திருவாரூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை
பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர்
செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

தேவர்கள் , செம்பொன்னையும் , மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து , நினது ஒலிக்கும் கழலை யணிந்த திருவடிகளை , மலர் தூவி வணங்குகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பறையைக் கிழித்தாற்போன்ற உடம்பைப் பற்றிநின்று பார்த்தேனாகிய எனக்கு , அவ்விடத்துச் சிறுபொருள்களோடு பொருந்திவந்த இன்பத்தையும் , அவ்வின்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த இல்வாழ்க்கையையும் அஞ்சு தலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அவ்வச்சத்தை நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் . ` வாழ்வு ` என்றதன்பின் தொகுக்கப்பட்ட செவ்வெண்ணின் தொகைப் பொருளதாகிய இவற்றை என்பது விரித்து , அதனை , ` அஞ்சினேன் ` என்பதனோடு முடிக்க . சிறுமையாவது , நிலையின்மை . அதனையுடைய பொருள்களால் விளையும் இன்பத்திலும் , முன்னும் பின்னும் உளதாந் துன்பமே பெரிதாதலாலும் , அவ்வின்பத்தின் பொருட்டுக் கொள்ளப்படும் இல்வாழ்க்கை அல்லல் பெரிதுடைத்தாதலாலும் , அவை அஞ்சப் படுவனவாயின . தோலாற் போர்க்கப் படுதலின் , உடம்பு பறையோடு ஒப்பதாயினும் , பறை பொள்ளலுடையது அன்மையின் , பொள்ளல் பலவுடைய உடம்பை , கிழிந்த பறை யோடு உவமித்தருளினார் . ` நோக்கியேன் ` என்னும் பெயர் ` யான் ` என்னும் பொதுப் பெயரின் பொதுமை நீக்குதலின் ` யான் நோக்கி னேற்கு ` என்பதற்கு , நோக்கினேனாகிய எனக்கு என்று உரைத்தல் பொருந்துவதாயிற்று . இன்னோரன்னவை இவ்வாறு பொருள் படுதலை , கலித் தொகை , திருவாசகங்களிற் காண்க . ` நோக்கினேற்கு ` என்பது , ` இசைந்த ` என்பவற்றோடு முடியும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

ஊன்மிசை உதிரக் குப்பை
ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்கின்
மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

வெள்ளிய நல்ல ஆனேற்றையுடையவனே , திருவாரூரில் உள்ள தந்தையே , இறைச்சியை உள்ளடக்கி ஓடுகின்ற குருதிக்குப் பையாய் உள்ள இவ்வுடம்பு , பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்ப்பொருள் ; ஆதலின் , அத் தன்மையை அறியாத , மான் மருண்டாற் போலும் பார்வையினை யுடைய பெண்டிரே மதிக்கின்ற இந்த மானிடப்பிறவி வாழ்வினை , இன்புற்று வாழ்வதொரு வாழ்வாக விரும்புகின்றிலேன் ; அத்துன்ப நிலைக்கு அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அதனை நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் . ` உதிரத்துக்கு என்னும் அத்துச் சாரியை தொக்கு , ` நிலக்கு ` ( குறள் -570.) என்பது போல ` உதிரக்கு ` என நின்றது . இவ்வாறன்றிக் ` குப்பை ` என இயல்பாகவே கொண்டு உரைத்தல் பொருந்தாமை அறிக .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அறுபதும் பத்தும் எட்டும்
ஆறினோ டஞ்சும் நான்கும்
துறுபறித் தனைய நோக்கிச்
சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
நாள்தொறும் வணங்கு வாருக்
கறிவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

