பொது


பண் :

பாடல் எண் : 1

நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு
நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
படஅரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர்
தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில்
பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே.

பொழிப்புரை :

தம் மனத்தைத் தாம் திருத்தி ஒருமுகப்படுத்தாத மக்களைப் போலப் பேணுவாரின்றித் தனித்துத் தண்டு ஒன்றை ஊன்றி உடல் தளராத முன்னம் , துணைவியாக நேர்ந்த ஒருத்தியைத் தன் உடலின் ஒரு பாகத்து அடங்கச் செய்து , பூமி நிலைதளரும் வண்ணம் பெரிய முகங்கள் ஆயிரத்தொடும் பாய்ந்த ஒருத்தியைப் பரந்த சடைமேல் பொருந்தச் செய்து , பட நாகத்தையும் குளிர்ந்த மதியையும் ஒருங்கே வைத்த செல்வராகிய சிவபெருமான் உவந்து உறையும் பூந்துருத்தி . பூந்துருத்தி என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் துன்பமே விளைக்கும் புலால் பொருந்திய துருத்தி போன்ற உடம்பை நீக்கல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் திருப்பூந்துருத்தியை எடுத்தோதி யருளியது ; இது நாயனார் திருமடம் அமைந்த தலமாதல் அறிக . இத் திருப்பதிகத்துள் எடுத்தோதியன யாவும் சோழ நாட்டுத் தலங்களே . நேர்ந்து - உடம்பட்டு ; ` உடம்பட்டமையால் ` என்க ; உடம்பட்டமை , துணைவியாக மணம் புரிந்து கொண்டமை . ` கண்டு ` என்றன இரண்டும் , ` செய்து ` என்றதேயாம் . ` நிலைதளர்வது மண்ணுலகம் ` என்க ; ` கங்கை விண்ணிலிருந்து ஆயிரமுகமாகப் பாய்வாளாயின் மண்ணுலகம் அழிந்தொழியும் ` என்க . மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி சலமுகத்தால் அவன்சடையிற் பாயும் அது என்னேடீ சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ . ( தி .8 திருவாசகம் . திருச்சாழல் . 7) என்றருளியது காண்க . வைத்த - பகையின்றி வாழ வைத்த . ` தம் மனத்தைத் தாம் திருத்தி ஒருக்காத் தொண்டர் ` என்க . ஒருக்குதல் - ஒருங்கச் செய்தல் ; இது செய்யாதவரை . ` தொண்டர் ` என்றது , இகழ்தற் குறிப்பு . ` பொதுமக்கள் ` என்பதே பொருள் . ` ஒருக்கால் ` என்பது பாடம் அன்று . ` தொண்டர் போல ` என்னும் உவம உருபு தொகுத்தலாயிற்று . அடுக்கு , இடை விடாமை குறித்தது . என்னல் - என்று நினைத்தலும் , வாழ்த்தலும் . ` என்பீராகில் ` என்றது , நன்மக்களை நோக்கி , ` உறுதி நாடுவீர் ` என விளித்தருளிச் செய்தபடி . துருத்தி - கொல்லன் உலைத் துருத்தி ; இது காற்றை வாங்கியும் விட்டும் நிற்கும் ; அஃது உருவகத்தால் அதுபோல மூச்சினை வாங்கியும் விட்டும் நிற்கும் உடம்பைக் குறித்தது ; நெட்டுயிர்ப்பு எறிதற்குக் கொல்லன் ஊதுலைத் துருத்தியை உவமை கூறுதல் செய்யுள் மரபு . உடம்பை , ` பொல்லா உடம்பு ` என்றது . பசி , பிணி முதலிய பலவற்றானும் உயிர்க்குத் துன்பத்தையே பெரிதும் உறுவித்தல் பற்றி . அதனைப் போக்கலாவது , ஒன்று நீங்க மற்றொன்று வாராதவாறு பிறப்பை அறுத்துக்கொள்ளுதல் ` போக்கலாமே ` என்னும் தேற்றேகாரம் , பிறவாற்றாற் போக்கலாகாமை மேலும் நோக்குடையது என்க .

பண் :

பாடல் எண் : 2

ஐத்தானத் தகமிடறு சுற்றி யாங்கே
யகத்தடைந்தால் யாதொன்று மிடுவா ரில்லை
மைத்தானக் கண்மடவார் தங்க ளோடு
மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பைத்தானத் தொண்மதியும் பாம்பும் நீரும்
படர்சடைமேல் வைத்துகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தான மென்பீ ராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்க லாமே.

