பொது


பண் :

பாடல் எண் : 1

ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
தலையதனிற் பலிகொண்டார் நிறைவாம் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.

பொழிப்புரை :

கண்ணப்பரது பூசையினையும் அன்புகருதி ஏற்றுக்கொண்ட காபாலியாராகிய சிவபெருமானார் நோய் தீர்த்து அடியேனை ஆளாகக் கொண்டவரும் , அதிகை வீரட்டானத்திருந்து ஆட்சி செய்பவரும் , பிரமனது சிரத்தைக் கொய்து கையிற் கொண்ட வரும் , அத்தலையோட்டில் பிச்சை ஏற்றவரும் , வாமனனாகி வந்து மண் இரந்து திரிவிக்கிரமனாய் வளர்ந்து மூவுலகையும் அளந்து மிக்க செருக்குற்ற நிலையில் அப்பேருடம்பின் உதிரத்தை வெளிப்படுத்தி அவனை அழித்தவரும் , மான்போன்ற உமையை இடப்பாகமாகக் கொண்டவரும் , மழு ஆயுதத்தை வலக்கையில் ஏந்தியவரும் , நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துக் காமனை அழித்தவரும் ஆவார் .

குறிப்புரை :

ஆமயம் - நோய் . தாமரையோன் - பிரமதேவன் , ` அத் தலையதனில் ` என , சுட்டு வருவித்துரைக்க . நிறைவு - மிக்கசெருக்கு , ` வாமனனார் ` என்றது . திருமால் மகாபலியிடம் மூன்றடி மண் பெறுதற் பொருட்டுக் கொண்ட குறள் வடிவத்தை . மூன்றடி மண்பெற்று திரிவிக்கிரமனாய் மூவுலகத்தையும் அளந்து மகாபலியையும் பாதலத்தில் இருத்திய பின்னர்ச் செருக்குக்கொண்டு உலகத்தைத் துன்புறுத்தினமையால் , சிவபிரான் , திரிவிக்கிரமனை அழித்து அவன் முதுகெலும்பைத் தண்டாயுதமாகக் கொண்டருளினான் என்பது புராண வரலாறு ஆதலின் , ` வாமனனார் மாகாயத்து உதிரங் கொண்டார் ` என்று அருளிச்செய்தார் , மா காயம் - பேருடம்பு ; உலகினை அளந்த உருவம் . ` மானை இடப்பக்கத்திற் கொண்டார் ` என்க . ` உடல் கொண்டார் ` என்பது , ` அழித்தார் ` என்ற பொருளதாய் , ` காமனை ` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று . ` கண்ணால் நோக்கி உடல் கொண்டார் ` என இயையும் . ` கண்ணப்பர் பணியும் கொள் ` என்றது , ` விதிமார்க்கத்திற்கு முற்றிலும் மாறான பூசையையும் அவர் அன்பு காரணமாகக் கொண்டருளினார் ` என்றபடி . இதனால் , அன்பு ஒன்றையே இறைவர் சிறப்பாக விரும்புவது என்பது குறித்தருளிய வாறாம் . பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ ( தி .8 திருவா . திருத்தோணோக்கம் .3) என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார் .

பண் :

பாடல் எண் : 2

முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார்
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்
அடியேனை ஆளுடைய அடிக ளாரே.

பொழிப்புரை :

அடியேனைத் தமக்கு ஆளாகவுடைய தலைவர் ஆகிய சிவபெருமானார் உத்தமவிலக்கணமாகிய கீற்றுப் பொருந்திய மார்பினிடத்து முப்புரிநூல் பொருந்தக் கொண்டவரும் . பழைய பன்றியில் முளை போன்ற கொம்பினைப் பூணாகக் கொண்டவரும் , கிண்ணம் போன்ற அழகிய முலைகளையுடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவரும் சிவந்த உடலில் வெண்ணீறு விளங்கக் கொண்டவரும் , தூய்மை நிறைந்து முறுக்குண்ட சங்கினாலியன்ற தோட்டினைக் கொண்டவரும் , அமரர் சூழ்ந்து சுடர் முடியால் தமது அடியைத் தொழக் கொண்டவரும் , அந்நாளில் தாருகாவன முனி பத்தினியர் இட்ட பிச்சையோடு அவர்களது அன்பினையும் கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

