திருக்கற்குடி


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகே ளெம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

இடபம் எழுதப்பெற்ற கொடியை உடையவனே , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே , படைக் கலமாகப் பொருந்திய கூரிய மழுவை ஏந்தியவனே , மேலார்க்கும் மேலானவனே , மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கும் தலைவனே , எங்கள் கடவுளே , அடியேனையும் , ` அஞ்சாதி ` எனச் சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

` பரம் ` என்றது , ` யாவரினும் தீர மேலானவன் ` என்பதனையும் , ` பரம்பரன் ` என்றது , ` மேலவர்க்கு மேலானவன் ` என்பதனையும் குறித்தன . ` அடியேனையும் ` என்ற உம்மை , தேவர் முதலாயினாரை அவர்தம் அல்லற் காலத்தில் , ` அஞ்சலீர் ` என்று சொல்லி உய்யக்கொண்டமையைத் தழுவிநின்றது . ` அஞ்சலை ` என்பது ஈற்று ஐகாரம் கெட்டு நின்றது . ` அஞ்சல் ` எனல் தேற்றற் பொருளதாகலின் , புகழ்தல் முதலியனபோல இரண்டாவதற்கு முடிபாகும் என்க . சுவாமிகள் , இங்ஙனம் வேண்டினமையாற் போலும் , இத்தலம் , ` உய்யக்கொண்டான் ` என வழங்குகின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

மறையோர் வானவருந் தொழு
தேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்
கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

அந்தணரும் , அமரரும் கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே , எம்பெருமானே . எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே , இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற் குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே , அழகிய கண்களை யுடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` எனச் சொல்லி உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` மறையோர் வானவர் ` என்பது , உயர்திணைப் பன்மைப் பெயர்க்கண் வந்த உம்மைத்தொகையாதலின் ஒருசொல் லாய் நிற்க , அஃது இறுதிக்கண் சிறப்பும்மை ஏற்றது . அன்றி எண்ணும்மையாக்கி , அது , ` மறையோர் ` என்புழித் தொகுத்தலாயிற்று எனலுமாம் . கண்ணுக்கு அழகாவது , மிக்க கருணை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

சிலையால் முப்புரங்கள் பொடி
யாகச் சிதைத்தவனே
மலைமேல் மாமருந்தே மட
மாதிடங் கொண்டவனே
கலைசேர் கையினனே திருக்
கற்குடி மன்னிநின்ற
அலைசேர் செஞ்சடையாய் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

வில்லால் , திரிபுரங்கள் சாம்பலாகும்படி அழித்தவனே , மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே , இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பாகத்திற் கொண்டவனே , மான் பொருந்திய கையை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

இத்தலத்தில் இறைவன் மலையின்மேல் கோயில் கொண்டிருத்தலின் , ` மலைமேல் மாமருந்தே ` என்று அருளிச் செய்தார் . மலைமேல் உள்ள மருந்து , கிடைத்தற்கரிய மருந்தாதல் அறிக . அலை , ஆகுபெயர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

செய்யார் மேனியனே திரு
நீல மிடற்றினனே
மையார் கண்ணிபங்கா மத
யானை யுரித்தவனே
கையார் சூலத்தினாய் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஐயா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே , அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே , மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒருபாகத்தை விரும்பிக் கொண்டவனே , மதம் பொருந்திய யானையை உரித்தவனே , கையில் பொருந்திய சூலத்தை உடையவனே , திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , எங்கள் கடவுளே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` செம்மை ` என்பது , எழுவாயிடத்தும் எதுகை நோக்கி விகாரமாயிற்று . ` செய்ய ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்றாகக் கொண்டு , ` செய்ய ` அழகு நிறைந்த மேனியனே ` என்று உரைத்தலுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

சந்தார் வெண்குழையாய் சரி
கோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள் ஒரு
பாக மமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான் அடி
யேனையும் ஏன்றுகொள்ளே.

பொழிப்புரை :

அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந் தவனே , சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே , பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமையை ஒருபாகத்தில் விரும்பிக் கொண்டவனே , நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , எங்கள் கடவுளே , அடியேனையும் ஏன்று உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` சந்தம் , கந்தம் ` என்பன , அம்முக் குறைந்து நின்றன . குழை சங்கினாலாயதாகலின் வெளிதாயிற்று . கோவண ஆடை யாவது , உடையைக் கீழால் வாங்கி உடுப்பது . துகிலின் மிகுதியாலும் மென்மையாலும் சரிதல் உளதாயிற்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

அரையார் கீளொடுகோ வண
மும்மர வும்மசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்
கும்பிறை மேலுடையாய்
கரையா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அரையா எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

அரை வெறுவிதாகாது நிரம்புதற்குரிய கீளையுங் கோவணத்தையும் அரையின்கண் கட்டி , நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு , ஒளி விளங்குகின்ற பிறையையும் சடையிடத்து உடையவனே , வரம்புகள் நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அரசனே , எங்கள் இறைவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

வெற்றரையாயிருத்தல் துறந்தோர்க்கும் நிரம்பா தென்றற்கு , ` அரையார் கீளொடு கோவணமும் அரைக்கசைத்து ` என்றருளினார் என்க . ` கோவணமும் ` என்ற உம்மை , எச்சம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பாரார் விண்ணவரும் பர
விப்பணிந் தேத்தநின்ற
சீரார் மேனியனே திகழ்
நீல மிடற்றினனே
காரார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
ஆரா இன்னமுதே அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தவரும் , விண்ணுலகத்தவரும் பணிந்து முன்னிலையாகப் பரவவும் , படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற , அழகு பொருந்திய உருவத் திருமேனியை உடையவனே , விளங்குகின்ற நீல நிறத்தையுடைய கண்டத்தையுடையவனே , மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக்கொண்டருள் .

