திருக்கானாட்டுமுள்ளூர்


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கிஉமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

கூரிய வாயை உடைய பிறை ஒளிரும் நீண்ட சடையை உடையவனும் , ` வேதம் , வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள் , இந்திரன் , திருமால் , பிரமன் ` என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய இறைவனை , அடியேன் , தாழையரும்புகள் , வளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு , முட்களையுடைய வாயினை யுடைய இதழ்களைப் பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற , தேன் மிகுந்த சோலைகள் சூழ்ந்த , மதுவொழுகும் வாயினையுடைய கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவது போலக் காணப்படுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` என் தவப்பயன் இருந்தவாறு ` என்பது குறிப்பெச்சம் . அரிவாள் போலும் வடிவம் பற்றிப் பிறையை , ` வள் வாய பிறை ` என்று அருளினார் . ` வாள் ` என்றது குறுகி நின்றது எனினுமாம் . திருமால் கண்ணனாய் இருந்த பொழுது கொக்குருவாய் வந்த அசுரனை , அதன் வாயைக் கிழித்துக் கொன்ற வரலாற்றினைப் பாகவதத்துட் காண்க . திருமால் நீருக்குத் தலைவனாதலாலும் , மண் நீரில் தோன்றி நீரில் ஒடுங்கும் என்பர் ஆதலாலும் திருமாலை உலகத்தை உண்டு உமிழ்பவன் என்றல் வழக்கு . பொன்போலும் நிறமும் , மார்பில் முப்புரிநூலும் , நான்கு முகமும் பிரமனுக்கு உண்மை அறிக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

ஒருமேக முகிலாகி யொத்துலகந் தானாய்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளுந் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையி னானைத்
திருமேவு செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க அந்தணர்கள் ஓதுநக ரெங்கும்
கருமேதி செந்தாம ரைமேயுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

உலகிற்கு ஒருபெருந் துணையாய் உள்ள மேகமாகியும் , தம்முள் ஒத்த உலகங்கள் பலவும் தானேயாகியும் , அவற்றில் உள்ள ஊர்வனவும் , நிற்பனவுமாகிய உயிர்களும் , அவற்றின் தோற்ற ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே யாகியும் , அலையால் கரையை மோதுகின்ற கடல்களாகியும் , ஐந்து பூதங்களாகியும் அவற்றைப் படைத்து நிற்பவனும் , அறவடிவினனும் , புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருமகளும் விரும்பத்தக்க செல்வத்தை உடையவர்களது மாளிகைகளும் , முத்தீயையும் வளர்க்கின்ற மேலான தகுதியுடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகளும் உள்ள இடங்களிலெல்லாம் , கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` மேகமுகில் ` ஒருபொருட் பன்மொழி . ` ஒத்த ` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று . நகர் - மாளிகை . இதனை , ` செல்வத்தார் ` என்றதனோடும் கூட்டுக . மாளிகைகள் வயல்களின் நடுவே உள்ளன என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

வலிமை மிகுந்த மூன்று இலைகளை உடைய சூலத்தை உடையவனும் , இறைவனும் , வேதத்தை ஓதுபவனும் , எட்டுக் குணங்களை உடையவனும் , வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை மாலையோடு , வெள்ளிய சந்திரனைச் சூடிய சடையை உடையவனும் , இடபத்தை ஏறுபவனும் , ` சுயஞ்சோதி ` எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , அன்னப்பறவைகள் , அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்ற தாமரையினது ஒப்பற்ற மலர்களின்மேல் ஏறி விளையாடுகின்ற , அகன்ற நீர்த்துறையின் அருகே கரும்புகள் வளரப்பட்டு , செந்நெற்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` இரும்பு ` என்றது , அதன் தன்மையாகிய திட்பத்தைக் குறித்தது . இறைவனுக்கு உரிய எட்டுக் குணங்கள் இவை என்பதை ஆறாந் திருமுறைக் குறிப்பிற் காண்க . ` என்னும் ` என்றதனால் , ` சோதி ` என்பது , அப்பொருட்டாயிற்று . ஆகவே சிறப்புப் பெயராய் , ` ஒளி ` என்பதன் பொதுமை நீக்கிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி யனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றஎம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழல்இளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

பூளைப் பூவையும் , அழகிய கொன்றை மாலையையும் , புரித்த சடையின்கண் உடையவனும் , நீராகியும் , நெருப்பாகியும் , ஐம்பூதங்களாகியும் , ` நாளை , இன்று , நேற்று ` என்னும் நாள்களாகியும் , பரவெளியாகியும் , சூரியனாகியும் , சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள் இறைவனை , அடியேன் , பாளைகள் உளவாகின்ற , பசிய கமுகுகளினது செறிவினிடத்தே உள்ள இளமையான தென்னையினது , மிக்க மயக்கத்தை உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து இசையைப் பாட , மயில்கள் ஆடுகின்ற , உயர்ந்த சோலையையுடைய , திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

