திருப்புகலூர்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , எம் தந்தையாகிய சிவபிரான் , தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும் , ஆடையும் , பிறவும் தந்து புரப்பான் ; அதனால் , புகழும் மிகும் ; துன்பங் கெடுதலும் உண்டாம் , இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவ லோகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை ; ஆதலின் , தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து , தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி , அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும் , அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து , அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள் .

குறிப்புரை :

வேண்டும் சொற்களை வருவித்து , ` தமக்குத் தொண்டராய்த் தம்மையே புகழ்ந்து , தமக்கு இச்சையே பேசினும் , தம்மையே சார்கினும் ` எனக் கூட்டியுரைக்க . தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து இச்சை பேசுதலும் , சார்தலும் ஈயாதாரையும் ஈயப் பண்ணும் தன்மையுடையன என அவற்றது சிறப்புணர்த்தி நிற்றலின் , ` பேசினும் சார்கினும் ` என்னும் உம்மைகள் சிறப்பும்மைகள் . ` சார்வினும் ` என்பது பாடம் அன்று . பொய்ம்மையாவது , உவகையுடையார்போல இனிய முகமும் , இனிய சொல்லுங் காட்டிப் பிறிதொரு காரணத்தின்மேல் இட்டு யாதுந் தாராதொழிதல் . ஓரோவழிச் சிறிது தருவராயினும் , அது மானமுடைய புலவர்க்கு யாதும் தாராதொழிதலினும் இளிவரவே பயத்தலின் , அதனையும் தாராமையாகவே வைத்து , ` தருகிலாப் பொய்ம்மையாளர் ` என்று அருளினார் . இதனை , இளவெளிமான் , பெருஞ்சித்திரனார் இவரிடை நிகழ்ந்த நிகழ்ச்சி பற்றியும் உணர்ந்து கொள்க . புலவர்தாம் , செஞ்ஞாயிற்றுச் செலவும் , அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் , பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் , வளிதிரிதரு திசையும் , வறிது நிலைஇய காயமும் என்றிவைகளைச் சென்றளந்து அறிந்தோர் போல அவற்றின் இயல்புகளையும் அறுதியிட்டுரைக்கும் பேரறிவானே ( புறம் -30), தேயம் இடையிட்டும் காலம் இடையிட்டும் உள்ள பொருள்களையும் அறிந்து ( குறள் - 393 உரை ), வள்ளியோர் செவி முதல் வயங்குமொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் ( புறம் .206) பெருமக்கள் என்றும் , அவராற் பாடப்பெற்றோர் , விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப ( புறம் -27) என்றும் அறிந்து கொடுத்தலைச் செய்யாராயினும் , வேற்றுத் தேயத்தராதல் காரணமாக , கேட்டல் மாத்திரையல்லது , யாவதும் காண்டல் இல்லாது யாண்டு பல கழிய ( புறம் -216), செல்வக்காலை நிற்பினும் , அல்லற்காலத்து நில்லாது வந்து ( புறம் - 215) உடனுயிர் துறக்கும் உற்ற நண்பினராதற்கு உரியர் என்று கருதியாயினும் தருதலைச் செய்யார் என்பார் , ` தருகிலாப் பொய்ம்மையாளர் ` என்று அருளினார் . தலைவரது ஊர் முதலியவற்றைப் பாடுதலும் தலைவரைப் பாடுதலேயாமாகலின் , ` எந்தை புகலூர் பாடுமின் ` என்று அருளிச் செய்தார் ; இதனை , ` வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன் - குன்றம் பாடின கொல்லோ ` ( புறம் -131) என்றாற் போல்வன வற்றினுங் காண்க . இதனானே திருப்பதிகங்கள் இறைவரது தலங்கள் முதலியவற்றைப் பெரிதும் புகழ்தற் காரணமும் அறியப்படும் . ` புலவர்கள் ` என்பதில் , ` கள் ` ஒருபொருட் பன்மொழியாய் வந்த விகுதிமேல் விகுதியாதலின் , ` புலவீர்காள் ` என ஈரிடத்தும் விளியேற்றலும் பொருந்துவதாயிற்று . ` அம்மையிற்றான் ` என்பதனை விலக்கலின் , ` இம்மையே ` என்னும் ஏகாரம் , பிரிநிலை . ` சோறும் , கூறையும் ` என்றது , அவற்றோடு உடனெண்ணத் தக்க பிறவற்றையும் தழுவ நின்ற குறிப்பினதாதல் அறிக . ஏத்தல் , ஏத்தப்படுதல் . ஏத்தலும் என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று . ` அம்மை ` என்றது அம்மைக்கு உரியராம் நிலையினை . ஆண்டுப் பிறிதொரு பிறப்பு எடுத்தலினின்றும் பிரித்தலின் , ` அம்மையே ` என்னும் ஏகாரமும் , பிரிநிலையே . ` ஆள்வது ` என்னும் செயப்படு