திருப்பரங்குன்றம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண்டீர்
உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச்
சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியுஞ்
சிலபூதமும் நீரும் திசைதிசையன
சோத்திட்டுவிண் ணோர்பல ருந்தொழநும்
மரைக்கோவணத் தோடொரு தோல்புடைசூழ்ந்
தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம்
படிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, நீர், பெரிய மலையையும், சுரத்தையும் கோயிலாகக் கொண்டுள்ளீர். உம்மைச் சுமந்து கொண்டு திரிகின்ற முல்லை நிலத்து இளைய ஓர் எருது, மண்மேடுகளைத் தன் கொம்பால் குத்தித் தெருவில் துள்ளித் திரியும். சில பூதங்களும், அவற்றின் உரப்பல் முதலிய செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. தேவர் பலரும், `சோத்தம்` எனச் சொல்லி வணங்குமாறு, நீர் அரையிற் கோவணத்தோடு, ஒரு தோலைச் சுற்றி, அதன்மேற் கச்சாகக் கட்டியுள்ளதும் பாம்பு; கையிற் பிடித்திருப்பதும் பாம்பு; அதனால் அடியேங்கள் உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

வருவித்துரைத்தன சொல்லெச்சங்களும் இசையெச்சங்களுமாம்; இவ்வாறு உரைப்பனவற்றைப் பின்னரும் அறிந்து கொள்க.
கோ திட்டை - மிக்க மேட்டு நிலம்; கோ வல் - மிக்க வன்னிலம், இவை இரண்டும் உடனிலை (சிலேடை) வகையால், மலையையும், சுரத்தையும் குறித்து, அஞ்சுதற் காரணத்தைத் தோற்று வித்தன. `பரங்குன்று` என்பதும் `கோவலூர்` என்பதும் இவற்றின் உண்மைப் பொருள். பரங் குன்று - மேலான மலை; கூடற் குடவயின் நிற்றலின் மேலதாயிற்றுப் போலும்!
`சில்லை` என்பது, `தொல்லை, வெள்ளை` என்பனபோல, ஐகார ஈற்றுப் பண்புப் பெயர். சிறுமையை, `சின்மை` என்றல் பான்மை வழக்கு. அஃது ஈண்டு, இளமைமேல் நின்றது. ` சே` திட்டு, `குத்தி` எனப் பிரிக்க. திட்டு - மேடு. நீர் - நீர்மை; குணம்; அஃது ஈண்டு, செயலைக் குறித்தது. `பூதங்கள் வாளா சூழ்கின்றன வில்லை` என்பார், ``பூதமும் நீரும்`` என இரண்டாக்கி அருளினார். அடுக்கு, பன்மை பற்றி வந்தது. `சோத்தம்` என்பது, தாழ்ந்தோர், உயர்ந்தோரிடத்துக் கூறும் வணக்கச் சொல்; அஃது அம்மின்றி, `சோத்து` எனவும் வழங்கும். அவை, தாழ்ந்தோர் செய்யும் வணக்கத்திற்குப் பெயராயும் நிற்கும்.
இது முதல், மூன்று திருப்பதிகத் திருப்பாடல்களைச் சிலர், எல்லாச் சீர்களும் மாச்சீராகி வர, ஒவ்வோர் அடியும் எட்டுச் சீர் உடையதாமாறு சீர் அறுப்பர். சுவாமிகள், இதன் ஆறாம் திருப் பாடலுள் ``தென்னாத் தெனாத் தெத்தெனா`` எனச் சீர் அறுத்து அருளினமையை அவர்நோக்கிற்றிலர். எவ்வாறு சீர் அறுப்பினும், இத் திருப்பாடல்களுள் ஒற்றுக்களும், குற்றியலுகரமும் அலகுபெறா தொழிதல் பெரும்பான்மையாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