பொழிப்புரை :

மைதீட்டும் இடமான கண்களையுடைய மடவாரோடு வாழும் நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள் ! கோழைக்கு இடமான மிடற்று உட்பகுதி பன்னாளும் பலவற்றையும் பேசி இறுதி நாளில் செயலற்றுக் கோழையினால் அடைக்கப்படும் நிலையை அடைந்தால் அதனை நீங்குதற்கு யாதொரு மருந்துந் தருவாரில்லை . ஆகலான் ஒளிர்மதியையும் , படமாகிய இடத்தினை யுடைய பாம்பையும் , கங்கையையும் தன் விரிந்த சடைமேல் வைத்து மகிழ்ந்த பண்பனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் நெய்த்தானம் நெய்த்தானம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராகில் நிலையில்லாத ஊனினாலாகிய உடம்பினை நீக்கல் கைகூடும் .

குறிப்புரை :

இத் திருத்தாண்டகம் , திருநெய்த்தானத்தை எடுத்தோதி அருளியது . ஐ - கோழை ; ` அதற்குத் தானமாகிய மிடறு ` என்க . அத்து , அல் வழிச் சாரியை . ` மிடற்றின் புறம் அன்றி அகம் ` என்பார் , ` அகமிடறு ` என்றருளினார் . சுற்றி - உழந்து ; அஃதாவது பன்னாளும் பலவற்றையும் பேசி , அகத்து அடைதல் - செயலற்று ஒடுங்குதல் ; அவ்வாறாதற்குக் காரணம் , ` ஐத் தானம் ` என்றதனாற் கொள்ளக் கிடந்தது . ` ஒன்று ` என்றது , மருந்தைக் குறித்தது ; இறுதி நாளில் ஐயினால் மிடறு அடைக்கப்படுவதை நீக்குதற்கு யாதொரு மருந்தும் பயன்படு மாறில்லை ` என்றபடி . ` இல்லை ` என்பதன்பின் , ` ஆகலான் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . மைத்தானம் - மைதீட்டும் இடம் . பைத் தானத்து - படமாகிய இடத்தினை உடைய . இதனைக் கொண்டு கூட்டு வகையால் , ` பாம்பு ` என்றதனோடே இயைக்க . நிலாவா - நிலை யில்லாத . புலால்தானம் - ஊனாலாகிய இடம் ; உடம்பு .

பண் :

பாடல் எண் : 3

பொய்யாறா வாறே புனைந்து பேசிப்
புலர்ந்தெழுந்த காலைப் பொருளே தேடிக்
கையாறாக் கரண முடையோ மென்று
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
நெய்யாறா ஆடிய நீல கண்டர்
நிமிர்புன் சடைநெற்றிக் கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே யென்பீ ராகில்
அல்லல்தீர்ந் தமருலகம் ஆள லாமே.

பொழிப்புரை :

நிலையாமை நீங்காத முறைமையுடைய பொருள்களையே சிறப்பித்துப் பேசிப் பொழுது புலர எழுந்தது முதல் பொருளைத் தேடி ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம் என்று எண்ணி இறுமாந்த மனத்தராய் அத்தொழிலில் தொடர்தலை உறுதியாகக் கருதி வாழ்வீர்காள் ! நெய்யை ஆறுபோல் ஆடியவரும் , நீலகண்டரும் , நீண்ட செஞ்சடையரும் , நெற்றிக் கண்ணரும் ஆகிய சிவபெருமான் விரும்பி உறையும் ஐயாறே ! ஐயாறே ! என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித் துன்பம் தீர்த்துச் சிவனுலகை ஆளலும் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருவையாற்றை எடுத்தோதி அருளியது . பொய் ஆறா ஆறே - நிலையாமை நீங்காத முறைமையையுடைய பொருள்களையே . புனைந்து பேசி - சிறப்பித்துப் பேசி . ` புலர்ந்து ` என்பதனை , ` புலர ` எனத் திரிக்க ; ` பொழுது புலர எழுந்தது முதல் ` என்பது பொருள் . கையாறாக் கரணம் உடையோம் - ஒழுக்கமாக எங்கள் குலத்தொழிலைக் கொண்டுள்ளோம் . ` பொய் யாறா ` என்றது முதல் . ` வாழ்வீர் ` என்றது காறும் , மக்கள் உலகியலில் இறுமாந்திருக்கும் நிலையை வகுத்தருளிச் செய்தவாறு . ` நீலகண்டர் ` என்றது , ` சிவனார் ` என்னும் பெயரளவாய் நின்றது . நெய்யை ஆறுபோல ஆடிய சிவனார் என்க . அல்லல் - பிறவித்துன்பம் . ` அமரர் உலகம் ` என்பது குறைந்து நின்றது . ` மரித்தல் ( இறத்தல் ) இல்லாதவன் என்னும் பொருளுடைய , ` அமரன் ` என்னும் பெயர் , மாயோன் நான்முகன் , இந்திரன் முதலிய பலர்க்கும் உபசாரமாக , சிவபிரானுக்கே அஃது உண்மைப் பெயராம் ஆகலின் , அவனை அடைந்தவரும் ` அமரர் ` எனப்படுவர் என்பதும் . அதனால் , சிவனுலகமே ` அமர லோகம் ` எனப்படும் சிறப்புடையது என்பதும் திருமுறைகளின் துணிபாகலின் , ` அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே ` என்று அருளிச்செய்தார் . சிவனுலகிற் சென்றவரும் பிறத்தல் உண்டாயினும் , அஃது ஒரு தலையன்மையானும் , ஒரோவழிப் பிறப்பினும் , அஃது அல்லற் பிறவி யாகாது , ` பற்றறுப்பாராக ` ( சிவஞானபோதம் - சூ . 8. அதி . 1) ப் பிறக்கும் பிறப்பே யாகலானும் சிவனுலகம் ஆளுதலாகிய பயன் பெற்றோர் , அல்லல் தீர்ந்தவரேயாதலறிக .

