திருக்கருப்பறியலூர்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து
திறம்பா வண்ணம்
கைம்மாவி னுரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக்
கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங்
கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

யானைத் தோலைப் போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச , அதனைக் கண்டு நின்றவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தளிர் கிள்ளுதற்குரிய மாமரங்களில் இருந்து குயில்கள் பாட , கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலில்கண் எழுந்தருளியுள்ள எம்பெருமானும் ஆகிய இறைவனை , நாம் உடலை நேரே நிறுத்திக் கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி , இவ்வாறு மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` செம்மாந்து ` என்பது , ` சிம்மாந்து ` எனமருவிற்று . ` செம்மாந்து ` என்பதே பாடம் எனலுமாம் . ` சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் உகந்து திறம்பாவண்ணம் வைத்து என்றது , இறைவரைத் தியானிக்குமாற்றினை விதந்தருளியவாறு . ` கொகுடி ` என்பது முல்லைக் கொடியுள் ஒருவகை . அதனாற் சூழப்பெற்றது இக் கோயில் என்பதும் , அதுதானே இங்குக் கோயில்மரவகையாய் இருந்தது என்பதும் இத் திருப்பதிகத்தாற் கொள்ளக்கிடக்கின்றன . ` மனத்தினால் ` என வேண்டா கூறியது , ` மனம் தன்பயனைத் தருமாறு ` என அதன் சிறப்பை முடித்தற்கு . ` நினைந்த போது ` என்பது , ` இனிய ` என்னும் பெயரெச்சக் குறிப்போடு முடியும் . ` ஆறு ` என்றது , ` தன்மை ` என்னும் பொருளதாய் நிற்க , அதன்பின் , ` சொல்லுதற்கரிது ` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது . ` சிவன் ` என்னும் சொற்கு , ` இன்பத்திற்குக் காரணன் ` என்னும் பொருளும் உண்மை அறிக . ` அவர் ` என்றது , ஒருமைப் பன்மை மயக்கம் . இதனை , ` புனிதரவர் தமைநினையும் இன்பங்கூறிச் சாற்றியமெய்த் திருப்பதிகம் ` ( தி .12 பெ . ஏ . கோ . பு .117.) எனச் சேக்கிழார் அருளுதலின் , ` அவர் ` என்பதே பாடமாதல் பெறப்படுகின்றது . இத் திருப்பாடலுள் தியான வழிபாடு சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே
நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்
கருப்ப றியலூர்க்
கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

திருநீற்றால் நிறைந்த மேனியை உடையவராய் நினைக்கின்றவரது உள்ளத்தில் நிறைந்து தோன்றுபவனும் , ` காற்று ` தீ , ஞாயிறு , திங்கள் ` என்னும் பொருள்களாய் நிற்பவனும் , அழித்தல் தொழிலையுடையவனும் , கூற்றுவனை உதைத்தவனும் , வரிசையாகப் பொருந்திய வளைகளையுடைய உமாதேவியோடும் திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலைத் தனக்கு உரிய இடமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` காற்றானை ` என்பது முதலிய நான்கிலும் தனித் தனி உருபு புணர்க்கப்பட்டதாயினும் , கருத்து வகையால் , ` காற்றுத் தீ கதிர் மதியானை ` எனத் தொகைச்சொல்லாய் நிற்றலின் , அவை ஒருசொல் தன்மையவாய் , ` தோன்றும் ` என்னும் எச்சத்திற்கு முடிபாயின . ` தோன்றும் ` என்றதற்கும் , ` உதைத்து ` என்றதற்கும் கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . எண்ணின்கண் வந்த , ` உதைத்து ` என்னும் எச்சம் , ` ஏற்றான் ` என்னும் வினைப்பெயர் கொண்டது . உம்மை , சிறப்பு . இத் திருப் பாடலுள் நீறணிந்து வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

முட்டாமே நாள்தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து
மூன்று போதும்
கட்டார்ந்த இண்டைகொண் டடிசேர்த்தும் அந்தணர்தங்
கருப்ப றியலூர்க்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக்
கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