முண்டந்தரித் தீர்முது காடுறைவீர்
முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக்
கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்
கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர்
பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம்
பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும்
அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, அடியோங்கள் `பெரியாரொடு நட்டல் இன்பந் தருவது` என்று கருதியிருப்பேமே ஆயினும், நீர் தலை மாலையை அணிந்துள்ளீர், மயானத்தில் வாழ்வீர், அதன்கண் உள்ள சாம்பலை உடல் முழுதும் பூசிக் கொள்வீர், கொடிய பாம்பைக் கழுத்திலும் தோளிலும் கட்டி வைத்திருக்கின்றீர், தேவர்கள், கடலைக் கடைந்து கொணர்ந்து ஊட்டிய பெருவிடத்தினை எளிதாக உண்டீர், இவ்வண்டத்தைக் கடந்து, அதற்கு மேல் உள்ள அண்டத்துக்கும் அப்பால் இருப்பீர். அதனால், ஊனினது திரட்சியாகிய இவ்வுடம்பைச் சுமந்துகொண்டு உம்மோடு தொடர்புகொள்ள வல்லேம் அல்லேம் ஆதலின், உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

``பெரியாரொடு நட்பு இனிதென் றிருத்தும்`` என்பதனை முதற்கண்ணும், ``அண்டங்கடந் தப்புறத்தும் இருந்தீர்`` என்பதனை, ``நஞ்சை உண்டீர்`` என்பதன்பின்னும் வைத்துரைக்க. பின்னரும் இவ்வாறு மாற்றியுரைக்கற்பாலனவற்றை, பொழிப்புரை பற்றி அறிந்துகொள்க.
முண்டம் - தலை. இங்குத் தலைமாலை. `முதுகாடு, புறங்காடு` என்பன, `இடுகாடு, சுடுகாடு` இரண்டற்கும் பொதுவாய பெயர்கள். மெய்யின் முழுமை, நீற்றின்மேல் ஏற்றப்பட்டது. `மூர்க்கப்பாம்பு` என்பது மருவி நின்றது. முண்டம் தரித்தல் முதலியன, இறப்பிற்கு அஞ்சுவார்க்கு அச்சம் விளைப்பனவாதலும், அண்டங்கடந்து இருப்பவரோடு கூடுதல், பிண்டத்தொடு நிற்பார்க்கு இயல்வதன்று ஆதலாலும், ``பிண்டம் சுமந்தும் மொடுங் கூடமாட்டோம்` என்று அருளிச் செய்தார். `சுமத்தலால்` என்பது, `சுமந்து` எனத் திரிந்துநின்றது, ``அஃதாற்றா - தெழுவாரை யெல்லாம் பொறுத்து`` (குறள். 1032). என்பதிற்போல. `இவ்வுடம்பு கொண்டு உம்மை அணுகுதல் இயலாது` என்பது உள்ளுறைப் பொருள். உம்மைகள், சிறப்பும்மைகள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