பண் :

பாடல் எண் : 4

இழவொன்று தாமொருவர்க் கிட்டொன் றீயார்
ஈன்றெடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழனங்கோ வையாதல் கண்டுந் தேறார்
களித்த மனத்தராய்க் கருதி வாழ்வீர்
அழனம்மை நீக்குவிக்கும் அரைய னாக்கும்
அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே யென்பீ ராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்ற லாமே.

பொழிப்புரை :

ஒருபொருள் தமக்கு நட்டமாகும்படி உயர்ந்தோர்க்கு ஒன்று கொடுத்தலையும் பல இடத்தும் அலைந்து திரியும் வறியவர் ஒருவர்க்கு ஒன்று ஈதலையும் செய்யாராய் , ஈன்றெடுத்த தாய் , தந்தை , மனைவியர் , மக்கள் முதலியோர் தம் காலில் பூணும் தளையாதலை அனுபவித்தும் தெளியாராய் , இறுமாந்த மனத்தாராய் அவர்களையே நிலையாகக் கருதி வாழ்வீர்காள் ! நம் அழுகையை நீக்குவிப்பவனும் நம்மை அரையனாக்குபவனும் , நம்மை அமரருலகு ஆள்விப்பவனும் ஆகிய தலைவன் சிவபெருமான் விரும்பி உறையும் பழனம் பழனம் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பன்னாள் செய்து போந்த பழைய வினையாகிய நோயை நீக்கலும் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருப்பழனத்தை எடுத்தோதி அருளியது . ` இழவு ஒன்று ` என்புழி ஆக்கம் வருவித்து , ` ஒன்று இழவு ஆக ( ஒரு பொருள் தமக்கு நட்டமாகும்படி `) என மாற்றியுரைக்க . ` தாவும் ` என்னும் செய்யும் என் எச்சம் , ஈற்று உயிர் மெய் கெட்டு , ` தாம் ` என நின்றது . தாவுதல் - பரத்தல் ; அது , ` பரந்து - கெடுக உலகியற்றியான் ` ( குறள் - 1062.) எனபுழிப்போல , பலவிடத்தும் அலமருதலைக் குறித்தது . இடுதல் . உயர்ந்தோர்க்குக் கொடுத்தல் . ஈதல் - வறியோர்க்கு ஈதல் ; ` இடார் ; தாவும் ஒருவர்க்கு ஈயார் ` என்றவாறாக , ` இட்டு ` என்றதனை முன்னே கூட்டியுரைக்க . ` தாவும் ஒருவர்க்கு ` என விதந்தோதியது , ` அவர்களது அலமரல் கண்டும் மனம் இரங்கலர் ` என்பதுணர்த்துதற்கு . பெண்டிர் ` என்பது , நீட்ட லாயிற்று ; இதுவும் , ` தாய் ` முதலியனபோல , ` மனைவியர் ` என்னும் பொருட்டாகிய முறைப்பெயர் . ` நம் கழல் கோவை ` என மாற்றி , ` நம் காலிற் பூணும் தளை ` என உரைக்க . ` தாய் முதலிய சுற்றத்தார் அனை வரும் தளை ` என்றபடி ; ` ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே ` ( புறம் . 193) என்றதும் அறிக . ` நம் கழல் ` எனத் தம்மோடு உளப்படுத்து அருளிச்செய்தார் , பிறர் நோயைத் தம் நோயாக நினையும் அருட்டிரு வுளத்தால் . ` களித்த மனத்தாராய் ` என்புழி நின்ற ` ஆய் ` என்னும் எச்சச்சொல் , ` ஈயார் , தேறார் ` என்பவற்றோடும் இயையும் . அழல் - அழுதல் ; வருந்துதல் ; ` நம்மை அழல் நீக்குவிக்கும் ` என்க . அரையன் ஆக்கும் - அரசனாகச் செய்யும் . ` நம்மை அரையன் ஆக்கும் ` என்பது பன்மையொருமை மயக்கம் . ` நீக்குவிக்கும் ` என்பது முதலிய செய்யும் , என் எச்சங்கள் மூன்றும் , ` அம்மான் ` என்னும் ஒரு பெயர் கொண்டு முடிந்தன . பயின்று எழுந்த பழவினை - பன்னாள் செய்து போந்த பழைய வினை ; சஞ்சிதம் . பாற்றலாம் - கெடுக்கலாம் .

