திருவரிசிற்கரைப்புத்தூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

மலைக்கும்மக ளஞ்ச மதகரியை
உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்
சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்
கலவம்மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

மான்களின் கொம்புகளையும் , யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து , தோகையையுடைய மயிலினது இறகுகளையும் , கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே ! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர் ; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர் ; முழங்குகின்ற , கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர் ; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர் .

குறிப்புரை :

` இது நும் பெருமை ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க . வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே முடிக்க . ` மலைக்கும் மகள் `, ` கலவம் மயில் ` என்னும் மகர ஒற்றுக்கள் விரித்தல் . இத் திருப்பதிகங்களுள் இவ்வாறு வரும் விரித்தல் விகாரங்களை அறிந்து கொள்க . ஏறு , முதனிலைத் தொழிற்பெயர் . ` ஏற்றொழியீர் ` என்பதும் பாடம் . சில்பலி , ஒரு பொருளன்றி , வேறு வேறு பொருள்களையும் ஏற்றல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்
செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பலநாள்
சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா
நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர் ; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர் ; திருமகட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள் , அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய , அது நிறைவாகும்படி , தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து , போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர் .

குறிப்புரை :

இரணியாட்சன் மகனாகிய அந்தகாசுரன் என்பவன் , தான் தவம் செய்து பெற்ற வரத்தினையுடையவனாகித் திருமால் முதலிய தேவர்கள் அனைவரையும் துன்புறுத்த , அவர்கள் அவனுக்கு ஆற்றாது பெண்டிர் வடிவங்கொண்டு ஓடித் திருக்கயிலையில் இறைவியின் கணங்களோடு இருந்தனர் . அங்கும் அந்த அசுரன் அவர்களைத் துன்புறுத்தச் சென்றபொழுது தேவர்கள் வேண்டிக் கொள்ள சிவபெருமானார் வைரவரை அனுப்பி , அவரது சூலத்தால் அவனை அழிக்கச் செய்தனர் என்பது புராண வரலாறு . ` அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் ` ( தி .6 ப .96 பா .5) என்று நாவரசரும் அருளிச்செய்தார் . திருமால் இவ்வாறு வழிபட்டுச் சக்கரம் பெற்றமையை , சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ ( தி .8 திருவா - திருச்சா - 18) நீற்றினை நிறையப்பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறையவிட்ட ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே ( தி .4. ப .64 பா .8) என்னும் திருவாக்குகளால் அறிக . இச்செய்யுள் அடிகளின் முதற்சீர் கனிச்சீராகாது , விளச்சீராய் வந்தது சீர்மயக்கம் என்க . நான்கு ஆறாம் திருப்பாடல்கட்கும் இஃது ஒக்கும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும் , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து , கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே , நீர் , ` எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம் , நீர் , நெருப்பு , காற்று , வானம் , சந்திரன் , சூரியன் , ஆன்மா ` ஆகிய எல்லாப் பொருள்களுமானீர் . ஆதலின் , ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட , அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று .

குறிப்புரை :

` தக்கதன்றால் ` என , இறைவரது அறியாமைக்கு இரங்கி அவர்க்கு அறிவுதருவார் போன்று அருளியது . தமக்கென ஒன்றையும் மேற்கொள்ளாத அவரது அருள் விளையாட்டின் பெருமையை வியந்து , பழிப்பது போலப் புகழ்ந்தருளிச் செய்தவாறு . ` ஓடு `, ` உம் ` எண்ணிடைச்சொற்கள் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கொடியுடை மும்மதில் வெந்தழியக்
குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித் தீர்இமைக்கும்
மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப்புச்
சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

எம்பெருமானிரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி , மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து , இமைக்கும் அளவில் எரித்தீர் ; ஆதலின் , உமக்கு நிகராவார் யாவர் ? ஒருவரும் இல்லை ; அங்ஙனமாக , மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும் , கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம் பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ ?

குறிப்புரை :

` உமக்கு எத்துணையும் பற்றாத மிக மெலியோனாகிய அவனை அழித்தது , உமக்கு வெற்றியாவதில்லையன்றோ ?` என்றபடி , இதுவும் மேலைத் திருப்பாடற் கருத்துடையதேயாம் . ` வில்லா ` என்புழி ` கட்டிய ` என்பது சொல்லெச்சம் . எம்பெருமான் என்பது பன்மை ஒருமை மயக்கம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்
மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே
உலகங்களெல் லாமுடையீர் உரையீர்
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

கயலும் , சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள் , ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும் , கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு , முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற ( உண்கின்ற ) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , உலகம் எல்லாவற்றையும் உடையவரே , உம்மை அடிபணிந்து , கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார் , திருமாலும் , பிரமனும் , மற்றைய தேவரும் , அசுரரும் , பெரிய முனிவருமாவர் ; அங்ஙனமாக , நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ ? சொல்லியருளீர் .