மூடாய முயலகன் மூக்கப்பாம்பு
முடைநாறிய வெண்டலை மொய்த்தபல்பேய்
பாடாவரு பூதங்கள் பாய்புலித்தோல்
பரிசொன்றறி யாதன பாரிடங்கள்
தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்குந்
துணைமாமணி நாகம் அரைக்கசைத்தொன்
றாடாதன வேசெய்தீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, உம்மிடத்து உள்ளவை அறியாமையுடைய முயலகன், கொடிய பாம்பு, முடை நாற்றம் வீசும் வெண்டலை, நெருங்கிய பல பேய்கள், பாட்டுப் பாடித் திரிகின்ற பூதங்கள், பாய்கின்ற புலியின் தோல், நன்மை, தீமை அறியாத பாரிடங்கள் என்னும் இவையே. உமக்கு மாலை, இதழ் நிறைந்த கொன்றைமலரும், எருக்கம்பூவுமாம். இவற்றோடு அரையில், பெரிய மணியையுடைய பாம்பைக் கட்டிக் கொண்டு, எங்கட்குப் பொருந்தாத செயல்களையே மேற்கொண்டீர்; அதனால், அடியேங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`மூடன்` என்பதனை, `மூடு` என்று அருளினார். `மூள் தாய` எனப் பிரித்து, `சினங்கொண்டு தாவிய` என்று உரைத்தலும் ஆம். திணை விராய் எண்ணியவற்றிற்கு, பன்மை பற்றி அஃறிணை முடிபு கொடுக்கப்பட்டது. கொன்றைப் பூவும், எருக்கம் பூவும் உலகர் விரும்பாதன. துணை - மாலை. `அடாதன` என்பது, நீட்டலாயிற்று. ``எம்பெருமான்`` என்றது, பன்மை ஒருமை மயக்கம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி
மலையான்மடந் தைமண வாளநம்பி
பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா
ளொடுநீருமொன் றாயிருத் தல்லொழியீர்
நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த
நலமொன்றறி யோம்உங்கை நாகமதற்
கஞ்சுண்டுப டம்மது போகவிடீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, மேகம் சூழ்ந்த மாலைப் பொழுதில் தோன்றும் பிறையைச் சூடிய முடியினையுடைய, மலைமகளாகிய நங்கைக்கு மணவாள நம்பியாகிய நீர், துகில் சூழ்ந்த புறத்தினையும், பெருத்த ஊற்றினிமை பொருந்திய தனங்களையும் உடைய அவளும் நீரும் ஒன்றாய் இருத்தலை ஒரு ஞான்றாயினும் ஒழிகின்றிலீர். நீர் நஞ்சினை உண்டு, தேவர்கட்கு அமுதம் ஈந்த நற்செயலை நாங்கள் சிறிதும் அறிந்திலோம்: உமது கையில் உள்ள பாம்பிற்கோ படங்கள் ஐந்து உள்ளன. அப்பாம்பினை ஒருஞான்றும் அப்பாற்போக விடுகின்றிலீர்; அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