பண் :

பாடல் எண் : 5

ஊற்றுத் துறையொன்ப துள்நின் றோரீர்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டீர்
மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம்
மாய மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில்பூண்டார் புரங்கள் மூன்றும்
வெவ்வழல்வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை யென்பீ ராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கட் சேர லாமே.

பொழிப்புரை :

நிலையற்ற மனைவாழ்க்கையில் இறுமாந்து வாழ்வீர்காள் ! அழுக்கு ஊறுகின்ற துறையாம் இவ் உடலில் உள்ள ஒன்பது பெருவாயில்களின் உள்ளே அகப்பட்டு நின்றமையால் இறைவனை நினைகின்றிலீர் , அவை ஒன்பதையும் , ஒருசேர அடைக்கும் இறுதிப்போதில் இறைவனை நினைக்க விரும்பினும் அது செய்ய மாட்டீர் . மாற்றுத்துறையாகிய யாதனாசரீரத்துடன் செல்லும் வழியை மேற்கொண்டு கால தூதுவரோடு நீவிர் ஓடாமுன்னம் பகைமைத் தொழில் பூண்டாருடைய புரங்கள் மூன்றையும் வெவ்விய அழலிடத்து வீழ்விக்கும் வேந்தனாகிய சிவபெருமான் விரும்பி உறையும் சோற்றுத் துறை சோற்றுத்துறை என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீராயின் பிறவித்துயர் நீங்கித் தூய வீட்டுநெறியினைச் சேர்தல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருச்சோற்றுத்துறையை எடுத்தோதி யருளியது . ஊற்றுத் துறை ஒன்பது , உடம்பில் உள்ள ஒன்பது பெருவாயில்கள் ; அவை அனைத்தும் மாசு வெளிப்படும் புழைகளாய் உள்ளமை பற்றி , அவற்றை , ` ஊற்றுத் துறை ` என்று அருளினார் ; ` அழுக்கு ஊறுகின்ற ஊற்று ` என்றபடி ; ` மலஞ்சோரும் ஒன்பது வாயில் ` ( தி .8 திருவா . சிவபு . 54) என்றருளினார் மாணிக்கவாசகரும் . ` அவ்வாயில்களுக்கு உள்ளே அகப்பட்டு நின்றமையால் , அங்கே மயங்கி இறைவனை நினைந்திலீர் ` என்க . ஓரீர் - நினைந்திலீர் . ஒன்பது வாயில்களும் ஒரு சேர அடைக்கப்படும் காலம் இறுதிக்காலமாத லாலும் , அது வந்தபோது உள்ளத்தை ஆளும் திறன் அழியுமாகலான் , அஞ்ஞான்று இறைவனை நினைக்க விரும்பினும் அஃது இயலாது ஆதலானும் , ` ஒக்க அடைக்கும்போது உணர மாட்டீர் ` என்று அறிவுறுத்தருளினார் ; இறுதித் திருப்பதிகத்துள் . இந்நிலையை சுவாமிகள் தமக்கே வைத்து அருளிச் செய்தல் காண்க ; மாட்டீர் - இயலாதவராய் இருப்பீர் . மாற்றுத் துறை - இதற்கு வேறான மற்றோரு துறை ; அது ` பூதனா சரீரமாகிய இது போல்வதாகிய யாதனா சரீரம் . மாற்றுத் துறை யாகிய வழி ` என்க ; ` அதனைப் பற்றிக்கொண்டு கால தூதுவரொடு ஓடாமுன்னம் ` என்றபடி . கொண்டு - கைக்கொண்டு . ` ஓடாமுன்னம் என்பீராகில் ` என இயையும் . மாயம் - நிலையாமை . மகிழ்ந்து - இறுமாந்து . ` மனைவாழ்க்கைக் கண்னே மகிழ்ந்து ` என்க . ` வாழ்வீர் ` என்றது விளி ; இத் தொடரை முதற்கண்ணே வைத்து உரைக்க . வேற்றுத்தொழில் - வேற்றுமைச் செயல் ; பகைமை .

