திருவஞ்சைக்களம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே
சடைமேற்கங்கை வெள்ளந் தரித்ததென்னே
அலைக்கும்புலித் தோல்கொண் டசைத்ததென்னே
அதன்மேற்கத நாகங்கச் சார்த்ததென்னே
மலைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டலைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரத்தின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய , ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ தலைக்கு அணிகலமாகத் தலைமாலையை அணிந்தது என் ? சடையின்மேல் , ` கங்கை ` என்னும் ஆற்றைத் தாங்கியது என் ? கொல்லும் தன்மை யுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என் ? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என் ?

குறிப்புரை :

சிவபிரான் , தலைமாலையை மார்பில் அணிதலேயன்றித் தலையிலும் அணிந்துள்ளான் என்பது , ` தலைமாலை தலைக் கணிந்து ` ` தலையா லேபலி தேருந் தலைவன் ` ( தி .4 ப .9 பா .1) என்றாற்போலத் திருமுறைகளிற் பிறவிடத்தும் காணப்படும் . இது தலையில் அணியும் உருத்திராக்கம் போல்வதாம் . தலைகள் , இறந்த பிரமன் முதலியோருடையவை . கதம் - சினம் . ` நாகக்கச்சு ` என்பதும் பாடம் . ` மகோதை ` என்பது நகரமும் , ` அஞ்சைக்களம் ` என்பது திருக்கோயிலும் என்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பிடித்தாட்டிஓர் நாகத்தைப் பூண்டதென்னே
பிறங்குஞ்சடை மேற்பிறை சூடிற்றென்னே
பொடித்தான்கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே
புகர்ஏறுகந் தேறல் புரிந்ததென்னே
மடித்தோட்டந்து வன்றிரை யெற்றியிட
வளர்சங்கம்அங் காந்துமுத் தஞ்சொரிய
அடித்தார்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால் , கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன , இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய திரு வஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ , விரும்பத் தகாத பாம்பை , பிடித்து ஆட்டுதலையும் , பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என் ? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என் ? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என் ? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என் ?

குறிப்புரை :

` ஓர் நாகத்தை ` என்றது , இடைநிலைத் தீவகமாய் , முன்னும் சென்று இயைந்தது . அதன்கண் , ` ஒன்று ` என்பது , ` சிறிது ` என்னும் பொருளதாய் , இழிபினை உணர்த்திற்று . ` பொடித்தான் ` என்புழித் தகரம் , விரித்தல் . ஏற்றிற்கு இழிவு , யானை , குதிரைகளோடு , நோக்க வருவது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே
சிறியார்பெரி யார்மனத் தேறலுற்றால்
முந்தித்தொழு வார்இற வார்பிறவார்
முனிகள்முனி யேஅம ரர்க்கமரா
சந்தித்தட மால்வரை போற்றிரைகள்
தணியாதிட றுங்கட லங்கரைமேல்
அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால்
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய , அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே , முனிவர்கட்கெல்லாம் முனிவனே , தேவர்கட்கெல்லாம் தேவனே , உன்னை உள்ளந்தெளியப்பெற்றால் , சிறியாரும் பெரியாராவர் . விரைந்து வந்து உன்னை வணங்குபவர் , இறத்தலும் பிறத்தலும் இலராவர் . அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு , நீ , மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை .

குறிப்புரை :

` அடியேனும் அவ்வாற்றால் உன்னைத் தெளிந்து உன்னிடம் பிணிப்புண்டு , உன்னை வணங்கப்பெற்றேன் ஆதலின் எனக்கும் அவ்விறத்தல் பிறத்தல்களை நீக்கியருளல் வேண்டும் ` என்பது திருக்குறிப்பு . நெல்லிக்கனி , அமுதத் தன்மையுடையது ஆதலின் , ` நெல்லிக் கனியே ` என்றது , ` அமுதமே ` என்றவாறு . நெல்லிக்கனி அத்தன்மைத்தாதலை , அதியமான் ஔவையார்க்கு அளித்த நெல்லிக்கனி பற்றியும் அறியலாகும் . மாணிக்கவாசகரும் இறைவனை , ` நெல்லிக் கனியைத் தேனைப் பாலை - நிறைஇன்னமுதை அமுதின் சுவையை ` ( தி .8 புணர்ச்சிப் பத்து - 4) என்று அருளிச் செய்தார் . ` சிறியாரும் ` என்னும் உம்மையும் , ` பெரியார் ` என்னும் ஆக்கவினைக் குறிப்பில் ஆக்கச்சொல்லும் தொகுத்தலாயின . ` மனந் தேறலுற்றால் ` என்பது வலிந்து நின்றது . ` நீ அவர் மனத்து ஏறலுற்றால் ` எனப் பொருள் கூறுவாரும் உளர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

