திருவதிகை வீரட்டானம்


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

தம்மானை யறியாத சாதியா ருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவி னுரியானைக் கரிகாட்டி லாட
லுடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தம்மான்தன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

உலகில் , தம் தலைவனை உருவறியாத இயல்புடையவரும் உளரோ ! இல்லை ; அங்ஙனமாக , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான் , தனது திருவடியை எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத , நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான் , சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும் , விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும் , யானையின் தோலைப் போர்ப்பவனும் , கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும் , விடையைக் கொடியாக உடையவனும் , எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொரு காலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

சாதி - தன்மை . ` எம்மான்றன் அடிக்கொண்டு ` என்பது பாடம் அன்மை யறிக . ` அடிக்கொண்டு ` என்றவிடத்துக் ககரவொற்று , இசையின்பம் நோக்கி வந்த விரித்தல் . ` அம்மான் தன் அடிக் கொண்டென் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற ` என்றதனால் , இகழ்ந்தமை , ` அது செய்யவந்த காலத்து ` என்பது பெறப்பட்டது . ` கொண்டு ` என மிகுத்தோதியதனால் வைத்தேவிடுதல் பெறப் பட்டது . இது , வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும் . இறுதிக்கண் நின்ற , ` யான் ` என்பதனை , ` நாயேன் ` என்றதனோடு கூட்டுக . ` போலும் ` என்னும் உரையசைச் சொல் , குறைந்து நின்றது . வருகின்ற திருப்பாடலில் உள்ள ` என்னே ` என்பது , எல்லாத் திருப் பாடல்களிலும் வந்து இயையுமாகலின் , ` என் மடமை யிருந்தவாறு ` என்பது சொல்லெச்சம் . ` இனியொருகாலும் அது வாயாதுபோலும் ` என்பது குறிப்பெச்சம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

முன்னேஎம் பெருமானை மறந்தென்கொல் மறவா
தொழிந்தென்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னேநன் மணியேவெண் முத்தேசெம் பவளக்
குன்றமே ஈசனென் றுன்னியே புகழ்வேன்
அன்னேஎன் னத்தாஎன் றமரரா லமரப்
படுவானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னேஎன் எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை யிறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

எம்பெருமான் என்னை ஆட்கொள்வதற்கு முன்னே அவனை யான் மறந்து இழந்ததென் ! மறவாதிருந்து பெற்றதென் ! ஆட்கொண்ட பின்பு மறவாத மனத்தொடு வாழ்வேனாயினேன் . அன்றியும் , ` பொன்னே ! நல்ல மாணிக்கமே ! வெண்மையான முத்தே ! செம்மையான பவள மலையே ! முதல்வனே !` என்று , அவனை நினைத்துப் பாடுவேன் . அங்ஙனமாக , ` எங்கள் தாய்போல்பவனே , தந்தை போல்பவனே ` என்று தேவர்களால் விரும்பி வழிபடப்படுபவனும் , திருவதிகை மாநகரில் வாழ்பவனும் , அலையெறிகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனும் ஆகிய என் இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிதுபொழுதினும் யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

ஆட்கொள்ளப்படுதற்கு முன்னர் நிகழ்ந்தன யாவும் , ஆட்கொள்ளப்பட்ட பின்னர்த் தொடர்பில்லா தொழிதலின் , ` முன்னே எம்பெருமானை மறந்தென்கொல் , மறவாதொழிந்தென்கொல் ` என்றார் . ` உன்னையே புகழ்வேன் ` என்பது பிழைபட்ட பாடம் . ` எறி கெடில வடவீரட்டானத்துறைவான் ` என்பது , ஒரு பெயர்த் தன்மைத் தாய் , ` என் ` என்றதனோடு இயைந்தது . திருவதிகை , தலத்தின் பெயர் ; வீரட்டானம் கோயிலின் பெயர் . ` அதிகைமாநகருள் வாழ்பவனை , வீரட்டானத் துறைவானை ` எனப் பிரித்தோதினார் , இரண்டனது சிறப்பும் உணர்த்தற்கு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

