திருநெல்வாயில் அரத்துறை


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்
கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெல்வாயி லரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

மலையிடத்துள்ள அகில்களையும் , ஒளியை யுடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத்துறையின் கண் என்றும் எழுந்தருளியிருக்கும் , நிலவினை யுடைய வெள்ளிய பிறையைச் சூடிய மாசற்றவனே , உலகியலில் நின்றோர் அனைவரும் , ` நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார் ; இல்லற நெறியிலே ஒழுகினார் ; நன்றாக உண்டார் ; உடுத்தார் ; மூப்படைந்தார் ; இறந்தார் ` என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன் ; ஆதலின் , அடியேன் அச்சொல்லிலிருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` நல்வாய் ` என்றதில் வாய் - துணை . ` இல் ` என்றது இல்லாளைக் குறித்தது . ` பிறனில் விழையாமை ` ( குறள் , அதி . 15) என்றாற்போல . ` இல் செய்தார் ` என்றது , ` பொருள் செய்தார் ` என்றல் போல , ` இல்லாளை அடைந்தார் ` எனப்பொருள் தந்தது . ` உடுத்தார் ` என்றது , இனிது வாழும் வாழ்க்கை வகையில் ஒன்றை எடுத்து ஓதியது ஆகலின் , ` உண்டார் ` என்பதும் தழுவப்பட்டது . சொல்லை உடையாரை , ` சொல் ` எனப் பாற்படுத்தருளினார் . இத்திருப்பதிகம் முழுதும் , ` உய்ய ` என்பதனை , ` உய்ந்து ` எனத் திரிக்க . சூழ்ச்சியை , ` சூழல் ` என அருளினார் . இறைவனிடம் தம் அடிமை தோன்ற வெளிப்படையாகக் கூறாது குறிப்பாற் கூற நினைந்தாராகலின் , ` உய்யும் வழியைச் சொல் ` என , அது வேறொன்று உளதுபோல அருளினாராயினும் , ` உய்தி நீயேயாகலின் , உன்னை வேண்டுகின்றேன் ; என்னை உய்யக்கொள் ` என்பதே திருக்குறிப்பு என்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கறிமாமிள கும்மிகு வன்மரமும்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெறிவார்குழ லாரவர் காணடஞ்செய்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
வறிதேநிலை யாதஇம் மண்ணுலகின்
நரனாக வகுத்தனை நானிலையேன்
பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப்
பொருதுன்னடி யேபுகுஞ் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

கறிக்கப் படுகின்ற மிளகையுடைய கொடியையும் , மிக்க வலிய மரங்களையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , நெறித்த நீண்ட கூந்தலையுடைய மகளிர்தாம் பிறர் அனைவரும் விரும்பிக் காணத்தக்க நடனத்தைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே , உயிர்கள் பலவும் பயன் ஏதும் இன்றிப் பிறந்து இறக்கும் இம் மண்ணுலகத்தில் அடியேனை மகனாகப் படைத்தாய் ; ஆதலின் , நான் இறவாது இரேன் ; அதனால் , ` பொறி ` எனப்படுகின்ற , அவாவின் வாயில்களாகிய இவ்வைந்தினையும் அடங்குமாறு வென்று , உன் திருவடிக்கண்ணே புகுதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` குழலாரவர் ` - அவர் , பகுதிப்பொருள் விகுதி . ` காண நடஞ்செய் ` என்பது பிழைபட்ட பாடம் . இத்திருப்பாடல் , ` பொறி வாயில் ஐந்தவித்தான் ` என்னும் திருக்குறளை (6) நினைப்பிப்பது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய்
புனிதாபொரு வெள்விடை யூர்தியினாய்
எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான்
வண்டார்குழ லாள்மங்கை பங்கினனே
அற்றார்பிற விக்கடல் நீந்தியேறி
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

