திருவெண்காடு


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து , பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி , பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு , அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர் ; கூற்றுவனை முன்னர்க் கொன்று , பின்னர் உயிர்ப்பித்து , அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர் ; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும் , தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு , பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என் ?

குறிப்புரை :

திரிபுரம் எரித்த ஞான்று , ஆங்கிருந்த அசுரர்களுள் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக்கொண்டு , ஒருவனைக் குடமுழா முழக்குபவனாகவும் , இருவரை வாயில் காவலராகவும் கொண்டமையை , ஆறாந் திருமுறைக் குறிப்பில் விளக்கினோம் . ( தி .6 ப . 60 பா .9). இதனை இத் திருமுறையின் ஐம்பத்தைந்தாந் திருப்பதிகத்து எட்டாவது திருப்பாடலில் சுவாமிகள் இனிது விளக்குதல் காண்க . மடங்கல் - கூற்றுவன் . ` எல்லா உயிர்களும் மடங்குதற்கு இடமானவன் ` என்பது சொற் பொருள் . இது , ` மடங்கலான் ` என , பாலுணர்த்தும் ஈறுபெற்று நின்றது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

இழித்து கந்தீர் முன்னை வேடம்
இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட
வுயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை
அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , அரி பிரமர்க்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி , அவற்றை விரும்பித் தோள்மேற் கொண்டீர் ; ` என்றும் இறவாதபடி காப்பவன் ` என்னும் புகழை விரும்பாது , எல்லாப் பொருள்களையும் அழித் தொழித்து , அதன்பின்னர் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினீர் ; அங்ஙனமாக , நீர் முன்பு மேற்கொண்ட , மேலான தவத்தினை , தேவர் வேண்டிக்கொண்டமையால் அழித்தற்கு வந்த மன்மதனை , அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்யமாட்டாது பார்த்துக் கொண்டிருக்க . நெற்றிக்கண்ணால் எரித்து , பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது என் ?

குறிப்புரை :

இழித்தல் - இறக்குதல் , ` முன் ` என்றது , சங்கார காலத்துக்கு முற்பட்ட காலத்தை . ` இமையவர் ` என்றது , தலைமை பற்றி , காரணக் கடவுளர்மேல் நின்றது . சிவபிரானது மோனநிலையை நீக்குமாறு தேவர்கள் மன்மதனை வேண்டி விடுக்க , அவன் அங்குச் சென்று அப்பெருமானால் எரிக்கப்பட்டு , பின்னர் அவன் தேவி வேண்டு கோட்கு இரங்கி அப்பெருமானாலே உயிர்ப்பிக்கப் பெற்றமையை , கந்த புராணத்துட் காண்க . ` எல்லா உலகங்களையும் ஒருநொடியில் அழிக்கவும் ஆக்கவும் வல்ல பேராற்றலையுடையீராகிய நீர் , அவ் வாற்றலை ஒரு சிறுபிள்ளையிடத்துக் காட்ட நினைத்தது நுமக்குப் புகழாகுமோ ` என்றபடி . ` நீர் செய்வன அனைத்தும் , புகழ் முதலியவற்றை விரும்பியன்றி , தெறல்வழியானும் , அளிவழியானும் பிறர்க்கு நலஞ்செய்தற் பொருட்டேயாம் ` என்பது குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

படைக ளேந்திப் பாரி டம்மும்
பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகி
உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரண மிட்டுத்
தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , பூதகணங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு உம் திருவடிகளை வணங்கித் துதிக்க . உம் தேவியுடனே . உடையைக் கோவண உடையாக உடுத்துக்கொண்டு , சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் களித்துப் பின்னர் , இல்வாழ்க்கை யுடையாரைப் பெருமையாகச் சொல்லி , அவர்தம் இல்லங்களில் பிச்சைக்குத் திரிதல் என் ? உமது உண்மை நிலையைச் சொல்லியருளீர் .

