திருக்காளத்தி


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

செண்டா டும்விடையாய் சிவ
னேயென் செழுஞ்சுடரே
வண்டா ருங்குழலா ளுமை
பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கண
நாதனெங் காளத்தியாய்
அண்டா வுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

விரைந்து நடக்கும் இடப வாகனத்தை உடையவனே , சிவபெருமானே , செழுமையான ஒளி வடிவினனே , வண்டுகள் நிறையச் சூழும் கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே , உன்னைக் கண்டவர் பின்பு நீங்காது பேரன்பு செய்யப்படுபவனே , பூதக் கூட்டத்திற்கு அரசனே , திருக் காளத்தியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , பரவெளியில் விளங்குபவனே , அடியேன் உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , அடியேனுக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` ஆதலால் , அடியேனுக்கு அருள்பண்ணுதல் வேண்டும் ` என்பது குறிப்பெச்சம் . செண்டு , குதிரையின் நடை ; அஃது இங்கு விரைவைக் குறித்தது . கண்டார் காதலித்தலை , கண்ணப்ப நாயனாரது வரலாற்றினால் உணர்க ; ` மேவினார் பிரியமாட்டா விமலனார் ` ( தி .12 கண்ணப்பர் புரா .174) என்றருளியதும் அறியற்பாற்று . ` காதலிக்கும் ` என்பது உடம்பொடு புணர்த்த லாகலானும் , ` எம் ` என்பது , ` காளத்தியாய் ` என்பதன் இறுதி நிலையுடன் முடிந்தமையாலும் இவ்வாறு உரைக்கப்பட்டது . ஏகாரம் தேற்றம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

இமையோர் நாயகனே இறை
வாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கரு
மாமுகில் போன்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உரு
வேதிருக் காளத்தியுள்
அமைவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

தேவர்கட்குத் தலைவனே , கடவுளே , என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே , பொறுமை நிறைந்த அருளையுடையவனே , கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே , திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` இடர்த்துணையே ` என்றதனை , ` துன்பத்திற்கு யாரே துணையாவார் ` ( குறள் -1299) என்றதுபோலக்கொள்க . ` அவ்வுரு ` என்பது , ` ஆயுரு ` என வந்தது , செய்யுள் முடிபு . ( தொல் . எழுத்து -208)` அமைவு ` என்றது , தொழிலாகு பெயர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

படையார் வெண்மழுவா பக
லோன்பல் லுகுத்தவனே
விடையார் வேதியனே விளங்
குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கண
நாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

படைக்கலமாகப் பொருந்திய வெள்ளிய மழுவை உடையவனே , சூரியனது பல்லை உதிர்த்தவனே , இடபத்தின்கண் பொருந்தும் அந்தணனே , ஒளிவிடுகின்ற குழையை யணிந்த காதினை உடையவனே , அழகிய வாயில்கள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே ; பூதகண நாதனே , என்னை உடையவனே , அடியேன் , உன்னையல்லது , பிறரை விரும்பிப் போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` கடைஆர் ` என்ற விதப்பினால் , அழகென்னும் சிறப்புப் பெறப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

மறிசேர் கையினனே மத
மாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குரு
வேஉன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்
குந்திருக் காளத்தியுள்
அறிவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

மான் கன்று பொருந்திய கையை உடையவனே . மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனே , யாவராலும் குறிக்கொள்ளப்படும் பொருளே , என்னை மாணாக்கனாக உடைய ஆசிரியனே , அடியவர்கள் நன்னெறிக் கண்ணே நின்று நினைக்கின்ற திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற அறிவுருவனே , அடியேன் உன்னையல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; உனது சிறு பணி விடைகளையே செய்வேன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` சிறு பணிவிடைகளைச் செய்வேன் ` என்றது , ` பெரும் பணிகளைச் செய்யும் தகுதியுடையேனல்லேன் ` எனத் தமது சிறுமையைத் தெரிவித்துக்கொண்டபடி . ` நெறியே நின்னடியார் ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

