திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

மூப்பதும் இல்லை பிறப்பதும்
இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு
மாகச்சிந் திக்கினல்லால்
காப்பது வேள்விக் குடிதண்
துருத்திஎங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

ஆராயுங்கால் எங்கள் தலைவர் , பிறத்தலும் இல்லை ; பின்பு வளர்ந்து முதுமை அடைதலும் இல்லை ; முடிவில் இறந்தொழிதலுமில்லை ; உறைவிடம் காட்டிடத்துள்ளது ; அதுவன்றி ஊர்களுள் தமக்கு உரித்தாகக் காப்பது திருவேள்விக்குடியும் , தண்ணிய திருத்துருத்தியும் , அன்றியும் அரைக்கண் இறுகக் கட்டுவது பாம்பு ; இவற்றை முன்பே அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தேயிருப்பேம் . இவற்றை அறிந்தோமாயின் , இவர்க்கு நாம் ஆட்படா தொழிவேமோ !

குறிப்புரை :

` அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே ` என்னும் இறுதித் தொடர்க்கு யாண்டும் இவ்வாறே இருபொருளுங் கொள்க . இதன்கண் உள்ள ஏகாரம் முதற் பொருட்குத் தேற்றமாயும் , இரண்டாவது பொருட்கு எதிர் மறுக்கும் வினாவாயும் நிற்கும் . முதற் பொருள் பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தும் குறிப்பையும் , இரண்டாவது பொருள் அதனைச் செவ்வனே புலப்படுத்தும் வெளிப் படையினதாயும் நிற்கும் . ` மூப்பதுமில்லை ` முதலிய மூன்றும் உலகத்தோடு ஒட்டாமையைக் குறிப்பனவாய் பழித்தல் போறற்கு உரியவாம் . ` வேள்விக்குடி ` என்பது ` உழவு , வாணிபம் முதலியன செய்யுங் குடிகள் வாழும் ஊரன்று ` எனவும் , ` துருத்தி ` என்பது , ` ஆற்றிடைக் குறை ` எனவும் பொருள் தந்து அவ்வாறு நிற்கும் ; ஏனைய அவ்வாறாதல் வெளிப்படை . ` மூப்பதும் இல்லை ` முதலிய மூன்றனுள் ஒன்றே அமைவதாக , ஏனையவற்றையும் மிகுத்தோதியது . பிறர் எல்லாரும் அவற்றை உடையராதலை வலியுறுத்தற்கு . சேர்ப்பு - சேர்ந்து வாழும் இடம் ; அது , பகுதிப் பொருள் விகுதி . ` காட்டகத்தது ` என்பது , குறைந்து நின்றது . ` காப்பது ` என்பது தனித்தனி இயையும் . ` கோன் ` என்றது , பன்மை ஒருமை மயக்கம் . ` தலைமேல் ஆர்ப்பது ` என்பதும் பாடம் . ` பிறத்தல் , பின்பு வளர்ந்து மூத்து இறத்தல் இவற்றையுடையோர் உயிர்த் தொகுதியுட் சேர்ந்தோர் ` என்பதும் , ` இவை இல்லாதவனே இறைவன் ` என்பதுமே , ` இறைவன் யார் ? உயிரினத்தவர் யாவர் ? எனப் பிரித்தறிதற்குரிய வேறுபாடுகளாகும் . ஆகவே , இத் திருப்பாடலிற் செம்பொருள் கொள்ளுங்கால் , ` பிறப்பிறப்பு இல்லாத இறைவர் இவரே என்பதை நன்கறிந்தோமாதலின் , நாம் இவர்க்கு ஆட்படாதொழிதல் எவ்வாறு ` எனக் கொள்க . கொள்ளவே , இவருக்கு ஆட்படாதார் , அவ்வாறொழிதற்குக் காரணம் அவரை மறைத்து நிற்கும் அறியாமையே ` என்பதும் , அவ்வறியாமை நீங்கிய