வரைமார்பு - கீற்றுப் பொருந்திய மார்பு . முயங்க - பொருந்த . முதுகேழல் - பெரிய பன்றி , முளை மருப்பு - முளையாகிய கொம்பு . ` பூணாக்கொண்டார் ` என மாறிக் கூட்டுக . திருமால் வராக அவதாரங்கொண்டு பூமியைப் பிரளய வெள்ளத்தில் ஆழாதபடி கொம்பில் ஏற்று நிறுத்தியபின்னர்ச் செருக்குற்று உலகைத் துன்புறுத்தினமையால் , சிவபிரான் அதனை அழித்து , அதன் கொம்பினை மார்பிற்கு அணிகலமாக அணிந்தனர் என்பது புராண வரலாறு . செப்பு - கிண்ணம் . ` செம்மேனியின்கண் ` என உருபு விரிக்க . துப்புரவு ஆர் - தூய்மை நிறைந்த . சுரி சங்கு - குவிந்த முகமுடைய சங்கு ; குழையேயன்றித் தோடும் சங்கினால் ஆயது என்க . ` அமரர் சூழ்ந்து சுடர்முடியால் அடி தொழவும் கொண்டார் ` என்க . பலி - பிச்சை ; ` அப்பலி ` என்றது , ` அந்நாளில் கொண்டபிச்சை` என்றவாறு . ` ஆயிழையார் ` என்றது , தாருகாவன இருடியர் பத்தினியரை .

பண் :

பாடல் எண் : 3

முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.

பொழிப்புரை :

சடையை முடியாகக் கொண்டவரும் , முதலில் காணப்படுகின்ற வெள்ளிய பிறைச் சந்திரனையும் படத்தால் மறைக்கும் இளம்பாம்பையும் உடன் உறையும்படி அம்முடிக்கண் கொண்ட வரும் , ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் கழலினையும் ஒலிக்கும்படி அடிக்கண் கொண்டவரும் , கொடுமை குறையாத முயலகனை அடிக்கீழ்க் கொண்டவரும் , கூர்மையைக் கொண்டு நிரம்ப இலங்குகின்ற மழுவினை வலக்கையிற் கொண்டவரும் , திருமாலை இடப்பாகமாகப் பொருந்தக் கொண்டவரும் , துடியைக் கையிற் கொண்டவரும் , எலும்புக் கூட்டினைத் தோள் மேற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானாரே சூலை நோயைத் தீர்த்து அடியேனை ஆட் கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

முடி - சடைமுடி ; கொண்டார் - ( அதனை ) மேற் கொண்டார் . முளை - முளைத்த ; முதலிற் காணப்படுகின்ற . மூசுதல் - மொய்த்தல் ; அது படத்தால் மறைத்தலைக் குறித்தது . உடன் ஆக - உடன் உறையும்படி ; அம்முடிக்கண் கொண்டார் என்க . ` சிலம்பு ` என்புழித் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க . அலம்பு - ஓலிக்கின்ற . ஆர்ப்ப - ஒலிக்க . ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் கழலினையும் ஒலிக்கும்படி ` அடிக்கண் கொண்டார் என்க . ` சிலம்பலம்பக் கழலும் ஆர்ப்ப ` என்பதே பாடம்போலும் ! வடி கொண்டு - கூர்மையைக் கொண்டு . ` ஆர்ந்து ` என்பதனை , ` ஆர ` எனத் திரிக்க . ` நிரம்ப இலங்குகின்ற ` என்பது பொருள் . திருமாலை இடப் பாகத்தே கொண்டமை மேலே ( ப .76. பா .1) காட்டப்பட்டது . துடி - உடுக்கை . ` தோள்மேல் ` என்றதுபோல . ` துடி கையிற் கொண்டார் ` என்க . கங்காளம் - பிரம விட்டுணுக்களது எலும்புக் கூடு . ` திரிவிக்கிரமனை அழித்துக்கொண்ட முதுகெலும்பு ` எனவும் கூறுப .

