திருவாரூர்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

குருகுபா யக்கொழுங் கரும்புக ணெரிந்தசா
றருகுபா யும்வயல் அந்தண்ஆ ரூரரைப்
பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந்
துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

குருகுகளே , நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் நெரிந்து பெருகிய சாறு , அருகாகச் சென்று பாய்கின்ற வயல்களையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை , யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும் , திசைநோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும் , நினைந்து நெஞ்சு உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்க்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` குருகு ` என்னும் அஃறிணை இயற்பெயர் பன்மை குறித்து நின்று , அண்மை விளி ஏற்றது . ` குருகு ` என விளித்தமையின் , வாளா , ` பாய ` என்றாள் . குருகு , ` பறவைப் பொது ` எனவும் , ` நீர்ப் பறவை ` எனவும் , ` அன்னம் ` எனவும் கூறுப . ` வல்லீர்களோ ` என்றது , ` அத்துணை இரங்குவீரோ ` என்றபடி .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்
அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை
மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே , பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே , அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை , யான் ஒரு ஞான்றும் மறக்க இயலாமையையும் , அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று வீழ்தலையும் , கண்கள் உறங்குதல் இல்லாமையையும் , என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

பறக்குந் தன்மையால் விரையச் செல்லவும் , பாடுந் தன்மையால் சொல்லவும் வல்லீர்கள் என்பது குறிப்பு . தன்னாலும் , தன் தோழியராலும் வளர்க்கப்படுவனவாகலின் , ` எம் கிள்ளைகாள் எம்பூவைகாள் ` என உரிமை தோன்றக் கூறினாள் . பறத்தலையும் , பாடு தலையும் ஒவ்வொன்றற்கே உரித்தாகக் கூறினாளாயினும் , இரண்டும் இரண்டற்கும் உரியனவாகக் கூறுதலே கருத்தென்க . அறத்திற்குக் கண் எனப்படும் தகுதியாவது , செல்லும் நெறியையும் , செல்லா நெறியையும் அதற்கு அறிவிக்கும் தலைமை .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
ஆளும்அம் பொற்கழல் அடிகள்ஆ ரூரர்க்கு
வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக்
கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே , அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன் போலும் திருவடிகளை யுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , யான் இவ் வுடம்பின் நீங்காது வாழுமாறும் , என்வளைகள் கழலுமாறும் , மாறாத முறையும் என்னிடத்து மாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` கவலையற்றுத் திரிகின்ற நீங்கள் என்னையும் அவ்வாறு செய்மின் ` என்பாள் , ` சூழும் ஓடிச் சுழன் றுழலும்வெண் ணாரைகாள் ` என விளித்தாள் . ` சூழ் ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் , அதனையுடைய இடத்திற்கு ஆயிற்று . அஃது எல்லா இடங்களையும் குறித்தலின் , முற்றும்மை பெற்றது . ` ஆளும் ` என்றது , இன எதுகை ; ` ஆழும் ` எனப் பாடம் ஓதினும் இழுக்காது . ` உடம்பின் நீங்காது வாழுமாறு ` என்றது , ` இறவாமை மட்டிலே உளதாக , ஏனைய எல்லா நலங்களும் போயொழிந்த ` என்றபடி ` மாறும் ` என்றதில் , மாறு முதனிலைத் தொழிற்பெயர் . மாறாத முறைமையாவது , ` சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் - தாங்காது மன்னோ பொறை ` ( குறள் - 990) என்பது . அது மாறி நிகழ்தலாவது , அச்சான் றாண்மைக்கு எல்லையாகிய திருவாரூர் இறைவர்தாமே ,` அன்பு , நாண் , ஒப்புரவு , கண்ணோட்டம் , வாய்மை ` ( குறள் - 986.) என்னும் அடிநிலைகளை அகற்றி , தம் பொருட்டு இறந்துபாடெய்தும் பெண் ணொருத்தியைக் கடைக்கணியாது வாளாவிருத்தல் . சுவாமிகள் , தம் மிடத்து இறைவர் இவ்வாறிருத்தலை , இம்முறையாற் குறித்தருளினார் என்க . முறை பிறழாதாரைப் பற்றியும் இவ்வாறு முறையிடுதல் , ஆற்றா மையுடையார்க்கு இயல்பென்க . ` எனக்கு ` என்றது . உருபு மயக்கம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