மஞ்சு - மேகம். மாலைக் காலத்தில் மேகம் எழுதல் இயல்பாதலால், `மஞ்சுண்ட மாலை` என்று அருளினார். `மேகம் சூழ்தற்குரிய மதி` என்றும் ஆம். ``பஞ்சு`` என்றது, கருவியாகு பெயர். `அல்குல்` என்பது. `பிருட்டம்` என்னும் வடசொற் குறிக்கும் பொருளையே குறிப்பது. அதனால், தொல்காப்பியர் முதலாகச் சங்கத்துச் சான்றோர் பலரது செய்யுட்களுள்ளும், திருமுறைகளாகிய அருளாசிரியர்களது திருமொழிகளுள்ளும் இச்சொல் காணப்படுவதாம். இதன் பொருளை இனிது விளக்கவே போலும், குமரகுருபர அடிகள், தமது சிதம்பரச் செய்யுட்கோவையில் இறைவனது, `மாதிருக்கும் பாதியன் (அர்த்த நாரீசுவரன்)` ஆகிய வடிவத்தை வியந்து பாடிய, ``ஒருவனும் ஒருத்தியுமாய வடிவத்தை, `ஒருவர்` என்ற ஒருசொல் இல்லாவிடில் எப்படிக் குறிப்பது?`` என்ற ஒரு செய்யுள் போலவே, மற்றொரு செய்யுளில் (பா.73),
செவ்வாய்க் கருங்கண்பைந் தோகைக்கும் வெண்மதிச்
சென்னியற்கும்
ஒவ்வாத் திருவுரு ஒன்றே யுளதவ்
வுருவினைமற்
றெவ்வாச் சியமென் றெடுத்திசைப் பேமின்
னருட்புலியூர்
பைவ்வாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று
பாடுதுமே. -சிதம்பரச் செய்யுட் கோவை 73 என்று நயம்படக் கூறினார்!
`எந்தாய்` என்பது, `எம் தாய்` எனப் பிரிக்கப்பட்டு, அண்மை விளியாய், ` எமக்குத் தாயே` எனப் பொருள் தந்து அம்மைக்கும், `எந்தை` என்னும் முறைப்பெயரின் ஈறு விளியேற்குமிடத்து `ஆய்` எனத் திரிந்ததாகக் கொள்ளப்பட்டு, `எமக்குத் தந்தையே` எனப் பொருள் தந்து, அப்பனுக்கும் பொருந்துதல் காண்க. இதனால், `அல்குல்` என்பது ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் உள்ள உறுப்பேயாதல் இனிது விளங்குவதாம். இன்னும் மேற்காட்டிய செய்யுளில், `பையரவல்குல்` என உவமத்தொடுபுணர்ப்பினும் ஆடவர்க்கு உரித் தாதல் குறிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. வரலாற்று முறையின் வந்த பண்டைக் கல்வியையுடைய நூலாசிரியரது நூல்கள், உரையாசிரியரது உரைகள், அண்மைக் காலத்துப் புலவரது செய்யுள்கள் உள்ளிட்ட எல்லாவற்றிலும் இஃது இனிது விளங்கிக் கிடக்கும் இடங்கள் பலவற்றையும் ஈண்டு எடுத்துக்காட்டின், பெரிதும் இயைபின்றிச் செல்வதாம்.
இவ்வாறாகவும், சிலர் இச்சொல்லை இடக்கர்ப் பொருளுடையதாகக் கொண்டு, `இதனைக் கூறுதல் உயர்ந்தோரது பண்பிற்கு ஒத்ததாதல் எங்ஙனம்!` என மலைவர். அதனோடமையாது, கலித் தொகைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில், ``கோடுயர் அகலல்குற் கொடிபுரை நுசுப்பினாள்`` என்பதனை, ``கோடுயர் அகல்குறிக் கொடி புரை நுசுப்பினாள்`` எனத் திருத்தி, குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்டாற்போல, குற்றங் களையப் புகுந்து, இல்லாத குற்றத்தைக் கொணர்ந்து தாம் குற்றப் பட்டாருமுளர்.
அத் திருத்தஞ் செய்தார் கொண்ட பொருளைப் புகழ்ந்து கூறும் வழக்கு, நல்லாசிரியரிடத்து யாண்டும் இல்லையென்றுணர்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர்
புலால்வாயன பேயொடு பூச்சொழியீர்
எல்லாம்அறி வீர்இது வேயறியீர்
என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால்நிழற் கீழொரு நாட்கண்டதுங்
கடம்பூர்க்கரக் கோயிலின் முன்கண்டதும்
அல்லால்விர கொன்றிலம் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, நீர், பொல்லாங் குடை மயானத்தில் ஆடுதலைத் தவிரீர்; அங்குப் புலால் வாயோடு திரிவனவாகிய பேய்களோடு ஆரவாரித்தலை ஒழியீர்; `எல்லாவற்றையும் அறிகின்ற நீர் இது மட்டில் அறிகின்றிலிரே` என்று, உம் அடியவனாகிய யான், இரவும் பகலும் கவல்வேன். முன் ஒருநாள் கல்லால நிழலில் ஆசிரியக் கோலமாகக் கண்டதும், மற்றொருநாள் கடம்பூர்க் கரக்கோயிலில் இலிங்க மூர்த்தியாகக் கண்டதும் தவிர, பிறிதொரு காலத்தும் மயானத்தின் இழிவை நீர் அறிந்து நீங்கியதை யாம் சிறிதும் கண்டதிலம் அதனால், அடியோங்கள் உம்மை அணுகி உமக்குப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

