திருநாட்டியத்தான்குடி


பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்
புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்
பிறவே னாகிலும் மறவேன்
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்
கருதா யாகிலுங் கருதி
நானேல் உன்னடி பாடுத லொழியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே . உனக்கு அணிகலமும் , அரைநாணும் சிறுமையையுடைய பாம்பாதல் கண்டு அஞ்சேன் ; நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன் ; நீ எனது சிறுமையை யுணர்ந்து என்னை விரும்பாதொழியினும் , யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன் ; வேறோராற்றால் நான் பிறவி நீங்குவேனாயினும் , உன்னை மறவேன் ; நீ என்னைக் கடைக்கணியாதொழியினும் , உன்னை கண்ணாரக் காண்பேன் ; நீ என்னை உன் திருவுள்ளத்தில் நினைந்து ஏதும் அருள் பண்ணாதொழியினும் , நானோ , என் மனத்தால் உன்னை நினைந்து பாடுதலை ஒழியமாட்டேன் , இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` இஃது என் அன்பிருந்தவாறு ` என்பது குறிப்பெச்சம் . சிறந்தவனை ` நம்பி ` என்றல் மரபு . ` ஆகிலும் ` என வந்த உம்மைகள் , அவை நிகழாமையை உணர்த்தலின் , எதிர்மறை .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்
டெல்லியி லாடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
சொல்லாய் திப்பிய மூர்த்தீ
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல
மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

உண்மையான தெய்வத் திருமேனியை உடையவனே , துன்பங்களை உளவாக்கவும் களையவும் வல்ல உயர் வுடையவனே , மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே , திரு நாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உன்னையன்றி வேறொருவரையும் விரும்பேன் ; உயரஎழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி நின்று இடுகாட்டில் இரவில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பியிருத்துவேன் ; இழிபுடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிற்றற்குரிய காரணத்தைச்சொல்லியருளாய் !

குறிப்புரை :

` மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் ` என்றதும் , ` என் அன்பிருந்தவாறு ` என்றதேயாம் . உயர எழுதல் , படம் எடுத்தல் . ` துச்சனேன் ` என்பது , குறைந்து நின்றது . ` இடர்கள் , என்றது பிறவித் துன்பங்களை . பந்தமும் வீடும் இறைவனே யாதல் திருமுறைகளுட் பல விடத்துங் காணப்படும் . ` மணி ` என்றது உயர்வு குறித்து வந்த உவமையாகு பெயர் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