பண் :

பாடல் எண் : 6

கலஞ்சுழிக்குங் கருங்கடல்சூழ் வையந் தன்னிற்
கள்ளக் கடலி லழுந்தி வாளா
நலஞ்சுழியா எழுநெஞ்சே இன்பம் வேண்டில்
நம்பன்றன் அடியிணைக்கே நவில்வா யாகில்
அலஞ்சுழிக்கு மன்னாகந் தன்னான் மேய
அருமறையோ டாறங்க மானார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீ ராகில்
வல்வினைகள் தீர்ந்துவா னாள லாமே.

பொழிப்புரை :

மரக்கலங்கள் சுழலுகின்ற கரிய கடலால் சூழப்பட்ட உலகில் வஞ்சனைக் கடலில் அழுந்தி , முயலாமலே , நன்மையைத் தேடி அலைகின்ற நெஞ்சே ! நல்லின்பம் பெற வேண்டில் நம்புதற்குரிய தலைவன் திருவடியிணைக்கே வாழ்த்து நவில் . அங்ஙனம் நவில விரும்பின் எல்லாப் பொருளும் அடங்கச் சுருட்டும் பாம்பரசனாகிய ஆதிசேடனால் விரும்பப்பட்டதும் அருமறையும் ஆறங்கமும் ஆன சிவபெருமான் உறைவதும் ஆகிய கோயிலைக் கொண்ட வலஞ்சுழியே வலஞ்சுழியே என்று பலகாலும் கூறுவையாயின் வலிய வினைகள் தீர வானுலகு ஆளல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் திருவலஞ்சுழியை எடுத்தோதி அருளியது . கலம் - மரக்கலங்கள் . சுழிக்கும் - சுழலுகின்ற ; இயங்குகின்ற . வையம் - பூமி . கள்ளம் - வஞ்சனை ; கரவு ; உலகியல் வாழ்க்கை கரவை இயல்பாக உடையதென்றபடி . வாளா - முயலாமலே . நலம் சுழியா எழு - நன்மையைத் தேடி அலைகின்ற . ` இன்பம் வேண்டில் ` என்றது , ` நீ உண்மையில் இன்பத்தைப் பெற விரும்பினால் ` என்றவாறு . நவிலுதலுக்கு , ` வாழ்த்து ` என்னும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க . நவில்வாயாகில் - சொல்ல விரும்புவையாயின் . ` இன்பம் வேண்டில் நவில் ` எனவும் , ` நவில விரும்பின் வலஞ்சுழி என் `, ` என்பையாகில் வானாளலாம் ` என வேறு வேறு தொடராக ஓதற் பாலதனை ` சொற்பல்காவாறு ஒரு தொடராக ஓதியருளினார் என்க . ` நெஞ்சே நவில்வாயாகில் ` என முன்னர் ஓதி , பின்னர் , ` என்பீ ராகில் ` என்றது , உயர்வு பற்றியருளிய ஒருமை பன்மை மயக்கம் . ` அலம் ` என்புழி , ` அலமாக ` என ஆக்கம் வருவிக்க . அலம் சுழிக்கும் - எல்லாப் பொருளும் அடங்கச் சுருட்டுகின்ற . மன்நாகம் - பாம்பரசன் ; ஆதிசேடன் ; திருவலஞ்சுழி ஆதிசேடன் வழிபட்ட தலம் என்பது புராணம் . தன் , சாரியை . ` நாகந்தன்னால் மேய கோயில் ` என இயையும் , மேய - விரும்பப்பட்ட .

பண் :

பாடல் எண் : 7

தண்டிகுண் டோதரன்பிங் கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை யுலகம் படைத்தான் தானும்
பாரை யளந்தான்பல் லாண்டி சைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீ ராகிற்
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.

பொழிப்புரை :