பண் :

பாடல் எண் : 4

பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படஅரவம் அரைமேற் கொண்டார்
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்
கொடியானை யடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.

பொழிப்புரை :

திருநீற்றுப் பையினையும் புலித்தோலையும் புயத்தில் கொண்டவரும் , பூதப் படைகள் தம்மைப் பக்கங்களில் சூடிக் கொண்டவரும் , அக்குமணியையும் படநாகத்தையும் இடுப்பின்மேல் கொண்டவரும் , தாம் படைத்தவையாகிய எல்லா உலகங்களையும் ஒடுங்குமாறு செய்தலைக் கொண்டவரும் , கொக்கிறகினையும் வில்வத்தினையும் முடித்த சடையில் கொண்டவரும் , கொடிய சலந்தராசுரனை ஆற்றல் மிக்க ஆழிக்கு இரையாகக் கொண்டவரும் , செந்நிறத் திருமேனி விளங்கக் கொண்டவரும் ஆகிய சிவனாரே கீழ்மையேனை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

பொக்கணம் - இப்பி வடிவாகச் செய்யப்பட்ட திரு நீற்றுச் செப்பு . இதனை , இக்காலத்தார் , ` சம்புடம் ` என வழங்குவர் . ` புயத்திற்கொண்டார் ` என்றதனால் , ` பொக்கணம் ` என்றது , திரு நீற்றுப் பையைக் குறித்தது என்க . புலித்தோலை அரையில் உடுத்தலே யன்றி , தோளில் இடுதலும் உண்டென்க . அக்கு - எலும்பு . ` அவை அடங்கவும் கொண்டார் ` என உம்மையை மாற்றியுரைக்க . அடங்க - ஒடுங்க . கூவிளம் - வில்வம் . ` கொண்டை ` என்றது , கட்டிய சடை முடியை . கொடியான் - சலந்தராசுரன் ; அடல் ஆழிக்கு இரையாக்கியது அவனையே என்பது வெளிப்படையாகலின் ` கொடியானை ` என்றே அருளிப் போயினார் . அடல் ஆழி - வெற்றியையுடைய சக்கரம் . செக்கர் - செவ்வானம் ; சிவப்புமாம் . செடியேன் . கீழ்மையேன் .

பண் :

பாடல் எண் : 5

அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக்கொண்டார்
மாகாளன் வாசல்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.

பொழிப்புரை :

அந்தகாசுரனைக் கூரிய சூலத்தால் அழுத்தி அவன் உயிரைக் கொண்டவரும் , திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில் உணர்தற்கரிய வேதத்தைத் தேர்க்குதிரையாக்கிக் கொண்டவரும் , ஆலால சுந்தரனை இரட்டைக் கவரி வீசக்கொண்டவரும் , சுடுகாட்டை நடனமாடுமிடமாகக் கொண்டவரும் , மந்தர மலையைப் போரிடுதற்குரிய வில்லாக வளைத்துக் கொண்டவரும் , மாகாளனை வாசல் காப்பாளனாகக் கொண்டவரும் , தந்திர மந்திரங்களில் பொருந்தி நின்று அருளுதலைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் சமணரிடமிருந்து என்னை நீக்கி என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

அந்தகன் - அந்தகாசுரன் . அயில் - கூர்மை . திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில் வேதத்தையே தேரிற்பூட்டும் குதிரையாகக் கொண்டமையறிக . சுந்தரன் - ஆலால சுந்தரர் ; இவர் திருக்கயிலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டுகள் செய்பவராதலின் , அவரே கவரி வீசுவோருமாதல் அறிக ; இவரே , சுவாமிகள் காலத்துக்குப் பின்னர் நம்பியாரூரராய் அவதரித்தருளினமை வெளிப்படை . துணை - இரண்டு . மந்தரமும் மேருமால் வரையின் பகுதியேயாதலின் , அதனையே வில்லாக வளைத்ததாக அருளினார் . மாகாளரை வாயில் காவலராகக் கொண்டமையை , சிவபூசையில் மகாகாளர் துவார பாலகருள் வைத்துப் பூசிக்கப்படுதல் கொண்டும் உணரலாம் . தந்திரம் . தெய்வ வேள்வி முதலிய ஐவகை வேள்விகள் . மந்திரம் - சிவ வழிபாடு . இவைகளில் பொருந்தி நின்று உயிர்கட்கு அருள் புரிதலின் , ` தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் ` என்று அருளினார் . ` அருளி உயிர்களை உய்யக்கொண்டார் ` என்க .