விரும்பினேற் கெனதுள்ளம் விடகிலா விதியே
விண்ணவர்தம் பெருமானே மண்ணவர்நின் றேத்துங்
கரும்பேஎன் கட்டியென் றுள்ளத்தால் உள்கிக்
காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலுஞ் சடைக்கணிந்து வளராத பிறையும்
வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை
இரும்புனல்வந் தெறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

காதல் பொருந்திய உமையவள் , உடம்பில் ஒரு கூறாய் இருத்தலின் , கங்கையாளாகிய நங்கை உருமாறி வந்த நீரையும் சடையில் அணிந்து , அதனோடு இளைய பிறையையும் , கீற்றுக்கள் பொருந்திய பாம்பையும் ஒன்றாய் உறங்கும்படி வைத்தருளிய எம் தந்தையாகிய , மிக்க நீர் வந்து மோதுகின்ற கெடில நதியின் வடகரைக் கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , ` விண்ணுலகத்தார்க்குத் தலைவனே , மண்ணுலகத்தவர் எதிர் நின்று துதிக்கும் கரும்பே , என் கட்டியே ` என்று மனத்தால் நினைந்து விரும்பிய எனக்கு , வினை என் உள்ளத்தை விட்டு நீங்காமையால் , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறுபொழுதினும் யான் அறியாது அவனை இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

` விடகிலா ` என்றதன்பின் , ` ஆக ` என்பது எஞ்சி நின்றது . ` வீடகிலா ` என்றும் பாடம் ஓதுவர் . ` உறைவானை உள்கி விரும்பினேற்கு ` எனக் கூட்டுக . ` கட்டியே ` என்றவிடத்து , ` கரும்பே ` என்றதற்கேற்ப வந்த ஏகாரம் , தொகுத்தலாயிற்று . ` மாதராளால் ` எனத் தொகுக்கப்பட்ட உருபு விரிக்கப்படுமாதலின் , அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது . ` உருமாறி ` என்பது , ஆற்றலான் வந்து இயையும் . ` வளராத ` என்றது , ` இளைய ` என்னும் பொருளது . ` உடன் துயில வைத்தருளும் ` என்றது , பகையாய அவற்றைப் பகை நீங்கி அச்சமற்று வாழ அருள்செய்தான் என்றபடி .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

நாற்றானத் தொருவனை நானாய பரனை
நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியைக்
காற்றானைத் தீயானைக் கடலானை மலையின்
தலையானைக் கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானைப் பிறையானை அம்மானை எம்மான்
தம்மானை யாவர்க்கும் அறிவரிய செங்கண்
ஏற்றானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

மும்மூர்த்திகட்கு மேலே உள்ள ஒப்பற்றவனும் , என்னில் வேறறக் கலந்து நிற்கும் முதல்வனும் , திருநள்ளாற்றில் உள்ள சிறந்தவனும் , வெள்ளாற்றில் உள்ள அறநெறியாகியவனும் , ` காற்று , தீ , கடல் ` என்னும் பொருள்களாய் உள்ளவனும் , கயிலாயத்தின் உச்சியில் இருப்பவனும் , வேகமான ` கங்கையாறு ` என்னும் வெள்ள நீரைத் தாங்கியவனும் , பிறையைச் சூடினவனும் , பெரியோனும் , என் தந்தைக்கும் தலைவனும் , யாவராலும் அறிதற்கு அரிய , சிவந்த கண்களையுடைய இடபவாகனனும் , அலையெறிகின்ற கெடிலநதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்த சிறிதுபோதினும் , யான் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாதுபோலும் !