பொருட்பெயர் , அதனைத் தெரிவிக்குங் கருவியாகிய சொல்லுதற்கு ஆயிற்று . அவ் விடத்து நிற்கும் நான்காவது , பகைப் பொருட்டு . ` ஐயுறுதல் ` என்னும் காரியமும் , தன் காரணத்தின்மேல் நின்றது . ஏகாரம் , தேற்றம் . ஈத்துவக்கும் இன்பம் அறியாது தம் உடைமைகளை வைத்திழக்கும் வன்கண்ணரன்றி ( குறள் -228), இரவலரைக் கண்டாற் கரவாது உவந்தீவார் ( குறள் -1061) உலகத்து அரியராகலானும் , ஒரோ வழி அன்னர் உளராய்க் கிடைப்பினும் , அவர்தாம் தருவன நிலை யில்லாத இன்பத்தைச் தரும் சோறுங் கூறையும் போல்வன வல்லது , நிலையுடைய வீடு பேறாகாமையானும் அவரைப் பாடாதே இறைவரைப் பாடுமின் என்பார் , ` சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே ` என அதனை ஐயமறுத் துணர்த்தியருளினார் ; இதனானே , வருகின்ற பாடல்கள் எல்லாவற்றுள்ளும் இஃதொன்றனையே வலியுறுத்தருளிச் செய்தற் காரணமும் உணர்ந்துகொள்ளப் படும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
கூறி னுங்கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேலம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , வலியும் வீரமும் இல்லாதவனை , ` இவன் மல்லுக்கு வீமனே போல்வான் , வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனே போல்வான் ` என்றும் , கொடுத்தற்குணம் இல்லாதவனை , ` இவன் கொடைக்குப் பாரியே போல்வான் ` என்றும் இல்லது கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , நீற்றைக்கொண்ட திரு மேனியையுடைய எம் புண்ணிய வடிவினனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , பல உலக அடுக்கிற்கும் மேல் உள்ள அமரரது உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` வாழ்தல் வேண்டிப் பொய்கூறாது மெய்யே கூறுதலும் ( புறம் -139) செய்யா கூறிக் கிளத்தலை எய்யாமையும் ( புறம் -148) ஆகிய புலவர் பண்புகளின் நீங்கிப் பாடினும் கொடுப்பார் இல்லை ` என்றவாறு . பாரி போல்வார் சிலர் எக்காலத்தும் உளரல்லரோ எனின் , அதுபற்றிக் கொடுப்பார் உளர் என்னார் ஆசிரியர் . என்னையெனின் , ` உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே ` ( புறம் -27) என்றும் , ` பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர் சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன் றீயாது வீயும் உயிர்தவப் பலவே ` ( புறம் -235) என்றுஞ் சொன்னாராகலின் , அவர்தாம் ஒரோவொருகாலத்து ஒரோவொரிடத்துத் தோன்றி நிற்றலன்றி எஞ்ஞான்றும் எவ்விடத்தும் இல்லாமையும் , உளராயவழியும் சிலரைச் சிலபோது புரத்தலன்றிப் பலரையும் பலகாலத்தும் புரவாமையும் தெளியப்படுதலால் , கடலில் இட்ட காயம்போலச் சிறுபான்மைத்தாய அது , பெரும்பான்மைத்தாய பலர்க்கும் வாழும் வழியாகாமைபற்றி என்க . ` மிடுக்கிலாதான் ` என்றும் , ` கொடுக்கிலாதான் ` என்றும் அருளியது , பலர்க்கு உரிய தன்மையை ஒருவன்மேல் வைத்துக் கூறியவாறு ; என்னை ? ` ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப ` ( தொல் - பொருள் -222) என்பது இலக்கணமாகலின் . இதனானே பால்வழுவும் இன்றாயிற்று . ` என்று ` என்றதை முன்னவற்றோடுங் கூட்டிச் செவ்வெண்ணாக்குக . ` வில்லுக்கு விசயன் ` என்றமையான் , ஏனையவற்றிற்கும் அவ்வாறு உரைக்கப்பட்டன . ` கொடுப்பாரிலை ` என்றதனை ஒரு சொல்லாக்கி , ` கொடார் ` என்பது அதன் பொருளாக உரைப்பாரும் உளர் . அஃது அப் பொருளதாயின் , ` கொடுப்பாரலர் ` என வருதலல்லது , இவ்வாறு வாராமை மேலும் , அதற்கு எழுவாயின்மையும் உணர்க . ` பொடிக்கொள் ` என்றதில் உள்ள ககரமெய் , விரித்தல் . ` அடுக்கிற்கு ` என்னும் நான்காவது , தொகுத்தல் . ` மேல் ` என்றது , மேல் உள்ளதனை உணர்த்திற்று . அன்றி , ` உள்ள ` என்பது எஞ்சி நின்றது எனலுமாம் . ` அமரர் ` என்பது இடைக்குறைந்து நின்றது . ` அமரர் ` என்பது , முகமனாய்த் தேவரை உணர்த்தல் உலகியல் வழக்காயினும் , உண்மையாய் , அபர முத்தரை உணர்த்தல் மெய்ந்நெறி வழக்கென்க . மேலைத் திருப்பாடலில் , ` சிவலோகம் ` என்றதனையே பின்னர் இவ்வாறு அருளுதலின் , இதற்குப் பிறிது பொருள் கூறல் பொருந்தாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

