திருநாவலூர்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும் , அதனால் , ` அம்பு எய்தலில் வல்லவர் ` எனப் புகழத்தக்கவராயினாரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு , ` திருமால் , பிரமன் , இந்திரன் ` என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரே யாகும் .

குறிப்புரை :

` வானவர்கோன் ` என்பதன் இறுதியில் செவ்வெண்ணின் தொகைபட வந்த ` இவர் ` என்பது தொகுத்தலாயிற்று . உம்மை இரண்டனுள் முன்னையது சிறப்பு ; பின்னையது , இறந்தது தழுவிய எச்சம் . எல்லாத் திருப்பாடல்களிலும் , ` வைத்து ` என்றவற்றை அசை நிலை எனினுமாம் . ` நம் திருநாவலூர் ` என்னும் ஆறாவதன் தொகை இங்கு , நிகழ் காலத்து உரிமையோடு இறந்த காலத்து உரிமையும் பற்றி நிற்பதாம் ; ` வினைக் குறிப்புப் பெயரே ஆறன் உருபேற்ற பெயராய் நிற்கும் ` என்பது சேனாவரையர்க்குங் கருத்து என்பது அவரது உரை பற்றி உய்த்துணர்ந்து கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

தன்மையி னால்அடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தமக்கு இயல்பாக உள்ள ` பேரருளுடைமை ` என்னுங் குணத்தினால் , என் பிழையைத் திருவுளங்கொள்ளாது , அடிமை என்பது ஒன்றையே கருதி , என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந் நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு , ` வன்றொண்டன் ` என்பதொரு பதவியைத் தந்தவரும் , பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து , எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` என்னை ` என்றது உருபு மயக்கம் . ` புன்மைகள் ` என்றது , ` பித்தரே ஒத்தொர் நச்சிலராகில் இவரலாது இல்லையோ பிரானார் ` ( தி .7 ப .14 பா .1) என்றாற்போலும் பாடல்களை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

வேகங்கொண் டோடிய வெள்விடை
ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்கடற் கோடியின்
மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும் , மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும் , என்னைத் திரு வெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்ட வரும் , தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும் , பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

உமையம்மை இறைவரது சத்தியேயாதலை , ` ஆகங் கொண்டார் ` என்பதனாலும் , பிற தெய்வங்கள் அச்சத்தி பதியப் பெற்றனவாதலை , ` போகங்கொண்டார் ` என்பதனாலும் அருளிச் செய்தார் . காளியைக் குறிக்கும் ` மோடி ` என்னும் சொல் , வேற்றுமை சிறிதாதல் பற்றி இங்குக் கொற்றவை ( துர்க்கை ) யைக் குறித்தது . ` கடற் கோடி ` என்றது குமரிமுனையை . அங்கு நின்று அருள் செய்யும் தெய்வமும் , சிவபெருமானது சத்தியினாலே ஆயது என்பதனைத் தெளிவித்தவாறு . சிவபெருமானது சத்தி பதிந்து நடாத்துதல் பற்றி , கொற்றவையும் அச் சத்தியாகவே முகமன் கூறப்படுவள் . அங்ஙனம் கூறப் படுதலைச் சிலப்பதிகாரத்துள் வேட்டுவ வரியுள் கொற்றவையைப் பல படப் புகழ்ந்து நிற்கும் பாட்டாலும் அறிக . எனவே , இமயம் முதற் குமரி காறும் உள்ள நல்வரைப்பு முழுதும் , சிவபெருமானது திருவருள் விளங்கும் திருநிலமாதல் பெறப்பட்டது . ` கடற் கோடி ` என்றதனை , ` கோடிக்குழகர் ` என்னும் தலமாக உரைப்பாரும் உளர் ; அது சிறவாமை அறிக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

ஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும் , ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும் , தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு , என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும் , நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` அஞ்சும் ` என்னும் உம்மையும் , எச்சம் , விடை , ` அறம் ` எனப்படுதலேயன்றி , ` உயிர் ` எனவும் படுமாதலின் , ` சேவினை ஆட்சிகொண்டார் ` என்றது , ` உயிர்களை அடிமைகளாக உடையவர் ` என்பதைக் குறித்ததாம் . சண்டேசுரரைத் தம்மோடு ஒப்ப வைத்தமையாவது , தம் மகனாராகக் கொண்டு , தமது முடி மாலையை வாங்கிச் சூட்டி , அடியார்கட்குத் தலைவராக வைத்து , தம் பரிகல முதலியவற்றை அவர்க்கே உரியவாகச் செய்தமை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும் , யானையை உரித்தவரும் , சிவந்த பொன்போல்வதும் , நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும் , வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும் , ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` செம்பொன்னார் ` என்பதுஇடைக் குறைந்து நின்றது . ` ஆர் ` உவம உருபு . ` செம்பொனார் , வண்ணர் , தீ வண்ணர் ` எனத் தனித்தனி இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

திருக்குடமூக்கில் ( கும்பகோணம் ) திருக் கோவலூர் , திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்ட வரும் , வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும் , தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடன மாடுதலை மேற்கொண்டவரும் , சூரியனை (` பகன் ` என்பவனை ) க் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திரு நாவலூரேயாகும் .