வழி , அணைமுரிந்த நீர் கடலிற் சென்று கலத்தற்கும் , கயிறற்ற ஊசல் தரையைச் சார்தற்கும் யாதோர் இடையீடும் இல்லாமை போல இவர்க்கு ஆட்படுதற்கு யாதோர் இடையீடும் இல்லையாம் ` என்பதும் பெறப்படும் . ` சிவபிரானே இறைவன் ` என்பதனை இருபத்திரண்டு ஏதுக்கள் காட்டித் தெரிவிக்கப் புகுந்த அரதத்த சிவாசாரியாரும் , ` பிறப்பிறப்பாதி உயிர்க்குண மின்மையின் ` என்னும் ஏதுவைக் கூறினமைஈண்டு நினைவு கூரற்பாலது . இங்ஙனமே , இத் திருப் பாடலிலும் , வருகின்ற திருப்பாடலிலும் அருளப்பட்டவை சிவபிரானது இறைமைத் தன்மையைத் தெரிவிப்பனவாதல் அறிந்து கொள்க . ` எங்கோன் ` என்றதை வருகின்ற திருப்பாடல்களிலும் இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கட்டக்காட் டின்னட மாடுவ
ரியாவர்க்கும் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர்
பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த்
தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் , இடரைத் தரும் காட்டிலே நடனம் ஆடுவார் ; யாராலும் காண்பதற்கு அரியவர் . சுடப்பட்ட வெள்ளிய சாம்பலைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக ஆடல் பாடல்களைச் செய்வார் ; வேதத்தைப் பலகாலும் பயில்கின்றவர்களாகிய அந்தணர்கள் , வட்டமாகிய குழியில் , தூயதாகிய நெய்யினால் எரியை வளர்த்துப் போற்றி , அதன்கண் பாகம் செய்த பொருள்களை ஏற்று உண்பார் ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` முன்னாள் தக்கன் வேள்வித் தகர்தின்று ` ( தி .8 திருவா - திருச்சதகம் -4) என்றருளியதனால் , வேள்வியுள் ஊன் பாகம் பண்ணப் படுதல் இனிது பெறப்பட்டமையின் , ` அதனை உண்பார் இவர் ` எனப் பழிப்பாயிற்று . ` மறை பயில்வார் அட்டக்கொண்டு ` என்றதனால் , ` வேதமுதல்வரும் , வேள்வி முதல்வரும் ஆகியவர் ` என்பது அருளியவாறாயிற்று . ` அட்டக்கொண்டு ` என்புழிக் ககர ஒற்று , விரித்தல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பேருமோர் ஆயிரம் பேருடை
யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு
துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் , பெயரும் தமக்குரியனவாக ஆயிரம் உடையவர் ; இவர் பெண்ணும் அல்லர் ; ஆணும் அல்லர் ; இவர்க்கு ஊரும் ஒற்றிஊரே ; அதுவன்றி வேறோர் ஊரை உடைய ராதலை நாம் அறிந்திலோம் ; இருண்ட கரிய கடலில் தோன்றிய நஞ்சினை உணவாக உண்டு , கண்டம் கறுப்பாயினார் ; இவர்க்கு ஆரமாவது , பாம்பே ; இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` பேருமோர் ஆயிரம் பேருடையார் ` என்றது , ` ஊரும் ஒற்றி ` என்றாற்போல , ` பேரும் ஒன்றிலர் ` எனப் பழிப்பாயிற்று . உம்மை , எச்சம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