மணம் கமழும் பூவும் , நீருங் கொண்டு உன்னை நாள் தோறும் வழிபடுவார்க்கு மெய்யுணர்வைத் தருகின்ற , திருவாரூரில் உள்ள தந்தையே , பூதங்கள் ஐந்தும் , ஞானேந்திரியம் கன்மேந் திரியம் என்னும் இந்திரியங்கள் பத்தும் , தன்மாத்திரை ஐந்து அந்தக்கரணம் மூன்று என்னும் நுண்ணுடம்புறுப்புக்கள் எட்டும் , தாத்துவிகங்கள் அறுபதும் , ` காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் , புருடன் ` என்னும் வித்தியா தத்துவங்களாகிய ஆறும் , ` சுத்தவித்தை , ஈசுரம் , சாதாக்கியம் , சத்தி ` என்னும் ஆகிய எல்லாம் புதராக , வேறாகக் கண்டு சொல்லின் . அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவருங் கூறார் ; ஆதலின் , தம்மை , யானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலுடைய னாயினேன் .

குறிப்புரை :

` அவற்றை நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் , தத்துவ தாத்துவிகங்களை அவற்றின் முறைபற்றிவையாது , செய்யுளுக்கேற்ப வைத்தருளினார் . அந்தக் கரணங்களுள் சித்தம் பிரகிருதியேயாகலானும் , புருடன் தனித் தத்துவம் அன்றாதலானும் , அவற்றை வேறு வைத்தெண்ணாமையும் , சுத்த தத்துவங்களை ஐந்தென்னாது , ` நான்கு , மூன்று ` என்றலும் மெய்ந்நூல் வழக்காதலும் அறிக . இவ்வாறன்றி , ` அஞ்சு நான்கும் ` என்று பாடமோதி அதனை , இருபதெனக் கொண்டு , எட்டும் என்பதனைப் பெயரெச்சமாக்கி , தொண்ணூற்றாறு என்னுந் தொகை வர உரைப்பாரும் உளர் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சொல்லிடில் எல்லை யில்லை
சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு
நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாட நீடு
மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

மேல் மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களிலெல்லாம் , வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்துகிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , யான் , ஓட்டைக்குடில்களுள் துச்சி லிருந்துவாழ்ந்த , பேதைக்குரித்தாய , துன்பமே நிறைந்த வாழ்க்கைகளைச் சொல்லப்புகின் , அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை . அங்ஙனமாகவும் , நல்லதொரு புக்கிலுட் குடிபுகுந்து இன்பம் மிக வாழும் நெறியினை அறிந்திலேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அவ்வச்சத்தை நீக்கி , அந்நெறியினை அறிவித்தருள் ` என்பது குறிப்பெச்சம் , ` கூரை ` என்றது ஆகுபெயராய் இல்லத்தை உணர்த்திற்று . ஓட்டைக் குடில் என்பது உடம்பினையும் . நல்லதோர் இல் என்பது வீட்டு நிலையையுமாம் . புகுந்து என்றதனால் , அது புக்கிலாயிற்று . ` நல்லதொரு புக்கிலை அறிந்திலேன் ` என்றதனால் , ஓட்டையாகிய இல்லத்துள் ஒதுங்கியிருத்தல் பெறப்பட்டது . ` புக்கிலமைந்தின்று கொல்லோ உடம்பினுள் , துச்சிலிருந்த உயிர்க்கு ` என்பதனை ( குறள் -340.) விரித்தருளியபடி ` மருங்கொடு நெருங்கி ` என்றதனை , ` மலையொடு பொருத ` என்பது போலக் கொள்க . ` அல்லி வண்டியங்கும் ஆரூரப்பனே ` என்றது , ` நின் ஊருள் வண்டுகள் தாமும் நன்கு உண்டு களித்து வாழாநிற்க , அடியனேன் அச்சுற்று வருந்தா நின்றேன் ` என்னும் இறைச்சிப்பொருளைத் தோற்றுவித்தது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நரம்பினோ டெலும்பு கட்டி
நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து
குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை
மாதவித் தொகுதி யென்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