நாள்தோறும் , ` காலை , நண்பகல் , மாலை ` என்னும் மூன்று பொழுதுகளிலும் , தப்பாமல் நீரின்கண் மூழ்கிப் பூக்களைப் பறித்து , அவைகளை , கட்டுதல் பொருந்திய இண்டை மாலையாகச் செய்துகொண்டு , மனத்தைத் தனது திருவடிக்கண் சேர்த்துகின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் , முழவம் முதலியவற்றின் கொட்டும் , அவற்றிற்கேற்ற கூத்தும் , பாட்டும் ஆகியவற்றை விரும்பி இருக்கின்ற அழகனும் , எட்டுருவாயவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` இண்டை ` என்பதன்பின் ` ஆக்கி ` என்பது வருவிக்க . இண்டை , முடியிலணிவதாகலின் , அடிசேர்த்தப்படுவது மனமாயிற்று . இனி , ` அடியுறையாக வைத்து ` எனலுமாம் . ` அடிசேரும் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் , ` பாட்டு ` என்பதன்பின் , தொகுக்கப்பட்ட நான்காவது விரிக்க . ` கோயில் ` என்றதில் , ஏழாவது இறுதிக்கண் தொக்கது . ` கருப்பறியலூர்க் கொகுடிக் கோயிலின்கண் நின்றானை ` எனக் கூட்டுக . ` மனத்தினால் ` என்றது வேண்டும் இடங்களிலும் வந்து இயையும் . எட்டுரு , அட்ட மூர்த்தம் . இத் திருப்பாடலுள் பூமாலையால் வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக
வேலி தோறும்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங்
கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

கல்வியில் வல்ல அடியார்கள் புதியனவாகிய பல சொல்மாலைகளைக் கொண்டு புகழ்ந்து வினை நீங்கப் பெறுமாறு , வேலிகள் தோறும் , பசிய அடியினையுடைய செவ்வாழைகளின்மேல் செவ்விய பழங்கள் சாற்றைச் சொரிந்து நிற்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் இளையவாகிய கூரிய பற்களையும் , வரிசையான வளைகளையும் உடையவளாகிய உமாதேவியோடும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நாம் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` விருந்து ` என்பது , செய்யுள் உறுப்புக்களுள் ஒரு பகுதி யவாகிய எண்வகை வனப்புக்களுள் ஒன்று என்பதும் , அஃது யாப்புக்களைப் புதுப்புது வகையில் தொகுப்பது என்பதும் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாக்களாலும் , உரைகளாலும் தெளிந்து கொள்க . அதனானே , திருப்பதிகங்களும் ` விருந்து ` என்னும் வனப்பினவாதல் அறியப்படும் . ` வினைபோக ` என , இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது . ` செங்கனிகள் ` என்றமையால் , வாழை செவ் வாழையாயிற்று . குருத்து , ` குருந்து ` என மெலித்தலாயிற்று . அம்மை என்றும் கன்னியேயாதலின் , அப்பொழுது வீழ்ந்து முளைத்த பல்லுடையள் எனப்படுவள் . குருத்து , வெண்மையுமாம் . இத் திருப் பாடலுள் , பாமாலையால் வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக்
கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங்
கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங்
கொகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

நீறு மிகுந்திருக்கின்ற திருமேனியையுடைய பெருமானும் , சீற்றம் மிக்க பாம்பாகிய அரைக்கச்சையை உடையவனும் , நறுமணம் வீசுகின்ற பூப் பொய்கைகளில் கயல் மீனும் , வாளை மீனும் குதிகொள்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள , கொடிப் பூக்களில் , ` வண்டு ` என்றும் , ` தேன் ` என்றும் சொல்லப்படுகின்ற அவற்றது கூட்டங்கள் மொய்த்து இசைபாடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் , திருவடியிற் பொருந்திய கழலையுடையவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` வண்டு , தேன் ` என்பன , தேனீக்களின் வகை . தேனினது தண்மையால் , வண்டும் தண்ணிதாயிற்று . ` அடியேறுகழலான் ` என்பது , ஒரு பெயர்த்தன்மைத்தாய் நின்றது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பொய்யாத வாய்மையாற் பொடிபூசிப் போற்றிசைத்துப்
பூசை செய்து
கையினால் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங்
கருப்ப றியலூர்க்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங்
கொகுடிக் கோயில்
ஐயனைஎன் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

