திருக்கோளிலி


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே , வாள்போலுங் கண்களை யுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் . அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை ; அடியேன் , எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன் ; வேறு யாரை வேண்டுவேன் ! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` நீள ` என்றது , ` கால எல்லை இன்றி ` என்னும் பொருள தாய் , இடைவிடாமையைக் குறித்தது . ` உமை ` என்பது பாடம் அன்று . ` அவள் ` பகுதிப் பொருள் விகுதி . மெலிதல் - மனந்தளர்தல் . ` குண்டையூர்க்கண் பெற்றேன் ` என்றது , ` அஃது என் இல்லத்திற்குச் சேய்த்தாகலின் , பெற்றும் பெறாதவனாய் உள்ளேன் ` எனக் குறை வெளிப்படுத்தியவாறு . மிகப் பெற்ற நெல்லினை , ` சில நெல் ` என்றது ; குறையிரப்பால் வந்த , இளிவரல் பற்றி . ` ஐய சிறிதென்னை ஊக்கி ` ( கலி -37.) என்றாற்போல்வன காண்க . பதினெண் கணங்கள் , முதலாகப் பலரை உடைமையின் , பொதுப்பட , ` பணி ` என்று வேண்டினார் . ` குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ` என்றதனை வருகின்ற திருப்பாடலினும் இயைக்க . ` ஆளிலை ` என்றதனை எல்லாத் திருப்பாடல்களிலும் உய்த்துக்கொண்டுரைக்க . இது முதலாக உள்ள திருப்பாடல்களில் , ` உனை ` என்றாற்போல ஓரசையாய் வருவன , கூன் . கூன் பயின்று வருதல் , இசைத்தமிழிற்கு இயல்பே . இவை களையும் கூன் இன்றி , முன்னவைபோல ஓதுவாரும் உளர் . அட்டுதல் - கொண்டுவருதல் . ( தமிழ் லெக்ஸிகன் ).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வண்டம ருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன் றெரி
செய்தஎம் வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி , ` உமை ` என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே , பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எரித்த எங்கள் அந்தணனே , தெளிந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , உலகெலாம் ஆகியவனே , அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; ஆதலின் , அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளை யிட்டருள் .

குறிப்புரை :

உமை நங்கையோர் பங்குடைமை , போக வடிவத்தையும் , புரமூன்றெரித்தமை , வேகவடிவத்தையும் , வேதியனாதல் , யோகவடிவத்தையும் குறித்தபடியாம் . ` உமை நங்கையோர் பங்குடையாய் ` என , ` நீயும் இல்லுடையை ஆதலின் , யான் வேண்டுவதன் இன்றியமையாமை அறிகுவை ` என்பதனைக் குறிப்பால் அருளினார் ; இதனை , வருகின்ற திருப்பாடல்களில் , வெளிப்படையாகவே அருளிச் செய்வார் . ` உலகியலை நிலைபெறுவிக்கின்றவனும் நீயேயன்றோ ` என்பது , இவற்றின் உள்ளீடாய பொருள் , ` திருக்கோளிலி எம் பெருமான் ` என்பதனை , வருகின்ற திருப்பாடல்களிலும் இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட
ருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர்நல் லார்வருத்தம் மது
நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடைசூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , எல்லார்க்கும் முன்னவனே , யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே , நீ , உன் திருமேனியில் பாதியிற்றானே , ` உமை ` என்னும் ஒரு மாதராளை வைத்தாய் ; அது வன்றி , விரிந்த சடையின்கண் , ` கங்கை ` என்னும் மற்றொரு மாத ராளையும் வைத்தாய் ; ஆதலின் , நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே ? அதனால் உன்னை வேண்டுகின்றேன் ; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` நீயும் அறிதியன்றே ` என்றது , ` நீயும் ஓர் இல் வாழ்க்கையன் ஆதலின் , அவ் வாழ்க்கையை உடைய என்னை நீ வெறுப் பாயல்லை என்று உன்னை வேண்டுகின்றேன் ` என்னும் குறிப்பினை உடையது . தலைவன்முன் நின்று இவ்வாறு கூறுதலின் , நகையு மாயிற்று . மேல் , ` உமை நங்கையோர் பங்குடையாய் ` என்றதும் , இனி அவ்வாறு வருவனவும் அன்ன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சொல்லுவ தென்உனைநான் தொண்டை
வாய்உமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு
பூசல்செய் தார்உளரோ
கொல்லை வளம்புறவிற் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அல்லல் களைந்தடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது ? நீ , கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய , ` உமை ` என்னும் நங்கையை முன்பு மணந்து , பின்பு இடப்பாகத்திலே வைத்தாய் ; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ ? இல்லை ஆதலின் , எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை . அடியேன் , சில நெற்களை , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி , அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` உனை ` என்பது வேற்றுமை மயக்கம் . கொல்லை புன்செய் நிலம் . அவற்றின் வளம் வரகு முதலியன . ` வளப்புறவு ` என்பது மெலித்தலாயிற்று . இது , வருகின்ற திருப்பாடலிலும் , இறுதித் திருப்பாடலிலும் ஒக்கும் . ` குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ` என்றதனை , வரு கின்ற திருப்பாடலிலும் இயைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