அஞ்சா தேஉனக் காட்செய வல்லேன்
யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
பங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களை யுடைய , பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனே , மேலான இடத்தில் உள்ள , எங்கள் பெருமானே , மேகங்களின்மேற் செல்லுகின்ற வெள்ளிய திங்களைச் செவ்விய சடையின் கண் வைத்த உயர்வுடையவனே , மாணிக்கம் போலும் நிறத்தை யுடையவனே , நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தையுடையவனே , வெள்ளிய தலையை ஏந்தியவனே , திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , அஞ்சாமலே உனக்கு நான் தொண்டுபுரிய வல்லேன் ; அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன் ? ஒன்றிற்கும் ஆசைப்படேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` அஞ்சாதே ` என்னும் ஏகாரம் , தேற்றம் . அஞ்சுதற் காரணங்கள் உளவாகவும் அஞ்சாமலே என்பது பொருள் . அக் காரணங்கள் இரண்டாவது திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன ; இத் திருப்பதிகத்துள்ளும் சில காண்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுனக் கல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் உனது புகழைக் கல்லாதேனல்லேன் ; அடிமைச் செயல்களைப் பிறரிடம் கல்லாமலே நீ உள்நின்று உணர்த்த அவை எல்லா வற்றையும் கற்றேன் ; அங்ஙனங் கற்றதற்குத்தக நினது வழியில் நில்லாதவனல்லேன் ; அங்ஙனம் நின்றாரது வரலாறுகளை நினைய மாட்டாதவனல்லேன் ; உனது பொன் போலும் திருவடிகளைப் பரவு மிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன் ; உனக்கு அல்லது வேறு ஒருவற்கு நான் உறவினன் அல்லேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` பல ` என்றதில் முற்றும்மை தொகுத்தலாயிற்று . ` நீதி ` என்றது அவர் தமக்கு உரியதாகக் கொண்ட ஒழுக்கமும் , அதன்கண் நிகழ்ந்த நிகழ்ச்சியும் ஆகிய வரலாறுகளைக் குறித்தது . ` வல்லேன் ` என்றது ` வல்லுதல் ` என்னும் தொழிலின் மறைவினை . ` பரவ ` என்னும் செயவெனெச்சம் , ` பரவுமிடத்து ` என்பதன் திரிபாய் வந்தது . ` மறுமையை நினைந்து பரவமாட்டேன் ` என்றது , ` பயன் கருதாதே வழி படுவேன் ` என்றபடி . ` நல்லேன் ` என்பதில் நன்மை , அது செய்தற் காரணமாகிய உறவைக் குறித்தது . ` உனக்கல்லால் நான் உறவின னல்லேன் ` என்றதனானே , ` நீயன்றி என்னை வேறொருவரும் உறவினனாக நினையார் ` என்பதும் போந்தது ; போதரவே , சுவாமிகளுக்கும் இறைவர்க்கும் தம்முள் உளதாகிய கெழுதகைமை பெறப்பட்ட வாறறிக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டா யாகிலும் ஒட்டுவன் அடியேன்
உன்னடி அடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியே , தேன் நிறைந்த பூவை யணிந்த கூந்தலையுடைய மலை மகளுக்குக் கணவனாகிய உன்னை நினையாதவரை நான் நினையேன் ; நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும் , நான் உனக்கு அடியவனாய் , உன்னொடு ஒட்டியே நிற்பேன் ; உன் திரு வடியையே பற்றாக அடைந்த அடியார்க்கு அடியவனாகிய பெருமையை நான் பெற்றுடையேனாயினும் , உன்னைப் பாடுதலை விடமாட்டேன் ; உன் புகழைப் பாடியும் , உனது பெருமைகளை ஆராய்ந்தும் யாவருமறிய உன்னொடு நட்புக் கொண்டேனாதலின் , உன்னை நான் மறக்கமாட்டேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` கணவனை ` என்னும் ஐகாரம் முன்னிலையுணர்த்திற்று ; அஃது உயர்திணைமேல் நின்றமையால் , இரண்டாவதன் தொகைக்கண் , ` இயற்கை மருங்கின் மிகற்கை தோன்ற ` லாய் ( தொல் : எழுத்து : 158.), ககரம் மிக்கது . இவ்வாறன்றி ` கணவன் ` என முன்னிலைக்கண் படர்க்கை வந்தது இடவழுவமைதி எனக் கொண்டு , ஐகாரத்தை உருபாக்கியே உரைத்தலுமாம் . அடியார்க்கு அடியாரானார் அதன்மேல் ஒன்று பெறவேண்டுவது இன்மையின் , ` அதன்பின்னும் உன்னைப் பாடுதல் ஒழியேன் ` என்று அருளிச் செய்தார் . ` நாடி நட்பினல்லது - நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே ` ( நற்றிணை -32.) என்பவாகலின் , ` உம்மை நாடியே நட்டேன் ` என்பார் , ` நாடி நட்டேன் ஆதலால் நான் மறக்கில்லேன் ` என்றருளினார் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
படுத்தாய் என்றல்லல் பறையேன்
குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே
கோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடு
மறையோ தீமங்கை பங்கா
நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

மேற்கிலுள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளியிருக்கும் , நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே , யாவர்க்கும் , தலைவனே , இயமனை உதைத்தவனே , அடியவர் அகங்களில் பால் தயிர் நெய் இவைகளை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற , வேதத்தை ஓதுபவனே , உமையை ஒரு பாகத்தில் உடையவனே , திரு நாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால் , நான் பட்ட துன்பங்களை எல்லாம் நீ படுத்தினாய் என்று சொல்லி நான் முறையிடமாட்டேன் . நீ என்னை விட்டு நீங்குவாயாயினும் , நான் உன் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` பட ` என்பதன்பின் ` அமைந்த ` என்பது வருவிக்க . ` படற்பாற் றன்மையின் ` என்பதே பாடம் எனலுமாம் . அல்லல் பறைதல் - துன்பத்தை எடுத்துப் பலரும் அறியக் கூறுதல் , ` மேற்கு ` என்றது சோழநாட்டின் மேற்குப் பகுதியை .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர
நினைந்தேன் உள்ளம்உள் ளளவும்
உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன்
உகவா யாகிலும் உகப்பன்
நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

ஐந்து தலைப் பாம்பினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே , தேவர்கட்குத் தலைவனே , திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , நான் அன்று உனக்கு ஆட்பட்டது , துன்பத்தால் வருந்துதற்கு அன்று ; துன்பத்தினின்றும் உய்ந்து , இன்பம் உற எண்ணிவந்தே உன் திருவடியை அடைந்தேன் ; அதனால் , நீ என்னை விரும்பாதொழியினும் , நான் உன்னை விரும்பியே நிற்பேன் ; ஆதலின் , நான் எய்தற்கு வைத்த குறியினை உயிருள்ள அளவும் எவ்வாற்றாலேனும் அடையவே நினைத்தேன் ; இஃது என்அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

