திருக்கச்சிமேற்றளி


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நொந்தா வொண்சுடரே நுனை
யேநி னைந்திருந்தேன்
வந்தாய் போயறியாய்
மனமேபு குந்துநின்ற
சிந்தாய் எந்தைபிரான் திரு
மேற்ற ளிஉறையும்
எந்தாய் உன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

பொழிப்புரை :

அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே , என் தந்தைக்கும் பெருமானே , கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே , என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய் ; ஆதலின் , இனி அடியேன் உன்னை யன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

குறிப்புரை :

` நுந்துதல் - தூண்டுதல் . அதுவே , நொந்துதல் என மருவிற்று ` என்றலும் ஆம் . சுடர் , உவமையாகுபெயர் . பின் இவ்வாறு வருவனவும் அவை . ` நின் , உன் ` என்பனவேயன்றி , ` நுன் ` என்பதும் திருமுறைகளில் உள்ளது என்பதை , ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க . ` சிந்தை ` என்பது , சிந்தையுள் நிற்கும் பொருளைக் குறித்தது . ` இனி ஏத்த மாட்டேனே ` என்றது , ` அந்நிலையில் திட்பம் எய்தப் பெற்றேன் ` என்றபடி . ஏகாரம் , தேற்றம் , அதனை எய்தியவாற்றை விளக்குவார் , ` வந்தாய் போயறியாய் ` என்று அருளினார் . ` நுனையே நினைந்திருந்தேன் ` என்றமையால் , முன்னரும் சுவாமிகள் அவ்வாறிருந்தமை பெறப்பட்டது . தளி , கோயில் . மேற்குப் பக்கத்தில் , இருத்தலால் ` மேற்றளி ` எனப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

ஆட்டான் பட்டமையால் அடி
யார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன் கேட்பதெல்லாம் பிற
வாமை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகைசூழ் திரு
மேற்ற ளிஉறையும்
மாட்டே யுன்னையல்லால் மகிழ்ந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

பெருமையை யுடைய பல மாளிகைகள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் செல்வமாய் உள்ளவனே , அடியேன் உனக்கு அடிமையாயினமையால் , உன் அடியார்க்கு அடியனாகின்ற பேற்றைப் பெற்றேன் . அதனால் , உன்பால் அடியேன் வேண்டற்பாலன பலவற்றையும் வேண்டி , இறுதியாகப் பிறவாத நிலையை வேண்டியொழிந்தேன் . இனி , என் மகிழ்ச்சி மீதூர்வால் உன்னைப் புகழ்தலன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

குறிப்புரை :

` ஆள்தான் ` என்பதில் உள்ள ` தான் `, அசைநிலை , ` பட்டு ` என்றதும் , ` பட்டமையால் ` என்றபடியாம் . இறைவனுக்கு ஆட்பட்ட பின்னரே அத்தகையோராய அடியவரை அணுகுதல் கூடும் ஆகலின் , ` உனக்கு ஆட்பட்டமையால் உன் அடியார்க்குத் தொண்டு பட்டேன் ` என்றும் , அடியார்க்கு அடியராய பின்னரே அடிமை நிரம்பு தலாலும் , அது நிரம்பப்பெற்றவர் யாதொன்றனையும் பிறர்பால் சென்று இரத்தல் இன்மையானும் , ` கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன் ` என்றும் அருளினார் . ` உனக்கு , உன் ` என்பன சொல்லெச்சங்கள் . ` கேட்பது ` என்பது . பன்மையொருமை மயக்கம் ; ` கேட்பவெல்லாம் ` என்பதே பாடம் எனலுமாம் . ` ஒழிந் தேன் ` என்பது , ` விட்டேன் ` என்பதுபோல , துணிவுப் பொருளதாய் , ஒருசொல் நீர்மைப்பட்டு நின்றது . ` சேடு மாடு ` என்பன , எதுகை நோக்கி விரித்தல் பெற்று நின்றன . இனி , ` மாட்டு ` என்பது முதனிலைத் தொழிற் பெயராய் , ` வல்லுதல் ` எனப் பொருள்தந்து , அஃது , அதனைத் தரும் இறைவனுக்கு ஆயிற்று என்று உரைப்பினும் ஆம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

