திருஇடையாறு


பண் :கொல்லி

பாடல் எண் : 1

முந்தை யூர்முது குன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தை யூர்நன்று சென்றடை வான்திரு வாரூர்
பந்தை யூர்பழை யாறு பழனம்பைஞ் ஞீலி
எந்தையூ ரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும் , எம் தந்தையும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பழைய ஊராகிய முதுகுன்றம் , குரங்கணின்முட்டம் , ஆரூர் , மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு , பழனம் , பைஞ்ஞீலி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

முதுகுன்றம் ஆதலின் , ` முந்தையூர் ` என அருளினார் . ` ஆரூர் ` என்றதில் உள்ள , ` திரு ` என்றதை எல்லாத் திருப்பாடல்களிலும் உள்ள ஊர்ப்பெயர்களில் வேண்டுவனவற்றோடு கூட்டுக . ` பந்தை ` என்ற ஐகாரம் , சாரியை . சில தலங்களில் இறைவனை , ` கற்பகம் , மாணிக்கம் , அமுது ` எனக் குறித்தருளுதல் போல , இடையாற்றில் , ` எய்தமான் ` எனக் குறித்தருளினார் . ` அம்மான் ` என்பது , இடைக்குறைந்து நின்றது . ` எய்தம்மான் ` என்பதே பாடம் எனலுமாம் . ` முந்தையூர் , பந்தையூர் ` என்பவற்றை வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் .1 பழையாறு , வைப்புத் தலம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

சுற்று மூர்சுழி யல்திருச் சோபுரந் தொண்டர்
ஒற்று மூரொற்றி யூர்திரு வூற லொழியாப்
பெற்ற மேறிபெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்ற மூரெய்த மானிடை யாறிடைமருதே.

பொழிப்புரை :

இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் , பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` அடி யார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல் , சோபுரம் , அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர் , ஊறல் , பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` தொண்டர் ` என்றதனைச் ` சுற்றும் ` என்றதற்குங் கூட்டுக . ` பாதி ` என்றது , முன்னர் அவ்வளவினதாகிய உடம்பினையும் , பின்னர் அதனையுடையவனையும் குறித்தலின் , இருமடியாகு பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கடங்க ளூர்திருக் காரி கரைகயி லாயம்
விடங்க ளூர்திரு வெண்ணிஅண் ணாமலை வெய்ய
படங்க ளூர்கின்ற பாம்பரை யான்பரஞ் சோதி
இடங்கொ ளூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

கொடிய , படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள் , ` செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை , கயிலாயம் , நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி , அண்ணா மலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` கடங்களூர் , விடங்களூர் ` என்பன வைப்புத்தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் . காரிகரை , வைப்புத்தலம் . ` காரிக் கரை , இடங்களூர் ` எனவும் பாடம் ஓதுவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

கச்சை யூர்கா வங்கழுக் குன்றங்கா ரோணம்
பிச்சை யூர்திரி வான்கட வூர்வட பேறூர்
கச்சி யூர்கச்சி சிக்கல்நெய்த் தானம் மிழலை
இச்சை யூரெய்த மானிடை யாறிடைமருதே.

பொழிப்புரை :

பிச்சைக்கு ஊர்தோறும் திரிபவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகியஇறைவன் விரும்புதல் செய்கின்ற ஊர்கள் , ` கச்சையூர் , பலகாக்கள் , அழகிய கழுக்குன்றம் , காரோணம் , கடவூர் , வடபேறூர் , கச்சணிந்தவளாகிய காமக்கோட்டி யம்மையது ஊரெனப்படுகின்ற காஞ்சி , சிக்கல் , நெய்த்தானம் , வீழிமிழலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

பல காக்களாவன , ` கோலக்கா , ஆனைக்கா முதலியன . ` காரோணம் ` என்னும் பெயருடைய கோயில்கள் , குடந்தை , நாகை முதலிய சில இடங்களில் உள்ளன . கச்சையூர் , வடபேறூர் இவை வைப்புத்தலம் . சத்தி பீடங்களுள் முதலதாகலின் , காஞ்சியை அம்மைக்கு உரியதாக அருளினார் . ` கைச்சி ஊர் ` எனப் பாடம் ஓதி , ` கரந்தரும் பயன் இது என உணர்ந்து கம்பம் மேவிய உம்பர் நாயகரை வழிபடுவனவும் , முப்பத்திரண்டு அறங்களையும் வளர்ப்பனவுமாகிய கையை உடையவளது ஊர் ` என்று உரைத்தலும் ஆம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

நிறைய னூர்நின்றி யூர்கொடுங் குன்ற மமர்ந்த
பிறைய னூர்பெரு மூர்பெரும் பற்றப் புலியூர்
மறைய னூர்மறைக் காடு வலஞ்சுழி வாய்த்த
இறைய னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவனும் , விரும்பிச் சூடிய பிறையை உடையவனும் , வேதத்தை ஓதுபவனும் , வலஞ்சுழியில் பொருந்தியுள்ள கடவுளும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` நின்றியூர் , கொடுங்குன்றம் , பெருமூர் , பெரும் பற்றப்புலியூர் , மறைக்காடு , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` நிறையனூர் , பிறையனூர் , மறையனூர் ` என்பன வற்றையும் , ` இறைவனூர் ` என்று பாடம் ஓதி அதனையும் வைப்புத் தலங்களாகக் கூறுவாரும் உளர் . பெருமூர் , வைப்புத் தலம் . பெரும் பற்றப்புலியூர் , தில்லை .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