``புலால் வாயன பேய்`` என்றது, பிணந்தின்னும் பேய்களை. அவற்றைக் கூறியது, புறங்காட்டது இயல்பு குறித்தவாறு. பூச்சு- பூசல்; ஆரவாரம். எல்லி - இரவு.
``கடம்பூர்க் கரக்கோயில்`` என்றது, நிலவுலகத் தலங்கள் பல வற்றையும் குறித்தற்கு, ஒன்றை எடுத்தோதியவாறு. விரகு - அறிவு, அஃது அறிந்து நீங்குதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, `தென்னாத்தெனாத் தெத்தெனா` என்று பாடுகின்ற சில பூதங்களும், அவற்றின் செயல்களும் உம்மைச் சூழ்ந்த பல திசைகளிலும் உள்ளன. ஆயினும், நீர், பலவாகிய நான்கு வகைப் பட்ட வேதங்களைப் பாடுவீர்; திருப்பாசூரில் இருக்கின்றீர் எனினும், `படம் பக்கம்` என்னும் பறையைக் கொட்டும் தலமாகிய திருவொற்றியூரீராய்த் தோன்றுகின்றீர். பண் போலும் மொழியினை யுடைய உமையை ஒரு பாகத்தில் நீங்காது கொண்டு, குடி வாழ்க்கையீராய்க் காணப்படுகின்றீர் ஆயினும், புறங்காட்டிடத்தில் பற்று நீங்கமாட்டீர். `அண்ணாமலை யிடத்தேன்` என்றீர் ஆயினும், ஆரூரில் இருக்கின்றீர் அதனால், உம்மை ஒருதலையாகத் துணிதல் கூடாமையால், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`தென்னாத்தெனாத் தெத்தெனா` என்றது, இசைக்குரிய வண்ணவகையே யாயினும், உடனிலை வகையால், வாயில் வந்தபடி பாடுதலையுங் குறித்தது.
படுகாடு - யாவரும் அழியும் காடு. ``அண்ணாமலையேன்`` என்றது வேறு முடிபாகலின், பால்வழு வின்றாயிற்று. `அண்ணா மலையேம்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந்
தொழநிற்றீர்பெற் றமுகந் தேறிடுதிர்
பங்கம்பல பேசிடப் பாடுந்தொண்டர்
தமைப்பற்றிக்கொண் டாண்டு விடவுங்கில்லீர்
கங்கைச்சடை யீர்உம் கருத்தறியோம்
கண்ணுமூன்றுடை யீர்கண்ணே யாய்இருந்தால்
அங்கத்துறு நோய்களைந் தாளகில்லீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

கங்கையை உடைய சடையை உடையவரே, இறைவரே, நீர், வேட்டுவர் போலச் சிங்கத்தின் தோலைப் போர்த்துக் கொள்வீர் ஆயினும், தேவர் கூட்டம் வணங்க நிற்பீர். யானை முதலியன இன்றி எருதை விரும்பி ஊர்வீர் ஆயினும், `இவர் சிலரை ஒட்டி அடிமைகொள்ளல் எற்றிற்கு` என உம்மைப் பலரும் பல குறை சொல்லுமாறு, பாடவல்ல, தொண்டர்களை வலிந்து ஈர்த்து அடிமை கொண்டு, அவர்களை விடவும் மாட்டீர் அதனால், உம் கருத்தினை நாங்கள் அறியகில்லோம். கண்களோ மூன்றுடையீர் ஆயினும், நாங்கள் உம் எதிர் நின்று அகலாதிருக்கின்றோம் என்றால், நீர் எங்கள் உடம்பில் பொருந்தியுள்ள நோயைத் தீர்த்துப் பணிகொள்ள மாட்டீர் ஆகலின், அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணி செய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