செஞ்சே லன்னகண்ணார் திறத்
தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நல
மொன்றறி யாமையினால்
துஞ்சேன் நானொருகாற் றொழு
தேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே , உன் அடியவனாகிய நான் , நன்மை ஒன்றையே உணர்ந்து நில்லாத காரணத்தால் , சிவந்த சேல்போலும் கண்களையுடைய மாதர் கூற்றிலே கிடந்து , மிகக்கதறி வருந்தினேன் ; அதனிடையே ஓரொருகால் , நான் மடிந்திராது உன்னை வணங்கினேன் ; எவ்வாறாயினும் அச்சமின்றி , உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலைச் செய்தலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` உற ` என்பது , ` உற்று ` எனத் திரிந்து நின்றது ; ` கிடந் துற்று ` என , ஒரு சொல்லாகக் கொள்ளினுமாம் . ` நைந்தேன் ` என்பது , ` நஞ்சேன் ` என மருவிற்று . ` அஞ்சாது ` என்றது , ஏத்துதலாகிய முதனிலையோடே முடிந்தது ; அதனால் , மெய்யுணர்ந்தோர் , பிற தெய்வங்களை ஏத்த அஞ்சுதல் - கூசுதல் - பெறப்பட்டது . இனி , அதனை , ` ஏத்தமாட்டேனே ` என்பதனோடே முடித்து , ` பிற தெய்வங்களை ஏத்தாமைக்கண் அச்சமின்றி நிற்பேன் ` என்பது , அதனாற் போந்த கருத்தாக உரைப்பினும் ஆம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பொய்யவ னாயடியேன் புக
வேநெறியொன் றறியேன்
செய்யவ னாகிவந்திங் கிட
ரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே விளங்
குந்திருக் காளத்திஎன்
ஐயநுன் றன்னையல் லால் அறிந்
தேத்த மாட்டேனே.

பொழிப்புரை :

நடுவு நிலைமையை உடையவனாகி வந்து , பொய்யை உடையவனும் , நாய்போலும் அடியவனும் , அழிவில் இன்பத்துள் புகுதற்கு வழி ஒன்றும் அறியாதவனும் ஆகிய எனது துன்பங்களை யெல்லாம் நீக்கி ஆட்கொண்ட பெருமானே , உண்மை வடிவினனே , பேரின்பமானவனே , புகழுடையதாகிய திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே , என் தலைவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` பொய்யவன் ` என்றது , உனக்கு ` ஆளல்லேன் ` என்றதனை , ` நாய் அடியேன் ` என்றது , ` உண்மை இதுவாக ` என்றபடி . ` நெறியொன்று அறியேன் ` என்றது , மையல் மானுடமாய் மயங்கும் நிலையினை எய்தினமை குறித்தது . ` இடர் ` என்றதும் , அம் மையல் காரணமாக எய்தற்பாலனவற்றை . ` மெய் ` என்றது , ` உன்னைத் தடுத்தாட் கொள்வோம் ` என்றருளிய மொழி பிறழாது வந்த திருவருளை . ` திரு ` ஆதல் , ஆட்கொண்ட பின்னர் வெளிப்பட்ட நிலையில் அறியப் பட்டது . இவற்றால் எல்லாம் , ` என்னைத் தாங்குதலாகிய நின் கடமையிற் சிறிதும் வழுவினாய் அல்லை ` என்பார் , ` என் ஐய ` என அழைத்தருளினார் . இங்ஙனமாகவே , அடியேன் பிறரை அறிதல் எவ்வாறு நிகழும் என்றதாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கடியேன் காதன்மையாற் கழற்
போதறி யாதவென்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர்
வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள் முயங்
குந்திருக் காளத்தியாய்
அடியே னுன்னையல்லால் அறி
யேன்மற் றொருவரையே.

பொழிப்புரை :

வன்கண்மை உடையவனும் , அன்போடு உன் திருவடித் தாமரைகளை உணர்தலைச் செய்யாதவனும் ஆகிய என் நெஞ்சம் உனக்கு உறைவிடமாகுமாறு அதனைக் கோயிலாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற குளிர்ந்த நீண்ட சடையை உடைய எங்கள் அழகனே , தேவர்கள் தம் தலையினால் திருவடியைச் சேர்கின்ற திருக்காளத்திப் பெருமானே , அடியேன் உன்னையன்றி மற்றொரு வரைக் கடவுளராக அறிதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` காதன்மையால் ` என்பது , ` அறியாத ` என்பதன் முதனிலையோடு முடிந்தது . ` உள்ளம் ` என்பது , குறைந்து நின்றது . முயங்குதலுக்கு , ` திருவடி ` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது . ` மற்றொருவர் ` என்பது , ` மற்றொன்று ` என்பது அடியாகப் பிறந்த பெயர் . ஈண்டும் , ` அறிந்தேத்த மாட்டேனே ` எனப் பாடம் ஓது வாரும் உளர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

நீறார் மேனியனே நிம
லாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்
தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலி
கொண்டுழல் காளத்தியாய்
ஏறே யுன்னையல்லால் இனி
ஏத்த மாட்டேனே.