மோறாந் தோரொருகால் நினை
யாதி ருந்தாலும்
வேறா வந்தென்னுள்ளம் புக
வல்ல மெய்ப்பொருளே
சேறார் தண்கழனித் திரு
மேற்ற ளியுறையும்
ஏறே யுன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

பொழிப்புரை :

அடியேன் ஓரொருகால் மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும் , நீதானே வந்து என் உள்ளத்தில் புகுந்து நினைப்பிக்கவல்ல உண்மைப் பொருளானவனே . சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண் சிங்கம் போல்பவனே . இனி , அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .

குறிப்புரை :

` மாழாந்து ` என்பதுபோல , ` மோறாந்து ` என்பது ஒரு சொல் என்பது , ஈண்டு அறியப்படுகின்றது . ` தனியாக ` எனப்பொருள் படும் , ` வேறாக ` என்பது , இங்கு , ` தானே ` என்னும் பொருளதாய் நின்றது . இறைவன் தானே வலிய வந்து தமக்குத் தன்னைக் காட்டி நின்றமையை , ஓலை காட்டி ஆண்டமை , திருவடி சூட்டி ஆண்டமை முதலியவற்றால் நன்கறிந்தாராதலின் , இவ்வாறு அருளிச்செய்தார் . இதனானே , இவைபோலும் நிகழ்ச்சிகள் பிறவும் சுந்தரர் பால் நிகழ்ந்தமை பெறுதும் . உள்ளத்தில் இவ்வாறு புகுவன பிறவும் உளவேனும் , அவையெல்லாம் பின்னர் நிலையாது நீங்குதலின் , அவ்வாறில்லாது என்றும் நீங்காது நிற்கும் இறைவனை , ` மெய்ப்பொருள் ` என்று அருளினார் . ` வந்தாய் போயறியாய் ` என முதற்கண் அருளிச் செய்ததும் இவ்வாற்றான் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

உற்றார் சுற்றமெனும் மது
விட்டு நுன்னடைந்தேன்
எற்றால் என்குறைவென் இட
ரைத்து றந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலுந் திரு
மேற்ற ளிஉறையும்
பற்றே நுன்னையல்லால் பணிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

மூன்று மதில்களையும் அழித்தவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே , அடியேன் , என்னோடு நெருங்கிய உறவினர் பலர் உளர் என்றும் , மற்றும் சுற்றத்தார் பலர் உளர் என்றும் நினைத்து , அவர்கள் தொடர்பிலே பட்டு , உய்ந்து போகமாட்டாது நிற்கின்ற அந்நிலையைத் துறந்து , உன்னையே புகலிடமாக அடைந்தேன் . அதனால் , இப்பொழுது , எத்தன்மையதான பொருளால் , என்ன குறை அடியேனுக்கு இருக்கின்றது ? ஒன்றும் இல்லை . என் துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன் . ஆதலின் இனி , உன்னையன்றிப் பிறரைப் பணிந்து புகழ்தலைச் செய்யவே மாட்டேன் .

குறிப்புரை :

உற்றார் , ஒன்றாய் இயைந்தவர் ; அவர் மனைவியும் மக்களும் . சுற்றம் சூழ்ந்தவர் ; அவர் , ஏனையோர் . மனைவியும் , மக்களும் தாமே யன்றித் தம்மைச் சார்ந்தவராலும் பந்தம் உறுவிப்பர் என்பார் , இங்ஙனம் வகுத்தோதியருளினார் ; ` சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் ` என்றார் , மாணிக்கவாசகரும் ( தி .8 திருவம்மானை 20.) நுன் என்பது பற்றி , முதல் திருப்பாடற் குறிப்பிலே கூறப் பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

எம்மான் எம்மனையென் றவர்
இட்டி றந்தொழிந்தார்
மெய்ம்மா லாயினதீர்த் தருள்
செய்யும் மெய்ப்பொருளே
கைம்மா ஈருரியாய் கன
மேற்ற ளிஉறையும்
பெம்மான் உன்னையல்லால் பெரி
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