காணி யேற்பெரி துடைய னேகற்று
நல்ல னேசுற்றம் நன்கிளை
பேணி யேவிருந் தோம்பு மேயென்று
பேசி னுங்கொடுப் பாரிலை
பூணி பூண்டுழப் புட்சி லம்புந்தண்
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆணி யாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , நிலம் சிறிதும் இல்லாதவனை , ` காணியோ பெரிதுடையன் ` என்றும் , கல்வியில்லாத பேதையை , ` கற்று நலம் பெற்றவன் ` என்றும் , ஒருவரோடும் அளவளாவுதல் இல்லாதவனை , ` நண்பரையும் , நல்ல சுற்றத்தாரையும் பேணுதலுடையவன் ` என்றும் , தானே தமியனாய் உண்டு களித்து ஈர்ங்கை விதிராதவனை , ` விருந்தினரை நன்கு புறந்தருவோன் ` என்றும் பொய் சொல்லிப் பாடினும் , நீவிர் வேண்டுவதனை நுமக்குக் கொடுப்பார் இவ் வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உழவர் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழ , வயற் பறவைகள் ஒலிக்கின்ற , தண்ணிய திருப் புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகமாகிய தேர்க்கு அச் சாணியாய் நின்று அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

மேலைத் திருப்பாடலில் ` மிடுக்கிலாதானை , கொடுக்கிலாதானை ` என்றருளினமையானும் , பின்னும் அவ்வாறு அருளிச் செய்தலானும் , ஈண்டும் இவ்வாறுரைத்தல் திருவுள்ளமாயிற்று . ` பேணி ` என்றது , பெயர் . ` உழுவார் உலகத்தார்க்கு ஆணி ` ( குறள் - 1032) என்புழியும் , ` ஆணி ` என்பது இப்பொருட்டாதல் உணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துடல்
நடுங்கி நிற்கும்இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோள னேயென்று
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புரைவெள் ளேறுடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அரைய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

மெய்ம்முழுதும் நரைகள் வரப்பெற்று , மூப்பெய்தி , உடல் நடுக்கங் கண்டு , கால் தளர்ந்து நிற்கின்ற இத்தன்மையனாகிய கிழவனை , ` மலைகள் போலத்திரண்ட தோள்களையுடைய காளையே ` என்று பொய்யாகப் புகழ்ந்து பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உயர்ந்த வெள்ளிய இடபத்தினையுடைய புண்ணியனாகிய சிவபிரானது திருப் புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகத்திற்குத் தலைவராய் அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

