திருக்கோடிக்குழகர்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே.

பொழிப்புரை :

கோடிக்குழகரே , அடிகளே , கடற்காற்றுக் கடிதாய் வந்து வீச , இக் கடற்கரையின்மேல் , உமக்கு , யார் துணையாய் இருக்க இருக்கின்றீர் ? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன ; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ ? சொல்லீர் .

குறிப்புரை :

திருமறைக்காட்டு எல்லையின் கோடியில் இருக்கும் அழகராதல் பற்றி , இங்கு உள்ள பெருமான் , ` கோடிக் குழகர் ` எனப் படுவர் . அவரது பெயரே , பின்னர் அத் தலத்திற்கும் ஆயிற்று . அக்கடற் கரையையும் , ` கோடிக்கரை ` என்பர் . ` துணையாக ` என்பது பாடம் அன்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

முன்றான்கடல் நஞ்சமுண் டவ்வத னாலோ
பின்றான்பர வைக்குப காரஞ்செய் தாயோ
குன்றாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
என்றான்றனி யேஇருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

குறையாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையில் உள்ள அழகனே , எம்பெருமானே , முன்பு கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட அதனால் , மீட்டும் அவ்வாறு தோன்றின் அதனை உண்டற்பொருட்டோ ? அல்லது கடல் தனியே இருத்தல் கருதி அதற்குத் துணையிருத்தற்பொருட்டோ ? எக்காரணத்தால் இங்கு நீ தனியே இருக்கின்றாய் ? சொல் .

குறிப்புரை :

` பின்றான் ` என்பது , விகற்பத்தின்கண் வரும் , ` அன்றி ` என்பதன் பொருட்டாய் நின்றது . ` பொழில் சூழ்தரு கோடி ` என இயையும் . பொழில் , கடற்கரைச் சோலை .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

மத்தம்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
பத்தர்பலர் பாட இருந்த பரமா
கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
எத்தால்தனி யேஇருந் தாய்எம் பிரானே.

பொழிப்புரை :

களிப்புடையவர் நிறையச் சூழ்ந்த திருமறைக் காட்டிற்குத் தென்பால் , அடியார்கள் பலர் பாடித் துதிக்க எழுந்தருளி யிருக்கும் பரமனே , பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையின்கண் உள்ள அழகனே , எம்பெருமானே , எக்காரணத்தால் நீ இங்குத் தனியே இருக்கின்றாய் ? சொல் .

குறிப்புரை :

மத்தம் , களிப்பு ; அஃது , அதனை உடையார்மேல் நின்றது . களிப்பிற்குக் காரணம் , செல்வ மிகுதி . ` மலி ` என்பது , ` மலிய ` எனப் பொருள் தந்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்
கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

கோடிக்கரைக்கண் உள்ள அழகனே ! இங்குள்ள காடோ மிகப் பெரிது ; எப்பொழுதும் உன் தேவி அச்சங்கொள்ளுமாறு மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும் , கூகைகளும் பல கூடிக் கூக்குரலிடுதல் இடையறாது ; வேட்டைத் தொழில் செய்து இங்கு வாழ்பவர் மிகவுங் கொடியவர் ; வஞ்சனையுடையவர் ; இவ்விடத்தில் உறை விடத்தைக் கொண்டாயே ; இஃது என் ?

குறிப்புரை :

` காடு ` என்றதும் , கடற்கரைச் சோலையை . அங்கும் ஆறலை கள்வர் வாழ்தல் பெறப்பட்டது . ` இடையறாது ` என்பது சொல்லெச்சம் ; ` குழற ` என்பது பாடம் அன்று . ` இவ்விடம் ` எனச் சுட்டு வருவிக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே , ` கங்கை ` என்பவளும் உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை ; இங்ஙனமாக , கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி , பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாய் ; இஃது எவ்வாறு ?

குறிப்புரை :

காடுகாள் - காடுகிழாள் ; காட்டை உரிமையாக உடையவள் . இவளை , ` பழையோள் ` என்ப . 1 ` காளி ` என்றல் , இவளையே . ` காடுகள் ` என்பது பிழைபட்ட பாடம் . ` காடுகாள் புணர்ந்த பரிசும் பதிகத்திடை வைத்தார் ` ( தி .12 கழறிற்றறிவார் புராணம் 89) என்ற சேக்கிழார் திருப்பாடலை எடுத்துக்காட்டியவர் தாமும் , இதனைத் திருத்தாதே குறிப்பெழுதிச் சென்றார் . திருமுறைத் திருப்பாடல்களில் பலவிடங்களில் பாடங்கள் பிழைபட ஓதப்படுகின்றன என்பதற்கு , இஃதொன்றே போதிய சான்றாகும் . இருவர் மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க , மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என , நகை தோன்ற வினாயது , ` இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ ` என்பதனைத் தெரிவித்தற் பொருட்டென்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