இழைக்கும்மெழுத் துக்குயி ரேஒத்தியால்
இலையேஒத்தி யால்உளை யேஒத்தியால்
குழைக்கும்பயிர்க் கோர்புய லேஒத்தியால்
அடியார்தமக் கோர்குடி யேஒத்தியால்
மழைக்குந்நிக ரொப்பன வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டழைக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் , பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி , வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ , உலகத்தை இயக்குதலில் , எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய் ; இல்லா தாய் போல்கின்றாய் ; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய் ; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய் ; அடியார்களுக்கு அணியையாதலில் , அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய் .

குறிப்புரை :

` ஆதலால் , அடியேனுக்கு அருளல் வேண்டும் ` என்பது குறிப்பெச்சம் . ` எழுத்து ` எனச் சிறப்பித்துக் கூறப்படுவன உயிரும் மெய்யுமே யாகலானும் , அவற்றுள் உயிரைப் பிரித்தமையால் , ` இழைக்கும் எழுத்து ` என்றது , மெய்யெழுத்தாயிற்று . மெய்யெழுத்துக்கள் தனித்தியங்கும்வழி அகரத்தால் இயக்கப் படுமாயினும் மொழியிடத்து இயங்குங்காலத்துப் பிற உயிர்களானும் இயங்குமாதலின் , ` உயிர் ` எனப் பொதுப்பட அருளிச்செய்தார் . இனி , ` உயிர் ` என்றது , தலைமை பற்றி அகரத்தைக் குறிக்கும் எனக் கொண்டு , ` எழுத்து ` என்றது , ஏனைய எல்லா எழுத்துக்களையும் என்று உரைத்தலுமாம் . எழுத்துக்கள் இயங்கும் முறைமை கட்புலனாக அறியப் படுதல் வரிவடிவிலாகலின் , ` இழைக்கும் எழுத்து ` என விதந்தருளினார் . இறைவன் இல்லாதவன்போறலாவது , ஆய்வு முறையில் எவ் வாற்றால் தேடினும் அங்ஙனம் தேடுவார்க்கு அகப்படாதே நிற்றல் . உள்ளவன்போறலாவது , அன்பினால் அடைந்தார்க்குப் பல்லாற்றானும் அநுபவப் பொருளாதல் . இவ்விடத்தும் , ` ஒத்தி ` என ஒப்புமை வகையால் அருளியது , உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வாயிருப்பினும் , அடியவர்கட்கு ஏனைப்பொருள் போல உரை யுணர்வினாற்றானே உணரப்படுதலை நினைந்து என்க . இந் நிலையையே , ` உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை ஒழிவின்றி உருவின்கண் அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர அருளினை ` என விளக்கியருளினார் , சேக்கிழார் நாயனார் . ( தி .12 பெ . பு . திருஞா . பு 161) ` உனையே ஒத்தியால் ` என்பது பிழைபட்ட பாடம் . இவ்வாறெல்லாம் நிற்றலின் அடியேனுக்கும் அவ்வாற்றால் அருள்பண்ணவேண்டும் என்பது குறிப்பு . ` எழுத்துக்கு உயிரே ஒத்தி , குழைக்கும் பயிர்க்குப் புயலே ஒத்தி ` என்பவை , மறுபொருளுவமம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வீடின்பய னென்பிறப் பின்பயனென்
விடையேறுவ தென்மத யானை நிற்கக்
கூடும்மலை மங்கை யொருத்தியுடன்
சடைமேற்கங்கை யாளைநீ சூடிற்றென்னே
பாடும்புல வர்க்கரு ளும்பொருளென்
நெதியம்பல செய்த கலச்செலவின்
ஆடுங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

பொன் , மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய , மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே , நீ , ` வீடு , பிறப்பு ` என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது , மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது ? மதத்தையுடைய யானை இருக்க , எருதினை ஊர்வது என் ? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என் ? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது ?