``சிங்கம்`` என்றது, நரசிங்கத்தை. திருமால் நரசிங்கமாய்த் தோன்றி இரணியனை அழித்து அவன் குருதியைப் பருகினமையால் செருக்குற்று உலகத்தை அழிக்கத் தொடங்க, தேவர்கள் முறையீட்டிற்காகச் சிவபெருமான் சரபமாய்த் தோன்றி, அதனை அழித்து, அதன் தோலைப் போர்த்துக்கொண்டான் என்பது புராண வரலாறு. இதனைச் சரபோபநிடதமும் கூறும். ``கண்ணேயாய்`` என்றதில், ``கண்`` என்றது முன் இடத்தை; அது, ``கண்ணின்று கண்ணறச் சொல்லினும்`` (குறள் - 184). என்பதனாலும் அறியப்படும். `கருத்தாயிருந்தால்` என்பதும் பாடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர்
பெருங்காட்டகத் திற்பெரும் பேயும்நீரும்
துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச்
சுற்றுநாகத்த ராய்ச்சுண்ண நீறுபூசி
மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய்
மற்றும்மற்றும் பலபல வண்ணத்தராய்
அணிவண்ணத்த ராய்நிற்றீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, நீர், பிணிக்கும் இயல்பினையுடைய எங்கள் வலியவினையை நீக்கி அருள் பண்ணு கின்றிலீர்; அன்றியும், பெரிய காட்டிடத்திற் பெரிய பேயும் நீருமாய்த் துணிந்து நிற்கின்ற தன்மையின் மேலும், தோல் ஒன்றை உடுத்து, அதன் மேற் சுற்றிய பாம்பை உடையவராய், சாம்பலை நறுமணப் பொடியாகப் பூசிக் கொண்டு, நீல மணிபோலும் நிறத்தின் மேலும் மற்றொரு நிறத்தை யுடையவராய், அதன்மேலும் பற்பல நிறத்தை உடையவராய், எவ்வாற்றானும் அழகிய வடிவத்தை உடையவராகியே நிற்றலால் அடியோங்கள் உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`எல்லாம் வல்லிராகிய உம்மை யாது செய்து உவப்பிப்பேம் என அஞ்சுகின்றேம்` என்றவாறு. `நும் குறை எம்மால் முடிந்தது என உவந்து எமக்கு நீர் அருளல் இல்லை; எம் அன்பு மாத்திரைக்கே அருள்வீர்` என்பது உள்ளுறைப் பொருள்.
``நீரும்`` என்புழி, `ஆய்` என்பதும், ``சுண்ணம்`` என்புழி, `ஆக` என்பதும் தொகுத்தலாய் நின்றன. ``நாகத்தராய்`` முதலியன, இட வழுவமைதி. மணிவண்ணம், உமையுடையது; ``ஓர் வண்ணம்`` என்றது, மாணிக்க வண்ணத்தை; அதுவே சிவபிரானுடையது. மற்றும் பல பல வண்ணமாவன, அடியார்கள் பொருட்டும் உலகத்தை நடத்துதற் பொருட்டும் கொள்ளும் வடிவங்கள். இறைவனைச் சார்ந்த பொருள் யாதாயினும் அஃது அழகுடையதாகி அவனுக்குப் பேரழகு செய்வ தல்லது பிறிதாகாமையின், ``அணிவண்ணத்தராய்`` என்று அருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர்
மலையின்தலை யல்லது கோயில்கொள்ளீர்
வேளாளிய காமனை வெந்தழிய
விழித்தீர்அது வன்றியும் வேய்புரையும்
தோளாள்உமை நங்கையொர் பங்குடையீர்
உடுகூறையுஞ் சோறுந்தந் தாளகில்லீர்
ஆளாளிய வேகிற்றீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே, இறைவரே, நீர், கொலைத் தொழிலை மேற்கொண்ட யானையைக் கொல்லுதல் செய்தீர்; மலை உச்சியில் அல்லது கோயில் கொள்ளமாட்டீர்; வேட்கையை விளைக்கும் அம்பினை ஏவிய காமனை வெந்து அழியுமாறு அழித்தீர்; அதற்கு மாறாயும், மூங்கில் போலும் தோள்களை யுடையவளாகிய, `உமை` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையீர்; நும் அடியவர்க்கு, உடுக்கின்ற கூறையையும், உண்கின்ற சோற்றையும் கொடுத்து ஆளமாட்டீர்; அடியவரை அடிமை கொள்ளுதல் மட்டுமே வல்லீர்; அதனால், அடியேங்கள். உமக்கு ஆட்பட்டுப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`யானையை வெறுப்பீர், மலைக்கண் வாழ விரும்புதல் என்னை?` என்றவாறு. ``ஆளிய`` மூன்றனுள், முதலன மூன்றும் பெயரெச்சங்கள்; அவை, `ஆண்ட` என டகரம் பெற்று வரற்பாலன, இகரம் பெற்று வந்தன. இறுதியது, `செய்யிய` என்னும் வினையெச்சம். `ஆளா ளியவே கற்றீர்` என்பதும் பாடம்; வேள் - வேட்கை; முதனிலைத் தொழிற்பெயர்; அது, காரியவாகுபெயராயிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பாரோடுவிண் ணும்பக லுமாகிப்
பனிமால்வரை யாகிப் பரவையாகி
நீரோடுதீ யுந்நெடுங் காற்றுமாகி
நெடுவெள்ளிடை யாகி நிலனுமாகித்
தேரோட வரையெடுத் தவரக்கன்
சிரம்பத்திறுத் தீரும செய்கையெல்லாம்
ஆரோடுங்கூ டாஅடி கேள்இதுஎன்
அடியோம்உமக் காட்செய அஞ்சுதுமே.