குறிப்புரை :

` அன்றே ` என்றது அசைநிலை . ` உம்மை உண்மை சொல்லீர் ` என்றதனை . ` நூலைப் பொருள் அறிவித்தான் ` என்பது போலக் கொள்க . ` உண்மை சொல்லீர் உண்மை யன்றே ` என்பதும் பாடம் . நடனமாடிக் களித்துப் பொழுது போக்குதல் செல்வமுடையார் செயல் என்க . ` இட்டு ` என்றதன்பின் , வினைமாற்றுப் பொருள் தரும் , ` பின் ` என்பது வருவிக்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்
பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தில் உம்மைக்
கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்
வான நாடர் மருவி ஏத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , விண்ணுலத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற ஆங்கு உள்ளீராய் இருந்தும் , இம் மண்ணுலகத்தில் பண்களாகியும் , அவற்றையுடைய பாட்டுக்களாகியும் , அடியார்களது உள்ளத்தில் நிறைந்தும் , மக்கள் முதலிய உயிர்களின் கண்களாகியும் , உம்மை உள்ளத்தில் நினைபவர் , புறத்தேயும் காணும்படி உருவங் கொண்டும் இருத்தல் என் ?

குறிப்புரை :

செய்யுட்கு ஏற்பப் பிறவாற்றான் அருளிச்செய்தாராயினும் , ஏனைய திருப்பாடல்களோடு ஒப்ப இவ்வாறு உரைத்தலே திருவுள்ளம் என்க . மதியம் வைத்தல் , உருவத்தின் வகைகளைக் குறிக்கும் குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

குடமெ டுத்து நீரும் பூவுங்
கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடி
நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர்
பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , அடியார்கள் குடத்தைச் சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு வந்து உமக்குப் பணிசெய்ய , நீர் , உம்மை என்றும் பிரியாது உடனிருத்தற் பொருட்டு , மணிவடம் அணிந்த தனங்களையுடைய மங்கை ஒரு பாகத்தில் இருக்க நடனத்தை மேற்கொண்டு , ஆடலும் பாடலும் நன்கு இயைய ஆடியும் பாடியும் அவர்கட்கு இன்பந் தருவீர் ; அவ்வாறிருந்தும் , நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது என் ?

குறிப்புரை :

` அது , வேண்டுங்காலத்து உமிழப்படுங்கொல்லோ என்னும் அச்சத்தை விளைவிப்பது ` என்னும் குறிப்பொடு இவ்வாறு அருளிச்செய்யப்பட்டது . ` ஒன்ற ` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மாறு பட்ட வனத்த கத்தின்
மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர்
பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங்
குலாவி யேற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் உம்மொடு மாறுபட்டு நின்ற , காட்டில் வாழப்பிறந்த , வலிய களிற்றை உரித்து , அதன் தோலை , விருப்பம் உண்டாகப் போர்த்தீர் ; அன்ன வீரத்தை உடையீராயும் , உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும் எருதையே ஊர்தியாகச் செறிய ஊர்தலும் , பிறர் இடுகின்ற பிச்சைக்கென்று இல்லந்தோறும் திரிதலும் செய்து , நுமது பெருமையினின்றும் வேறுபட்டு ஒழுகுதல் என் ?

குறிப்புரை :

` வனத்தின் மருவ வந்த ` என்றது இன அடை . ` ஏறி ` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்ததாகலின் , இவ்வாறு உரைக்கப் பட்டது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

காத லாலே கருதுந் தொண்டர்
கார ணத்த ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்
புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை
நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று , பூதங்கள் பாட , உலகம் உயர்த்துக்கூறுமாறு , நடனத்தை விரும்பி ஆட வல்லீர் ; அவ்வாறாகவும் , உலகியல் விளங்குதற் பொருட்டு , யோகியர் சூழ , ஏழிசையின்வழி நிலைத்து நின்று , வேதத்தை ஓதித் திரிதல் என் ?