குறிப்புரை :

` பாரார் ` என்பதில் , எண்ணும்மை தொகுத்தலாயிற்று . ` பாரோர் ` என்பதும் பாடம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

நிலனே நீர்வளிதீ நெடு
வானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்
மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்
கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடி
யேனையும் அஞ்சலென்னே.

பொழிப்புரை :

நிலமே , நீரே , தீயே , காற்றே , நீண்டவானமே என்னும் ஐந்துமாகிநிற்கும் பெரும்பொருளாய் உள்ளவனே , தாமரை மலரில் உள்ள பிரமன் , மாயோன் இருவரும் போற்றிநின்ற நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே , கற்பகத் தருப்போல்பவனே , திருக் கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற , தீ யேந்திய கையை உடையவனே , அடியேனையும் , ` அஞ்சாதி ` என்று சொல்லி உய்யக் கொண்டருள் .

குறிப்புரை :

` நிலனே ` என்னும் எண்ணேகாரம் , நீர் முதலியவற்றோடும் இயைந்தது . அவ்வெண்ணின் தொகையும் , ` அயன் மாலவன் ` என்னும் செவ்வெண்ணின் தொகையும் தொகுத்தலாயின . ` கனலே ` என்றது மூன்றாமெழுத்தெதுகையாய்வர , அதன்பின் , ` அனல் சேர் ` என , இரண்டாமெழுத்தெதுகையாய் வந்தது . னகர உயிர்மெய்யின்முன் வந்த லகர ஏகாரமும் , லகர மெய்ம்முன் வந்த சகர ஏகாரமும் ஒருவாற்றான் எதுகை நயத்தைத் தோற்றுவித்து நின்றன . இத்தலத்தில் இறைவருக்கு , ` கற்பகநாதர் ` என்ற ஒரு பெயரும் வழங்கிவருதல் , இங்கும் ` ` கற்பகமே ` என்றும் , ஆறாந் திருமுறை யுள்ளும் ( தி .6 ப .60) ` கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே ` என்றும் அருளினமையோடு வைத்து நோக்கற் பாலது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வருங்கா லன்னுயிரை மடி
யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி , அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி , அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகை யாளனே , கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , எங்கள் இறைவனே , அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக விரும்பிக் கொள் .

குறிப்புரை :

` திரு ` என்றது , விடாத ஆகுபெயராய் , திருவடியை உணர்த்திற்று . கூற்றுவனை மாய்த்தற்கு திருவடி விரலே அமையுமாதலின் , ` காலால் ` என்னாது , ` திரு மெல்விரலால் ` என்று அருளிச் செய்தார் . மேலும் இவ்வாறு அருளிச் செய்தமை காண்க . மென்மை கூறியதும் , கூற்றுவனது சிறுமை உணர்த்தற்பொருட்டு என்க . யாண்டி னாற் சிறியனாயினும் , தவத்தாற் பெரியோன் என்பார் , ` பெரும் பாலன் ` என்றும் , அவன் பெருமைக்கு ஏற்ப அருளினை என்பார் , ` பெருந்தகையே ` என்றும் அருளினார் . இதனானே , கூற்றுவனது அறியாமையும் புலப்படுத்தப் பட்டது . ` நம்பன் ` என்னும் பெயரைப் பொருள்பற்றி , ` விரும்பா ` என்று அருளினார் . ` விரும்பத் தக்கவன் ` என்பது பொருள் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

அலையார் தண்புனல்சூழ்ந் தழ
காகி விழவமரும்
கலையார் மாதவர்சேர் திருக்
கற்குடிக் கற்பகத்தைச்
சிலையார் வாணுதலாள் நல்ல
சிங்கடி யப்பனுரை
விலையார் மாலைவல்லார் வியன்
மூவுல காள்பவரே.

பொழிப்புரை :

அலை நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு அழகுடையதாகி விழாக்கள் நீங்காதிருக்கின்ற , கலை ஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற திருக்கற்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற கற்பகம் போல்பவனை , விற்போலும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய நல்ல , ` சிங்கடி ` என்பாளுக்குத் தந்தையாகிய நம்பி யாரூரன் பாடிய , விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள் , அகன்ற மூன்றுலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர் .

குறிப்புரை :

` சிங்கடி ` என்பாள் , கோட்புலி நாயனார் மகள் . அவளை நம்பியாரூரர் தம் மகளாக ஏற்றுக்கொண்டமையைப் பெரிய புராணத்துட் காண்க . ( தி .12 ஏ . கோ . புரா . 39).
சிற்பி