திங்க ளூர்திரு வாதிரை யான்பட் டினமூர்
நங்க ளூர்நறை யூர்நனி நாலிசை நாலூர்
தங்க ளூர்தமி ழானென்று பாவிக்க வல்ல
எங்க ளூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

இறைவனை , ` தமிழில் விளங்குபவன் ` என்று கருதவல்ல யாங்கள் , எம்முள் அளவளாவுங்கால் , எம்மை நீக்கி , ` எம்மினும் உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர் ` என்றும் , யாவரையும் உளப்படுத்து , ` நங்கள் ஊர் ` என்றும் , பிறரொடு சொல்லாடுங்கால் , முன்னிலையாரை நீக்கி , ` எங்கள் ஊர் ` என்றும் சொல்லுமாறு , யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள் , ` திங்களூர் , திருவாதிரையான் பட்டினம் என்னும் ஊர் , நறையூர் , மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` நங்களூர் , தங்களூர் , எங்களூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் . ` நனி நல்லிசை` எனவும் , ` நன்று பாவிக்க வல்ல ` எனவும் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கருக்க நஞ்சமு துண்டகல் லாலன்கொல் லேற்றன்
தருக்க ருக்கனைச் செற்றுகந் தான்றன் முடிமேல்
எருக்க நாண்மலர் இண்டையும் மத்தமுஞ் சூடி
இருக்கு மூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

தீக்கின்ற அந்த நஞ்சினை உண்டவனும் , கல்லால மர நிழலில் இருப்பவனும் , கொல்லும் இடபத்தை ஏறுபவனும் , செருக்குற்ற சூரியனை ஒறுத்துப் பின் அருள்செய்தவனும் , தனது முடியின் மேல் அன்று மலர்ந்த எருக்கம்பூவினாலாகிய இண்டை மாலையையும் , ஊமத்தம் பூவினையும் சூடியவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவன் வீற்றிருக்கும் ஊர்கள் , ` இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` கருக்கு அந் நஞ்சு ` எனப் பிரிக்க . சுட்டு , அத் தன்மையின்மேலது . இனி , ` கருக்க ` எனப்பிரித்து , ` கறுக்க ` என்பது , எதுகை நோக்கித் திரிந்து நின்றதாக உரைப்பாரும் உளர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

ஒளிவடிவினனும் , தீவினைகள் குறைய நிற்பவனும் , திருவருளாகிய தொடர்பினை உடையவனும் , மேலிடத்தில் இருப்பவனும் , தூயவனும் , பாவத்தைப் போக்குபவனும் , ` நள்ளாறு ` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` ஆக்கூர் , நனிபள்ளி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` தேசனூர் , பாசனூர் , நாசனூர் , ஈசனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பேற னூர்பிறைச் சென்னியி னான்பெரு வேளூர்
தேற னூர்திரு மாமகள் கோன்திரு மாலோர்
கூற னூர்குரங் காடு துறைதிருக் கோவல்
ஏற னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொழிப்புரை :

எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும் , பிறையை யணிந்த சடையை உடையவனும் , தெளியப்படுபவனும் , திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும் , இடபத்தை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பெருவேளூர் , குரங்காடுதுறை , கோவலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .

குறிப்புரை :

` நாடு ` என்பது அடியாக , ` நாடன் ` என்னும் பெயர் வருதல்போல , ` பேறு ` முதலியன அடியாக , ` பேறன் ` முதலிய பெயர்கள் வந்தன . ` பேறனூர் , தேறனூர் , கூறனூர் , ஏறனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர் . ` வடகுரங்காடுதுறை , தென் குரங்காடுதுறை ` எனக் குரங்காடுதுறைகள் இரண்டு உள .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன்
தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக்
கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய வெள்ளிய விடையை ஏறுகின்றவரும் , யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் , இடைமருதையும் , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் , தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினைத் துன்பம் நீங்க , உடல் குளிர்வார்கள் .

குறிப்புரை :

உடல் குளிர்தல் சொல்லவே , உள்ளமும் , உயிரும் குளிர்தல் சொல்லவேண்டாவாயிற்று . ` ஊறிவாயின ` முதலாக ஓதுவன பாடம் அல்ல . ` நாடிய ` என்பது வினைப்பெயர் . நாடுதல் , தன் காரணந் தோற்றி நின்றது . ` இடைமருதை ஊரன் ஊறுவாயினனாய்த் தேறும் இடங்களொடு நாடிய கூறுவார் ` எனக் கொண்டு கூட்டிப்பொருள் கொள்க . ` எவ்வம் ` என்பதில் , அம்முக் குறைந்தது .
சிற்பி