திருக்கலயநல்லூர்


பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` தென்னங் குரும்பை போலும் தனங்களையும் , பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து , அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து , அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து , அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும் , கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது ?` என்று வினவின் , பேரரும்புகளின் அருகே சென்று , ` சுரும்பு ` என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட , ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட , அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில் , கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சிவபிரான் உமையம்மையாரது தவச்சாலையில் முதிய வேதியனாய்ச் சென்று அவரது அன்பினைச் சோதித்தறிந்து அவரை மணந்தருளிய வரலாற்றைக் கந்த புராணத்துட் காண்க . ` அருக ` என்பது , ` அருவ ` என மருவி வந்தது ; ` அருக ` என்றே பாடம் ஓதுதலும் ஆம் . அருகுதல் - மென்மையாக இசைத்தல் . இதனைச் சுருதி கூட்டுதல் என்ப . குவளை சந்திரன்முன் மலர்ந்து , சூரியன்முன் குவிவதும் , கண் போலத் தோன்றுவதும் ஆதலின் , காலையில் அது கண் வளர்வது போலக் காணப்படுவதாயிற்று . ` கண்வளரும் `, ` முகமலரும் ` என்பன குறிப்புருவகங்கள் . தம்மை வினவும் மாணாக்கன் ஒருவனுக்கு அருளிச் செய்யுமாற்றான் அருளுதலின் , ` வினவின் , காண் ` என்றருளினார் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை , தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி , வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து , இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து , இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது ?` என்று வினவின் , மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும் , முரசு , மத்தளம் ஆகிய வாச்சியங்களது ஓசையும் , சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால் , கரிய எருமை நீரிற் புக , அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் , தாமரை மலரின்மேல் நெருங்கி விழ , தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சிவபிரான் சலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்து , பின் அச்சக்கரத்தினைத் திருமாலுக்கருளின வரலாற்றினைக் கந்தபுராணம் ததீசி யுத்தரப் படலத்துட் காண்க . தக்கன் வேள்வியில் சிவபிரான் இந்திரன் தோளைத் துணித்ததாகவும் வரலாறு உண்டு . ( தி .6) ` கமலக் களிவண்டு ` என்பது மெலித்தலாயிற்று . இவ்வாறன்றி , இயல் பாகவே கொண்டு , ` இரியப் பெறும் ` என்று உரைத்தலுமாம் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக்கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து , கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய , அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி , அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனதுஊர் யாது ?` என்று வினவின் , மண்டபங்களிலும் , கோபுரங்களிலும் , மாளிகைகளிலும் , சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும் , மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற , தாமரைப் பொய் கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சண்டேசுர நாயனாரது வரலாற்றினைப் பெரிய புராணத்துட் காண்க . ` சூளிகை ` என்றது , அதனையுடைய மேல் மாடத்தைக் குறித்தது .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலைஅடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்தென் கரைமேல்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையால்
கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` மலைமகள் , விளையாட்டை மேற்கொண்டு , மகிழ்ச்சி மேலிட்டவளாய் , அவளது வளைபொருந்திய கைகளால் தனது கண்களை மூடினமையால் , எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிக்கொள்ள , அவ்விருள் நீங்கும்படி நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது ?` என்று வினவின் , அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து , யானைத் தந்தத்தைப் புரட்டி அகில் மரத்தையும் , சந்தன மரத்தையும் தள்ளிக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல் உள்ள , நூல்களை யுணர்ந்து அந்நெறியானே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப்புகையால் , கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

அம்மை திருக்கண் புதைத்த வரலாற்றினை , பெரிய புராணம் , காஞ்சிப் புராணங்களுட் காண்க . ` கலையடைந்து கலிகடி யந்தணர் ` என்றதனை , ` கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை ` ( தி .1 ப .80 பா .1) என்ற திருஞானசம்பந்தர் திருமொழியோடு ஒருங்குவைத்துணர்க . ` போன்ற ` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும் , தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க , அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக , மலையாகிய வில்லும் , பாம்பாகிய நாணியும் , தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த , உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது ?` என்று வினவின் , சொல்வகைகள் பலவற்றையும் , பொருள் வகைகள் பல வற்றையும் உடைய வேதங்கள் நான்கையும் , தோத்திரங்கள் பல வற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று , எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண் .

குறிப்புரை :

சிவபிரான் திரிபுரம் எரித்த வரலாறு காஞ்சிப் புராணத்திலும் , திருவிற்கோலப் புராணத்திலும் விரித்தோதப்பட்டது . மாயோன் கோலங்கள் பலவற்றுள் அர்ச்சனைக்குரியது நின்ற கோலமே என , அவனை வழிபடுவோர் கொள்ளுதலின் , ` நிற்பான் ` என்று அருளினார் . ஏனைய கோலங்களை வழிபடுங்கால் அவ்வந் நிலை கருதியே வழிபடுவர் என்க . ` தோத்திரம் ` என்றது தமிழ்ப் பாடல் களை . ` இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ` என்றருளி னார் ஆளுடைய அடிகளும் ( தி .8 திருவா - திருப்பள்ளி -4). சுருதியொரு நான்குமே யன்றித் தோத்திரமும் பல சொல்லுதற்குரியார் அந்தணர் என்பது , இத்திருப்பாடலின்கண் இனிது விளங்க அருளிச் செய்யப் பட்டமையின் , ` வேதத்தில் உரிமை யில்லாதாரே தமிழ்ப் பாடல்களாகிய தோத்திரங்களைச் சொல்லுதற்கு உரியார் ` என்பது , அறியாதார் கூற்றே என்பது தெற்றென உணர்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