அரவேரல்கு லாளையொர் பாக மமர்ந்து
மரவங்கமழ் மாமறைக் காடதன் தென்பால்
குரவம்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இரவேதுணை யாயிருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

குங்கும மரத்தின் பூக்கள் மணம் வீசுகின்ற பெருமை பொருந்திய திருமறைக்காட்டிற்குத் தென்பால் குராமரச் சோலை சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே , எம்பெருமானே , பாம்பின் படம் போலும் அல்குலை யுடைய உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்து , இங்கு இராக்காலமே துணையாக இருக்கின்றாய் ; இஃது என் ?

குறிப்புரை :

` அரவு ` முதலாகுபெயர் . ` குரவப்பொழில் ` என்பது மெலித்தலாயிற்று . ` இரவே துணையா ` என்றது , ` ஒருவரும் துணையில்லையாக ` என்றபடி .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பறையுங்குழ லும்மொலி பாடல் இயம்ப
அறையுங்கழ லார்க்கநின் றாடும் அமுதே
குறையாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
இறைவாதனி யேஇருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

பறையும் , குழலும் , ஒலிக்கின்ற பாடலும் முழங்க , ஒலிக்கின்ற கழல் ஆரவாரிக்கும்படி அம்பலத்தில் தோன்றி நின்று ஆடுகின்ற அமுதம்போல்பவனே , குறைதல் இல்லாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனே , இறைவனே , எம் பெருமானே , நீ ஏன் இங்குத் தனியாய் இருக்கின்றாய் ?

குறிப்புரை :

இங்ஙனம் பலவாறு விளித்தது , ` நீ இவ்வாறு தனித்திருத்தற்கு உரியையோ ` என்னுங் குறிப்பினால் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே.

பொழிப்புரை :

முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக்கண் உள்ள அழகனே , எம்பெருமானே , ஒற்றி என்ற குறையினால் ஒற்றி யூரையும் , ஆருடையது என்ற காரணத்தால் ஆருரையும் அறுதியாக நீங்கிவிட்டாயோ ? எதனால் இங்குத் தனியேவந்து இருக்கின்றாய் ?

குறிப்புரை :

கருத்து நோக்கி , இவ்வாறு உரைக்கப்பட்டது . சிலேடை வகையால் இங்ஙனம் வினாயது , உனக்கு ஊர் இல்லையா ? எத்துணையோ ஊர்கள் உள்ளனவே ; அவைகளை எல்லாம் விடுத்து , ஒருவரும் இல்லாத இவ்விடத்தில் ஏன் வந்து இருத்தல் வேண்டும் ? என்றற்கு . ` அது ` என்னும் சுட்டுப் பெயர்கள் , முன்னுள்ள குறிப்பினால் , அவ்வப் பெயரை உடைய ஊர்களைக் குறித்தன .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
அடிகேள்அன்ப தாய்இடங் கோயில்கொண் டாயே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் அறிய இயலாத தன்மையை உடையவனே , தலைவனே , நீ பிறரது வழிபாட்டினை ஏற்க நினைக்கு மிடத்து , அதனைச் செய்தற்கு இங்கு நற்குடி ஒன்றேனும் இல்லை ; அதற்கு மாறாக கொடிய வேடர்கள் பலர் வாழ்கின்றனர் ; இத்தன்மையதான இக் கடற்கரைமேல் விருப்பம் உடையையாய் , இவ்விடத்தை உறைவிடமாகக் கொண்டாயே ; இஃது என் ?

குறிப்புரை :

` படியான் `, அண்மை விளி ; ` படியாய் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` கொள்ளுமிடத்து ` என்னும் வினையெச்சத்தின் அத்து , தொகுத்தலாயிற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே.

பொழிப்புரை :

உலகில் உள்ள ஊர்களில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தென்பால் , அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர் , சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர் .

குறிப்புரை :

அரசன் , அமைச்சன் இவரை , ` அரசு , அமைச்சு ` என்றல் போல , குழகனை , ` குழகு ` என்று அருளிச் செய்தார் . ` தாம் ` என்றது , அசைநிலை . ஏகாரம் , தேற்றம் .
சிற்பி