பொழிப்புரை :

இறைவரே, மண்ணுலகமும் விண்ணுலகமும் ஆகியும், மலை ஆகியும், கடல் ஆகியும், எவ்விடத்தும் இயங்குகின்ற காற்றும் ஆகியும், எல்லையற்ற வெளி ஆகியும். நிலம் ஆகியும் இவ்வாறு எல்லாப் பொருளும் ஆகி நின்றீர். இனி, தனது ஊர்தி தடை யின்றி ஓடுதற் பொருட்டு நுமது மலையைப் பெயர்த்த அரக்கனது தலைகள் பத்தினையும் நெரித்தீர். உம்முடைய இச்செய்கைகள் எல்லாம், யார் செய்கையோடும் ஒவ்வா; இஃது என்! இவற்றால் அடி யோங்கள் உமக்குப் பணிசெய்ய அஞ்சுவேம்.

குறிப்புரை :

`இஃது என்` என்றது, பெரியோனது பேராற்றலை யறிந்து துணுக்குற்ற அச்சக் குறிப்பு.
``பார், விண்`` என்றது உலகங்களையும், `` நெடுவெள்ளிடை நிலன்`` என்றது, அவற்றிற்கு முதலாகிய பூதங்களையும் என்க. உம்மையையும், `ஆகி` என்பதனையும் செய்யுள் நோக்கி, ஏற்ற பெற்றியான் விரித்தும் தொகுத்தும் அருளியவாறு. `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ``ஆர்`` என்றது, ஆகுபெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமென்
றமரர்பெரு மானையா ரூரன்அஞ்சி
முடியால்உல காண்டமூ வேந்தர்முன்னே
மொழிந்தாறுமோர் நான்குமோ ரொன்றினையும்
படியாஇவை கற்றுவல் லவடியார்
பரங்குன்றமே யபர மன்னடிக்கே
குடியாகிவா னோர்க்கும்ஓர் கோவுமாகிக்
குலவேந்தராய் விண்முழு தாள்பவரே.

பொழிப்புரை :

தேவர் பெருமானாகிய சிவபெருமானிடத்தில் அச்சங்கொண்டு, நம்பி ஆரூரன், முடியொடு நின்று உலகத்தை ஆள் கின்ற மூவேந்தர் முன்னிலையில், `அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும்` என்று சொல்லிப் பாடிய இப்பதினொரு பாடல்களையும், இவையே தமக்கு நெறியாகும்படி ஓதி உணர வல்ல அடியார்கள், திருப் பரங்குன்றத்தை விரும்பி எழுந்தருளியுள்ள அப்பரமனது திருவடி நிழலிலே வாழ்கின்றவராய், அரசர் குடியில் தோன்றிய அரசரோடு ஒருங்கொத்து மண் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்கும் ஒப்பற்ற அரசராகி விண் முழுதும் ஆள்பவரே ஆவர்.

குறிப்புரை :

``மொழிந்த`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலா யிற்று. திருக்கடைக்காப்பினையும் ஒழியாது ஓதுதல் வேண்டும் என்பார், `பதினொன்றும்` என்பது வரக் கூறினார். படி - முறை; நெறி. `இவ் வுலகத்திலே இறைவனது திருவடி இன்பத்தைப் பெறுவர்` என்றற்கு, ``பரமன் அடிக்கே குடியாகி`` என முதற்கண் அருளினமையின், அதனை மீள இறுதிக் கண் அருளாது, ``விண்முழு தாள்பவரே`` என்று போயினார். ``கோ`` என்றது, பன்மை யொருமை மயக்கம். ``வானோர்க்கும்`` ``கோவும்`` என்னும் உம்மைகள், சிறப்பு. ``குல வேந்தராய்`` என்பதில் உள்ள ஆக்கச் சொல் ஒப்புமை குறித்து நின்றது.
சிற்பி