குறிப்புரை :

` வீட்டின் ` என்னும் டகரம் தொகுத்தலாயிற்று . ` செய்த ` என்பது ` ஆக்கிய ` என்னும் பொருளதாய் , தந்தமையைக் குறித்தது . சேரநாட்டுக் கடற்றுறை பற்றி , ` சேரலர் - சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி ` - அகம் - 149 எனச் சான்றோருங் கூறினார் . ` வீட்டை அமைத்தது , உயிர்களை நிலையாய இன்பத்தில் இருத்துதற் பொருட்டும் , பிறப்பை அமைத்தது , அவ் வின்ப நுகர்ச்சிக்குத் தடையாய் உள்ள பாசத்தை அறுத்தற்பொருட்டும் , விடையை ஊர்வது , அறத்தை நிலை பெறுத்தற்பொருட்டும் , மலை மங்கையோடிருப்பது , உயிர்கட்குப் போகம் அமைதற்பொருட்டும் , கங்கையைத் தரித்தது , அப்போகம் பிறவாற்றால் இடையிற் சிதைந் தொழியாவாறு நிலைபெறுத்தற் பொருட்டும் ஆகலின் , அவற்றுள் வீடொன்றும் ஒழிந்த எல்லாவற்றையும் எய்திய அடியேனுக்கு , இனி அம் முடிந்த பயனாகிய வீட்டையளித்தருளல் வேண்டும் ` என்பது குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டரவக்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலானவனே , எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே , வலிமையோடு , ` சங்கு , இப்பி , முத்து ` என்பவற்றைக் கொணர்ந்து வீசி , வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி , ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தந்தையே , நீ இராப் பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என் ? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என் ? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது ? சொல்லியருளாய் .

குறிப்புரை :

` இரா ` என்பது செய்யுளாகலின் இறுதி குறுகி , ` பனியத்து , வெயிலத்து ` என்பதுபோல . அத்துப்பெற்றது , ` இரவத்து , உரவத்து ` என்புழி , அத்தின் அகரம் அகரமுனைக் கெடாது நிற்றல் , இலேசினாற்கொள்க . ( தொல் . எழுத்து . 134) ` முழங்கி ` என்னும் எச்சம் , ` அரவக்கடல் ` என்புழித் தொக்கு நிற்கும் , ` உடைய ` என்னும் பெயரெச்சக் குறிப்பொடு முடியும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஆக்கும்மழி வும்மைய நீயென்பன்நான்
சொல்லுவார்சொற் பொருளவை நீயென்பன்நான்
நாக்கும்செவி யும்கண்ணும் நீயென்பன்நான்
நலனேஇனி நான்உனை நன்குணர்ந்தேன்
நோக்குந்நெதி யம்பல எத்தனையும்
கலத்திற்புகப் பெய்துகொண் டேறநுந்தி
ஆர்க்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் தலைவனே , இன்பம் தருபவனே , விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி , நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய , ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே , அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின் , ` எப்பொருளின் ஆக்கத்திற்கும் , அழிவிற்கும் காரணன் நீயே ` என்றும் , ` அவற்றிற்குக் காரணங்களாகப் பிற பிற வற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே ` என்றும் , ` புலனுணர்வுக்குக் காரணமான , ` நாக்கு , செவி , கண் ` என்பனவும் நீயே ` என்றும் துணிந்து சொல்லுவேன் .

குறிப்புரை :

` அதனால் , அவ்வுணர்வு நிரம்பாத பொழுதைக்குரிய இவ்வுலக வாழ்க்கையை இனி நீ அடியேற்கு வைக்கற்பாலையல்லை ` என்பது திருக்குறிப்பு . ` போ ` என்பது , ` போக்கு ` என வருதல்போல , ` ஆ ` என்பது ` ஆக்கு ` எனப் பெயராய் வந்தது . ` ஆக்கு , அழிவு , நலன் ` என்பன ஆகுபெயராய் , அவற்றின் காரணங்களையும் , ` நிதியம் ` என்பது அவ்வாறு அதனாற் கொள்ளப்படும் பொருள்களையும் உணர்த்தின . ` நீ ` என்புழியெல்லாம் , தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரங்களை விரிக்க . ` நாக்கு , செவி , கண் ` என்றது , பிற கருவிகள் எல்லாவற்றையும் தனித்தனி கூறிக்கொள்ளுதற்கு வைத்த குறிப்பு மொழி . இதுமுதல் மூன்று திருப்பாடல்களிலும் , சுவாமிகள் , தாம் இறைவனைத் தலைப்படுதல் இன்றி ஒருநொடிதானும் அமைய மாட்டாமையை நேரே அருளிச்செய்கின்றார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
விளங்குங்குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே , கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள , அழகு நிறைந்த சோலைகளையுடைய ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே , நீ , இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய் ; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு , கண்டம் கறுப்பாயினாய் ; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய் ; அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன் ; உடம்பாலும் துறந்து விட்டேன் .