குறிப்புரை :

` தொழுவாரவர் ` என்றதில் உள்ள ` அவர் ` பகுதிப் பொருள் விகுதி . ` கோடல் ` என்பது , ` கொண்டல் ` என மருவிற்று .

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே , நீர் , உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர் , பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து , நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு , அப்பிழைக்காக நடுக்கமுற , நீர் அவரது கனவில் தோன்றி , ` அன்பனே , நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும் , நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து , நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து , அவரை ஆட்கொண்டருளினீர் .

குறிப்புரை :

` உமது பேரருள் சொல்லும் தரத்ததோ ` என்பது குறிப்பெச்சம் . இத்திருப்பாடலில் குறிக்கப்பெற்ற புகழ்த்துணை நாயனாரது வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்துட் காண்க . அகத்தடிமை , அணுக்கத்தொண்டு ; அஃதாவது இறைவரது அண்மையிலேயிருந்து அவரது திருமேனியைத் தீண்டிச் செய்தற்குரிய பணிவிடைகளைச் செய்தல் . அவற்றைத் திருக்கோயிலிற் செய்பவர் , ` ஆதிசைவ அந்தணர் ` எனப்படுவர் . தம் , தம் இடத்தில் இவ்வகத்தடிமை செய்தற்குரியார் சிறப்புரிமை பெற்ற சைவர் . ` அகத்தடிமை செய்யும் ` என்ற விதப்புத் தோன்றியது . ` நீ , உன்னை அடைந்தவரை ஒரு ஞான்றும் கைவிடுவாயல்லை ` என நினைந்து எழுந்த பேரன்பினால் என்க . நன்றி , நற்செயல் ; திருத்தொண்டு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பழிக்கும்பெருந் தக்கன்எச் சம்மழியப்
பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத்தருளுஞ்
செய்கையென்னைகொ லோமைகொள் செம்மிடற்றீர்
விழிக்குந்தழைப் பீலியொ டேலமுந்தி
விளங்கும்மணி முத்தொடு பொன்வரன்றி
அழிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

சிறிதிடத்தில் கருமை நிறத்தைக் கொண்ட , முழுவதும் செம்மையாயுள்ள கண்டத்தையுடையவரே , கண் விழிப்பது போலத்தோன்றும் அழகிய வட்டங்களையுடைய தழையாகிய மயிற்றோகையோடு ஏலக்காய் மரங்களைத்தள்ளி , ஒளி வீசுகின்ற மாணிக்கம் , முத்து , பொன் என்பவற்றையும் வாரிக்கொண்டு , கரைகளை அழித்து ஓடும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரை யிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரே , நீர் , உம்மை இகழ்ந்த பெரிய தேவனாகிய தக்கனது வேள்வி அழியும்படி , சூரியன் முதலாக நின்ற தேவர் பலரையும் அவர் நடுங்கும்படி அதட்டி , அவரது உறுப்புக்களில் ஒவ்வொன்றைச் சிதைத்தது என்னையோ ?

குறிப்புரை :

` நஞ்சுண்டு காத்த நீரே , அவரை ஒறுத்தது , அவரது பிழை நோக்கியேயன்றோ ` என்றல் திருவுள்ளம் . இதனால் , அவரது பெயக்கண்டும் நஞ்சுண்டமையும் கண்ணோட்டமும் ( குறள் -580), யார் மாட்டும் கண்ணோடாது இறைபுரியும் செப்பமும் ( குறள் -541) ஆகிய இறைமைக் குணங்களை வியந்தருளியவாறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பறைக்கண்ணெடும் பேய்க்கணம் பாடல்செய்யக்
குறட்பாரிடங் கள்பறை தாம்முழக்கப்
பிறைக்கொள்சடை தாழப் பெயர்ந்துநட்டம்
பெருங்காடரங் காகநின் றாடலென்னே
கறைக்கொள்மணி கண்டமுந் திண்டோள்களுங்
கரங்கள்சிரந் தன்னிலுங் கச்சுமாகப்
பொறிக்கொள்ளர வம்புனைந் தீர்பலவும்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.

