திருக்கழிப்பாலை


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

செடியேன் தீவினையில் தடு
மாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனா தொழி
தல்த கவாமே
முடிமேல் மாமதியும் அர
வும்மு டன்துயிலும்
வடிவே தாம் உடையார் மகி
ழுங்கழிப் பாலையதே.

பொழிப்புரை :

திருமுடியின் மேல் , பெருமை பொருந்திய பிறையும் , பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர் , குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும் , ` அந்தோ ! இவன் நம் அடியவன் !` என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில் , வாளா இருத்தல் தகுதியாகுமோ !

குறிப்புரை :

` ஆவா ( ஆஆ )` என்னும் இரக்கக் குறிப்பின் அடுக்கு , இறுதிக்கண் குறுகிநின்றது . ` கழிப்பாலை ` என்புழி அது , பகுதிப்பொருள் விகுதி . ` கழிப்பாலையதன்கண் ` என , இறுதிக்கண் தொக்க ஏழாவதை விரித்து , முன்னே , ` ஒழிதல் ` என்பதனோடு முடிக்க . ` மதியும் அரவும் உடன் துயிலும் முடியினையுடையவர் ` என்றது , வினைக்குக் காரணமான விருப்பு வெறுப்புக்களை உளவாக்கும் அறியாமையை நீக்கியருள்பவர் என்னும் குறிப்பினது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

எங்கே னும்மிருந்துன் னடி
யேன்உ னைநினைந்தால்
அங்கே வந்தென்னொடும் முட
னாகி நின்றருளி
இங்கே என்வினையை யறுத்
திட்டெ னையாளுங்
கங்கா நாயகனே கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே , நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால் , அங்கே வந்து என்னோடு கூடி நின்று , என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன் .

குறிப்புரை :

` கங்கா நாயகன் ` என்றது , ` எங்கள் சிவபெருமான் ` என்னும் அளவாய் நின்றது . அதன்பின் , ` நீ ` என்னும் எழுவாய் தொகுத்தலாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

ஒறுத்தாய் நின்னருளில் லடி
யேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையுந் நா
யேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறி
யாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய் ; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும் , நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய் ; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய் ; அதனால் , அவ்விடம் கரிதாயினாய் ; இவை உன் அருட்செயல்கள் .

குறிப்புரை :

ஒறுத்தது , நில உலகிற் பிறப்பித்தது , பொறுத்தது , வன்மை பேசியது முதலியவற்றை . ` இரண்டும் அருளினாலே ` என்றற்கு , அதனை இடைநிலையாக வைத்து அருளினார் . என்மாட்டுச் செய்த செயல்களும் தேவர்கள் பொருட்டுச் செய்ததுபோல்வதே என்பார் , நஞ் சுண்டமையை உடன் அருளிச் செய்தார் . ` பிழைத்தனகள் ` என்பதில் ` கள் `, ஒருபொருட் பன் மொழியாய் வந்த விகுதி மேல் விகுதி ; இஃது அஃறிணைக்கண் வகர ஐகார ஈற்றின்பின் வருதல் பெரும்பான்மை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சுரும்பார் விண்டமல ரவை
தூவித் தூங்குகண்ணீர்
அரும்பா நிற்குமனத் தடி
யாரொடும் அன்புசெய்வன்
விரும்பேன் உன்னையல்லால் ஒரு
தெய்வம் என்மனத்தால்
கரும்பா ருங்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , வண்டுகள் ஒலிக் கின்ற , அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி , பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன் ; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன் ; இஃது என் உணர்விருந்தவாறு .

குறிப்புரை :

` சுரும்பு ஆர் மலர் `, ` விண்ட மலர் ` எனத் தனித்தனி இயைக்க . ` சுரும்பு ஆர் ` என்பதனை , ` சுரும்பு ஆர்க்க ` என்றாக்கி , ` வண்டுகள் ஒலிக்க மலர்கின்ற ` என்று உரைத்தலுமாம் . ` விண்ட ` என்பது , ` விள்ளுந் தன்மை பெற்ற ` எனப் பொருள் தந்தது . ` அரும்பாநிற்கும் ` என்னும் பெயரெச்சம் , ` மனம் ` என்னும் காரணப் பெயர் கொண்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

ஒழிப்பாய் என்வினையை உகப்
பாய்மு னிந்தருளித்
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை
ஆவ ணம்முடையாய்
சுழிப்பால் கண்டடங்கச் சுழி
யேந்து மாமறுகிற்
கழிப்பா லைமருவுங் கன
லேந்து கையானே.

