திருமுதுகுன்றம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பொன்செய்த மேனியினீர் புலித்
தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்
தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பர
வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே , புலியினது தோலை அரையில் உடுத்தவரே , நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , அடிகளே , மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு !

குறிப்புரை :

` பொன்செய்த `, ` மின்செய்த ` என்றவற்றில் , ` செய்த ` என்பது உவம உருபாய் நின்றது . இட்டளம் - துன்பம் . ` இட்டளங்கெட என்செய்தவாறு ` என்றது , ` துன்பத்தை நீக்குகின்றீர் என்று நினைத்து முயல்கின்ற எனக்கு , நீர் துன்பத்தை ஆக்கினீர் ` என்றபடி . இனி , ` இவள்தன் முகப்பே என் செய்தவாறு ` என்றே இயைத்து , ` அருளீர் ` என ஒருசொல் வருவித்து , வருகின்ற திருப்பாடல்களிற்போலவே உரைத்தலுமாம் . இத் திருப்பதிகத்துள் வரும் விளிகள் பலவும் , இறைவரது துன்பந் துடைக்கும் இயல்பினை விதந்து , தம் கருத்தொடு கூடிய பொருளை முடித்து நிற்பனவாதல் அறிக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

உம்பரும் வானவரும் முட
னேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திக
ழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பர
வையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

எம் பெருமானிரே , நீர் , முன்பு , வானத்தில் உள்ள தேவர்களும் , அவர்கட்குமேல் உள்ள ` அயன் , மால் ` என்பவர்களும் கண்டுநிற்க எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து , விளங்குகின்ற திரு முதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர் ; இப்பொழுது , மணம் பொருந்திய கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் பொருள் முட்டுப்பாட்டினால் மெலிகின்றாள் ; அது பற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு அருள்செய்தல் வேண்டும் .

குறிப்புரை :

` உம்பர் ` என்றது , வானவர்க்கும் மேலிடத்து உள்ளவரை . ` பொன் ` என்பதே தலைமை பற்றிச் செம்பொன்னைக் குறித்தல் வழக்காயிற்றாயினும் , ` செம்பொன் ` என்பதே , ஏனைக் கரும்பொன் வெண்பொன்னின் நீக்கி , அதனை வரைந்துணர்த்துவது என்க . ` பெருமான் ` என்பது பன்மை யொருமை மயக்கம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பத்தா பத்தர்களுக் கருள்
செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முது
குன்ற மமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பர
வையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் பற்றுக்கோடானவனே , அடியார்களுக்கு அருள் பண்ணுகின்ற மேலான பொருட்கும் மேலானவனே , இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே , மூன்று கண்களையுடையவனே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , என் அப்பனே , மை தீட்டப்பட்டு அழகு நிறைந்த பெரிய கண்களையுடைய . ` பரவை ` என்னும் பெயரினளாகிய இவள் , பொருள் முட்டுப்பாட்டினால் வருந்தாதபடி , அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

` பற்றா ` என்பது , எதுகை நோக்கித் திரிந்தது . ` மைத்து ` என்றது , ` மை ` என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம் . ` செம் பொன்னை ` என்பது , முன்னைத் திருப்பாடலினின்றும் வந்து இயையும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

மங்கையொர் கூறமர்ந்தீர் மறை
நான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் திக
ழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை குணங்
கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , வேதங்கள் நான்கினையும் விரித்து அருளிச்செய்து அதனை அறநூலாக விரும்பியவரே , சடையின்கண் சந்திரனை அணிந்தவரே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , கண்ணோட்டம் உடையவரே , தனங்கள் அழகியாளும் , யான் சொல்லியதைச் சொல்லியவாறே கருதும் தன்மை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்புரிதல் வேண்டும் .