உடம்பு இடமாக வருகின்ற மயக்கமாயினவற்றை எல்லாம் நீக்கி , மெய்யுணர்வைத் தந்தருளுகின்ற மெய்ப்பொருளாய் உள்ளவனே , யானையை உரித்த தோலை உடையவனே , பெருமை பொருந்திய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோனே , என்னைத் தாங்குகின்ற . ` என் தந்தை ` என்றும் , ` என் தாய் ` என்றும் சொல்லப்பட்டவர்கள் என்னை இங்குத் தனியே வைத்து விட்டு இறந்துவிட்டார்கள் ; ஆகவே , இனி , உன்னையன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக நினைத்துப் புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

துணையாவார் என்று துணியப்படுகின்றவருள் ஒருவரேனும் எஞ்ஞான்றும் எங்கும் உடனாய் நிற்பார் , இல்லை என்றற்கு அவருள் மேம்பட்டவராகிய தந்தை தாயரை எடுத்துக்காட்டி யருளினார் . ஆகவே , ` இறந்தொழிந்தார் ` என்றதன்பின் , ` இனி யாவர் தாம் என்னைத் தாங்குவார் ! ஆதலின் ` என்பது , இசையெச்சமாய் வந்து இயையுமாறு அறிக . ` நமக்குத் துணை தந்தை ` யென்றும் , ` தாய் ` என்றும் , மயங்குகின்ற மயக்கங்கள் எல்லாம் உடம்பு காரணமாக வாதலின் , ` மெய்ம்மால் ஆயின ` என்று அருளிச் செய்தார் . ` பெரிது ` என்றதன்பின் , ` ஆக நினைத்து ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

நானேல் உன்னடியே நினைந்
தேன்நி னைதலுமே
ஊனேர் இவ்வுடலம் புகுந்
தாய்என் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திரு
மேற்ற ளிஉறையும்
கோனே உன்னையல்லாற் குளிர்ந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

எனது ஒளி பொருந்திய விளக்குப் போன்றவனே , தேன் போன்றவனே , இனிய அமுதம் போன்றவனே , கச்சித் திரு மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நானோ எனில் , உன் திருவடியை அடைய நினைத்தேன் ; அங்ஙனம் நினைத்த அளவிலே நீ ஊன் பொருந்திய இவ்வுடலுள்ளே வந்து புகுந்துவிட்டாய் ; ஆதலின் , இத்தகைய பேரருளாளனாகிய உன்னையல்லது பிறரை அடியேன் உளங்குளிர்ந்து புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

` வேண்டுவார் வேண்டுவதை ஈயும் பேரருளும் , பேராற்றலும் உடைய பதியாகிய உனது பெருமையை அறிந்தேனாதலின் , அவை இல்லாத சிறுமையுடைய பசுக்களாகிய பிறரை யான் அடையேன் ` என்றபடி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கையார் வெஞ்சிலைநா ணதன்
மேற்ச ரங்கோத்தே
எய்தாய் மும்மதிலும் மெரி
யுண்ண எம்பெருமான்
செய்யார் பைங்கமலத் திரு
மேற்ற ளிஉறையும்
ஐயா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

எம் பெருமானே , வயலின்கண் பரவியுள்ள பசிய தாமரைகளையுடைய கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நீ உன் கையின்கண் பொருந்திய கொடிய வில்லினது நாணின்மேல் அம்பைத் தொடுத்து , மூன்று மதில்களையும் தீ உண்ணும்படி எரித்தாய் ; ஆதலின் , உன்னையன்றிப் பிறரைத் தேவராக எண்ணிப் புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