சக்கிரவா கத்திளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங் கள்செயும் அடிகள்ஆ ரூரர்க்கு
வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்
உக்கிரமில் லாமையு முணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

` சக்கிரவாகம் ` என்னும் இனத்து , இளைய பேடைகளே , சேவல்களே , முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , யான் மனம் மாறுபடாமையையும் , எனது வளைகள் நில்லாது கழலுதலையும் , அவர்மீது புலவி தோன்றாமையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` சக்கிரம் ` முதலாக நிற்பினும் , இசைகெடாதாகலின் , ` சக்ரம் ` என்றாற்போல ஆரியமாகப் பாடம் ஓதுதல் வேண்டாவென்க . பறவைப் பெயர் , சக்கிரவாகமேயன்றி , சக்கிரவாளம் அன்று . பேடைகளை முன்னே விளித்தாள் . அவை தனக்கு இரங்கும் என்னுங் கருத்தால் , சேவல்களையும் விளித்தாள் . அவை ஆரூரரது அக்கிரமங்களை எடுத்துச் சொல்லும் என்னுங் கருத்தால் . அக்கிரமங்கள் , மேற்கூறியன . மனம் மாறுதலாவது , வேறொருவரைத் தலைவராக ஏற்க நினைத்தல் . புலவாமையைக் கூறியது , தனது எளிமையைக் குறித்தற்பொருட்டு . இங்கும் , சுவாமிகள் , தம் நிலையை இவ்வாற்றாற் குறித்தருளினார் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள்
அலைகொள்சூ லப்படை யடிகள்ஆ ரூரர்க்குக்
கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும்
முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.

பொழிப்புரை :

இலைகளைக் கொண்ட சோலையிடத்து இருக்கின்ற வெள்ளிய நாரைகளே , அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப் படையையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , எனது உடை நெகிழ்கின்றதையும் , உயர்ந்த வளைகள் கழன்றொழிந்ததையும் , கொங்கைகள் பசலை அடைந்ததையும் என்பொருட்டுச் சொல்ல வல்லீர்களோ ?

குறிப்புரை :

சோலையது நிழலின்பத்தில் , எனது வருத்தத்தை நினைக்கின்றிலீர் போலும் என்பாள் ,` இலைகொள் சோலைத்தலை இருக்கும் வெண்ணாரைகாள் ` என விளித்தாள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள்
அண்டவா ணர்தொழும் அடிகள்ஆ ரூரரைக்
கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய்
உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

வண்டுகளே , மேகங்களே , நுண்ணிய மணல்மேல் இருக்கின்ற குருகுகளே , வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை ஒரு நாள் யான் கண்டவாறும் , அன்றுமுதல் காமத் தீ , கனன்று எரிந்து என் உடம்பை உண்டுவிட்ட வாறும் ஆகிய இவைகளை என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` ஒருநாள் ` என்பது , சொல்லெச்சம் . உடம்பு உளதாய் நிற்பினும் செயலற்றுக் கிடத்தலின் ,` உண்டது ` என்றாள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆனலங் கொண்டவெம் மடிகள்ஆ ரூரர்க்குப்
பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன்
ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே , வண்டுகளே , மேகங்களே , பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்து கொண்ட எம் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , பாலாகிய நற்பொருளைக் கொண்ட எனது பருத்த கொங்கைகள் பசப் பெய்தி , பொன்போலும் பசலை என் மேனியினது அழகையெல்லாம் கொள்ளை கொண்டமையை . என் பொருட்டுத் தெரிவிக்கவும் வல்லீர்களோ ?

குறிப்புரை :