முல்லை முறுவலுமை ஒரு
பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலையிற் பலி
கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே , சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே , கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , அடியேன் , குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . ஆதலின் , அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி , அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

அயர்தல் - செயற்படுத்துதல் ; தோற்றுவித்தல் . அது சிரித்தலைக் குறித்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

குரவம ருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
பரவை பசிவருத்தம் மது
நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில்சூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே , பாம்பைக் கட்டியுள்ளவனே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே , நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே ? அவள் பொருட்டு , அடியேன் , குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ , நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` நயனுடையான் நல்கூர்ந்தானாதல் செயுநீர - செய்யா தமைகலா வாறு ` ( குறள் -219) என்பவாகலின் , பரவையார்க்குப் பசி யாவது , அடியவர் முதலாயினாரை வழிபட இயலாமையேயாம் என்க . ` நீயும் ` என்ற உம்மை , இங்கு ` யானேயன்றி ` என இறந்தது தழுவிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

எம்பெரு மான்உனையே நினைந்
தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழலாள் ஒரு
பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அன்பது வாய்அடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே , செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே , அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை . எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான் ; வேறுயாரை வேண்டுவேன் ! என்னிடத்து அன்புடையையாய் , அவற்றை அங்குச் சேர்த்து உதவ . நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` அன்பது ` என்னும் ` அது `, பகுதிப் பொருள் விகுதி . ` அன்பு ` அதனை உடையான்மேல் நின்றது . வருகின்ற திருப்பாடலுள் , ` இரக்கம் ` என்பதும் அவ்வாறாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

அரக்கன் முடிகரங்க ளடர்த்
திட்டஎம் மாதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பர
வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதிகொள் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கம தாய்அடியேற் கவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

இராவணனது தலைகளையும் , கைகளையும் நெரித் திட்ட எங்கள் முதற்கடவுளே , திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே . அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள் ; அவள் பொருட்டு , அடியேன் , சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; நீ இரக்க முடையையாய் , அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

இராவணனை ஒறுத்தமையை அருளிச் செய்தது , இறைவனது பேராற்றலை நினைந்து .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பண்டைய மால்பிரமன் பறந்
தும்மிடந் தும்மயர்ந்தும்
கண்டில ராய்அவர்கள் கழல்
காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே யவை
அட்டித் தரப்பணியே.

பொழிப்புரை :

முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும் , ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக , இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே , தெளிந்த அலைகளையுடைய நீரை யுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளி யிருக்கின்ற எம்பெருமானே , எல்லா உலகமும் ஆனவனே , அடியேன் , குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்த்து உதவ , நீ , எவர்க்கேனும் கட்டளையிட்டருள் .

குறிப்புரை :

` பண்டையமால்பிரமன் ` என இன்றுள்ளாரின் வேறு போல அருளியது அக்காலத்துக்கொண்ட முயற்சிபற்றி . இனி , அவர் தாம் இன்றுள்ளார்போல் அன்றி வேறு நிலையினராய் இருந்தனர் என்பது நயம் . ` திருவடி ` என்னும் ஒருமைபற்றி . ` அரிது ` என அருளினார் . ` அரிதாயபிரான் ` எனச் சினைவினை முதலொடு முடிந்தது . இனி , துவ்வீறு பண்புணர்த்த , அப்பெயர் , அதனை உடையான்மேல் நின்றதெனலுமாம் . ` ஆய் ` என்றதனை ` ஆ ` எனத்திரிக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர்
வானுல காள்பவரே.

பொழிப்புரை :

கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை , நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான் , தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி , மனம் பொருந்திப் பாடிய இப் பத்துப் பாடல்களையும் பாடவல்லவர் , இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி , அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள் .

குறிப்புரை :

` எம்பெருமான் யான் வேண்டின் அருளாதொழியான் ` என்னுந் தெளிவினாற் பாடியன இவை என்பார் , ` நினைந்தேத்திய பத்து ` என்று அருளினார் . ` இவற்றை வல்லார் ` எனவே , ` அத்தெளி வோடே இவற்றைப் பாடுதல் வல்லார் ` என்றதாயிற்று . ` அண்டர்க்கு வானுலகு ` என்க . அது சிவலோகம் . அதனை ஆளுதலாவது , ஆண்டுள்ள தூய இன்பங்களை வேண்டியவாறே துய்த்தல் . இவ் வாறன்றி ` அண்டர் ` என்றது , வாளா பெயராய் நின்றது எனக் கொண்டு , ` தேவரது வானுலகத்தை ஆள்பவர் ` என்றுரைப்பிற் சிறவாமை யறிக .
சிற்பி