` திரிபுரம் எரித்த வரலாற்றினால் ஏனைய எல்லாத் தேவரும் உனக்கு ஏவலராய்நின்று தாங்கள் நன்மை எய்தினமையை அறிந்தேனாகலின் , யான் உன்னையே தொழுவேன் ` என்றபடி . ` கையார் வெஞ்சிலைநாண் மேல்சரங் கோத்து ` என்ற விதப்பு , ` பிறரால் வளைத்துக் கொள்ளப்படாத வில்லில் , பிறரால் பூட்டப் படாத நாணில் , பிறரால் தொடுக்கப்படாத அம்பினைத் தொடுத்து ` என்பதனை விளக்கிநின்றது . ` ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ - ஒருகணை கொண்டு மூவெயிலுடற்றிப் - பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த - கறைமிடற் றண்ணல் ` ( புறம் -55.) எனச் சான்றோருங் கூறினார் . அது , பகுதிப் பொருள் விகுதி ; ஏகாரம் ; அசை நிலை . இனி ஏகாரத்தை வினாப்பொருளதாக்கி , ` சிலைநாணில் சரம் கோத்தோ எரியுண்ண எய்தாய் ? இல்லை ; சிரித்து எரியுண்ணச் செய்தாய் ` என உரைத்து , ` அதனால் , கரணத்தானன்றிச் சங்கற் பத்தாற் செய்பவன் நீ என அறிந்தேன் ` என்பது போந்த பொருளாக உரைப்பினும் ஆம் . ` ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற ` என்னும் திருவாசகமும் ( தி .8 திருவுந்தி -2.) இக் கருத்தே பற்றி எழுந்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

விரையார் கொன்றையினாய் விம
லாஇனி உன்னையல்லால்
உரையேன் நாவதனால் உட
லில்உயிர் உள்ளளவும்
திரையார் தண்கழனித் திரு
மேற்ற ளிஉறையும்
அரையா உன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

நறுமணம் பொருந்திய கொன்றைமாலையை உடையவனே . தூயவனே , அலைகள் நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , அடியேன் . என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி , உன்னையன்றிப் பிறரை , ` தேவர் ` என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன் ; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக மதித்துப் புகழவும் மாட்டேன் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` ஏத்தல் ` என்பது பின்னர் வருகின்றமையின் , முன்னர் வந்த உரைத்தல் , ஒருசொற் சொல்லலாயிற்று . ஆகவே , அதற்கு இவ்வாறுரைத்தல் பெறப்பட்டது . வலியுறுத்தற் பொருட்டு , ` உன்னை யல்லால் ` என்பதனைப் பின்னுங் கூறினார் . முன்னர் , ` நாவதனால் ` என , வேண்டா கூறியதும் அன்னது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

நிலையா நின்னடியே நினைந்
தேன்நி னைதலுமே
தலைவா நின்னினையப் பணித்
தாய்ச லமொழிந்தேன்
சிலையார் மாமதில்சூழ் திரு
மேற்ற ளிஉறையும்
மலையே உன்னையல்லால் மகிழ்ந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

சந்திர காந்தக் கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண் எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே . தலைவனே , அடியேன் , உனது திருவடியையே நிலைத்த பொருளாக உணர்ந்தேன் ; அவ்வாறு உணர்ந்த அளவிலே அவ்வாறே மாறாது என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச் செய்தாய் ; அதனால் , அடியேன் , என் , துன்பமெல்லாம் ஒழிந்தவனாயினேன் ; ஆகவே , இனி அடியேன் , உன்னையன்றிப் பிறரை , மனம் மகிழ்ந்து புகழவேமாட்டேன் .

குறிப்புரை :

` நின்னையே ` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத் தலாயிற்று . ` சிலை ` என்பது , விதப்பினால் , உயர்ந்ததன் மேல தாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பாரூர் பல்லவனூர் மதிற்
காஞ்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும்புறவிற் றிரு
மேற்ற ளிச்சிவனை
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்டன்ஆ ரூரன்சொன்ன
சீரூர் பாடல்வல்லார் சிவ
லோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

நிலம் முழுதும் ஆணை செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய , மதிலை உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை , திருவாரூர்ப் பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய , தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப் பாடவல்லவர் , சிவலோகத்தை அடைவார்கள் .

குறிப்புரை :

தடுத்தாட்கொண்டது திருவெண்ணெய்நல்லூரிலாயினும் , ` வருக ` என்று பணித்து மணம்புரிவித்து இருக்கச்செய்ததும் , அடியார்க்கு அடிமையாகச் செய்ததும் திருவாரூரிலாதலின் , நாயனார் , தம்மை , ` ஆரூரன் அடியான் ` என்று அருளினார் .
சிற்பி