தண்டியும் குண்டோதரனும் , பிருங்கியாகிய இருடியும் , புகழ்சார்ந்த நந்தியும் , சங்குகன்னனும் , பண்டு உலகைப் படைத்த பிரமனும் , உலகளந்த திருமாலும் பல்லாண்டு இசைக்கவும் திண்ணிய வயிற்றையும் சிறிய கண்களையுமுடைய பூதங்கள் சில பாடவும் விடை ஒன்றை ஊர்பவனாகிய சிவபெருமான் மேவி உறையும் கண்டியூர் கண்டியூர் என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவீர் ஆயின் நும் வலிய வினையை விரைவாக நீக்கல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருக்கண்டியூரை எடுத்தோதி அருளியது . ` பிருங்கி இருடி ` என்பது , ` பிங்கிருடி ` எனக் குறைந்து நின்றது . ` பிருங்கி என்னும் பெயருடைய இருடி ` என்பது பொருள் . இவர் அம்மையையும் வழிபடாது சிவபிரானையே வழிபட்ட பெருஞ் சிவபத்தியுடையவர் . இவரைத் தவிர , தண்டி , குண்டோதரன் , நந்தி , சங்குகன்னன் என்பவரெல்லாம் சிவ கணத்தவர் . அவருள் நந்தி பெருமான் , சிவகணங்கட்கெல்லாம் தலைவராய் , சிவபிரானுக்கு அகம்படிமைத் தொழின்மை பூண்டு பிரம்பு ஏந்தி அருகிலிருந்து பணியாற்றுவதுடன் , கயிலை மலைக்குக் காவல் பூண்டவர் ; இதனால் , இவரை , ` பெரிய தேவர் ` எனவும் , ` அபர சம்பு ` எனவும் கூறுவர் . ` பண்டு ` என்பது ஐகாரம் பெற்று . ` பண்டை ` என நின்றது . ` பண்டு படைத்தான் ` என இயையும் , உலகம் படைத்தான் - பிரமன் . பார் - பூமி . பாரை அளந்தான் - திருமால் . ` இவர் அனைவரும் பல்லாண்டு கூறி வாழ்த்தவும் , சில பூதங்கள் புகழ்களைப் பாடவும் விடைமேல் ஏறி வருபவன் ` என்க . ` வெள் ` அடியாக , ` வெள்ளி ` என்பது வருதல்போல , ` திண் ` என்பது அடியாக வரும் திண்ணி என்பது , எதுகை நோக்கி , ` திண்டி ` எனத் திரிந்து நின்றது . ` திண்மையுடையதாகிய ` என்பது பொருள் . ` திண்ணிய வயிறு ` என்றது , பருத்த வயிறு ` என்றே பொருள் தந்து நின்றது .

பண் :

பாடல் எண் : 8

விடமூக்கப் பாம்பேபோற் சிந்தி நெஞ்சே
வெள்ளேற்றான் தன்தமரைக் கண்ட போது
வடமூக்க மாமுனிவர் போலச் சென்று
மாதவத்தார் மனத்துள்ளார் மழுவாட் செல்வர்
படமூக்கப் பாம்பணையிற் பள்ளி யானும்
பங்கயத்து மேலயனும் பரவிக் காணாக்
குடமூக்கே குடமூக்கே யென்பீ ராகிற்
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுக லாமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! வெள்ளேறு ஊறும் விமலனுடைய அடியார்களைக் கண்டபோது ஆலமர் கடவுளை அடைந்த முனிவர் போல் அவர்களைச் சென்றடைந்து , விடம் , உக்க பாம்பு போல அடங்கி வணங்கு . வணங்கி , மாதவத்தார் , மனத்து உள்ளவரும் , மழுப் படையை ஏந்திய செல்வரும் , படத்தையுடைய கொடிய பாம்பாகிய அணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் , பங்கய மலர்வாழ் பிரமனும் புகழ்ந்து தோத்திரித்தும் காணப்படாதவரும் ஆகிய அரனார் மகிழ்ந் துறையும் குடமூக்கே குடமூக்கே என்று பலகாலும் நினைத்து வாழ்த்துவையாயின் கொடுவினைகள் தீர அவரைக் கிட்டுதல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருக்குடமூக்கை எடுத்தோதி அருளியது . ` உக்க ` என்பது , ` ஊக்க ` என நீட்டலாயிற்று . விடம் உக்க பாம்பு - விடத்தை உமிழ்ந்துவிட்ட ( விடம் நீங்கிய ) பாம்பு ; இது , மந்திரத்தால் அடங்கிய பாம்பைக் குறித்த படியாம் . நெஞ்சம் தனது கரவையெல்லாம் விடுதற்கு இது உவமையாகச் சொல்லப்பட்டது . நெஞ்சிற்கேற்ப , ` சிந்தி ` என்றாராயினும் , ` வணங்கி ` என்றலே கருத்து . ` தமர் என்றது , அடியவரை . வடம் - ஆலமரம் . ஊக்குதல் - மனத்தைச் செலுத்துதல் . ` வடத்தின்கண் ஊக்கிய அம் மாமுனிவர் ` என்க . இவர் ஆலமர் கடவுளை அடைந்த நான்கு முனிவராவர் . ` நெஞ்சே , வெள்ளேற்றான்தன் தமரைக் கண்டபோது ஆலமர் கடவுளை அடைந்த முனிவர்போலச் சென்று அடைந்து , விடம் உக்க பாம்புபோல அடங்கி வணங்கு ` என்றவாறு . ஆலமர் கடவுளை அடைந்த முனிவர்கள் அவனையே கடவுளாகவும் , ஆசிரியனாகவும் கொண்டமையறிக . படமூக்கப்பாம்பு - படத்தையுடைய கொடிய பாம்பு . ` காணா ` என , இறைவன் நிலையை அவன் திருக்கோயிலுக்குத் தந்துரைத்தருளினார் .