பொய்கூறாத வாய்மையான உள்ளத்தோடு திரு நீற்றை அணிந்து , ` போற்றி ` எனச் சொல்லிப் பல வகை வழிபாடு களையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள , கொய்தல் பொருந்திய பூஞ்சோலைகளில் குயில்கள் கூவ , அவற்றோடு மயில்கள் ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனாகிய இறைவனை யான் என் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` பொய்யாத வாய்மை ` என மிகுத்தோதியருளியது , ` மறந்தும் பொய்கூறாத ` எனத் தாம் வேண்டிய சிறப்பினை விளக்குதற் பொருட்டு . ` வாய்மையாற் பொடி பூசி ` என்றருளியது , அத்தகை யோரது உள்ளமே திருநீற்றினை விழைதல் பற்றி ; ` பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள் ` என்றருளினார் , சேக்கிழார் நாயனாரும் ( தி .12 திருக் கூட்டச் சிறப்பு -6.). இதனானே , ` மனத்தது மாசாக ` என்னும் திருக்குறளில் , (278) ` மாண்டார் நீறாடி ` என்பதே பாடம் என்பாரது கூற்றும் பொருந்துவதேயாம் ; என்னையெனின் . ` நீராடி ` என்பது , ` மாண்டார் ` என்றதனோடு இனிது இயையாமையின் என்க . அங்ஙனமாயின் , பொதுநூல் செய்தாரை இவ்வாறு ஒருபாற் சார்ந்து கூறினாராக உரைத்தல் பொருந்துமோ எனின் , நீர் பலகால் மூழ்கல் , சோர்சடை தாழக் கொள்ளுதல் முதலியனபோல நீறணிதலும் தாபதர் அனைவர்க் கும் ஒருபடித்தாய் உரித்தெனக் கொள்ளப்படுமாதலின் . ` மழித்தலும் நீட்டலும் வேண்டா ` ( குறள் -280.) என்றாற்போல , இதனையும் கூறினார் என விடுக்கப்படும் என்க . ` இடுநீற்றாற் பையவிந்த நாகம் போல் ` ( நாலடி -66.) எனப் பிறரும் நீற்றினை எடுத்தோதியது உணர்தற்பாலது . இவையெல்லாம் பற்றியே , ` மந்திரமாவது நீறு ` எனவும் , ` தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு ` எனவும் திரு மொழிகள் எழுந்தன ( தி .2 ப .66 பா .1) என்க . ` கையினால் ` என மிகுத் தோதியருளியது , அவர் கைப்பணி செய்தற்கண் தளராது நிற்றலை உணர்த்தற்கு . ` கொய் ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் , ஆகுபெயராய் , அதனையுடையார்மேல் நின்றது எனினுமாம் . இங்கு . ` கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆருரரை ` ( தி .4 ப .5 பா .1) என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் திருமொழி நினைக்கத்தக்கது . ` நமக்கு ` என்றது , தம்போல்வாரையும் உளப்படுத்ததாகலின் , பால் வழு இன்றென்க . இத் திருப்பாடலுள் , அறநெறி நிற்றலால் வழி படுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச்
சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங்
கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையா ளவளோடுங்
கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

நறுமணத்தைக் கொண்ட பூக்களையுடைய பொய்கையின் கரைகளில் கரிய எருமைகள் மிக்கு உறங்குகின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் கொடிபோலும் அழகிய நுண்ணிய இடையினையும் , வரிசையான வளைகளையும் உடைய உமையம்மையுடன் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை என் மனத்தினால் நினைந்தபோது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது ; ஆதலின் , துன்பந் தருவனவாய் உள்ள நோய்களும் , தீவினைகளும் ஒருதலையாக நீங்குதற் பொருட்டு அவனை நினையுங்கள் .