தளர்தலுக்கு , ` கால் ` என்னும் எழுவாய் வருவிக்கப் பட்டது . சுட்டு , தன்மையைக் குறித்தது . ` தோளனே ` என்னும் ஏகாரத்தைத் தேற்றமாகவும் , விளியாகவும் இரட்டுற மொழிந்து கொள்க . இது , பின்வருவனவற்றிற்கும் ஒக்கும் . ` அரையன் ` என்றது , பன்மையொருமை மயக்கம் . தலைவர் ஒருவரேயாதலின் , அந்நிலை யினை , காலத்தான் ஒருவர் ஒருவராக எய்துவர் என்றற்கு இவ்வாறு அருளினார் . பன்மையாக அருளிய வழியும் இதுவே பொருளாகலின் , ` அரையராய் ` என்பதே பாடம் எனினுமாம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வஞ்ச நெஞ்சனை மாச ழக்கனைப்
பாவி யைவழக் கில்லியைப்
பஞ்ச துட்டனைச் சாது வேயென்று
பாடி னுங்கொடுப் பாரிலை
பொன்செய் செஞ்சடைப் புண்ணி யன்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில் நோயறுத் துஞ்சு போவதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , வஞ்சம் பொருந்திய நெஞ்சை உடையவனும் , பெரும்பொய்யனும் , பாவத்தொழிலை உடையவனும் , நீதி இல்லாதவனும் , பஞ்ச மாபாதகங்களையும் செய்பவனும் ஆகியவனை , ` சான்றோனே ` என்று உயர்த்திப் பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பொன்போலும் சிவந்த சடையினையுடைய புண்ணியனாகிய சிவ பிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , மனத்தில் தோன்றும் துன்பங்களையெல்லாம் அறுத்தெறிந்து பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` பஞ்ச ` என்னும் எண்ணுப்பெயர் , அவ்வளவினதாகிய வகையைக் குறித்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

நலமி லாதானை நல்ல னேயென்று
நரைத்த மாந்தனை யிளையனே
குலமி லாதானைக் குலவ னேயென்று
கூறி னுங்கொடுப் பாரிலை
புலமெ லாம்வெறி கமழும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அலம ராதம ருலக மாள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , அழகில்லாதவனை , ` அழகுடையவனே ` என்றும் , முழுதும் நரை எய்திய கிழவனை , ` இளையவனே ` என்றும் இழிகுலத்தவனை , ` உயர்குலத்தவனே ` என்றும் மாறிச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , வயல்களெல்லாம் தாமரை முதலியவற்றின் மணங்கமழ்கின்ற அழகிய திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அலைவின்றி அமரர் உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` மாந்தர் ` என்பதேயன்றி , ` மாந்தன் ` என்னும் சொல்லும் உளது என்க . ( சூளாமணி - தூது . 40) ` மாந்தர் ` என்பதே பாடமாயின் , ஒருமைப் பன்மை மயக்கமாம் . ` இளையனே யென்று ` என்றும் பாடம் ஓதுவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

நோய னைத்தடந் தோள னேயென்று
நொய்ய மாந்தனை விழுமிய
தாயன் றோபுல வோர்க்கெ லாமென்று
சாற்றி னுங்கொடுப் பாரிலை
போயு ழன்றுகண் குழியா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
ஆய மின்றிப்போய் அண்ட மாள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

தொழுநோயால் வருந்துகின்றவனை , ` பெரிய தோள்களை யுடைய மல்லனே ` என்றும் , ஒன்றும் ஈயாத சிறுமைக் குணம் உடையவனை , ` இவன் புலவர்கட்கெல்லாம் பெருமை பொருந்திய தாய்போல்பவன் அன்றோ ` என்றும் , நுமக்கு வரும் இளி வரல் கருதாதே பலரும் அறியக் கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , உலகரிடத்துச் சென்று அலைந்து கண்குழிய மெலியாமல் , எம் தந்தையாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , வருத்தமின்றிச் சென்று வானுலகை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` விழுமிய தாய் அன்றோ ` என்றதில் , ` அன்றோ ` என்பது , அத்தொடர்மொழியின் பொருள் நோக்கி வந்தது . ஆயம் - வருத்தம் . ( தமிழ் லெக்ஸிகன் )

