்தது , அறத்தினது உண்மை , ` அறமாவது முதல்வன் வகுத்த விதி விலக்குக்களே ` என்பதும் , அதனால் , ` அதன் பயனை ஊட்டுவிப்பவன் அம்முதல்வனே ` என்பதுமாம் . அவற்றைச் சமணர் சிறிதும் உணராமையால் ` அறந்தெரியா ` என்று அருளிச்செய்தார் . ` அறிவு ` என்றது ஆராய்ச்சி அறிவினை . ஆரம்பம் - ஆரம்பவாதம் . அஃதாவது , ` சிதலது வாய்நீர்ச் சிறுதுகளால் பெரும்புற்றுரு அமைந்த பெற்றியது என்ன , ஐம்புலப் பேருரு அனைத்தும் ஐவகை அணுக்கள் , ஆடையின்கண் நூல்போல , ஒன்று தொடங்கி , இரண்டு , மூன்று , நான்கு என வேண்டுமளவும் முறையாகச் சேர்வதனால் அமையும் ` எனக் கூறும் வாதம் . ` அதனை உடைய குண்டர் ` என்க . ` குண்டரோடு கூடி ` என ஒருசொல் வருவிக்க . அயர்த்தல் - மறத்தல் ; மறந்தது ` அரன் திரு வடிகளை ` என்பதனைப் பின்னர் அருளியவாற்றான் அறிக . மறந்து நினைத்தலாவது , பழக்கத்தான் தம்மை அறியாது நினைத்தல் ; ` அதுவும் செய்திலேன் ` என்றார் . ` வாழ்வெல்லாம் வாளா ( பயன் இல்லாத வாழ்வாய் ) ஒழிய , மண்மேல் பிறந்த நாளெல்லாம் நாளல்லவாய் வாளா ஒழிய இறுதியிற் சிலநாள் ஈசன் பேர் பிதற்றி அன்பு செறிந்து அடையப்பெற்றேன் ` என , வேண்டும் சொற்கள் இசை யெச்சத்தால் வருவித்துரைக்க .

பண் :

பாடல் எண் : 9

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

அறிவால் விளங்குகின்ற மனத்தானும் , அறிவார்க்கு அல்லாமல் அறிவில்லாதாரது ஆற்றலால் சிறிதும் அறியப் படாதவனும் , புள்ளிகள் விளங்கும் கொடிய பாம்பினைக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும் புண்ணியனும் , அலைகள் மோதும் கடலில் தோன்றிய நஞ்சுண்ட அடையாளம் திகழும் மிடற்றவனும் , இதழ்களும் தேனும் உடைய கொன்றைப் பூக்களைக் கொண்டு திகழும் சடையானும் , மடைகள் தோறும் மென்மையுடைக் கமலப் பூக்கள் செறிந்து விளங்கும் எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன் .

குறிப்புரை :

அறிவு இலங்கு மனம் - அறிவால் விளங்குகின்ற மனம் ; ` இலகுபே ரிச்சா ஞானக் கிரியை உட்கரண மாக ` ( சிவஞான சித்தி . சூ . 5. 7. ) என்றபடி , இச்சை முதலிய மூன்று சத்திகளே இறைவனுக்கு அந்தக் கரணங்களாதலின் ` மனம் ` என்றது இச்சா சத்தியையே என்க . ` அறியாதான் ` என்றது , ` அறியப்படாதவன் ` என்றபடி . ஒன்று - சிறிது . ` ஒன்றும் ` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று . அறியாதார் தம் திறத்து - அறிவில்லாதாரது ஆற்றலால் , இனி , ` தன்னை அறியாதவரைப் பற்றித் தான் ஒன்றும் அறியா திருப்பவன் ` என்றலுமாம் ; அஃதாவது , அவர்கட்கு நன்மை ஏதும் செய்யாதிருப்பவன் என்பதாம் . இப்பொருட்கு , ` ஒன்று ` என்றது , ஒன்று எனவே பொருள்தரும் . ` அறியாதார் தந்திரத்து ` என்பதும் பாடம் . பொறி - புள்ளி . ` புனைந்து பூண்ட ` என்றதனை , ` பூண்டு புனைந்த ` என மாற்றியுரைக்க . புனைதல் - ஒப்பனை செய்து கொள்ளுதல் . குறி - அடையாளம் ; அது , கருமை நிறம் . ` மடல்தேன் ` எனப் பிரிக்க . மடல் - இதழ் .

பண் :

பாடல் எண் : 10

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தின்றி
அடலரக்கன் தடவரையை யெடுத்தான் திண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை யேழுலகு மாக்கி னானை
யெம்மானைக் கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.

பொழிப்புரை :

ஆற்றல் மிக்க அரக்கன் அரியதவத்தால் பெற்ற பெருவலியையே நினைத்துச் செருக்குக் கொண்டமையால் அறிவை இழந்து பெரிய கயிலை மலையை எடுக்க அவன் திண்ணிய தோள்கள் ஒடிந்து நசுங்கி ஆற்றல் அழிந்து பாதாளம் போன்ற பள்ளத்தில் கிடந்தானாகப்பின் முன்கை நரம்பினை எடுத்து வீணை நரம்பாகக் கொண்டு இசைத்துக் கீதம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்திருந்தவனும் , ஏழுலகங்களையும் படைத்தவனும் , எம் தலைவனும் , யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் , அழகிய எறும்பியூர் மலை மேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடைந்தேன் .

குறிப்புரை :

` அரிய தவத்தால் பெற்ற பெருவலியையே நினைத்துச் செருக்குக் கொண்டமையால் அறிவை இழந்து எடுத்தான் ` என்க . ` அறிவதன்றி ` என்பது பாடமாயினும் பொருள் இவ்வாறே கொள்க . ` அடல் அரக்கன் ` என்றதனை முதற்கண் கொண்டு , ` அரக்கனாகிய எடுத்தவனது ` என்க . முரிந்து தோள் முதலியன ஒடிந்து . நெரிந்து - நெருக்கம் எய்தி . பாதாளம் உற்று - பாதாளம் போன்ற பள்ளத்தில் கிடந்து . ` பாட இருந்தவன் ` என்றது , அதனைக்கேட்டு இருந்தவன் ` என்றபடி . கைம்மா - யானை . திருந்து - திருந்திய ; ` அழகு பெற்ற ; மலை ` என்க .
சிற்பி