குறிப்புரை :

` நாலாந்தானம் ` எனற்பாலது , நாற்றானம் எனப்பட்டது . ` நாதாந்தத் தேயிருப்பர் நாற்றானத் தேயிருப்பர் ` என்றது காண்க . ( திருக்களிற்றுப்படியார் -80) ` சிவபெருமான் நாலாமவனாய துரியமூர்த்தி ` என்பது வேதத்தின் துணிபு . ` நாற்றானம் ` என்றதற்கு , ` நான்கு திசை` எனவும் , ` வைப்புத் தலத்தின் பெயர் ` எனவும் உரைப் பாரும் உளர் . வெள்ளாறு , வைப்புத் தலம் . ` கங்கை ஆற்று வெள்ள நீரானை ` என மாற்றுக . ` எம்மான் தம்மான் ` என்றது , ` தம் குடி முழுதும் ஆளுடையான் ` என்றவாறு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனைக்
கூந்தல்தாழ் புனல்மங்கை குயிலன்ன மொழியாள்
சடையிடையிற் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரஉந்தி மராமரங்கள் வணக்கி
மறிகடலை இடங்கொள்வான் மலைஆரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

` முருகப்பிரானார் , அவர்க்குத் தாயாகிய மலை மகள் ` என்னும் இவர்களது அழகிய நிறத்தையும் , அன்பையும் ஏற்றுடையவனும் , திருவதிகைமாநகரில் வாழ்கின்றவனும் , தாழ்ந்த கூந்தலையும் , குயில் போலும் மொழியினையும் உடைய நீர்மகளைச் சடையிடத்திற் கொண்ட , கயல் மீனினது கூட்டங்கள் குதிகொள்ளுதலால் விளக்கமுற்றுப் பொருந்திய நீர் பெருகி வர , அதனிடத்து உயர்ந்தெழுகின்ற அலைகள் மராமரங்களை முரித்துத் தள்ளிக்கொண்டு , அலை மறிகின்ற கடலை இடமாகக் கொள்ளும்படி , மலையிடத்துள்ள சந்தன மரங்களை வாரிக் கொணர்ந்து வீசுகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிது பொழுதினும் யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

` சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையான் ` என்றது , உமையொடும் கந்தரொடும் கூடிய வடிவைக் குறித்தது . சிறுத்தொண்ட நாயனார்க்கு இறைவன் இவ்வடிவுடன் காட்சியளித்தமை , பெரிய புராணத்துட் கூறப்பட்டமை காண்க . ` புரிவும் ` என்பதும் பாடம் . ` தாழ் கூந்தல் குயிலன்ன மொழியாள் புனல் மங்கை ` என மாற்றுக . ` மங்கை ` என்பதில் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று . ` சடையிடையில் ` என்பதன்பின் எஞ்சி நின்ற , ` கொண்ட ` என்பது ` வீரட்டானத்துறைவான் ` என்பதனோடு முடிந்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்
வல்லேனக் கொம்பணிந்த மாதவனை வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்புந்
தடுமாறுஞ் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியி னுரியானை வேத
விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

மேகம்போலும் , பெருமையையுடைய கண்டத்தை யுடைய எம்பெருமானும் , வலிய பன்றியின் கொம்பை அணிந்த பெரிய தவக்கோலத்தை யுடையவனும் , தேவர்கள் தலைவனும் , யாவர்க்குந் தலைவனும் , குளிர்ந்த சந்திரனும் பாம்பும் ஒன்றை யொன்று அஞ்சி உழல்கின்ற சடையை யுடையவனும் , தாழ்வரைக்கண் திரியும் துதிக்கையை யுடைய , வெற்றி பொருந்திய , கொடிய . பெரிய , மதங்கொண்ட யானையின் தோலை உடையவனும் , வேதத்தில் சொல்லப்பட்ட நெறிமுறைகளாய் உள்ளவனும் , வெள்ளிய நீறு பூசப் பட்ட திருமேனியை உடைய எம் தலைவனும் , அலையெறிகின்ற கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யுள்ளவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலை மேல் சூட்டவந்த சிறிது போதினும் , யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

` எம்பெருமான் ` என்றவிடத்தும் தொகுக்கப்பட்ட இரண்டனுருபு விரிக்க . ` தலைமகன் ` என்றது , ` தலைவன் ` என்னும் பொருட்டாய் நின்றது . ` எம்மானை மதகரியின் ` என்பது பாடம் அன்று . ` வேத விதியாய் உள்ளவன் ` என்றது , அவற்றின் பயனைத் தருவோனாதல் பற்றி . மதியும் , பாம்பும் ஒன்றை யொன்று அஞ்சுவனவாகக் கூறுதல் , புனைந்துரை வழக்கு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
மிகஇரங்கி அருள்புரிந்து வீடுபே றாக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலுங் கண்டத்
தெண்டோள்எம் பெருமானைப் பெண்பாகம் ஒருபால்
செய்தானைச் செக்கர்வா னொளியானைத் தீவாய்
அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