குறிப்புரை :

` கொங்கை நல்லாள் ` எனச் சினைவினை முதலொடு முடிந்தது . ` குணம் ` என்றது , ஏற்புழிக் கோடலால் , மடத்தினை உணர்த்திற்று . ` கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் ` ( குறள் -575) என்பனவாகலின் , ` அம் கண் ` என்றது , கண்ணோட்டமாயிற்று . ` அங்கணன் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

மையா ரும்மிடற்றாய் மரு
வார்புர மூன்றெரித்த
செய்யார் மேனியனே திக
ழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே ரல்கு
லாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

மைபோலப் பொருந்திய கண்டத்தை யுடையவனே , பகைவரது மூன்று ஊர்களை எரித்த , செவ்விய அழகு நிறைந்த திருமேனியையுடையவனே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பாம்பினிடத்துப் பொருந்தியுள்ள படம்போலும் எழுச்சியையுடைய அல்குலினை யுடைய பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகின்றாள் ; ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங்கெடுமாறு , செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

` செய்ய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . ` அரவு ஆரும் பை ` என மாற்றிப் பொருள்கொள்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

நெடியான் நான்முகனும் மிர
வியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முது
குன்றம் அமர்ந்தவனே
படியா ரும்மியலாள் பர
வையிவள் தன்முகப்பே
யடிகேள் தந்தருளீர் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் , சூரியனும் , இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

` இரவியொடு ` என்னும் எண்ணொடு ஏனையவற் றோடும் இயைந்தது . உம்மை , சிறப்பு . படி - தன்மை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கொந்தண வும்பொழில்சூழ் குளிர்
மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர் சடை
மாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள் பர
வையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும் , மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினை உடைய பெரிய திருமுது குன்றத்தையுடையவனே , அந்தணனே , பந்து பொருந்திய விரலை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்பண்ணுவாய் .

குறிப்புரை :

மதிலும் , மாளிகையும் திருமுதுகுன்றத்தின என்க . நின் தலத்தில் உள்ள மதில்கள் மாளிகைகள்தாமும் சந்திரனை முடியில் அணிந்துள்ளன எனச் சிறப்பிக்கும் முகத்தால் , அவையும் சிவபிரான் போலத் தோன்றும் காட்சியின்பத்தினை வெளியிட்டருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பரசா ருங்கரவா பதி
னெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முது
குன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பர
வையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

மழுப் பொருந்திய கையை யுடையவனே , பதினெண் கணங்களும் புடை சூழவும் , முரசு அணுக வந்து முழங்கவும் திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , எல்லா உலகிற்கும் அரசனே , நறுமணம் பொருந்திய கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

பதினெண்கணங்கள் இவை என்பதனை ஆறாந்திரு முறைக் குறிப்பிற் காண்க . ( தி .6 ப .77. பா .2.) முரசினது உயர்வு தோன்றுதற் பொருட்டு , ` முரசார் ` என உயர்திணையாக ஓதியருளினார் . வருவிக்கப்படுவதனை , ` வந்து ` என்றருளினார் , பான்மை வழக்கால் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

ஏத்தா திருந்தறியேன் இமை
யோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லா முது
குன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பர
வையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடி
யேன்இட் டளங்கெடவே.

பொழிப்புரை :

தேவர்கட்கு ஒப்பற்ற தலைவனே , எல்லா உயிர் கட்கும் மூத்தவனே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , கூத்துடையானே , உன்னை யான் பாடாமல் இருந்தறியேன் ; ஆதலின் , மலர்கள் மலர்ந்து பொருந்துகின்ற கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள்முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .

குறிப்புரை :

பாடாதொழிந்து தேடினமையின் தாராதொழிந்தது ஒக்கும் ; பாடியபின் தாராதொழிதல் ஒவ்வாது என்பார் , ` ஏத்தா திருந்தறியேன் தந்தருளாய் ` என்று அருளினார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பிறையா ருஞ்சடையெம் பெரு
மானரு ளாயென்று
முறையால் வந்தமரர் வணங்
கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்
நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளி
தாஞ்சிவ லோகமதே.

பொழிப்புரை :

தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை , அந்தணர் தலைவனும் , வயல் களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன் , ` பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய் ` என்று வேண்டிப்பாடிய , இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும் .

குறிப்புரை :

` இறை ` என்பது ஆகுபெயராய் , இறையது அருளைக் குறித்தது .
சிற்பி