` தேனையுண்ணும் விருப்பத்தை விடுத்து இது செய்தல் வேண்டும் ` என்பாள் , ` தேன் நலங் கொண்ட தேன் வண்டுகாள் ` என்றாள் . ` தேன் ` என்பதும் , வண்டுகளில் ஒரு வகை . ` தேன் வண்டு ` என்பது . உம்மைத் தொகையாய் ஒரு சொல்தன்மைப் பட்டு ஈற்றில் விளியேற்றமையின் , இவ்வாறு உரைக்கப்பட்டது . இனி ,` தேன் வண்டு ` என்பது ஒரு சொல்லாய் வாளா பெயராய் நின்றது எனினுமாம் . ` பயந்து ` என்னும் எச்சம் , எண்ணின் கண் வந்தது . ` ஊன் `, ஆகுபெயர் . சிறப்பும்மை மாற்றியுரைக்கப்பட்டது ; நின்றாங்கு நிறுத்தி , எச்சப் பொருட்டாக உரைத்தல் சிறவாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் ணாரைகாள்
அற்றமுற் றப்பகர்ந் தடிகள்ஆ ரூரர்க்குப்
பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும்
உற்றுமற் றின்மையும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே , யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு , எனது துன்பத்தை முடியச் சொல்லி , எனக்கு வேறு பற்றுக் கோடு இன்மையையும் , யான் பலராலும் அலர் தூற்றப்படுதலையும் , எனக்கு உறவாவார் வேறு இன்மையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

` சுற்று ` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் ஆகு பெயராய் , அதனையுடைய இடத்தை உணர்த்திற்று . அற்றம் - தளர்ச்சி . ` பற்று ` என்றது , என்றும் தாங்குவோரையும் , ` உறவு ` என்றது , உற்றுழி உதவுவோரையும் என்க . பாடு - பெருமை . அஃது இன்மை இழிக்கப் படுதலை உணர்த்திற்று . இவ்விடத்துள்ள மற்று , அசைநிலை . ` உற்றார் ` என்பது , ஈறு குறைந்து நின்றது .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

குரவநா றக்குயில் வண்டினம் பாடநின்
றரவமா டும்பொழில் அந்தண்ஆ ரூரரைப்
பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும்
உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

குராமரங்கள் தமது மலர்மணத்தை வீச , குயில்களும் வண்டுக் கூட்டமும் பாட , பாம்புகள் படமெடுத்து நின்று ஆடுகின்ற சோலைகளையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை யான் தொழுது தேடுகின்ற வகையையும் , துதித்துத் தேடுகின்ற வகையையும் , நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும் , என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

இதனையும் மேற்கூறிய வெண்ணாரைகளோடே கூறினாள் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள்
ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப்
பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி
ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே.

பொழிப்புரை :

நும் சேவலொடு கூடுகின்ற அன்னப் பெடைகளே , குயில்களே , வண்டுகளே , நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய திருவாரூர் இறைவரை அடையப் பெற்ற பின்பு யான் அவரைப் பாடும் முறையையும் , பணிந்து புகழும் முறையையும் , அவரொடு கூடுதலும் ஊடுதலும் செய்யும் முறையையும் இவை என்று அவருக்கு என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ ?

குறிப்புரை :

சேவலொடு கூடியுள்ள நீங்கள் இவற்றைச் சொல்ல வல்லீர்கள் என்பாள் , ` கூடும் அன்னப் பெடைகாள் ` என்றாள் . பாடுதல் , முன்னர்க் கூறினமையின் , ஏத்துதல் , உரையல் என்க . கூடுதலும் ஊடுதலும் , அடையப் பெற்ற பின்னவாகலின் , பின் நிகழ்வன பிறவற்றையுங் கூறினாள் , தனது அன்பின் நிலையை உணர்த்தற்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.

பொழிப்புரை :

அடியவராய் உள்ளவர்களே . மெய்யுணர்ந்தோர் எல்லாம் உள்ளத்தால் நிலையாக நினைந்து , வாயால் துதித்து , கையால் தொழுகின்ற தந்தையாரும் , அழகிய பொன்போலும் திருவடிகளை யுடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை , அவரையே எப்பொழுதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழையுடையவனும் , சிங்கடிக்குத் தந்தையும் , உண்மையான திருத்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாடுமின் .

குறிப்புரை :

` பாடினால் , அவன் எய்திய பயனை நீவிரும் எய்துவீர் , என்பது குறிப்பெச்சம் . நினைதற் கருவியாகிய உள்ளத்தைக் கூறிய குறிப்பால் , ஏனைய ஏத்தல் , தொழுதல்களுக்கும் உரிய கருவிகள் கொள்ளப்பட்டன , ` அத்தன் ` என்றது , பன்மை யொருமை மயக்கம் . ` வைத்த புகழ் ` என்ற பெயரெச்சத் தொடர் காரண காரியப் பொருட்டு .
சிற்பி