குறிப்புரை :

` நடனம் மெய்யுணர்வைத் தருவதாகலின் , அதனை மேற்கொண்டு செய்கின்ற நீர் , உலகியல் நூலைப் பரப்பிக் கொண்டிருத்தல் என்னோ ?` என்றவாறு . உயிர்களின் நிலை வேறு பாட்டிற்கேற்ப , இறைவன் பந்தத்தையும் , வீட்டையும் தருபவனாய் நிற்றலை அருளிச் செய்தபடி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

குரவு கொன்றை மதியம் மத்தங்
கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர்
விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேற் பழிகள் போக்கீர்
பாக மாய மங்கை அஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , ` குரா மலர் , கொன்றை மலர் , ஊமத்த மலர் , பிறை , தனங்களையுடைய நங்கையாகிய கங்கை , பாம்பு ` ஆகிய எல்லாம் தலைமயங்கிக் கிடக்கின்ற சடையினை யுடையீர் ; யாவர்க்கும் மூத்தீர் ; அங்ஙனமாயினும் , எஞ்ஞான்றும் உம்மையே கருத்தில் வைத்துப் பாடுகின்ற என்மேல் உள்ள பாவத்தைப் போக்கீராதலோடு , உமது பாகத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சங் கொள்ளுமாறு , யானையை உரித்துப் போர்த்தது என் ?

குறிப்புரை :

` குரவு முதலியன விரவுகின்ற சடையுடையீர் ` என்றது , ` கங்கையும் பாம்பும் தம் ஆற்றல் மடங்கிப் பிறையோடு குரா முதலிய மலர்கள் போலக் கிடக்க வைத்த பேராற்றலுடையீர் ` என்றபடி . ` போக்கீர் ` என்றதன்பின் , ` அதனோடு ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க . ` அடியவரைக் காக்கின்றிலீர் ; மனைவியை அஞ்சப்பண்ணுகின்றீர் ; இது தகுவதோ ` என்பதாம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்
நிச்ச யத்தால் நினைப்பு ளார்பால்
பாடுங் காட்டில் ஆட லுள்ளீர்
பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும்
நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னே
வேலை சூழ்வெண் காட னீரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே , நீர் , உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே , உயர்ந்த மாளிகைகளையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளியுள்ளீர் ; என்றாலும் , பேய்கள் பாடும் காட்டில் ஆடலை உடையீர் ; அதுவன்றியும் , அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணுதற்குக்கொண்ட சான்றிடத்து , அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப் பிழம்பாய் நின்ற வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது என் ? உம்மையாங்கள் வழிபடுவது எவ்வாறு ?

குறிப்புரை :

` நாடுங் காட்டில் ` என்றதில் காட்டு - சான்று . காட்டில் ஆடுதல் உயர்வு தாராமையாலும் , இருவராலும் அணுகப்படாமை காட்சிக்கு அரிய நிலையாதலாலும் , ` பரவும் வண்ணம் எங்ஙனே ` என்று அருளினார் . தான் , அசைநிலை .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

விரித்த வேதம் ஓத வல்லார்
வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை
விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யால்ஆ ரூரன் தொண்டன்
அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
செம்மை யாளர் வானு ளாரே.

பொழிப்புரை :

விரிவாகச் செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற , கடல் சூழ்ந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள , யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தணனை , அவனுக்குத் தொண்டனும் , அவன் அடியார்க்கு அடியனும் அகன்ற சோலையையுடைய திருநாவலூரனும் ஆகிய நம்பியாரூரன் விருப்பத்தொடு சில வற்றை வினவிச் செய்த , தமிழ்ச்சொற்களாலாகிய மாலை பத்தினையும் , அவன் தெரித்துச் சொன்ன குறிப்பில் நின்று பாட வல்லவர் , கோட்டம் நீங்கிய உணர்வினையுடையராய் . சிவலோகத்தில் இருப்பவராவர் .

குறிப்புரை :

` ஓத வல்லார் வெண்காடு ` என , வாழ்ச்சிக்கிழமைப் பொருளதாகிய ஆறாவதன் தொகையாக இயைக்க .
சிற்பி