பூளைப் பூவையும் சிவபிரான் அணிதல் இத்திருப் பாடலாற் பெறப்படுகின்றது . முன்னே , ` பூதங்கள் ஐந்தாய் ` என்ற மையின் , ` ஆகாயம் ` , பரவெளியாயிற்று . இளம் பருவத்து ஆடவரைக் குறிக்கும் ` காளை ` என்பது , வண்டிற்கு உவமையாகு பெயராய் வந்தது . அதனானே , அது அஃறிணை இயற்பெயராய்ப் பன்மைப் பொருளும் தருவதாயிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

செருக்குவாய்ப் பைங்கண்வெள் ளரவரையி னானைத்
தேவர்கள்சூ ளாமணியைச் செங்கண்விடை யானை
முருக்குவாய் மலரொக்குந் திருமேனி யானை
முன்னிலையாய் முழுதுலக மாயபெரு மானை
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
வேள்வியிருந் திருநிதியம் வழங்குநக ரெங்கும்
கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

சீறுகின்ற வாயினையும் , பசிய கண்களையும் உடைய , வெள்ளிய பாம்பினை அரையிற் கட்டியவனும் , தேவர்கள் முடியிற் பதிக்கும் மணிபோன்றவனும் , சிவந்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையவனும் , முருக்கமரத்தின்கண் பொருந்தியுள்ள மலர்போலும் திருமேனியை உடையவனும் , எல்லாவற்றிற்கும் சான்றாய் நிற்பவனும் , உலகமுழுதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை , அடியேன் , எழுவகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள் வேள்வி வேட்டிருத்தலால் , அவர்கட்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் எல்லாம் , கருக்குவாயினையுடைய பனைமரங்களும் , தென்னை மரங்களும் நிறைந்த சோலைகளை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

செருக்குறுதலாகிய செருக்குதல் என்பது , வெகுளுதலைக் குறித்து , அதன் காரியமாகிய சீறுதலைக் குறித்தது . பெரும் பாம்புகளின் வயிறு வெண்மையுடையதாதலின் , ` வெள்ளரவு ` என்றார் . ` முன்னிலை ` என்பது இப்பொருட்டாதலை , ` யார்க்கும் முனமொரு தெய்வம் எங்குஞ் செயற்கு முன்னிலையா மன்றே ` என்ற சிவஞான சித்தி ( சூ -2.24) யாலும் அறிக . ` எங்கும் ` என்பது பெயர்த்தன்மைத்தாதலின் , ` உள் பொருள் ` என்றாற்போல , ` உள் எங்கும் ` என்றார் . தேவர்களும் வந்து சூழ்தலின் , எழுபிறப்பும் உள வாயின . ` இரு பிறப்புள் ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்க ளுந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

எருதினை எழுதிய ஒலிக்குங் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும் , நீரில் துயில்கின்ற திருமாலும் , வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும் , அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய , ` சங்கரன் ` என்னும் காரணப் பெயரை உடையவனும் , மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும் , மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடநதியின் கரைமேல் உள்ள , கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன் . இஃது என் தவப்பயன் இருந்தவாறு .

குறிப்புரை :

கொடி காற்றினால் ஒலிப்பது என்க . ` காண ` என்னும் செயவெனெச்சம் , தொழிற் பெயர்ப் பொருள் தந்தது . ` ஆய ` என்னும் பெயரெச்சம் , ` சங்கரன் ` என்னும் பிறபெயர் கொண்டது ; இஃது ஏதுப் பெயராம் . ` மடத்தையலார்கள் ` எனப்பிரித்துக் கூட்டுக . ` கோதைக் குழல் ` எனக் கூட்டப்படும் . ` கடைகள் ` என அஃறிணையாகக் கூறியது பான்மை வழக்கு .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும்
அமரர்கள்தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க்
கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் [ கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

அரிய மணியாகிய மாணிக்கம் போல்பவனும் , முத்துப்போல்பவனும் , ஆனைந்தினை ஆடுகின்ற தேவர் பெருமானும் , அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும் , அழகிய பிற மணிகள் போல்பவனும் , இனிய கரும்பினின்றும் வடிதலையுடைய மிக்க சாறுபோல்பவனும் , அறிதற்கரிய மணியாகிய சிந்தாமணி போல்பவனும் , மாற்று விளங்குகின்ற செம்பொன் போல்பவனும் ஆகிய இறைவனை , அடியேன் முன்னே , நிறம் பொருந்திய மணிகளைக் கொழித்து மலையினின்றும் பாய்ந்து , பின்பு நிலத்தில் சுழித்துக் கொண்டு ஓடுகின்ற , அலைகளுக்கிடையில் , வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர் மூழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள , நீலோற்பல மலர்கள் நீலமணிபோல மலர்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

ஆனஞ்சு - பஞ்சகௌவியம் ; இவை இன்ன என்பதனை , ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