புற்றின்கண் வாழ்கின்ற ஆடுகின்ற பாம்பை விரும்பி அரையின்கண் கட்டியவனே , தூய்மையானவனே , போர் செய்கின்ற வெண்மையான இடப ஊர்தியை உடையவனே , எம் பெருமானே , வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே , திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே , அடியேன் ஒருகண் இல்லாதவனாய் இருக்கின்றேன் ; இஃது எத்தன்மைத்து என்பேன் ! மற்றும் வினவின் , உன்னையன்றி வேறொரு பற்றுக்கோடு இல்லேன் ; ஆதலின் , அடியேன் , இறப்புப் பொருந்திய பிறவிக் கடலைக் கடந்து கரையேறிப் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` ஆர்த் துகந்தாய் ` என்றதனை , ` உகந்து ஆர்த்தாய் ` என மாற்றி யுரைக்க . இறைவனது விடைக்குப் போர் செய்தல் இன்மையின் , ` பொருவிடை ` என்றது , இனம்பற்றிய அடை புணர்த்ததாம் ; இறைவனைச் சார்ந்த பொருள்கட்கு இவ்வாறான அடைபுணர்த்தல் பின்னும் வருதலை அறிந்துகொள்க . இனி , ` திரிபுரம் எரித்த ஞான்று திருமால் உருத்திரிந்து வந்து தாங்கிய இடபமே போர்விடை ` என்றும் , ` அறக் கடவுள் உருத்திரிந்து வந்த இடபம் அறவிடை ` என்றும் கூறுப . ` அற்றம் ` என்பது , அம்முக் குறைந்து நின்றது . அற்றம் - அறுதி ; இறப்பு . இத்திருப்பாடல் , ` பிறவிப் பெருங்கடல் நீந்துவர் ` என்னும் திருக்குறளை (10) நினைப்பிப்பது , ` மற்றேயொரு பற்றிலன் ` என்பதும் பாடம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீஇடுயர் சோலைநெல் வாயிலரத்
துறைநின்மல னேநினை வார்மனத்தாய்
ஓஒடுபு னற்கரை யாம்இளமை
உறங்கிவ்விழித் தாலொக்கும் இப்பிறவி
வாஅடியி ருந்துவருந் தல்செய்யா
தடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

கிளைகள் உயர்ந்த கோங்க மரத்தின் மலர்களையும் , வேங்கை மரத்தின் மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , நெடியனவாக ஓங்கிய சோலைகளை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , உன்னை நினைகின்றவரது நெஞ்சத்தில் வாழ்பவனே , இப்பிறப்பு , உறங்கியபின் விழித்தாற் போல்வது ; இதன்கண் உள்ள இளமையோ , ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும் ; ஆதலின் , ` என் செய்வது ` என்று மெலிவுற்று நின்று வருந்தாது , அடியேன் , இப் பிறவியிலிருந்து பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

இத்திருப்பாடலில் அளபெடைத் தொடை வந்தது . அளபெடையின்றி ஓதுதல் பாடமாகாமை அறிக . ஓடு புனற்கரை - ஆற்றின் கரை ; அது நிலையாது அழிதல் திண்ணமாகலின் , யாக்கை நிலையாமைக்கு உவமையாயிற்று . உறங்கி - உறங்கியபின் . பிறப்பை , ` உறங்கியபின் விழித்தாற் போல்வது ` எனவே , இறப்பு , விழித்தபின் உறங்கினாற் போல்வது என்பது பெறப்படும் . படவே , ` பிறப்பும் இறப்பும் , விழிப்பும் உறக்கமும் போலக் கடிதின் மாறி மாறி வரும் ` என யாக்கையது நிலையாமையை அருளிச்செய்தவாறாயிற்று . இது , ` உறங்குவது போலும் சாக்கா டுறங்கி - விழிப்பது போலும் பிறப்பு ` என்னும் திருக்குறளை (339) மேற்கொண்டு ஓதியதாதல் அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

உலவும்முகி லிற்றலை கற்பொழிய
உயர்வேயொ டிழிநிவ வின்கரைமேல்
நிலவும்மயி லாரவர் தாம்பயிலும்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
புலன்ஐந்து மயங்கி அகங்குழையப்
பொருவேலொர் நமன்றமர் தாம்நலிய
அலமந்தும யங்கி அயர்வதன்முன்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

உலாவுகின்ற மேகங்களினின்றும் மலையின்கண் மழை பொழியப்பட , அந்நீர் , ஓங்கிய மூங்கில்களோடு இழிந்து வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள , விளங்குகின்ற மயில் போலும் மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத் துறையின் கண் எழுந்தருளியுள்ள மாசற்றவனே , ஐந்து புலன்களும் தத்தமக்கு உரிய பொறிகளுக்கு எதிர்ப்படாது மாறும்படியும் , மனம் மெலியும்படியும் , போர் செய்கின்ற முத்தலை வேலை ( சூலத்தை ) உடைய கூற்றுவனது ஏவலர் வந்து வருத்த , பற்றுக்கோடின்றி , உணர்வு தடுமாறி நின்று இளைத்தற்குமுன் , அடியேன் , இறப்பினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

தலைப் பெயல் சிறந்ததாகலின் அதனையே அருளினார் . ` அவர் `, பகுதிப் பொருள் விகுதி . ` புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐமேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள்புரிவான் ` ( தி .1 ப .130 பா .1) என்று சம்பந்தப் பெருமானாரும் , ` வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மை உன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை ` ( தி .4 ப .96 பா .6) என அப்பர் பெருமானாரும் அருளிச் செய்தமை காண்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