பண் :

பாடல் எண் : 6

பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்
பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகி
வந்திட்ட பலி கொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண் டார்
உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

பொழிப்புரை :

பூதகணங்கள் பல இசைக் கருவிகளையும் இயக்கக் கொண்டவரும் , மேனியில் பவளநிறத்தையும் வெண்ணீற்றுப் பூச்சில் பளிங்கு நிறத்தையும் கொண்டவரும் , கங்கை தங்கும் சடைமுடிமேல் பிறைச் சந்திரனையும் கொண்டவரும் , அழகு நிறைந்த மிடற்றினில் நீலநிறம் கொண்டவரும் , கச்சிற்குள் அடங்கும் அழகிய முலையாராகிய தாருகாவன முனிபத்தினியர் காதலால் மயக்கம் கொண்டு வந்திட்ட பிச்சையுடன் அவர்களுடைய கைவளையல்களையும் கொண்டவரும் எல்லா ஊர்களும் தம் ஆட்சியில் அடங்கியிருக்கத் திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டவருமாகிய சிவ பெருமானார் என் உடலிற் பொருந்திய சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

பாரிடங்கள் - பூத கணங்கள் , கருவி - இசைக்கருவி ; வாச்சியம் . பளிங்கு - பளிங்குநிறம் ; இது நீற்றினால் ஆயது . கோலம் நிறை - அழகுமிக்க . வனமுலையார் , தாருகாவனத்து முனிவர் பத்தினியர் . வளை - அவர்களது வளைகள் . ` ஒற்றி நகர் பற்றி , ஊர் அடங்கக் கொண்டார் ` என இயைக்க . ` ஒற்றியாய் உள்ள ஊரை உறை விடமாகப் பற்றிக்கொண்டு , எல்லா ஊர்களையும் தம்முடையனவாகக் கொண்டுள்ளார் ` என்பதுநயம் . அடங்க - முழுவதும் . ` எல்லா ஊர்களும் தம் ஆட்சியில் அடங்கியிருக்க , திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டார் ` என்பது உண்மைப் பொருள் .

பண் :

பாடல் எண் : 7

அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால வருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.

பொழிப்புரை :

அழகிய தில்லை அம்பலத்தைத் தாம் ஆடும் அரங்காகக் கொண்டவரும் , கடலில் வந்த ஆலால நஞ்சினை அமுதாகக் கொண்டவரும் , அழகு மிகுகின்ற சரங்களாகிய பொன் போன்ற கொன்றை மலராலாகிய மணம் கமழ்கின்ற மாலையைக் கொண்டவரும் , விருப்பம் நிறைந்த கோடி என்றதலத்தில் கூடி இருத்தலைக் கொண்டவரும் , மாணிக்கத்தோடு கூடிய படத்தையுடைய பாம்பினைத் தோள்வளையாகக் கொண்டவரும் , மேற் கொண்டு நீண்ட வீதியில் வருதற்குப் பெரிய இடபத்தைக் கொண்ட வரும் , உரித்த புலியினது தோலை உத்தரியமாகவும் உடையாகவும் கொண்டவரும் , சூலத்தைக் கையில் கொண்டவருமாகிய சிவ பெருமானார் என்னைத் தமக்கு அடிமையாகக் கொண்டவராவார் .

