திருப்பழமண்ணிப்படிக்கரை


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

முன்னவன் எங்கள்பிரான் முதல்
காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

எல்லார்க்கும் முன்னே உள்ளவனும் , தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும் , யாவரினும் தலையாயவனும் , அழகிய நீலகண்டத்தை உடையவனும் , என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும் , நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய் , எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` எங்கள் பிரான் ` என்பதைப் பெயர்தொறும் வைத்து ஓதினமையின் , அதனையும் , பொதுத் தன்மை நீக்கிச் சிறப்பிக்கும் பெயராகக் கொள்ளுதல் திருக்குறிப்பாதல் பெறப்படும் . ` பன்னிய எங்கள் பிரான் ` என்றதன்பின் , ` இருப்பது ` என்னும் சொல் சொல்லெச்சமாய் மறைந்து நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அண்ட கபாலஞ்சென்னி அடி
மேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழு
தேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரை
யார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ் வடிகளை வணங்கி , முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும் , வெண்மையான பிறையை அணிந்தவனும் , வெள்ளிய மழுவை ஏந்தியவனும் , பகைவர்மேல் விரைதல் பொருந்திய , ஒளியை யுடைய மூவிலை வேலை ( சூலத்தை ) உடைய , ` பண்டரங்கம் ` என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந் தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` அண்டம் ` என்றது திரட்சியையும் , ` கபாலம் ` என்றது தலையையும் குறித்தது . ` சென்னி , தொண்டு ` என்பன ஆகு பெயராய் அவற்றை உடையவரைக் குறித்தன . ` அவ்வடி ` எனவும் , ` அப்பண்டங்கன் ` எனவும் சுட்டுக்கள் வருவித்து உரைக்க . பரவுதல் முன்னிலையாகவும் , ஏத்துதல் படர்க்கையாகவும் துதித்தல் என்க . மழுவிற்கு வெண்மை , கூர்மையால் உண்டாவதாம் . மூவிலை அன்மொழித்தொகை . ` பண்டரங்கம் ` ஒருவகைக் கூத்து ; ` நீ பண்டரங்கம் ஆடுங்கால் ` ( கலி - கடவுள் வாழ்த்து ) அதனை உடையவன் பண்ட ரங்கன் . அஃது இடைக் குறைந்து , ` பண்டங்கன் ` என நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

ஆடுமின் அன்புடையீர் அடிக்
காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர் உம
ரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்
தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

அன்புடையவர்களே , அன்புக் கூத்தினை ஆடுங் கள் ; தொண்டராய் உள்ளவர்களே , சிவபெருமானது திருவடிக்கு ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள் ; பத்தராய் உள்ளவர்களே , உம்மவரோடு எம் மவரும் சூழ ஒன்று கூடி , மனம் மெலிதற்குக் காரணமான இல் வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று , திருப்பழமண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள் .

குறிப்புரை :

உடையாரது ஆட்பட்ட தன்மையை உடைமைமேல் ஏற்றி , ` ஆட்பட்ட தூளி ` என்றார் . ` வாழ்க்கை தன்னை ` என்றது வேற்றுமை மயக்கம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அடுதலை யேபுரிந்தான் அவை
அந்தர மூவெயிலும்
கெடுதலை யேபுரிந்தான் கிள
ருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான் நரி
கான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும் , வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும் , நரி உமிழ்ந்த எச்சிலாகிய , வெண்மையான , அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` கெடுதலையே புரிந்தான் ` என்பதில் உள்ள புரிந்தான் , முற்றெச்சம் . ` நரி கான்றிட்ட எச்சில் ` என்பது இன அடை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உங்கைக ளாற்கூப்பி உகந்
தேத்தித்தொழு மின்தொண்டீர்
மங்கையொர் கூறுடையான் வா
னோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன் அலை
யார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

தொண்டர்களே , உமையை ஒரு கூறில் உடையவனும் , தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும் , அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும் , கொல்லுதல் பொருந்திய ஒளியை யுடைய முத்தலை வேலை ( சூலத்தை ) ஏந்திய , தாமரை மலர்போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள் .

குறிப்புரை :

` கைகளால் தொழுமின் ` என இயையும் . ` கூப்பி ` என்பது இடைப் பிறவரல் . அலை , ` அலைத்தல் ` என முதனிலைத் தொழிற்பெயர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