ஏலம்மில வங்கம் எழிற்கனகம்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நீலம்மலர்ப் பொய்கையில் அன்னமலி
நெல்வாயி லரத்துறை யாய்ஒருநெல்
வாலூன்ற வருந்தும் உடம்பிதனை
மகிழாதழ காஅலந் தேன்இனியான்
ஆலந்நிழ லில்லமர்ந் தாய்அமரா
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

` ஏலம் இலவங்கம் ` என்னும் மரங்களையும் , அழகிய பொன்னையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரையில் உள்ள , நீலோற்பல மலர்ப் பொய்கையில் அன்னங்கள் நிறைந்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளி யுள்ளவனே , அழகனே , ஆல் நிழலில் அமர்ந்தவனே , என்றும் இறவாதிருப்பவனே , ஒரு நெல்லின் வால் ஊன்றினும் பொறாது வருந்துவதாகிய இவ்வுடம்பினை யான் உறுதி யுடையது என்று கருதி மகிழாது உறுதியை நாடி உழன்றேன் ; அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லி யருள் .

குறிப்புரை :

` நீல் அம் மலர் ` எனப்பிரித்து , ` நீலம் ` என்றதில் அம்முக் குறைந்ததாக உரைக்க . ` ஊன்றவும் ` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று . அமரன் - மரித்தல் இல்லாதவன் ; இஃது , ஈண்டுக் காரணக் குறியாய் , சிவபெருமானை உணர்த்திற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சிகரம்முகத் திற்றிர ளாரகிலும்
மிகவுந்தி வருந்நிவ வின்கரைமேல்
நிகரின்மயி லாரவர் தாம்பயிலுந்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
மகரக்குழை யாய்மணக் கோலமதே
பிணக்கோலம தாம்பிற வியிதுதான்
அகரம்முத லின்னெழுத் தாகிநின்றாய்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

மலைச் சிகரத்தினின்றும் , திரளாய் நிறைந்த அகிலையும் பிறவற்றையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரையில் உள்ள , உலகின் மயில்கள் போலாத வேறுசில மயில்கள் போலும் சிறந்த மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே , எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய முதல் எழுத்துப்போன்று , பொருள்களுக்கெல்லாம் முதற்பொருளாகி நிற்பவனே , இவ்வுடம்பு தான் , மணக்கோலந்தானே கடிதிற் பிணக்கோலமாய் மாறுகின்ற நிலையாமையை உடையது ; ஆதலின் , அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` அகிலும் ` என்ற உம்மை எதிரது தழுவிய எச்சம் . ` நிகரில் மயில் ` என்றதற்கு ஈண்டு உரைத்தவாற்றை , ` அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ ` என்னும் திருக்குறட்குப் (1081) பரி மேலழகர் உரைத்த உரைபற்றியும் உணர்க . ` அவர் `, பகுதிப் பொருள் விகுதி ; தாம் , அசைநிலை . ` பிறவி ` என்றது உடம்பை . ` இதுதான் ` என்னும் பிரிநிலை , உடம்பினது இழிவு தோற்றி நின்றது . ` அகர முதலின் எழுத்தாகி நின்றாய் ` என்றது , ` அகர முதல எழுத்தெல்லாம் ; ஆதி - பகவன் முதற்றே உலகு ` என்னும் திருக்குறளை (1) மேற் கொண்டு அருளிச்செய்ததாதல் அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்
திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி
ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்
பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்
அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

திண்ணிய தேர்களை உடைய , நீண்ட தெருக்களை யுடைய இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும் முன்னர் நெரித்துப் பின்னர் அவனுக்கு அருள்பண்ணி , நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த , முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , மேலான ஒளி வடிவினனே , தேவனே , தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே , நான் முற் பிறப்பிற் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலும் சொல் லும் பேற்றினைப் பெற்றேன் ; இனி , அடியேன் , உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

தேவர்க்குத் தேவர் , காரணக் கடவுளர் ; அயனும் , மாலும் . நாமமாவது , திருவைந்தெழுத்து . ` பண்டு செய்த பாக்கியத்தால் திருவைந்தெழுத்தைப் பயிலப் பெற்றேன் ; இனி , அதன் பயனைப் பெறுதல் வேண்டும் ; அப் பயனை அளித்தருள் ` என வேண்டி யருளியவாறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாணாவுரு வாகியொர் மண்ணளந்தான்
மலர்மேலவன் நேடியுங் காண்பரியாய்
நீணீண்முடி வானவர் வந்திறைஞ்சுந்
நெல்வாயி லரத்துறை நின்மலனே
வாணார்நுத லார்வலைப்பட் டடியேன்
பலவின்கனி ஈயது போல்வதன்முன்
ஆணோடுபெண் ணாமுரு வாகிநின்றாய்
அடியேனுய்யப் போவதொர் சூழல்சொல்லே.