ஏனக்கொம் பும்மிள வாமையும்
பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டன
சொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றுடுத் துப்புலித்
தோஒல் பியற்குமிட்டி
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் பன்றியின் கொம்பையும் , இளமையான ஆமையின் ஓட்டினையும் அணிந்து , ஒற்றை எருதின்மேல் ஏறுபவராய் , தம்மை அடியார்கள் காட்டில் கண்ட கோலங்களையெல்லாம் பலபடியாக எடுத்துச் சொல்லிய பின்பும் , விருப்பம் உண்டாக , மானினது அழகிய தோல் ஒன்றை அரையில் உடுத்து , தோளின் கண்ணும் புலித்தோலை இட்டு , உடம்பின் மேல் யானைத் தோலைப் போர்த்துக் கொள்பவர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

திருமால் கூர்மமாக வடிவங்கொண்ட சிலநாளிலே அதனை அழித்தமையின் ` இள ஆமை ` என்றார் . ` முற்றல் ஆமை ` ( தி .1 ப .1 பா .2) என்றது , செருக்கைக் குறித்ததென்க . ` கானக்காடு ` ஒருபொருட் பன்மொழி . ` காமம் உற ` என்பது , குறைந்து நின்றது . ` மானினது ஐத்தோல் ` என்க . ஐ சாரியை என்றலுமாம் . சிவ பிரானுக்கு மான்றோல் உண்மையும் திருமுறைகளில் சொல்லப்படுதல் காண்க . ` புள்ளி உழை மானின் தோளான் கண்டாய் ` - அப்பர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர்
ஊரிடு பிச்சையல்லால்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர்
ஏறியொர் பூதந்தம்பால்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ
றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் நாவிற்குச் சுவைகள் பலவற்றை ஊட்டி உண்பதற்கு , ஊரவர் இடுகின்ற பிச்சையையன்றி மற்றோர் உணவையும் இலர் . ஒற்றை எருதைக் கயிற்றிற் கட்டி வைத்துக் கொண்டு , அதன் மேல் ஏறிச் செல்வர் . சிறிய பூதங்கள் தம்மிடத்தில் பாட்டு ஈதலைக் கேட்டு நின்று இன்பம் நுகர்பவராவர் . புற்றுக்கள் தோறும் சென்று பல பாம்புகளைப் பிடித்து ஆட்டிப் பிழைப்பர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` ஊட்டிக்கொண்டு ` என்றதில் , கொள் , அடித்துக் கொண்டான் என்பதுபோல , தற்பொருட்டுப் பொருண்மை விகுதி . ` ஓர் பூதம் ` என்றதில் , ` ஒன்று ` என்பது சிறுமை குறித்து நின்றது . ` பாட்டு ` என்பதன்பின் வந்த , ` ஈ ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் , எதுகை நோக்கிக் குறுக்கலாயிற்று . தம் பெருமைக்கு ஏலாமை பற்றி , ` கொடுத்தல் ` என்னாது ` ஈதல் ` என்றார் . ` பாடிக்கொண்டு ` என்பது விரித்தலாயிற்று என்றலுமாம் . இப்பொருட்கு , உண்ணுதல் - பிழைத்தல் ; உண்பவர் - பிழைத்தற்கு ஏதுவாய் உள்ளவர் . ` ஆட்டிக் கொண்டு ` என்பது , ஒரு சொல் நீர்மைத்து .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

குறவனார் தம்மகள் தம்மக
னார்மண வாட்டிகொல்லை
மறவனா ராய்அங்கோர் பன்றிப்பின்
போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியா
ராய்அங்கோர் சோர்வுபடா
அறவனா ராவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர்தம் புதல்வர்க்கு மனைவி , ஒரு குறவர் மகள் ; இவரும் கொல்லும் தொழிலையுடைய வேடுவராய் முன்பு ஒரு பன்றிப்பின் சென்றார் ; இவை மாயமாம் . இவர் இப் பெற்றியரான இறைவரும் , முன்னவரும் , ஒளி வடிவினரும் , அறவரும் ஆவதை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` மாயம் ` என்றதற்கு , ` வஞ்சனையாய்ப் பொருந்தாச் செயலாம் ` என்றும் , ` அருள் நாடகமாம் ` என்றும் இரு பொருளும் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பித்தரை ஒத்தொரு பெற்றியர்
நற்றவை என்னைப்பெற்ற
முற்றவை தம்மனை தந்தைக்குந்
தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி
கொள்வதே செல்வமாகி
அத்தவ மாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

என்னைப் பெற்ற நற்றாயும் , வயது முதிர்ந்த அவள் தாயும் , இவ் விருவர்க்கும் அன்னை , தந்தை , தமக்கை என்பவரும் ஆகிய எல்லோர்க்கும் இறைவராய் உள்ள இவர் . பித்தரைப் போன்ற ஒரு தன்மை உடையராய் இருக்கின்றார் ; அன்றியும் , இறந்தவர் தலை யோட்டில் பிச்சை ஏற்பதே செல்வமாக , அன்னதொரு தவமுடைய ராதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` அவ்வை ` என்பன , ` அவை ` என இடைக்குறையாய் வந்தன . ` நற்று அவை , முற்று அவை ` எனப் பிரிக்க . ` அன்னை தந்தை ` என்பன பன்மை யொருமை மயக்கம் . ` அனை ` என்பதும் இடைக் குறை . தாய் வழியையே அருளியது , ` எம்பரந்துபட்ட கிளைகள் பலவற்றிற்கும் இவரே இறைவர் ` என்பது உணர்த்தற்கு . ` தவ்வை ` என்றதற்கு , அவள் வாழ்க்கைப்பட்ட குடியையும் , ஏனையோர்க்கும் அவர் பிறந்த குடியையும் கொள்க . இவர் வழியை எல்லாம் கூறவே , தம் வழிக்கு இறைவராதல் சொல்லவேண்டாவாயிற்று . ` ஆகி ` என்றது , உடைமையின் வினை உடையதன்மேல் நின்றவாறு . ` செல்வமாகில் ` என்பது பிழைபட்ட பாடம் . ` தவம் ` என்றதற்கு , பழிப்புப் பொருளில் , ` தவப்பயன் ` என்றும் , புகழ்ச்சிப் பொருளில் , ` தவக் கோலம் ` என்றும் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