குறிப்புரை :

` தடம் ` ஆகுபெயர் . இத் திருப்பாடலுள் இறைவரை நினைவார்க்கு வரும் பயன் அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும்
பாடி யாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்டோளன் முக்கண்ணன்
கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவ லொழியாத
கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

கருமை நிறம் பொருந்திய கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடையவனும் , திருக்கருப் பறியலூரில் உள்ள குறைவுபடாத வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை , நாம் , நீங்குதற்கரிய வலிய வினைகள் நீங்குமாறு பல நாளும் பாடியும் , ஆடியும் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` மறைநாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக் கோயில் ` என்றது , இங்கு அந்தணரது வழிபாடு நிகழ்தற் சிறப்பினை அருளியவாறு . இத் திருப்பாடலுள் , பாடி ஆடி வழிபடுதல் சிறந்தெடுத்து அருளப்பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந்
தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைக ளுடையானை விடையானைக்
கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலஉதிர்க்குங்
கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

சங்கினை ஏந்துகின்ற கையினை யுடையவனாகிய திருமாலும் , தாமரைமலர்மேல் இருப்பவனாகிய பிரமனும்காண இயலாத , கங்கை பொருந்திய நீண்ட சடைகளையுடையவனும் , இடபத்தை ஊர்பவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தேன் நிறைந்த பொழிலாகிய சோலைகள் , சுற்றிலும் கனிகள் பலவற்றை உதிர்க்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` கங்கை ` என்பதன் ஈற்று ஐகாரம் தொகுத்தலாயிற்று . ` கொங்கார்ந்த பொழில் ` என்பது சிறப்புப் பெயராய் , ` சோலை ` என்பதன் பொதுமையை நீக்கி , அதற்கு அடையாய் நின்றது . மாலயனுக்கும் அரியவனாகிய அவன் தமக்கு இனியனாயினமை அருளப் பட்டது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பண்டாழின் னிசைமுரலப் பன்னாளும் பாவித்துப்
பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக்
கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங்
கொகுடிக் கோயில்
எண்டோளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக்
கினிய வாறே.

பொழிப்புரை :

கண்டவரது கண்கள் குளிர்தற்கு வழியாகிய கமுகஞ் சோலைகளையும் , களிப்பைத் தருகின்ற பூஞ்சோலைகளையும் உடைய திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , கீழ்மைத் தொழில்களைப் பயில்கின்ற சமணராலும் , புத்தராலும் புறங்கூறப்படுகின்ற , எட்டுத் தோள்களையுடைய எம்பெருமானை , நாம் , பல நாள்களும் உள்ளத்திற் கருதி , பண்பொருந்துதற்கு அடிநிலையாகிய இனிய சுருதியை , கூட்டுவார் கூட்டப் பல இசைப் பாடல்களைப் பாடியும் , ஆடியும் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .

குறிப்புரை :

` குளிரும் , களி ` என்னும் அடைமொழிகளை கமுகஞ் சோலைக்கும் , பூஞ்சோலைக்கும் நிரலே கொடுக்க . ` சோலை ` என்றதனை , ` கமுகு ` என்றதனோடும் கூட்டுக . பூஞ்சோலையில் தேன் உளதாகலின் , களிப்புக் கூறப்பட்டது . ` கனிக் கமுகம் ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும் . கீழ்மைத் தொழில்கள் , வைதிகரை இகழ்தல் பகைத்தல் முதலியன . ` புறங்கூறுங் கோயில் ` என இயைக்கலாகாமை உணர்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங்
கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக்
கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய்
தின்ப மெய்தி
மலைமலிந்த தோளூரன் வனப்பகையப் பன்னுரைத்த
வண்ட மிழ்களே.

பொழிப்புரை :

திருக்கருப்பறியலூரில் உள்ள , குலைகள் நிறைந்த வலிய தென்னை மரங்களையும் , தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய இறைவனை , ` வனப் பகை ` என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும் தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து , அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே , தன்னைக் கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும் .

குறிப்புரை :

`வேறு வேண்டா` என்பதாம். இது தமிழ்மாலை யாதலின் இதனைக் கற்றற்கு உரியாரும், கற்றோரும் தமிழ்ப்புலவராவர் என்றற்கு. `தென்புலவர்` என்று அருளிச்செய்தார். மொழியது நில எல்லை, அதனைக் கற்றார்க்கு உரித்தாக்கப்பட்டது. கற்றோராகிய புலவர் என மாறிக் கூட்டுக.
சிற்பி