குறிப்புரை :

கணிவளர்தார் - அழகுமிகுகின்ற பூக்களாகிய . பொன் இதழி - பொன்போன்ற கொன்றை . கமழ்தார் - மணம் வீசுகின்ற மாலை . காதல் ஆர் கோடி - விருப்பம் நிறைந்த கோடிக் குழகர் என்னும் தலம் ; சோழநாட்டில் உள்ளது . மணிபணத்த அரவம் - மாணிக்கத்தோடு கூடிய படத்தையுடைய பாம்பு . மேல் நெடு வீதி போத - மேற்கொண்டு , நீண்ட வீதியில் வருதற்கு . மால்விடை கொண்டார் - பெரிய இடபத்தைக் கொண்டார் . ` துணிதோல் ` என இயையும் ; ` உரித்த தோல் ` என்பது பொருள் . ஆடை - உத்தரீயம் . உடை அரையில் உடுப்பது .

பண் :

பாடல் எண் : 8

படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்
பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி யிடைமருதுங் கொண்டார் பண்டே
யென்னைஇந்நாள் ஆட்கொண்ட இறைவர் தாமே.

பொழிப்புரை :

படத்தையும் கொடுமைக் குணத்தையுமுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலையும் இந்திரனையும் பங்கயத்துப் பிரமனையும் தம் விருப்பப்படி படைத்துக் கொண்ட வரும் , குடமூக்கிற் கீழ்க் கோட்டத்தைக் கோயிலாகக் கொண்டவரும் , கூற்றுவனை உதைத்து ஒப்பற்ற வேதியனாம் மார்க்கண்டேயனை வாழக் கொண்டவரும் , துதிக்கையை உடைய யானையினது தோலினை உடலில் போர்த்திக்கொண்டவரும் , தம்மை நினையாத பாவிகளை நீங்கக் கொண்டவரும் , இடைமருதினைத் தமக்கு இடமாகக் கொண்டவரும் , ஆகிய சிவபெருமானார் என்னை இந்நாள் ஆட்கொண்ட இறைவர் ஆவார் .

குறிப்புரை :

` மூர்க்கப் பாம்பு ` என்பது , ` மூக்கப் பாம்பு ` எனத் திரிந்து நின்றது . வானோன் - ( அயன்மால்கட்கு ) மேலானவன் ; உருத்திரன் ; இனி , வானுலகத்தை உடையவன் ; இந்திரன் ` என்று உரைத்தலும் ஆம் . குடமூக்கு - குடந்தை ; கும்பகோணம் ; அதன்கண் உள்ளதொரு தலம் , கீழ்க்கோட்டம் .` ஓர் வேதியன் ` என்றது மார்க்கண்டேயரை . நெடுமூக்கின் - தும்பிக்கையை யுடைய . நீக்கப் பட்டாரை , ` கொண்டார் ` என்றது , இல் பொருளையும் , ` பொருள் என வழங்கல்போல , எதிர்மறைவகையால் உடைமையாதல் அருளிய பான்மை வழக்கு . ` இடைமருதும் இடமாக்கிப் பண்டே கொண்டார் ` என இயையும் . உம்மை , ` குடமூக்கிற் கீழ்க்கோட்டமே யன்றி ` என , இறந்தது தழுவிற்று .

பண் :

பாடல் எண் : 9

எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.

பொழிப்புரை :

வேள்வித் தெய்வத்தின் நிணம் பொருந்திய தலையைக் கொண்டவரும் , சூரியர்களில் ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும் , சூரியர்களில் மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும் , தன்னையே மெச்சினவனாய் , மாறான , வழியல்லாத வழியிற் சென்ற தக்கன் தலையை வேறாகக் கொண்டவரும் , வெற்றியுடைய அக்கினி தேவனின் கரத்தைக் கொண்டவரும் , வேள்வியைக் காத்து நின்ற வெற்றியில் உயர்ந்த இயமனுடைய தாளை அறுத்தவரும் , சந்திரனை உதைத்தவரும் , அறிவில்லாத தக்கனுடைய வேள்வி முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப் பின் அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார் .