பண் :

பாடல் எண் : 9

தண்காட்டச் சந்தனமுந் தவள நீறும்
தழையணுகுங் குறுங்கொன்றை மாலை சூடிக்
கண்காட்டாக் கருவரைபோ லனைய காஞ்சிக்
கார்மயிலஞ் சாயலார் கலந்து காண
எண்காட்டாக் காடங் கிடமா நின்று
எரிவீசி யிரவாடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீ ராகில்
வீடாத வல்வினைநோய் வீட்ட லாமே

பொழிப்புரை :

மேகலையணிந்து கார்மயிலின் சாயலைக் கொண்டு நீலமலைபோன்று விளங்கும் உமாதேவியார் ஒரு பங்கில் கலந்து நின்று கடைக்கண்ணைச் செலுத்திக் காண , சந்தனமும் , வெண் ணீறும் குளிர்ந்து விளங்க , தழைவிரவித் தொடுக்கப்பட்ட கொன்றைக் குறுமாலையைச் சூடி , எண்ணற்ற இறந்தோருடைய இடமாகிய முது காட்டில் நின்று எரிஏந்தி இரவில் ஆடும் இறைவர் விரும்பி உறையும் வெண்காடே வெண்காடே என்று பலகாலும் நினைந்து வாழ்த்துவீ ராயின் கெடாத வலிய வினைகளாகிய நோய்களைக் கெடுத்தல் கைகூடும் .

குறிப்புரை :

இத்திருத்தாண்டகம் , திருவெண்காட்டினை எடுத்தோதி யருளியது . தண் - தண்மை . தவளம் - வெண்மை . ` கொன்றைக் குறு மாலை ` என மாற்றியுரைக்க . கண்ணியை , ` குறு மாலை ` என்றார் . ` சந்தனமும் நீறும் தண்மையைக் காட்ட , கொன்றை மாலை சூடி இரவு ஆடும் இறைவர் ` என்க . கண் காட்டா - கண்ணைக் காட்டி ; கடைக் கண்ணைச் செலுத்தி , கருவரை - நீலமலை . ` போல் ` என்பது அசை . காஞ்சி - மேகலாபரணம் . கார்மயில் அம் சாயலார் - கார் காலத்து மயில் போலும் சாயலை உடையவராகிய உமாதேவியார் ; மயில் பொலிவுபெறுவது கார்காலத்தே யாதலின் , அதனையே உவமித்தார் . இனி , ` கரிய மயில்போலும் ` எனலுமாம் . ` கார்மயிலஞ் சாயலார் ` என்பது ஒரு சொல் தன்மைப்பட்டு , ` கருவரையனைய ` என்றதற்கு முடிபாயிற்று . ` சாயலார் கலந்து கண்காட்டாக் காண நின்று இரவு ஆடும் இறைவர் ` என்க . எண் காட்டாக்காடு - அளவில்லாத காடு ( ஈமங் ) கள் . ` அளவில்லாத காடுகள் ` என்பது , ` ஈமந்தோறும் ` எனப் பொருள் தந்ததாயினும் , ` உலகம் ஒடுங்கிய வெறுவெளி ` என்பதை உள்ளீடாக உடையது . வீடாத - கெடாத . வீட்டலாம் - கெடுக்கலாம் .

பண் :

பாடல் எண் : 10

தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே

பொழிப்புரை :

ஒருவருக்குத் தந்தை யார் ? தாய் யார் ? உடன் பிறந்தார் தாம் யார் ? தாரம் யார் ? புத்திரர் யார் ? தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர் ? நிலவுலகிற் பிறந்தது தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடிநின்றோ ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடிநிற்கவோ ? ஆகவே சிந்தையீர் , பொய்யான இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா . உமக்கு ஓர் உறுதி சொல்லக் கேண் மின் . ஒளிவீசித் திகழும் மதியும் கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் முடியை உடைய எந்தையாரது திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயிலெழுவார்க்குப் பெரிய வீட்டுலகில் நிலை பெற்றிருத்தல் கைகூடும் . ஆகவே அதனைச் செய்ம்மின் .