கொடிதாகிய , ` வினை ` என்னுங் கடலில் வீழ்ந்து தடுமாறும் எத்துணையோ உயிர்கட்குப் பெரிதும் இரங்கித் தனது திரு வருளைக் கொடுத்து வீடுபேறாகிய நலத்தை வழங்கினவனும் , தலைக் கோலங்களை உடையவனும் , மைபோலுங் கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் உடைய எம்பெருமானும் , தனது திருமேனியின் ஒரு கூற்றைப் பெண் கூறாகச் செய்தவனும் , செவ்வானத்தின் ஒளி போல் பவனும் , தீதாகிய வாயினையுடைய பாம்பு படமெடுத்து ஆடுகின்ற சடையையுடையவனும் , மூன்று ஊர்கள் வெந்தொழியுமாறு அம்பை எய்தவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிது போதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

திருவருளாவது , ஞானம் . ` வீடுபேற்றாக்கம் ` என்பது , தொகுத்தலாயிற்று . எத்துணையோ உயிர்கட்கு அருள் புரிந்தமை , காட்சியானும் கேள்வியானும் அறியப்பட்டதென்க . ஞவிலும் , உவம உருபு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை
பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்
சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்
உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்னானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

` அழகிய யானை முகத்தையுடைய விநாயகனும் , மயிலூர்தியை உடைய முருக வேளும் ` என்னும் இவர்க்குத் தந்தையும் , ஞானசம்பந்தரால் திருநீற்றில் மூழ்கிய திருமேனியையும் , ` மேற்கு , வடக்கு , கிழக்கு ` என்னும் திசைகளில் உள்ள பிற நாடுகளின் மேற் செல்லும் மண்ணாசை யற்ற மனத்தையும் உடையவனாய்ச் சிறப் பெய்திய நெடுமாறனது முடியின்மேல் நின்ற தென்னாட்டவனும் , அந்திச் செவ்வானம் போலும் நிறத்தை உடையவனும் , தேவர் களுக்குத் தலைவனும் , யானைத் தோலைப் போர்த்தவனும் , திரு வதிகை மாநகரில் வாழ்பவனும் , எனக்கு உரியவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறிது பொழுதினும் யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

முதன்மை உறுப்பாய தலை யானையாயினமைபற்றி , விநாயகரை , ` யானை ` என்பர் . ` ஞானசம்பந்தரால் ` என்பது வரலாற்றாற் கொள்ளக்கிடந்தது . திருநீற்றைப் பெற்றபின்பு திருவருள் ஒளியில் மூழ்கினமை தோன்ற , ` திருமேனி ` என்று அருளினார் . மேனிச் சிந்தை யான் நெடுமாறன் முடிமேல் தென்னானை எனக்கூட்டுக . ஞான சம்பந்தரால் பாண்டியனை உய்வித்து , அந்நாட்டில் தான் விளங்கி நின்ற அருட்செயலை எடுத்தோதியருளியவாறு . நெடுமாறன் ஆளுடைய பிள்ளையாரது அருள்பெற்றபின்னர் , சிவபிரானது திரு வடியைத் தன்முடிமேற்கொண்டு ஒழுகினானாதலின் அப்பெருமானை , அவன் முடிமேல் நின்றவனாக அருளினார் . ` இறைவன் தன் திருவடியை நேரே வையாது , ஞானசம்பந்தர் வாயிலாகத் தன் முடி மேல் வைத்தமையைப் பாண்டியன் போற்றி நின்றான் ; யானோ , இறைவன் நேரே வந்து தன் திருவடியை என் முடிமேல் வைத்தமையை இகழ்ந்தேன் ` என நினைந்து இரங்கி , இவ்வாறருளிச் செய்தார் என்க . ` மேல் ` என்பதன்பின் , ` நின்ற ` என்றது வருவிக்க . பாண்டியன் சிவனடியை முடிக்கொண்டவனாயின பின்னர்ப் பாண்டிநாடு முழுதும் திருநீற்றொளியில் விளங்கினமை தோன்ற , ` தென்னானை ` என்றும் அருளினார் . ` தென்னவன் ` எனினும் , ` தென்னான் ` எனினும் ஒக்கும் . இப்பகுதி , ` சிவபிரான் பாண்டியநாட்டில் அரசனாய் இருந்து ஆண்டான் ` என்னும் வரலாற்றைக் குறிப்பதாகக் கொண்டு , அதற்கேற்ப உரைப்பாரும் உளர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
சிலைவளைவித் தொருகணையால் தொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதக்களிற்றி னுரியானைப் பெரிய
கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
உடையானைப் பேவுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