புன்னையும் மாதவியுமாகிய அவற்றையுடைய சோலைக்கண் . யாவரும் விரும்புமாறு மணங்கமழ்கின்ற பேரரும்புகள் எந்நாளும் வாய்மலர்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , அடியேன் , எலும்புகளை நரம்பாற் கட்டின , விருப்பத்தோடு சிறிதும் இசை வில்லாத ( அருவருப்பைத் தருவதான ) குடிசைக்கண் குடியிருத்தலால் , நன்மாளிகையில் வாழும் உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ இயலாதவனாயுள்ளேன் ; அதனால் , அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` அவ்வச்சத்தை நீக்கி உயர்ந்தார் நடுவுள்ளிருந்து வாழ அருள்செய் ` என்பது குறிப்பெச்சம் . ` கட்டிய ` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று . ` நரம்பினோடு கட்டிய ` என்றது ` ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் ` என்றாற் போல நின்றது . குரம்பை என்றது உடம்பினை . ` குலம் ` உயர்ந்தாரது தொகுதி . குலத்தினாலென்னும் ஆனுருபு ஒடு உருபின் பொருளில் வந்தது . உயர்ந்தார் என்பது வெளிப்படைப் பொருளில் செல்வரையும் , குறிப்புப் பொருளில் வீடு பெற்றாரையும் குறித்தன . இழிந்த சேரிக்கண் வாழ்வார் , உயர்ந்த மாடத் தெருவிலுள்ளாரோடு வாழ்தல் இயலாதது போலும் நிலையை உடையேன் என்றபடி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மணமென மகிழ்வர் முன்னே
மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே
பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலைதோறும்
பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

வயல்களின் நடுவேயுள்ள சோலைகளிலெல்லாம் , பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில் , மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகில் தாய் , தந்தை , சுற்றத்தார் என்போர் முன்பு ( இளமையில் ) தம் மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள் . பின்பு அவர்தாமே அவர்ளை , ` பிணம் ` என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங் காட்டிற் கொண்டுபோய் எரிப்படுத்து நீங்குவர் ; ஆதலின் , இத் தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன் : அதன்கண் வீழ்தற்கு அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` மக்கட்கு ` என்புழித் தொகுக்கப்பட்ட நான்கனுருபை விரித்து ` மணம் ` என்பதனோடு இயைக்க . ` தாய் , தந்தை , சுற்றம் ` என்பது தாப்பிசையாய் முன்னும் பின்னும் இயைந்தது ` ` வளாகம் ` என்பது ` விளாகம் ` என மருவிற்று . ` அணைவு ` என்பது ஆகு பெயராய் , அணையப்படும் இடத்தைக் குறித்தது .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

தாழ்வெனுந் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது
அலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

மக்கள் யாழிசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , உலகத்தார் பொருள் ஒன்றனையே பெரிதாக மனத்துட்கொண்டு , அதனால் பெருமையுடன் வாழ்வதையே விரும்பி , பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு , மறுமை நலத்தின் பொருட்டு வறியார்க்கு ஒன்று ஈதலை இலராகியே வாழ்வர் ; துன்பத்துள் அகப்பட்டவர்க்கு அப்போது உதவியாய் நில்லாது , துன்பமின்றி இன்புற்றிருக்கின்ற மற்றொருவருக்கு உதவியாவர் . அவரது தன்மையைக் கண்டு அவரொடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

தொண்டர் என்பது இழித்தற் குறிப்பு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

உதிரநீர் இறைச்சிக் குப்பை
எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை
வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமா லயனுந் தேடிக் கழலிணை
காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

கருமை நிறத்தையுடைய திருமாலும் , பிரமனும் தேடித் திருவடியைக் காணமாட்டாத அருமையையுடையோனாய் நின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு எடுத்ததாகிய மலக் குகையின்மேல் காணப்படுவதாகிய , விரையக்கெடும் தோலாகிய கூரையினுள்ளே வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்புகின்றிலேன் . அதனது தீமைகள் பலவும் அறிந்து அதற்கு அஞ்சுத லுடையனாயினேன் .