குறிப்புரை :

இத்திருப்பதிகத்துள் இதுகாறும் தலங்களுள் சில வற்றை எடுத்தோதிய குறிப்பினால் இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றிலும் சென்று வழிபடுதலை விதித்தருளி , இறுதியில் இத்திருத்தாண்டகத்தினால் , ` சுற்றத் தொடர்பால் மயங்காது . இறை வனது திருவைந்தெழுத்தை மனம்பற்றி ஓதுமாறு ` அதனை அறிவுறுத் தருளுகின்றார் . ` தந்தை ஆர் , தாய் ஆர் ` எனப் பிரிக்க . ` ஆர் ` என்றதனை ` உடன் பிறந்தார் ` என்றதற்கும் கூட்டுக . தாரம் - மனைவி . ` யார் ` என்னும் வினாவினைக் குறிப்பு , ` என்ன தொடர்பு உடையர் ` என்னும் பொருளுடையதாய் , ` யாதொரு தொடர்பும் உடையரல்லர் ` எனப் பொருள் தந்து நின்றது . இவை அனைத்திற்கும் , ` ஒருவர்க்கு ` என்னும் முறைதொடர் பெயரை முதற்கண் வருவித்து உரைக்க . இங்ஙனம் உரைக்கவே , உலகர் கூறும் , ` தந்தை ` முதலிய முறைகள் எல்லாம் போலியே என்று அருளியவாறாயிற்று . அங்ஙனம் அருளினமைக்குக் காரணம் , ` உற்றார் ஆர்உளரோ - உயிர்கொண்டு போம்பொழுது ` ( தி .4. ப .9. பா .10.), ` செத்தால் வந்துதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் ` ( ப .62. பா .1.) என்றாற் போல்வனவற்றால் இனிது விளக்கப்பட்டன . ` தாம் தாம் ஆர் ` என்றது , இனி , ` தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர் ` என்றருளிய தாம் . அஃதாவது , ` தாமே தம்மைக் காத்துக்கொள்வதாக நினைத்தலும் மயக்க உணர்வேயாம் ` என்றபடி . ` அது . தமக்கு இறுதி முதலியன வந்தவிடத்துத் தம்மால் ஒன்றும் ஆகாமையான் இனிது உணரப்படும் ` என்பது திருக்குறிப்பு . ` வந்தவாறு எங்ஙன் போமாறு ஏது ` என்றது , ` நிலவுலகிற் பிறந்தது , இங்குப் பிணிப்புற்று நிற்கின்ற தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடி நின்றோ ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடி நிற்கவோ ? அவ்வாறின்றி அவரவர் முன்னும் தொடர்பில்லாதவராய் இருந்து , பின்னும் தொடர்பில்லாதவராய்ப் போகவோ ? என்னும் பொருட்டாய் , ` அனைவரும் முன்னும் பின்னும் ஏதும் தொடர்பில்லாத தமியரேயன்றோ ` எனப் பொருள்தந்தது . ஓர்ந்துணராதபோது , தந்தை தாய் முதலியவர்களும் . தாமும் தமக்கு உறுதி செய்பவர் போலத் தோன்றினும் , ஓர்ந்துணருங்கால் அவை அனைத்தும் போலியே ஆம் என்பார் , ` மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா ` என்றருளிச்செய்தார் . இதற்கு ஏதும் மகிழ வேண்டா - இதனால் சிறிதும் மயங்கற்க . ` ஆதலின் , சிந்தையீர் , இதற்கு ஏதும் மகிழ வேண்டா ` என உரைக்க . ` ஆரே , எங்ஙனே , ஏதோ ` என்னும் ஏகார ஓகாரங்கள் அசைநிலை . ` திகழ்மதி ` என்றதனால் பிறையினது தட்பத்தையும் , ` வாளரவு ` என்றதனால் பாம்பினது கொடுமையையும் குறிப்பித்தருளினார் . திளைத்தல் - நட்புக்கொண்டு விளையாடி மகிழ்தல் . ` மதியும் அரவும் திளைக்கும் சென்னியை ( தலையை ) உடை யவன் ` எனவும் , ` எந்தை ` எனவும் அருளியவாற்றால் , ` அவனே எல்லாப் பொருளையும் தாங்குபவனும் , துன்பம் நீங்கி இன்பம் பெறச் செய்பவனும் , யாவர்க்கும் உறவினனும் ` என்பதனை அறிவுறுத் தருளினார் . ` அன்ன பெரியோனது திருப்பெயரே திருவைந்தெழுத்து ` என்பார் , ` எந்தையார் திருநாமம் நமச்சிவாய ` எனவும் , ` அதனை எஞ்ஞான்றும் காதலாகி ஓதி உணரும் தன்மையால் , துயில்நீங்கி உணர்வு உண்டாகும்பொழுது அதனையே உணரும் உணர்வு உடையவரே வினைத்தொடக்கு அகன்று வீடுபெறுவர் ` என்பார் , ` நமச்சிவாய என்று எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாம் ` எனவும் அருளிச்செய்தார் . இருக்கல் ஆம் - இருத்தல் கூடும் . இவ்வாறு பொய் அனைத்தையும் அகற்றி உண்மையை அறுதியிட்டு அறிவுறுத் தருளியதனால் , இத் திருத்தாண்டகம் அரியதோர் உறுதித் திருத் தாண்டகமாதல் காண்க .
சிற்பி