வில்லை வளைத்து எய்த ஓர் அம்பினாலே , பகைமை கொண்ட கொடிய அசுரர்களது ஊர்கள் மூன்றும் வெந்தொழி யுமாறு போர்த்தொழிலை மேற்கொண்ட சிவபெருமானும் , பெரிய கால்களையுடைய மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனும் , பெரிய மூன்று கண்களையும் உடையவனும் , தன்னை மதியாத அரக்கனாகிய , இருபது பெரிய தோள்களையும் , பத்துத் தலைகளையும் உடைய இராவணனது அச்சந்தரும் உருவத்தை ஊன்றிய , கயிலாய மலையின்மேல் நீங்காது இருப்பவனும் , அலை யெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை அவன் தனது திருவடியை என் முடிமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான் , அறியாது , இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

பகைவரை , ` திருந்தாதார் ` என்பவாகலின் , திருந்தாமை , பகைமை கொள்ளுதலாயிற்று . ` வளைவித்து ` என்புழி . ` எய்த ` என்பது எஞ்சி நின்றது . ` பெரியகண் ` என்றது , ` உலகிற்கு விளக்கந்தரும் கண் ` என்றவாறு . அதனைச் செய்கின்ற சுடர்கள் மூன்றென்பது அறியப்பட்டதாகலின் , ` மூன்றும் ` என முற்றும்மை பெற்றது . ` இராவணனை உருவம் ஊன்றும் ` என்றது , ` நூலைக் குற்றங் கூறினான் ` என்றாற் போல நின்றது . ` பேயுருவம் ` என்பது பாட மாயின் , ` பேயினது உருவம் போலும் உருவம் ` என்று உரைக்க . ` மலை மேல் உற இருந்தான் ` என்றது , ஒருபெயர்த் தன்மைத்தாய் , ` ஊன்றும் ` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கு மறிவரிய வத்தர்
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

பொழிப்புரை :

எலும்பையே அணிகலங்களாக அணிபவனும் , விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும் , இசைஞானிக்கு மகனும் , வளர்ந்த வலிய பனைகளையுடைய சோலைகள் சூழ்ந்த , வயல்கள் நிறைந்த திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால் , மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும் , யாவருக்கும் அறிதற்கு அரிய தேவர் பெருமானும் , திருவதிகை மாநகரில் வாழ்பவனும் , எனக்குரிய பொன்போன்றவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன்போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும் !

குறிப்புரை :

இதனையும் ஏனைய திருப்பாடல்களோடு ஒப்பவே அருளிச் செய்தாராயினும் , தம் பெயரை எடுத்தோதி , தாம் மதியாது சொன்னவற்றிற்கு இறைவன் வெகுளாது உவந்தான் என்பதனை வைத்த குறிப்பால் , மதியாது சொன்னதற்கு இரங்கி அருளிச்செய்த இத் திருப்பதிகத்தைப் பாடுவாரையும் அப்பெருமான் உவந்து அருள் செய்வான் என்று அருளினாராயிற்று . ` சொன்ன ` என்ற பெயரெச்சம் , ` அன்பன் ` என்ற செயப்படுபொருட்பெயர் கொண்டது . மதியாது சொல்லுஞ் சொல்லைச் சொல்விக்கவந்து , சொல்வித்து மகிழ்ந்தானாகலின் , ` அன்பன் ` என்றார் .
சிற்பி