பொழிப்புரை :

சிறப்பில்லாத குறள் உருவாகி உலகத்தை அளந்த திருமாலும் , மலரின்கண் இருக்கும் பிரமனும் தேடியும் காணுதற்கு அரியவனே , நீண்ட முடியினையுடைய தேவர்கள் வந்து வணங்கு கின்ற , திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே , ஆணும் பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டு நிற்பவனே , அடியேன் , ஒளி பொருந்திய நெற்றியையுடைய மாதரது மையலாகிய வலையிற்பட்டு , பலாப் பழத்தில் வீழ்ந்த ஈயைப் போல அழிவதற்குமுன் , அவர் மையலினின்றும் பிழைத்துப்போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள் .

குறிப்புரை :

` சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் - கூனும் குறளும் ஊமும் செவிடும் - மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு - எண்பே ரெச்சம் ` ( புறம் . -28) என்பவாகலின் , குறள் உருவினை , ` மாணா உரு ` என்று அருளிச்செய்தார் . ` நீள் நீள் ` என்றது , ` நீளல் நீண்ட ` எனப் பொருள் தந்து , ` உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் ` ( க லி . -23) என்றாற் போல நின்றது . ` வாளார் ` என்பது , எதுகை நோக்கி , ` வாணார் ` எனத் திரிந்து நின்றது . ` நீணுலகெலாம் ` ( தி . 5 ப .2 பா .4) என்றாற்போல , ` ஆணோடு பெண்ணாம் உருவாகி நின்றாய் ` என்றது , அவ்வுருவம் பெண்ணாசை நீக்கியருளுவது என்னும் குறிப்புடையது ; ` நின்றனையே - பெண்பயிலுருவ மொடு நினைந் தெனது பெண்மயலகற்றுநா ளுளதோ ` ( சோணசைல மாலை - 10) எனப் பிற்காலத்தவரும் கூறுமாறு அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

நீரூரு நெடுவயல் சூழ்புறவின்
நெல்வாயி லரத்துறை நின்மலனைத்
தேரூர்நெடு வீதிநன் மாடமலி
தென்னாவலர் கோனடித் தொண்டன்அணி
ஆரூரன் உரைத்தன நற்றமிழின்
மிகுமாலையொர் பத்திவை கற்றுவல்லார்
காரூர்களி வண்டறை யானைமன்ன
ரவராகியொர் விண்முழு தாள்பவரே.

பொழிப்புரை :

நீர் பாய்கின்ற நீண்ட வயல்கள் சூழ்ந்த , முல்லை நிலத்தை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளி யிருக்கின்ற மாசற்றவனாகிய இறைவனை , தேர் ஓடும் நீண்ட தெருக்களில் நல்ல மாடமாளிகைகள் நிறைந்த , தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவனும் , சிவபெருமானுக்கு அடித் தொண்டனும் ஆகிய அழகிய ஆரூரன் பாடிய , நல்ல தமிழ் மொழியினால் ஆகிய உயர்ந்த பாமாலையின்கண் உள்ள பத்துப் பாடல் களாகிய இவற்றைக் கற்று உணரவல்லவர் , கருமை மிக்க , களிப்பினை உடைய வண்டுகள் ஒலிக்க வருகின்ற யானையை உடைய மன்னர் களாகி மண்ணுலகம் முழுதும் ஆண்டு , பின் தேவர்க்குத் தலைவராய் ஒப்பற்ற விண்ணுலகம் முழுதும் ஆள்பவர் ஆவர் .

குறிப்புரை :

` நாவ லூர் ` என்னும் இருபெயரொட்டின்கண் ` நாவல் ` என்னும் ஒரு பெயரைப் பிரித்தோதினார் , ` மா , பலா ` என்றல்போல . ` அணி ஆரூரன் ` என்றருளியதனால் , ` ஆரூரன் ` என்றது ஊரால் வந்த பெயராயிற்று . ` அடித்தொண்டு பண்ணி ` என்ற ஒரு பாடமும் உண்டு . வண்டுகள் , மதநீரில் மொய்ப்பன என்க . ` மன்னராகி ` என்றதனால் , ` தேவர்க்குத் தலைவராகி ` என்பதும் , ` விண்முழுது ஆள்பவர் ` என்ற தனால் , ` மண்முழுது ஆள்பவர் ` என்பதும் பெறப்பட்டன .
சிற்பி