செடிபடத் தீவிளைத்தான் சிலை
யார்மதிற் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எரு
தேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக் கறுத்
தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத் தீயை எழுவித்தவனும் , நல்ல புனங்களில் மேய்வதாகிய , தனது கொடியிற் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை ஏறுதற்கு ஊர்தியாகவும் கொண்டவனும் , பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவனும் , செவ்விய பவளம் போலும் திருமேனியை உடையவனும் , பாசுபத வேடத்தனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப் பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` மதில் ` என்றது திரிபுரத்தை . ` செம்புனஞ்சேர் ` என்றது இன அடை . ` வெள்ளை எருது ` என்பது ஒருசொல் தன்மைத்தாய் , ` ஏறு ` என்பதனைப் பொதுமை நீக்கிச் சிறப்பித்தது , ` இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் ` ( தொல் . சொல் .159) என்றாற்போல . ` ஏற்றையும் ` என்னும் உம்மை மாற்றி உரைக்கப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி
லாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்
கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேத
கீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

அரக்கனும் , தேரைச் செலுத்திக்கொண்டு சென்று , அதனைத் தடுத்தலால் சினங்கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை எடுத்தவனும் ஆகிய இராவணனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தியிருந்து அலறும்படி ஆக்கியவனும் , பின்பு அவன் கை நரம்பாகிய வீணையால் வேதத்தொடு கூடிய இசைகளைப் பாட , அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும் , பால் போலும் வெள்ளிய திருநீற்றை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` அதனைத் தடுத்தலால் ` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது . ` அலற விடுத்தவன் ` என்றது , ` அலறுதலில் விடுத்தவன் ` என்னும் பொருளது . ` படுத்தவன் ` என்புழி , ` நலத்தில் ` என்பது வருவிக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

திரிவன மும்மதிலும் மெரித்
தான்இமை யோர்பெருமான்
அரியவன் அட்டபுட்பம் மவை
கொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் மடி
யும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே.

பொழிப்புரை :

இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும் , தேவர்கட்குத் தலைவனும் , அடைதற்கு அன்புடைய திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காணமாட்டாத அளவிறந்தவனும் , பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

குறிப்புரை :

` திருமால் , பிரமன் ` என்னும் காரணக் கடவுளர் தாமும் , அருச்சித்தற்கு உரியவரேயன்றி , எஞ்ஞான்றும் அடி முடி காணுதற்கு உரியவர் அல்லர் என்பார் , இவ்வாறு ஓதியருளினார் . அட்ட புட்பங்களாவன :- ` புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவர்த்தனம் , பாதிரி , குவளை , அலரி , செந்தாமரை ` என்பன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வெற்றரைக் கற்றமணும் விரை
யாதுவிண் டாலமுண்ணும்
துற்றரைத் துற்றறுப்பான் துன்ன
ஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கரு
தேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழி
பாவங்கள் தீர்மின்களே.

பொழிப்புரை :

மிகுந்த பற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடையில்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்திலே மனம் விரையாது நீங்கி , கீளொடு பிணைத்தலை உடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே , நஞ்சினை உண்ணும் உணவுடையவரும் , எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை அதுபோல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள் ; திருப்பழமண்ணிப்படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றிநின்று , பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள் .

குறிப்புரை :

` துற்றறுப்பான் ` என்புழித் துற்ற , மிகுதி ; அது , மிகுதியை யுடைய பற்றுக்களைக் குறித்தது . ` அறுப்பான் கற்ற அமண் ` என முன்னே கூட்டுக . ` கற்ற ` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று . ` வெற்றரை ` என்புழி நின்ற ககர ஒற்று , எதுகை நோக்கி வந்த விரித்தல் . ` கன்று அமண் ` எனப்பிரித்து , ` கன்று போலும் அமணர் ` என்று உரைப்பாரும் உளர் . ` அமண் ` என்பது , அமண் கோலத்தையே குறித்தது . ` அமணரும் ஆகாது , சைவரும் ஆகாது ` எனப் பொருள் தருதலின் , உம்மை எதிரது தழுவிய எச்சம் . ` விண்டு ` என்னும் எச்சம் , ` ஆடை ` என்புழித் தொக்குநின்ற , ` அணிந்த ` என்பதனோடு முடிந்தது . ` அமண் கோலம் ஒவ்வாது என வெறுத்து , வேறு தவக் கோலம் புனைந்த நீவிரும் சமணரைப் போலவே சிவபிரானைப் பித்தன் என்று இகழ்வீராயின் , யாதொரு நெறியும் இல்லாதவராவீர் ` என்பார் , இவ்வாறு அருளிச்செய்தார் . இகழ்வார் , மீமாஞ்சகர் முதலியோர் என்க . ` துற்றர் ` என்பதில் உள்ள துற்று , உணவு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ
மண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்
குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் மிடர்
கூருதல் இல்லையன்றே.

பொழிப்புரை :

பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரையுடைய , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலத்தை , அக இதழ்களை யுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும் , நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும் , அவரைச் சார்ந்து உற்றார்க்கும் , அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை .

குறிப்புரை :

` வற்றாத யாறு மண்ணியாறு ` என்பதை , விளக்க ` பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணி ` என்று அருளினார் . தாமரை மலர்மாலை அந்தணர்க்கு உரியது .
சிற்பி