பொழிப்புரை :

நஞ்சைக்கொண்ட நீல கண்டத்தில் கண்டசரமாகவும் , திண்ணிய தோள்களில் வாகு வலயமாகவும் , முன் கைகளிற் கங்கணமாகவும் , தலையில் தலைச் சூட்டாகவும் , அரையில் கச்சாகவும் புள்ளிகளைக்கொண்ட பாம்புகள் பலவற்றையும் அணிந்தவரே , சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் புனிதரே , நீர் , பறை போலும் பெரிய கண்களையுடைய பேய்க் கூட்டம் பாடு தலைச் செய்யவும் , குறுகிய வடிவத்தையுடைய பூதங்கள் பறைகளை முழக்கவும் , பிறையைக்கொண்ட சடை கீழே தாழ்ந்து அலைய , காலங் கடந்த காடே அரங்கமாக நின்று , அடிபெயர்த்து நடனமாடுதல் என் ?

குறிப்புரை :

` உயிர்களின் பொருட்டே யன்றோ ` என்பது திருவுள்ளம் . பாம்பணியை வகுத்தோதியருளியது அவரது நித்தத் தன்மையை இனிது விளக்குதற் பொருட்டு . ` பிறைக்கொள் , கறைக் கொள் ` என்னும் ககர மெய்கள் விரித்தல் . ` கரங்கள் ` என்புழியும் உம்மை விரிக்க . ` அரையும் ` என்று அருளிச் செய்யாதே ` கச்சுமாக ` என்று அருளிச் செய்தமையால் , இவ்வாறுரைத்தலே திருவுள்ளமாதலுணர்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மழைக்கண்மட வாளையொர் பாகம்வைத்தீர்
வளர்புன்சடைக் கங்கையை வைத்துகந்தீர்
முழைக்கொள்ளர வோடென் பணிகலனா
முழுநீறுமெய் பூசுதல் என்னைகொலோ
கழைக்கொள்கரும் புங்கத லிக்கனியுங்
கமுகின்பழுக் காயுங் கவர்ந்துகொண்டிட்
டழைக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

` கழை ` என்னும் தன்மையைக்கொண்ட கரும்புகளையும் , வாழைப்பழங்களையும் , கமுக மரத்தின் முற்றிய காய்களையும் வாரிக்கொண்டுவந்து கூப்பிடுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற புனிதரே , நீர் , மேகம் போலும் பெரிய கண்களையுடைய உமாதேவியை ஒரு பங்கில் வைத்தீர் ; அதன் மேலும் , வளர்கின்ற புல்லிய சடையின்மேல் , ` கங்கை ` என்பவளை விரும்பி வைத்தீர் . அங்ஙனமாக , செல்வ வாழ்க்கை வாழ நினையாது , புற்றினை இடமாகக் கொள்ளும் பாம்பும் , எலும்புமே அணிகலங்களாக , மேனி முழுவதும் சாம்பலைப் பூசி வாழ்தல் என்னோ ?

குறிப்புரை :

இஃது , அவரது பற்றின்மையை அருளிச்செய்தவாறு . கழை , கரும்பின் வகை . இளங்காய் ` கருக்காய் ` எனவும் , முற்றியகாய் ` பழுக்காய் ` எனவும் கூறப்படுமாறறிக . கூப்பிடுதல் , ஒலித்தல் . ` தன்பால் வருவித்தல் ` என்பது நயம் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கடிக்கும்மர வால்மலை யாலமரர்
கடலைக்கடை யவ்வெழு காளகூடம்
ஒடிக்கும்முல கங்களை யென்றதனை
உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி
யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை
அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே.

பொழிப்புரை :

இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு , முன்பு அருவியாய் ஓடி , பின்பு , ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே , நீர் , கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு , மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி , அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர் ; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை .

குறிப்புரை :

` இப்பேரருளாலும் , அமரத்தன்மையாலும் உம்மை ஒப்பார் பிறர் உளரோ !` என்பது குறிப்பெச்சம் . ` அமுது ` என்றது தேவர்கள் பகிர்ந்துகொண்டு உண்ட அமுதத்தைக் குறித்தது . நஞ்சினை , ` அமுது ` என்று அருளியது அமுதத்தைப் பகிர்ந்துகொண்ட தேவர்கள் , அதனுள் இறைவனுக்குச் சிறிதும் பங்கு வையாது நஞ்சினை மட்டும் முழுதுங்கொடுத்து நீங்கினர் என்னும் இகழ்ச்சி தோன்றுதற்கு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
கழையோடகில் உந்திட் டிருகரையும்
போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்
தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும்
சீரூர்தரு தேவர்க ணங்களொடும்
இணங்கிச்சிவ லோகம தெய்துவரே.

பொழிப்புரை :

மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய , அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும் , அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு , இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள , சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை , நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும் , மொழிக்குற்றம் , இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும் , அத்துதியைக் கேட்பவர்களும் , சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட் கூடி வாழ்ந்து , பின் சிவலோகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

`பெய்து` என்றது `பெய்ய` என்பதன் திரிபு.
சிற்பி