குறிப்புரை :

எச்சன் - வேள்வித் தெய்வம் . பகன் - சூரியர்களில் ஒருவன் . ஒருவன் - மற்றொருவன் . மெச்சன் - தன்னை வியந்தவன் ; செருக்குக் கொண்டவன் ; மெச்சனாகிய வியாத்திரன் என்க . ` யாத்திரிகன் ` என்பது . ` யாத்திரன் ` எனத் திரிந்து நின்றது , ` யாத்திரிகன் ` என்பது , ` வழிச்செல்வோன் ` எனப் பொருள்தருமாகலின் , வியாத்திரிகன் , என்பது . ` மாறான ( வழியல்லாத ) வழியிற் செல்பவன் ` எனப் பொருள் தந்து , தக்கனைக் குறித்தது . ` வியாத்திரன் - தொழில் செய்வோன் ` என்பது தமிழ்ப் பேரகராதி . ` வெஞ்சின வேள்வி வியாத்திரனார்தலை துஞ்சின வாபாடி உந்தீபற ` ( தி .8 திருவா . திருவுந்தி .10) என்றருளியது காண்க . ` அவன் தலையை வேறாக் கொண்டார் ` என்றது , யாட்டின் தலையாகச் செய்தமையை . விறல் - வெற்றி . அங்கி - அக்கினிதேவன் . ` தக்கன் ஏவலால் இயமன் வேள்வியைக் காத்துநின்றான் ` என்பதும் , ` அவன் கால் முரிக்கப் பட்டான் ` என்பதும் இங்கு அறியப்படுகின்றன . ` வேள்வி காத்து ` என்பது பாடம் அன்றென்க . உச்ச நமன் - வெற்றியில் மிக்க இயமன் . ` சந்திரனை உதைத்தார் ` எனச் சீர்கள் வேறுபட வந்தன . அச்சம் எழ -( தீநெறியில் செல்வோர் யாவர்க்கும் ) அச்சம் உண்டாதற் பொருட்டு . ` வந்துகொண்டு . பேசிக் கொண்டு ` என்பன போல . ` அழித்துக் கொண்டு ` என்றதில் கொண்டு என்பது துணைவினை . ` இவ்வாறு அழித்து ` என இயைவித்துரைக்க . ` அருளும் செய்தார் ` என்பது உணர்த்துதலே ஈண்டுத் திருவுள்ளம் என்க . ` அருளும் ` என்னும் உம்மை , சிறப்பும்மை .

பண் :

பாடல் எண் : 10

சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.

பொழிப்புரை :

தன் சடைகள் பலவற்றுள் ஒன்றிடத்தே கங்கையை அடக்கித் தரித்துக் கொண்டவரும் , வீணையைத் தடவிச் சாம வேதத்தின் இசையைக் கொண்டவரும் , புள்ளி மான் தோலை உடை என்னும் ஒரு தன்மையில் ஏற்றுக்கொண்டவரும் , தம்மை நினைவார் உள்ளத்தைத் தம்மிடத்து ஒருங்கிநிற்கும்படி செய்து கொண்டவரும் , வீட்டு வாசல் தோறும் பிச்சை கொண்டவரும் , கையில் கனல் கொண்டவரும் , காபால வேடத்தை விரும்பிக் கொண்டவரும் , இடபத்தைத் தன் வெற்றிக் கொடியில் பொருந்தக் கொண்டவரும் , ஆகிய சிவபெருமானார் என் கொடிய துயரங்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