பெற்றிமைஒன் றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்
தருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில் பெரிய தேவர்கள் , தங்கள் தலை , தோள் , பல் , கை , கண் என்னும் உறுப்புக்கள் வலிமையழிந் தொழியுமாறு ஒறுத்து , சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து , பின்பு அவர் எல்லாரிடத்தும் கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது ?` என்று வினவினால் , பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு , ` மல்லிகைக் கொடி , சண்பகமரம் ` என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் , கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக , பசுக் கூட்டம் , மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

தக்கன் வேள்வியில் எச்சன் ( வேள்வித் தேவன் ) தலையும் , இந்திரன் தோளும் , சூரியன் பல்லும் , அக்கினி கையும் , ` பகன் ` என்னும் மற்றொரு சூரியன் கண்ணும் இழந்தனர் என்க . சிவபிரான் தக்கன் வேள்வி அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க . ` சந்திரனைக் காலால் தேய்த்தனன் ` எனப் புராணங்கூறும் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாசம் ஆகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில்
பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல்
கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும் , இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின்மேல் ஊன்றி , ` நிலம் , மிக்க நீர் , நெருப்பு , காற்று , வானம் , என்னும் பெரும் பொருள்களாகியும் , நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனுடைய ஊர் யாது ?` என்று வினவினால் , அலைகளால் பல பழங்களைத் தள்ளி , பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து , ` பாதிரி , சந்தனம் , அகில் ` என்ற மரங்களையும் , தாழம் புதர்களையும் உள்வாங்கி , இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர் , ஆரவாரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

சிவபிரான் இராவணனை நெரித்த வரலாற்றை இராமாயணம் உத்தரகாண்டத்தில் காண்க .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதிசென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த
வேலைவிடம் உண்டமணி கண்டன்விடை ஊரும்
விமலன்உமை யவளோடு மேவியஊர் வினவில்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடுவண்டிசைமுரலப்பசுங்கிளிசொல்துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய் நீண்டு நின்றவனும் , வன்னியும் , பிறையும் சடையிற் சூடியவனும் கடலிற் றோன்றிய விடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை யுடையவனும் , இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது ?` என்று வினவினால் , சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும் , அழகிய மயில்கள் ஆடவும் , சுரும்பும் வண்டும் இசை கூட்டவும் , பசிய கிளிகள் தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி , காலை , மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி , உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருக் கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியது இலிங்க புராண வரலாறு . அதனைக் கந்தபுராணத்துள்ளும் விளங்கக் காணலாம் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்தபொருளினைமுன்படைத்துகந்தபுனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருதலைக்கும்அரிசிலின்தென்கரைமேல்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` போர் செய்கின்ற வலிமையையுடைய அசுரனாகிய , ` தாரகன் ` என்பவனைப் போர் செய்து அழியச் செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து , அவனைத் தன் மகனாக விரும்பிக்கொண்ட தூயவனும் , கரும்பினால் இயன்ற வில்லையும் , மலர்களால் இயன்ற அம்புகளையும் உடையவனாகிய மன்மதன் உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்கிய கண்ணையுடைய நெற்றியையுடையவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளும் ஊர் யாது ?` என்று வினவினால் , மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்துசென்று , ` ஏலம் , இலவங்கம் ` என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென் கரையில் , பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி , பொன்னை மலர்ந்து , பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

கந்தபுராண த்துள் முருகன் சூரபதுமன் முதலிய மூவர் அசுரரை அழிக்கத் தோன்றிய வரலாறே காணப்படுகின்றது . சிவபிரான் மன்மதனை எரித்த வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க . ` கருமை ` என்றது , பசுமையை . ` முத்து , பொன் , பவளம் ` என்பன உரு வகத்தால் அரும்பையும் , மலரையும் , மலர்கள் உள்ள பொகுட்டையும் குறித்தன .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்
தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே.

பொழிப்புரை :

` குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நாற்புறத்தும் சூழப்பெற்ற ஊரில் , திருக்குளத்தைக் கொண்ட பெருங் கோயிலின்கண் முறைப்படி , வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரம தேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய , அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது ?` என்று வினவினால் , வெண்மையான கவரி மயிரும் , நீலமான மயில் இறகும் , வேங்கை மரம் , கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில் , கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனினது வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றற் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .

குறிப்புரை :

பிரமதேவன் சிவபிரானை வழிபட்ட தலம் சீகாழி . காஞ்சி முதலிய பிறவும் உள . ` இக் கலயநல்லூரே அங்ஙனம் கொள்ளப்பட்டது ` எனினும் பொருந்தும் . இப்பொருட்கு , ` தலம் ` என்பது , ` தக்க இடம் ` எனப் பொருள்படும் .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீரையும் , வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும் , பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி , முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு , உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய , நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலய நல்லூரை , யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன் , இசைஞானி என்பவர்க்கு மகனும் , திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய , இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள் , துன்பமும் , பாவமும் இலராவர் .

குறிப்புரை :

` பலி ` என்றது , பலியாக இடுதலும் , ஏற்றலும் உடைய பொருளைக் குறித்தது .
சிற்பி