பண் :கொல்லி

பாடல் எண் : 8

எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும்
ஈக்கும் ஈகில னாகிலும்
வள்ள லேஎங்கள் மைந்த னேயென்று
வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை
புள்ளெ லாஞ்சென்று சேரும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அள்ளற் பட்டழுந் தாது போவதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , எள் விழுந்த இடத்தை , அவ்விழப்பிற்கு வருந்திக் கூர்ந்து நோக்கித் தேடுபவனாயும் , ஈக்கும் ஈயாது சிந்தியவற்றைச் சேர்ப்பவனாயும் உள்ளவனை , ` அள்ளி வீசும் வள்ளலே , எங்கட்கு வலிமையாய் உள்ளவனே ` என்று சொல்லி வாழ்த்துதலைச் செய்யினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பவர் இவ்வுலகில் இல்லை ; ஆதலின் , பறவைகளெல்லாம் சென்று சேர்கின்ற அழகிய புகலூரைப் பாடுமின் ; பாடினால் , உலகியலாகிய சேற்றிற்பட்டு அழுந்தாது பிழைத்துப் போதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` விழுந்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . வயல்களின் நீர் வளத்தாலும் , பழுத்த மரங்களையுடைய சோலைகளின் வளத்தாலும் , புள்ளெலாம் சென்று சேர்தல் உளதாயிற்று என்க . அள்ளல் , நரகமுமாம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

கற்றி லாதானைக் கற்று நல்லனே
காம தேவனை யொக்குமே
முற்றி லாதானை முற்ற னேயென்று
மொழியி னுங்கொடுப் பாரிலை
பொத்தி லாந்தைகள் பாட்ட றாப்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அத்த னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , ஒருஞான்றும் ஒன்றனையும் கற்றறியாதவனை , ` மிகவும் கற்று வல்லனாயினானே ` என்றும் , அழகு சிறிதும் இல்லாதவனை , ` அழகில் காமதேவனை ஒப்பானே ` என்றும் , ஆண்டும் அறிவும் முதிராதவனை , அவற்றால் முதிர்ந்தவனே என்றும் புனைந்து கூறிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , மரப்பொந்துகளில் ஆந்தைகளின் ஓசை இடையறாது ஒலிக்கின்ற திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரர் உலகிற்குத் தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

ஆண்டு முதிர்வால் அடிப்படும் அறிவு மிகுதலின் , அதுவும் பெருமை தருவதாயிற்று . மரங்களின் செறிவால் பகலவன் ஒளி புகாமையின் பகலும் இரவே போல்வதாயினமையின் , ஆந்தைகளின் பாட்டு அறாதாயிற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

தைய லாருக்கொர் காம னேசால
நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

புலவர்காள் , யாவராலும் அருவருக்கப்படும் தோற்றத்தவனை , ` மகளிருள்ளத்திற்குக் காமன் போலத் தோன்றுபவனே , ஆடவர் யாவரினும் மிக இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே , முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே ` என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பெரிய பொய்கைகளிலும் , சிறிய குளங்களிலும் எருமைகள் வீழ்ந்து உழக்குகின்ற திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரருலகத்திற்குத் தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` கையுலாவிய வேலன் ` என்றது , ` முருகன் ` என்னும் பெயரளவாய் நின்றது . ` காமனே யென்று சால நல்வழக் குடையவனே கையுலாவிய வேலனே யென்று ` எனவும் ஓதுப .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்
புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம்பொழில் நாவ லூரன்
வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய
பாடல் பத்திவை வல்லவர்
அறவ னாரடி சென்று சேர்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.

பொழிப்புரை :

வயல்களில் செந்தாமரைகள் செழிக்கின்ற அழகிய திருப்புகலூரில் விரும்பி எழுந்தருளியுள்ள செல்வனாய சிவபெருமானை , தேனையுடைய பூஞ்சோலைகளை உடைய திருநாவலூரனும் , வனப்பகைக்குத் தந்தையும் , சடையனார்க்கு மகனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அறவடிவினனாகிய அப்பெருமானது அரிய திருவடிகளில் சென்று சேர்வர் என்றற்கு , ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை .

குறிப்புரை :

` சிறுவன் ` என்பது , முறைமை சுட்டி வரும் , ` மகன் ` என்னும் பொருட்டாய் வந்தது .
சிற்பி