கங்கை சிவபிரானது சடைகள் பலவற்றில் ஒரு சடைக்கே போதியதாகாது புல் நுனிமேல் நீர் போல் ஆயிற்று என்ப ஆகலின் , ` சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக் கொண்டார் ` என்றருளினார் . உம்மை , சிறப்பு . ` வீணையைத் தடவிச் சாமத்தின் இசையைக் கொண்டார் ` என்க . சாமம் - சாம வேதம் . உழை - மான் ` உடை ` என்றது அதன்தன்மையை , அதனால் , ` உடைஒன்றில் ` என்றதற்கு , ` உடை என்னும் ஒரு தன்மையில் ` என உரைக்க . தோலுங் கொண்டார் - தோலை ஏற்றுக் கொண்டார் . இவ்வும்மை இழிவு சிறப்பு . உள்குவார் - நினைப்பார் . ஒருக்கிக் கொண்டார் - தம்மிடத்து ஒருங்கி நிற்கும்படி செய்து கவர்ந்து கொண்டார் . ` கடை முன்றில் ` என்பது , ` கடைக்கண் முன்றிற்கண் ` என ஏழாம் வேற்றுமைப் பன்மொழித் தொகை . ` கனலும் ` என்புழி , ` கையில் ` என்பது , ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` கனலும் ` என்னும் உம்மை , ஏந்துதல் கூடாமை குறித்து நின்ற உயர்வு சிறப்பு . காபால வேடம் - காபாலம் ` என்னும் நடனக் கோலம் . ` விடையை வென்றிக்கொடியதனில் மேவுமாறு கொண்டார் ` என்க .

பண் :

பாடல் எண் : 11

குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்
தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்
இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே

பொழிப்புரை :

குரா மலர் பாம்பு , பிறை இவற்றைச் சடைமேல் கொண்டவரும் , நந்தீசனைக் குடமுழா வாசிப்பவனாகக் கொண்ட வரும் , சிராமலையைத் தாம் சேர்வதற்குத் திருந்த அமைந்த இடமாகக் கொண்டவரும் , தென்றலைத் தனது நெடிய தேராகக் கொண்ட மன்மதன் அழியச் சினத்தைக் கொண்டவரும் , பராபரன் என்பது தம் பெயராக அமையக் கொண்டவரும் , மேருமலையை வில்லாகக் கையில் கொண்டவரும் , பயங்கள் பலவற்றை உண்டாக்கி இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமா னார் என் துன்பந்தரும் நோய்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .

குறிப்புரை :

அராவும் மதியமும் என்க . ` நந்தீசனைக் குடமுழா வாசகனாக் கொண்டார் ` என்க , வாசகன் - வாசிப்பவன் . ` வாணன் ` என்பவனேயன்றி நந்திதேவரும் குடமுழா வாசித்தல் உண்டு என்க . இனி . ` வாசகன் ` என்றது , மாணிக்க வாசகராகிய திருவாதவூர் அடிகளைக் குறிப்பதாக வைத்து , ` நந்தி தேவரையே அவ்வாறு அவ தரிக்கச் செய்தார் ` எனக்கொள்வாரும் உளர் . சிராமலை - திருச்சிராப் பள்ளிமலை , தென்றல் தேரான் - மன்மதன் . பொன்ற - அழிய ; ` பொன்றச் சினத்தைக் கொண்டார் ` என்க . பராபரன் ( பரன் அபரன் ) - மேலவனும் , கீழவனும் ஆயினவன் ; எல்லாவற்றையும் தன்னுள் அடங்கக் கொண்டவன் ; ` மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க ` ( திருவா . திருவண் . 50) என்றருளியது காண்க . பருப்பதம் , மேரு மலை ; ` அதனைக் கையில் வில்லாகக் கொண்டார் ` என்க . இனி , ` திருப்பருப்பதம் ` என்னும் தலத்தை இடமாகக் கொண்டார் ` என்று உரைத்தலுமாம் . பயங்கள் - அச்சங்கள் ; உறுப்புக் குறைதலும் , உயிர் நீங்குதலும் போல்பவைபற்றி அச்சம் பலவாய்த் தோன்றினமையின் . ` பயங்கள் ` எனப் பன்மையாக அருளினார் . ` இராவணன் என்று ` என முன்னர் வந்தமையின் , அவனை என்றது இராவணனைச்சுட்டுதல் பொருந்துமாறறிக . ` பயங்கள் பண்ணி , இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டார் ` என்க . கொண்டார் என்றது ` ஏற்றுக் கொண்டார் ` என்றபடி ; பின்னர் வாள் முதலியன கொடுத்து அருள் புரிந்தமையின் , ` கொண்டார் ` என்று அருளினார் .
சிற்பி