திருநின்றியூர்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

அற்றவ னாரடி யார்தமக்
காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபரர் என்று
பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும் , பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடைய வரும் , ` எம் இறைவர் ` என்று பலராலும் விரும்பப் படுகின்ற தலைவரும் , பகைவருடைய ஊரினை , பெரிய , கொடிய அம்பினால் அழித்த வரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே .

குறிப்புரை :

` அற்றவன் ` முதலிய , வினைப்பெயரும் வினைக் குறிப்புப் பெயருமாகிய நான்கும் , உயர்வு குறித்த ஆர் விகுதி ஏற்றன . ` அடியார் தமக்கு ` என்ற நான்காவது , கிழமைப் பொருட்கண் வந்தது . பராபரர் - மேன்மையும் கீழ்மையும் ஆகிய எல்லாமாய் இருப்பவர் . ` நம் திருநின்றியூர் ` என்றது , தமக்குப் புகழ் பொருளாய் நின்ற உரிமை பற்றி என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்
ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர் போற்றும்எம்
புண்ணியத்தார்
நேசத்தி னால்என்னை ஆளுங்கொண்
டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்த வரும் , அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும் , சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும் , அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும் , நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .

குறிப்புரை :

` வாசத்தின் ஆர் ` என்புழி இன் , வேண்டாவழிச் சாரியை . பூசம் , அம்மீற்றுத் தொழிற் பெயர் . ` ஆளும் ` என்னும் உம்மை , சிறப்பு . ` தேசம் ` என்றது , உலகத்தை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த
இடம்வளம் மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
யுந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

அகங் கையில் மூவிலை வேலை ( சூலத்தை ) உடையவரும் , தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க , அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து , பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர் , உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம் , வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே .

குறிப்புரை :

` பாகர் ` என்னும் வினைக்குறிப்பு முற்று எச்சமாயிற்று . ` மகிழ்ந்த ` என்றது , தன் காரியத்தையும் தோற்றுவித்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

ஆறுகந் தார்அங்கம் நான்மறை
யார்எங்கு மாகிஅடல்
ஏறுகந் தார்இசை ஏழுகந் தார்முடிக்
கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்
தார்பரி சாந்தமதா
நீறுகந் தார்உறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்த வரும் , நான்கு வேதங்களையும் உடையவரும் , எவ்விடத்தும் நிறைந்து நின்று , வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும் , ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும் , கங்காதேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும் , அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும் , பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்ற வரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே .

குறிப்புரை :

` உகத்தல் ` பலவும் , அவற்றின் காரியத்தைத் தோற்று வித்தன . உமையம்மையை இடப்பாகத்தில் வைத்தமை பொதுவாக உயிர்கட்கு அருள்புரிதலையும் , கங்கையை முடியில் தாங்கியது , சிறப்பாகப் பகீரதனுக்கு அருள்புரிந்தமையும் உணர்த்தலின் , ` முடிக் கங்கை தன்னை வேறுகந்தார் ` என்று அருளினார் . ` கங்கையிடத்துக் காதலை மிக உடையார் ` என்பது நயம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
னார்அதி கைப்பதியே
தஞ்சங்கொண்டார்தமக் கென்றும்
இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராத வரும் , ` நறுநெய் , தயிர் , பால் ` முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும் , திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்ட வரும் , தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றி யூரே .

குறிப்புரை :

` பால் ` என்றதன் ஈற்றில் , ` முதலிய ` என்பது தொகுத்தலாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஆர்த்தவர் ஆடர வம்மரை
மேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல்
வெம்புலால் கையகலப்
பார்த்தவர் இன்னுயிர் பார்படைத் தான்சிரம்
அஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

அரையில் புலியினது பசுந்தோலையும் , ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும் , உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும் , அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும் , பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரம தேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றி யூரேயாகும் .

குறிப்புரை :

` சேத்தவர் ` எனப் பாடம் ஓதி , ` சேதித்தவர் ` என்பது குறைந்து நின்றதாக உரைப்பாரும் உளர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

தலையிடை யார்பலி சென்றகந் தோறுந்
திரிந்தசெல்வர்
மலையுடை யாள்ஒரு பாகம்வைத்
தார்கற் றுதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ்
சுழல அருநடஞ்செய்
நிலையுடை யார்உறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடையசெல்வரும் , மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்த வரும் , மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம் .

குறிப்புரை :

` பலி ` என்புழி , நான்கனுருபு விரிக்க . ` கல் துதைந்த ` என்றது , ஆற்றின் இயல்பை விரித்தவாறு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

எட்டுகந் தார்திசை யேழுகந்
தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசைஇச் சிக்கும்
இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்
காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

திசைகள் எட்டினையும் , ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும் , மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழி பாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு , பிச்சை யேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்பு கின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது , நமது திருநின்றியூரே .

குறிப்புரை :

ஆறுதல் - அடங்குதல் . ` உகந்து இட்டு ஆர் மலர் ` என்க . ` இடுதலால் ` என்பது , ` இட்டு ` எனத் திரிந்து நின்றது . ஊண் , முதனிலை திரிந்த தொழிற்பெயர் . சிட்டம் என்பது , ` சிட்டு ` எனக் குறைந்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

காலமும் ஞாயிறு மாகிநின்
றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்
பார்அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்
மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிட
மாந்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

காலமும் , அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும் , தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும் , செயல்களையும் கண்டு அவர்களை விரும்பு கின்றவரும் , நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு , அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் ` திருமால் , பிரமன் , இந்திரன் ` முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும் , திருநின்றியூரே இடமாய் நிற்கும் .

குறிப்புரை :

சீலம் - ஒழுக்கம் . அஃது அதற்கு அடியாகிய நோன்பின் மேல் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

வாயார் மனத்தால் நினைக்கு
மவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி ஆடிய மேனியர்
வானில்என்றும்
மேயார் விடையுகந் தேறிய
வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர்
ஊர்திரு நின்றியூரே.

பொழிப்புரை :

வாயார வாழ்த்தி , மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும் , அரியதவக் கோலத்தை உடைய தூயவரும் , வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும் , இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும் , தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே .

குறிப்புரை :

` போந்தவர்க்கு ` என்பது பாடமன்று

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
யறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாய்இருந்
தானைத் திருநாவல்ஆ
ரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும்வல்
லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே.

பொழிப்புரை :

திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய , பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , வினை நீங்கப் பெற்று , மண்ணுலகத் தவரும் , விண்ணுலகத்தவரும் வணங்கும் படி , சிவபெருமானது திருவடியை அடைவார்கள் .

குறிப்புரை :

` சீரும் ` என்பது , ` சீர் ` என்பது அடியாகப் பிறந்த பெயரெச்சம் . ` சிவகதி ` என்பது வாளா பெயராய் , ` வீடுபேறு ` என்னும் பொருளதாய் நின்றது .
சிற்பி