பொழிப்புரை :

திருநீறு நிறைந்த திருமேனியை உடையவனே , தூயவனே , தலையாயவனே , எனக்கு அருட்கடலாய் நிற்பவனே , பருந்து சூழும் வெள்ளிய தலையில் பிச்சையேற்றுத் திரியும் , திருக்காளத்திப் பெருமானே , ஆண் சிங்கம் போல்பவனே , அடியேன் உன்னை யறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன் ; என் நாவால் ஒன்று செய்வதாயின் , உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

கொழுந்து , உச்சிக்கண் நிற்பதாகலின் , உயர்ந்த பொருளை , ` கொழுந்து ` என உவமம் பற்றிக் கூறல் வழக்கு . ` என் குணக் கடலே ` என்றது , தமக்குப் புலனாம் வகையை அருளியவாறு . ` இனி ` என்றது , சிவபெருமானது பெருமையை அறிந்த கால எல்லையைக் குறித்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

தளிர்போல் மெல்லடியாள் தனை
யாகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தெனுள்ளம் புகு
தவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந் திருக்
காளத்தி யுள்ளிருந்த
ஒளியே யுன்னையல்லால் இனி
யொன்று முணரேனே.

பொழிப்புரை :

தளிர்போலும் மெல்லிய பாதங்களையுடைய உமாதேவியைத் திருமேனியில் விரும்பி வைத்தருளி , எளிமை உண்டாக என் உள்ளத்தில் புகவல்ல எம்பெருமானே , மலர்களில் களிப்புப் பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற திருக்காளத்தியில் எழுந்தருளி யிருக்கின்ற அறிவு வடிவனே , அடியேன் உன்னையன்றி மற்றொரு பொருளையும் உணர்தலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .

குறிப்புரை :

` எளிமை ` என்பதும் , ` வாய்ப்ப ` என்பதும் ஈறு குறைந்து நின்றன . ` மெல்லடியாள்தனை ஆகத்து அமர்ந்தருளி என் உள்ளம் புகுத ` என்றது , தாம் இறைவனை உள்கும் முறையையும் , ` வல்ல ` என்றது , தம் உள்ளம் அதற்கு ஏலாதாகவும் , அதனை ஏற்புடைத் தாக்கிய அருமையையும் அருளிச்செய்தவாறு . ` மோறாந் தோரொருகால் நினை யாதிருந்தாலும் வேறா வந்தென்னுள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே ` ( தி .7 ப .21 பா .3) ` கல்லியல் மனத்தைக் கசிவித்து ` ( தி .7 ப .67 பா .5) என்றாற்போலப் பிறவிடத்தும் அருளிச்செய்வர் . ` கல்லைப் பிசைந்து கனியாக்கி ` என்றாற் போலும் ( தி .8 திருவா . திருஅம் .5) திரு மொழிகளுள்ளும் , இவ்வருமை பாராட்டப்படுதல் காண்க . ` இனி ` என்பது , ` மற்று ` என்னும் பொருள்பட வந்தது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

காரூ ரும்பொழில்சூழ் கண
நாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி
நாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்பு
வார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறு
வார்பிழைப் பொன்றிலரே.

பொழிப்புரை :

மேகம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை , அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று , சிவலோகத்தை அடைவார்கள் ; குற்றம் யாதும் இலராவர் .

குறிப்புரை :

`கணநாதன்` என்றது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. `பேரா` என்பது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாய், பிற தேவர் உலகத்தை விலக்கிற்று. பேராமை - அழியாமை. இனி, `பிறவாமை` எனக்கொண்டு, `ஆண்டு அபர முத்தராய் வாழ்வார்` என்று உரைத்தலுமாம்.
சிற்பி