சுவாமிகள் கொண்ட குறியாவது இறைவன் திருவடிப் பேறே என்பதும் , அதுவே துன்பம் இல்லாததும் , துன்பத்தினின்றும் எடுத்து இன்பம் தருவதும் ஆகும் என்பதும் , அதனை அடைதற்கு அவன் மாட்டுச் சலியாத அன்பு செய்தல் வேண்டும் என்பதும் உணர்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்
கருதிடிற் கண்கள்நீர் மல்கும்
பலிதேர்ந் துண்பதொர் பண்புகண் டிகழேன்
பசுவே ஏறினும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
மாட்டேன் மறுமையை நினைய
நலியேன் ஒருவரை நான்உனை யல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

திருநாட்டியத்தான்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியே , யான் இம்மானுட வாழ்க்கையை ஒருபொருளாக நினைத்துச் செருக்கேன் ; இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால் , கண்களில் நீர் பெருகும் . ஆதலின் , பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும் , அதுபற்றி உன்னை இகழேன் ; நீ எருதையே ஏறினாலும் அதுபற்றி உன்னைப்பழியேன் ; எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும் , உன்னை வணங்குதலைத் தவிரேன் ; மறுமை இன்பத்தையும் நினைக்கமாட்டேன் ; உன்னையன்றி வேறொருவரை நீங்காது நின்று இரக்கமாட்டேன் ; இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

இப் பிறவிதான் இனிவரும் பிறவிக்குக் காரணமாகா தொழிதலும் , தாமே வர நின்ற அப் பிறவிகளை வாராது அழித்தொழிக்குங் கருவியாதலும் சிவபிரானை வணங்குதல் ஒன்றாலன்றிப் பிற வாற்றாற் கூடாமையின் , ` இகழேன் ` என்பது முதலாக அருளினார் . ` கண்கள் நீர் பில்கும் ` என்பதும் பாடம் . ` நினையேன் ` என்பது பாட மாகாமை அறிக . ` நலிதல் ` என்பது இங்கு , உதவுமாறு இடைவிடாது சென்று வேண்டுதலைக் குறித்தது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயல் தண்டலை வேலி
நாட்டியத் தான்குடி நம்பீ.

பொழிப்புரை :

எருதினை ஏறுகின்ற , எனக்குக் கண்போலச் சிறந்தவனே , நண்டுகள் விளையாடும் வயல்களையும் , சோலையாகிய வேலியையும் உடைய திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியே , சமணரும் , சாக்கியரும் ஆகிய பேய்கள் மூர்க்கத் தன்மையை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும் , அதனை நேரே கண்டாலும் அதனை யான் ஒரு பொருளாக நினையேன் ; உன்னையன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன் ; உனது தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அங்ஙனம் தொழும்பொழுது கண்டு , அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னை யான் தொழத் தொடங்கினேன் . இஃது என் அன்பிருந்தவாறு .

குறிப்புரை :

` கொள்ளுதல் ` என்பது இங்கு , கொண்டதையே விடாமல் பற்றுதலைக் குறித்தது . பின்னர் , ` கண்டாலும் ` என்றதனால் , முன்னர் உள்ளது , கேட்டதாதல் பெறப்பட்டது . ` நின்னலது கண்ணாக அறியேன் ` என்று உரைப்பினுமாம் . ` தொண்டாடித் தொழுவார் தொழக்கண்டு தொழுதேன் ` என்பதனை , ` ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள் ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தால்உனை நானுந் தொழுவனே ` ( தி .5 ப .91 பா .3) என்னும் அப்பர் திருமொழியுடன் வைத்து நோக்குக .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற் றறுமே.

பொழிப்புரை :

அடியவர்களே , பிற பாடல்களை நீர் பாட மறந்தாலும் , பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும் , சோழனது நாட்டில் உள்ளதும் , பழமையான புகழை யுடையதும் , ஆகிய திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை , அவனை ஒரு நாளும் மறவாத , திரட்சியமைந்த , பூவை யணிந்த கூந்தலையுடைய , ` சிங்கடி ` என்பவளுக்குத் தந்தையாகிய , திரு வுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடுங்கள் . பாடின் , உங்கள் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும் .

குறிப்புரை :

கொடிறு ( குறடு ) தன்கண் அகப்பட்டதனை மீள விடாது பிடித்தலின் , அஃது எதிர் வந்த பகைவரை மீளவிடாது அழிக்கும் நாயனார்க்கு உவமையாம் . ஆகவே , ` கொடிறன் ` என்றது , உவமத் தொகைப் பொருண்மைத்தாய குறிப்பு வினைப் பெயராதல் அறிக . ` சிங்கடி ` என்பாள் , கோட்புலி நாயனார்தம் பெண் மக்கள் இருவருள் ஒருத்தி . மற்றொருத்தியின் பெயர் ` வனப்பகை ` என்பது . இவட்குத் தந்தை என்று சுவாமிகள் வேறு பதிகத்துள் தம்மைக் குறித்தருளுவர் . இவ்விருவரையும் நம்பியாரூரர் தம் மக்களாக ஏற்றுக் கொண்ட வர லாற்றைப் பெரிய புராணத்துட் காண்க .
சிற்பி