பொழிப்புரை :

நீர்ச் சுழிகளை , அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே , நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின் . என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய் ; பின் அது காரணமாக , என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய் ; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய் ; பின் அது காரணமாக , என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய் ; உன்னை ` இவ்வாறு செய்க ` எனக் கட்டளையிடுவார் யார் ?

குறிப்புரை :

பின்னர் , ` தெழிப்பாய் ` என்றதனால் , முன்னர் ` அள வளாவுவாய் ` என்றமை பெறப்பட்டது . ` கனலேந்து கையானே ` என்பது , ` சிவபெருமானே ` என்னும் பொருளதாய் நின்றது . இத்திருப் பாடலை , திருநாவுக்கரசர் அருளிச்செய்த ` ஓதுவித்தாய் ` என்னும் திருப்பாடலில் , ` நின் பணிபிழைக்கிற் புளியம்வளாரால் - மோது விப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே ` ( தி .4 ப .99 பா .1) என்னும் பகுதியோடு வைத்து உணர்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஆர்த்தாய் ஆடரவை அரை
ஆர்பு லியதள்மேற்
போர்த்தாய் யானையின்தோல் உரி
வைபு லால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினை
கள்ள வைபோகப்
பார்த்தாய் நுற்கிடமாம் பழி
யில்கழிப் பாலையதே.

பொழிப்புரை :

அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது , புகழையுடைய திருக்கழிப்பாலையே .

குறிப்புரை :

` அவை , அது ` பகுதிப் பொருள் விகுதிகள் , ` பார்த்தானுக்கிடமாம் ` என்பது பாடம் அன்று . ` பழி இல் ` என்றது , புகழுடைமையின் மேல் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பருத்தாள் வன்பகட்டைப் பட
மாகமுன் பற்றியதள்
உரித்தாய் யானையின்தோல் உல
கந்தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் மிமை
யோர்க ளிடர்கடியுங்
கருத்தா தண்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே , தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே . குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளி யிருப்பவனே , நீ முன்புயானையின் தோலைப் போர்வையாக விரும்பி , பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய் ; முப்புரங்களையும் எரித்தாய் ; இவை உனது வீரச் செயல்கள் .

குறிப்புரை :

` யானையின் தோலைப் படமாகப் பகட்டைப் பற்றி உரித்தாய் ` எனக் கூட்டி , ` ஆக ` என்றதன்பின் , ` விரும்பி ` என ஒரு சொல் வருவித்து உரைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

படைத்தாய் ஞாலமெலாம் படர்
புன்சடை யெம்பரமா
உடைத்தாய் வேள்விதனை உமை
யாளையொர் கூறுடையாய்
அடர்த்தாய் வல்லரக்கன் தலை
பத்தொடு தோள்நெரியக்
கடற்சா ருங்கழனிக் கழிப்
பாலை மேயானே.

பொழிப்புரை :

விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே , உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே , கடலைச் சார்ந்த , கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , நீ , உலகம் எல்லாவற்றையும் படைத்தாய் ; தக்கனது வேள்வியை அழித்தாய் ; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய் ; இவை உன் வல்லமைகள் !

குறிப்புரை :

` எல்லாவற்றையும் ஆக்கவும் , அழிக்கவும் வல்லவன் நீ ` என்றபடி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பொய்யா நாவதனாற் புகழ்
வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்றெரியும் விளக்
கேயொத்த தேவர்பிரான்
செய்யா னுங்கரிய நிறத்
தானுந் தெரிவரியான்
மையார் கண்ணியொடும் மகிழ்
வான்கழிப் பாலையதே.

பொழிப்புரை :

பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும் , செம்மை நிறமுடைய பிரமனும் , கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக் கழிப்பாலையையே விரும்பி , மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான் .

குறிப்புரை :

பொய் கூறுதலாவது , மனத்தொடு படாது புகழ்தல் . ` தேவர் பிரான் ` என்றது , ` தேவ தேவன் ` என்றபடி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பழிசே ரில்புகழான் பர
மன்ப ரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்
பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வா
னோருல காள்பவரே.

பொழிப்புரை :

பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும் , யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை , அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள் , தேவர் உலகத்தை ஆள்பவராவர் .

குறிப்புரை :

` சேர் ` என்றது , முதனிலைத் தொழிற் பெயர் . கழிக்கண் உள்ள செல்வங்கள் , சங்கு , முத்து முதலியன . ` கழியார் கழிப்பாலை ` என இயைத்துரைத்தலும் ஆம் .
சிற்பி