குறிப்புரை :

` கோத்திட்டை ` என்பதனை வைப்புத் தலமாகக் கூறுவர் . எனினும் ` பரம் ` என்பதனையே , ` கோ ` என்றும் ` குன்று ` என்பதனையே ` திட்டை ` என்றும் சுவாமிகள் , ஒரு நயம் பற்றி அருளிச்செய்தார் என்பது திருப்பரங்குன்றத் திருப்பதிகத்துள் பெறப் படுதலால் , இங்கு அவ்வாறே பொருளுரைக்கப்பட்டது . திருப்பரங்குன்றத் திருப்பதிகத்துள் , ` கோத்திட்டை ` என்றதற்கு இவ்வாறு உரையாவிடின் , அத்திருப்பதிகத்துள் ஓரிடத்திலும் அத்தலம் சொல்லப் படாததாய்விடும் . வேட்டம் கொண்டது , அருச்சுனன் பொருட்டு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

தாயவ ளாய்த்தந்தை ஆகிச்
சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்
கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

எனக்குத் தாயாகியும் , தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன் போலும் திருவடிக் கண் அகலாதபடி இருக்க வைத்த , மூங்கில் இடத்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` அவள் `, பகுதிப் பொருள் விகுதி . ` போய் அகலாமை ` என்றது , ஒரு சொல் நீர்மைத்து . சிவபெருமான் மூங்கிலை இடமாகக் கொண்டிருந்தமை திருநெல்வேலியில் என்பது , பலரும் அறிந்தது . திருவெண்ணெய்நல்லூரிலும் அவ்வாறு இருந்தமை சொல்லப்படுகின்றது . இனி , ` ஏயவனார் ` எனப் பிரித்து , ` எப்பொருளிலும் பொருந்தி யிருப்பவர் ` என்று உரைப்பினுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வாயாடி மாமறை ஓதிஓர்
வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தீயின்கண் நின்று ஆடுபவரும் , சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்த வரும் , பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` வாய் ` என்றது , ஆகுபெயராய் , சொல்லையுணர்த்திற்று ; சொல்லாவன , ` என் அடியான் இந்நாவல்நகர் ஊரன் ` என்றது முதலியன . ` வேடுவனாய் ` என்றது பன்மை ஒருமை மயக்கம் . ` வேய் ` என்பதும் , அதனாலாகிய வில்லைக் குறித்தது . ` நா ` என்பது , தலைமைப் பண்பை யுணர்த்தும் உரிச்சொல்லாய் நிற்கும் . அதனடியாகவே , ` நாதன் , நாயகன் , நாயன் , நாச்சி ` என்னும் சொற்கள் பிறக்கும் . நா ஆடியார் - தலைமையை ஆள்பவர் , வரையறை இன்மையின் , யகர உடம்படு மெய் பெற்று நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

படமாடு பாம்பணை யானுக்கும்
பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

படமாடுகின்ற , பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும் , பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும் , மணி வடம் அசைகின்ற ஆனேற்றுக்கும் , ` பாகன் ` எனப்படும் தன்மை யுடையவராய் , ஒருநாள் என்னிடம் வந்து , தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` படமாடும் அணை ` என இயைக்க . ` பாகன் ` என்பது , ` பாகத்தையுடையவன் ` எனவும் , ` நடத்துபவன் ` எனவும் உடனிலை யாய் ( சிலேடையாய் ) நின்று இருபொருள் பயந்து , ஏற்ற பெற்றியான் இயைந்து , பன்மை யொருமை மயக்கமும் ஆயிற்று . ` ஒருநாள் ` என்றது தமக்குத் திருமணம் தொடங்கிய நாளினை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்
தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.

பொழிப்புரை :

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும் , மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும் , தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து , உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும் .

குறிப்புரை :

` நல்வெண்ணெய்நல்லூர் ` என்புழி நன்மை , நடுவு நிலைமையைக் குறித்தது . ` நடுக்கங் கண்டார் ` என்றது ` அஞ்சுவித்தார் ` என்னும் பொருளதாய் , ` உமையை ` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊர்அணி நாவலூர்என்
றோதநற் றக்கவன் றொண்டன்ஆ
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.

பொழிப்புரை :

முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும் , நமக்கு உரிய ஊரும் , நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு , விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு , நல்ல தகுதியை உடையவனும் , ` வன்றொண்டன் ` என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும் , கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும் .

குறிப்புரை :

` நமக்கு ஊர் ` என்றது , சுந்தரர் அவதரித்த ஊராதல் பற்றி . ` நரசிங்கமுனையரையன் ஆதரித்து ஈசனுக்கு ஆட்செய்யும் ஊர் ` என்றமையால் , நரசிங்கமுனையரையருக்கு வழிபடுதலம் திரு நாவலூராய் இருந்தமை பெறப்படும் . நாயனார் இத்திருப்பதிகத்தில் தமது வரலாற்றினை இனிது விளங்க வைத்து அருளிச் செய்தது , நரசிங்கமுனையரையர் வரலாறு , தமது வரலாறு முதலிய பலவற்றையும் அனைவரும் உணர்தற்பொருட்டே என்பது ` என்று ஓத உரைத்த தமிழ் ` என்பதனால் நன்கு விளங்கும் . காதலித்துக் கேட்டல் , அன்பு மாத்திரையால் கேட்டல் ; கற்றுக் கேட்டல் , பொருளை இனிதுணர்ந்து கேட்டல் . ` அறும் ` என்னும் பண்பின் தொழில் , ` வினை ` என்னும் முதலொடு சார்த்தி முடிக்கப்பட்டது .
சிற்பி