குறிப்புரை :

` இனி எனக்கு அருள்பண்ணத் தகும் ` என்பது குறிப் பெச்சம் . இலங்கைக்கு இறையை நெரித்தமையும் , பிரமன் தலையை அறுத்தமையும் வினைத் தொடக்கை அறுத்தற்கும் , நஞ்சுண்டமை அருள்பண்ணுதற்கும் எடுத்துக்காட்டியவாறு . செவியைச் சிறப்பித்தது , தம் முறையீட்டைக் கேட்டருளல் வேண்டும் எனற் பொருட்டு ; ` வேதியன் ` என்றதும் அதுபற்றி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பிடிக்குக்களி றேஒத்தி யால்எம்பிரான்
பிரமற்கும் பிரான்மற்றை மாற்கும்பிரான்
நொடிக்கும்மள விற்புரம் மூன்றெரியச்
சிலைதொட்டவ னேஉனை நான்மறவேன்
வடிக்கின்றன போற்சில வன்றிரைகள்
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டடிக்குங்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.

பொழிப்புரை :

மூன்று அரண்கள் , ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே , முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல , சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி , வலம்புரிச்சங்கினால் , கரையி லுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின்கண்ணதாகிய ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளை யுடைய , ` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற தந்தையே , நீ பெண்யானைக்கு ஆண்யானை போல உயிர் கட்கு யாண்டும் உடன்செல்லும் துணைவனாய் உள்ளாய் ; என் போலும் மக்கட்கும் , பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய் ; இவற்றையெல்லாம் உணர்ந்து , அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன் .

குறிப்புரை :

` ஆதலின் , எனக்கு அருள்பண்ண இனித்தடை என்னை ?` என்பது குறிப்பு . ` பிடிக்குக் களிறே ஒத்தியால் ` என்பது மறுபொருள் உவமம் ; வலிமை நிலைக்களமாக வந்தது ( தொல் - பொருள் - 275). ` பிடிக்குங் களிறே ` என்பதும் பாடம் . புரம் எரித்தமை பாசத்தை அறுத்தலையும் , மக்கட்கும் தேவர்க்கும் தலைவனாயிருத்தல் இன்பம் வழங்குதலையும் வலியுறுத்தும் . இறைவன் இயல்பினை இவ்வாறு உணர்ந்து , அவனை மறவாது நிற்றலே , அவனது அடிநிழலை அடையும் நெறியாகும் என்பது , ` அயரா அன்பின் அரன் கழல் செலுமே ` என்னும் சிவஞான போத ( சூ .11) த் தால் அறியப்படும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

எந்தம்மடி களிமை யோர்பெருமான்
எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை
மந்தம்முழ வுங்குழ லும்மியம்பும்
வளர்நாவலர் கோன்நம்பி ஊரன்சொன்ன
சந்தம்மிகு தண்தமிழ் மாலைகள்கொண்
டடிவீழவல் லார்தடு மாற்றிலரே.

பொழிப்புரை :

என்போலும் அடியவர்கட்கு முதல்வனும் , தேவர்கட்குத் தலைவனும் , எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய , அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய , ` மகோதை ` என்னும் நகரின்கண் உள்ள ,` திருவஞ்சைக்களம் ` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை , மத்தளமும் வேய்ங்குழலும் , ` மந்தம் ` என்னும் அளவாக இயம்பப்படுகின்ற , நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க , தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப் பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று , நிலைபேறுடையவராவர் .

குறிப்புரை :

` அடிகள் ` முதலிய மூன்று பெயர்களும் , ` அப்பன் ` என்பதனோடு தனித்தனியாக தொகைநிலை வகையான் இயைந்தன . இனி , அவை ஒருபொருண்மேற் பல பெயர்களாய் நிற்ப , அவ்விடத்து ஐயுருபுகள் தொகுத்தலாயின எனலுமாம் . ` மணிமிடற்றன் ` என்பது ` சிவன் ` என்னும் சிறப்புப் பெயரளவினதாய் நின்றது . ` குரல் , துத்தம் , கைக்கிளை , விளரி , தாரம் , உழை , இளி ` என்னும் ஏழிசைகளையும் , ` தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக் கருவி ` என்னும் ஐவகைக் கருவிகளினின்றும் எழுப்புமிடத்து , ` மந்தம் , மத்திமம் , உச்சம் ` என்னும் மூவகை நிலையால் எழுப்பப்படுமாகலின் , அவற்றுள் மெல்லிதாகிய மந்தம் இயம்புதலை எடுத்தோதியருளினார் . மந்தம் மெலிவும் , மத்திமம் சமமும் , உச்சம் வலிவுமாகும் . ` ஞானசம் பந்தன் ` என்பதனை , ` சம்பந்தன் ` என்றாற்போல , ` ஆருரன் ` என்பதனை , ` ஊரன் ` என ஒரு சொற் குறைத்து அருளிச்செய்தார் ; இவ்வாறு இனியும் பலவிடத்து அருளிச் செய்தலைக் காணலாம் .
சிற்பி