இழைதழுவு வெண்ணூலும் மேவுதிரு மார்பின்
ஈசன்தன் எண்டோள்கள் வீசிஎரி யாடக்
குழைதழுவு திருக்காதிற் கோளரவ மசைத்துக்
கோவணங்கொள் குழகனைக் குளிர்சடையி னானைத்
தழைதழுவு தண்ணிறத்த செந்நெலத னயலே
தடந்தரள மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே
கழைதழுவித் தேன்தொடுக்குங் கழனிசூழ் பழனக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

பாம்பாகிய அணிகலமும் , அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினை யுடைய கடவுளும் , தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு , குழைபொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு , உடையைக் கோவணமாக உடுத்த அழகனும் , கங்கை நீராற் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , தழைத்தலை யுடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில் , பெரிய முத்துக்களை யுடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக் கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப் பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` இழை `, ` ஈசன் ` என்றவிடத்தும் , எண்ணும்மை விரிக்க . தண்மை , இங்குப் பசுமை மேற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

குனியினிய கதிர்மதியஞ் சூடுசடை யானைக்
குண்டலஞ்சேர் காதவனை வண்டினங்கள் பாடப்
பனியுதிருஞ் சடையானைப் பால்வெண்ணீற் றானைப்
பலஉருவுந் தன்னுருவே யாயபெரு மானைத்
துனியினிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
தூநீலங் கண்வளருஞ் சூழ்கிடங்கி னருகே
கனியினிய கதலிவனந் தழுவுபொழிற் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

வளைந்த இனிய ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும் , வண்டுக் கூட்டங்கள் பாட , நீர்த்துளிகள் சிந்துகின்றதுமாகிய சடையினையும் , குண்டலம் பொருந்திய காதினையும் உடையவனும் , பால்போலும் வெள்ளிய நீற்றை அணிந்தவனும் , எல்லா உருவங்களும் தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை , அடியேன் , தூய நீலோற்பலங்கள் , ஊடலிலும் இனியன வாயும் தூயனவாயும் தோன்றும் மொழிகளையும் , கொவ்வைக் கனிபோலும் வாயினையும் உடைய அழகிய பெண்கள்போலக் கண் வளர்கின்ற , நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள , பழங்களைப் பழுத்த , இனிய வாழைத் தோட்டங்களைப் பொருந்தியுள்ள சோலைகளை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` குனிவினிய , துனிவினிய , கனிவினிய ` எனப்பாடம் ஓதுவர் , பலவுருவும் தன்னுருவேயாதல் , ` எல்லாம் சிவன் ` என்ன நிற்றல் . ` துனியினிய தூய மொழித் தொண்டைவாய் நல்லார் ` என்றதனை , ` ஊடினும் இனிய கூறும் ` ( பதிற்று -16) என்பதனால் அறிக . ` நல்லாரையுடைய சோலை ` என்று இயைத்தலுமாம் . ` பொழிற் சோலை ` ஒருபொருட் பன்மொழி .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

தேவியம்பொன் மலைக்கோமான் றன்பாவை யாகத்
தனதுருவம் ஒருபாகஞ் சேர்த்துவித்த பெருமான்
மேவியவெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேதமுத லானைத்
தூவியவாய் நாரையொடு குருகுபாய்ந் தார்ப்பத்
துறைக்கெண்டை மிளிர்ந்துகயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய் வண்டுபல பண்செய்யுங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

பொழிப்புரை :

அழகிய பொன்மலைக்கு அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க , அவளைத் தனது திருமேனியில் ஒருபாகமாகச் சேர்ந்திருக்கும்படி வைத்த பெருமானும் , பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில் வீழாதபடி நமக்கு மெய்ந்நெறியைக் காட்டுகின்ற , வேதத்தால் துணியப்பட்ட முதற்கடவுளும் ஆகிய இறைவனை , சிறகுகள் வாய்ந்த நாரைகளும் , குருகுகளும் பறந்து ஒலிக்க , நீர்த்துறைகளில் கெண்டை பிறழ , பிற மீன்கள் துள்ளி விளையாட , குவளைப்பூவின் கண் வண்டுகள் பலவகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !

குறிப்புரை :

` தூவியவாய ` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று . ` கயல் ` என்றது , ` மீன் ` என்னும் அளவாய் நின்றது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞால மாண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

பொழிப்புரை :

புகழ்மிகுந்த , மதம் பொருந்திய யானையை யுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , அலையால் நிறைந்த கடல்சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும் , செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை , கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி , வணங்கப்பெற்ற அவ் வுரிமையினால் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நில வுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய் , பின்புசென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர் .

குறிப்புரை :

அரசத்திருவும் உடையவராகலின் , ` மதயானை ஆரூரன் ` என்று அருளினார் . வரையினார் வகை , பலப்பல நாடுகள் , ` தலைவராய் ` என்றதனை , ` ஆண்டவர்க்கும் ` என்பதனோடுங் கூட்டுக . ` அவர்தாம் ` என்பன அசைநிலைகள் .
சிற்பி