உம்பரான் ஊழியான் ஆழியான்
ஓங்கி மலர்உறைவான்
தம்பர மல்லவர் சிந்திப்
பவர்தடு மாற்றறுப்பார்
எம்பர மல்லவர் என்னெஞ்சத்
துள்ளும் இருப்பதாகி
அம்பர மாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

` இந்திரன் , உருத்திரன் , மால் , அயன் , என்னும் இவர்கள் அளவில் உள்ளரல்லர் என்றும் , ` தம்மை நினைப்பவரது மனக்கவலையைப் போக்குபவர் எம்மளவல்லவர் ` என்றும் சொல்லப்படுகின்ற இவர் , என் மனத்திலும் இருத்தலுடையவராய் வேறு வெளியாதலை அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

` இருப்பதாகில் ` என்பது பிழைபட்ட பாடம் . ` அம்பரம் ` என்றதற்கு , ` அருவப்பொருள் ` எனவும் , ` பரவெளி ` எனவும் இருபொருள் கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

இந்திர னுக்கும் இராவண
னுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை
பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக
னும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.

பொழிப்புரை :

எங்கள் தலைவர் தேவர் கோமானாகிய இந்திரனுக்கும் , அரக்கர் கோமானாகிய இராவணனுக்கும் அருள் புரிந்தார் . அந்தணர்க்குரிய மந்திரம் ஓதுதல் , மறைபாடுதல் என்பவற்றையும் , வேடர்க்குரிய மான் கன்றைப் பிடித்தலையும் உடையவர் . ` மால் , அயன் ` என்னும் இருவரும் உடனாயிருப்ப , அவரொடு நிற்றலேயன்றி , தாம் மட்டும் தனியே உயர்ந்தும் செல்வர் . இவற்றையெல்லாம் அறிந்தோமேல் , நாம் இவர்க்கு ஆட்படோமே !

குறிப்புரை :

இவை அனைத்தும் , பழிப்பும் புகழும் ஆதல் அறிந்து கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கூடலர் மன்னன் குலநாவ
லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி
யார்க்கடி மைவழுவா
நாடவல் லதொண்டன் ஆரூரன்
ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத்
திருப்பது பண்டமன்றே.

பொழிப்புரை :

பகைவர்க்கு அவர் வணங்கும் அரசனும் , மேன்மை பொருந்திய திருநாவலூர்க்குத் தலைவனும் , நன்மையை யுடைய தமிழைப் பாடவல்ல சிவனடியார்க்கு அடிமை வழுவாது செய்யுமாற்றால் அப்பெருமானை அடைய எண்ணுகின்றவனும் ஆகிய நம்பியாரூரன் , தன் தலைவனுக்கு ஆட்படுதல் இவ்வாறெனச் சொல்லி இப்பதிகத்தைப் பாடவல்லவர் , மேலான உலகத்தில் சென்று தங்குதல் பொருளன்று . ( மிக எளிதாம் )

குறிப்புரை :

நரசிங்கமுனையரையர்க்கு மகன்மையுற்றமைபற்றி, `கூடலர் மன்னன்` என்று அருளினார். `வழுவாது` என்பது, ஈறு கெட்டு நின்றது. `ஆட்படுமாறு` என்றது, `இன்ன தன்மையுடையார்க்கு ஆட்படோம்` என்றும், `இன்ன தன்மையுடையார்க்கு ஆட்படுவோம்` என்றும் இருபொருளும் அருளிப்போந்தமையை.
சிற்பி