குறிப்புரை :

` குகைம் மேல் ` என்னும் மகரமெய் விரித்தல் . ` கூரை ` என்புழி , உள்ளென்னும் பொருள்படுவதாகிய கண்ணுருபு விரிக்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பொய்த்தன்மைத் தாய மாயப்
போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு
வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும்
முடிகளால் வணங்கு வாருக்
கத்தன்மைத் தாகும் ஆரூர்
அப்பனே அஞ்சி னேனே.

பொழிப்புரை :

முத்துப்போல அரிதிற் கிடைக்கும் நின்னை நாள் தோறும் தொழுது , தலையால் வணங்கும் அன்பர்கட்கு அத்தன்மைய தாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும்பயனைத் தருகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே , நிலையாத தன்மையையுடைய உடம்பை நிலையுடையதாகக் கருதும் சதுரப்பாட்டினை யுடையதாகிய இவ்வுலக வாழ்க்கையை அடியேன் இன்றியமையாததாக நினைத்து விரும்பும் தன்மையில்லேன் ; அதற்கு , அஞ்சுதலுடையனாயினேன் .

குறிப்புரை :

` முத்தினை என்பதில் ஐகாரம் முன்னிலையுணர்த்திற்று . அஃது உயர்திணைமேல் நின்றமையின் இரண்டாவதன் தொகைக்கண் தகரம் மிக்கது . இவ்வாறன்றி ஐகாரத்தை இரண்டனுருபு என்றே கொண்டு ` முத்து ` என்றது முன்னிலைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதியாகக் கூறுதலும் ஆம் . ` அத்தன்மைத்து ` என்றது , அத்தன்மைத்தாய பொருள் எனப் பொருள் தந்தது . ` மாயப் போர்வை ` என்றது வாளா பெயராய் , உடம்பு என்னும் அளவாய் நின்றது . உடம்பு நிலையாததாயினும் , அதனை நிலைத்ததாகக் கருதினாலல்லது உலக வாழ்க்கையை நடத்தலாகாமையின் , ` மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும் வித்தகத்தாய வாழ்க்கை ` என்று அருளினார் . சதுரப்பாடில்லாத வாழ்க்கையை சதுரப்பாடுடையதாக அருளியது இகழ்ச்சிக் குறிப்பு ; ` நெருநலுள னொருவன் இன்றில்லை என்னும் - பெருமை யுடைத்திவ் வுலகு ( குறள் -336.) என்றதுபோல . ` வித்தகத்தது ` என்பது , குறைந்து நின்றது . வேண்டுதல் , இன்றியமையாத தாக அவாவுதல் , விரும்புதல் - பற்றுச் செய்தல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

தஞ்சொலார் அருள்ப யக்குந்
தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர்
அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல்
சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள்
நாதனை நணுகு வாரே.

பொழிப்புரை :

பற்றுக் கோடாதற்குப் பொருந்தாத மகளிர் பொருட்டு மனம் உடைகின்ற தமியேனாகிய நம்பியாரூரன் , அவரது பெருத்த தனங்களின் இன்பத்திலே அச்சந்தோன்றப் பெற்றவனாய் , அழகிய சொற்களையுடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிலுகின்ற திருவாரூரிலுள்ள தந்தையைச் செவ்விய சொற்களால் வேண்டிப் பாடிய இப் பாடல்களை எண்ணிப் பாடவல்லவர் , நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தையுடைய எங்கள் பெருமானை அடைவார்கள் .

குறிப்புரை :

தஞ்சு - ஒல்லார் எனப் பிரிக்க . தஞ்சம் ` தஞ்சு ` எனக் கடை குறைந்தது . ஒல்லாமை பொருந்தாமை . ` தடமுலை ` அடையடுத்த ஆகுபெயராய் நின்று அதன் இன்பத்தைக் குறித்தது . நயத்தல் - விரும்புதல் . அது , தன் காரியந் தோன்ற நின்றது . சிந்தித்தல் - அவற்றின் பொருளை என்க . ` சிந்தையா லேத்தவல்லார் ` என்பதும் பாடம் .
சிற்பி