பொது


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

முடிப்பது கங்கையுந் திங்களுஞ்
செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெ
ழக்கணை நூறினார்
கடிப்பதும் ஏறுமென் றஞ்சு
வன்திருக் கைகளால்
பிடிப்பது பாம்பன்றி இல்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமான் தலையிற் சூடுவது கங்கையையும் சந்திரனையும் , அழித்தது மூன்று மதில்களை , அவற்றைக் கை நொடிக்கும் அளவில் சாம்பலாய்த் தோன்றுமாறு அம்பினால் அழித்தார் . தனது வலிய திருக்கைகளால் பிடிப்பது பாம்பு . அது கடித்தவுடன் , நஞ்சு தலைக்கேறும் என்று யான் எப்பொழுதும் அஞ்சுவேன் ; இவை தவிர எம்பெருமானுக்கு வேறு பொருள்கள் இல்லையோ !

குறிப்புரை :

` உளதாகவும் , ஏன் இவ்வாறு செய்கின்றான் ?` என நினைந்தவாறாம் . ` தனக்கென ஒன்றையும் வேண்டுதலும் முயலுதலும் இல்லாதவனாகலின் , அவனது செய்கைகளுக்குக் காரணம் இதுவென நாம் எங்ஙனம் வரையறுத்துக் கூறுதல்கூடும் ` என்றபடி . ` முடிப்பது , செற்றது ` என்பன இங்கு அவ்வத்தொழில் மேல் நின்றன . ` கணையால் ` நூறினார் என்க . ` கடிப்பதும் ` உம்மீற்று வினையெச்சம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

தூறன்றி யாடரங் கில்லை
யோசுட லைப்பொடி
நீறன்றிச் சாந்தமற் றில்லை
யோஇம வான்மகள்
கூறன்றிக் கூறாவ தில்லை
யோகொல்லைச்சில்லைவெள்
ளேறன்றி யேறுவ தில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமானுக்கு , ஆடுகின்ற அரங்கு , காடன்றி வேறு இல்லையோ ! சாந்து , சுடலைப்பொடியாகிய சாம்பலன்றி வேறு இல்லையோ ! தனது திருமேனியில் ஒரு கூறாய் நிற்பது மலையரையன் மகளது கூறன்றி வேறு இல்லையோ ! ஏறுவது , முல்லை நிலத்தில் உள்ள சிறுமையுடைய வெள்ளை எருதன்றி வேறு இல்லையோ !

குறிப்புரை :

காட்டினை , ` தூறு ` என்று அருளினார் . சாம்பல்தான் பல விடத்துண்மையின் , ` சுடலைப்பொடியாகிய நீறு ` என்றார் . பெண்ணொரு கூறாதல் பெருமை தாராமையின் , வேறு கூறு இல்லையோ என்றார் . ` கூறுவது ` என்பது பாடம் அன்று . சிறுமை யாவது , யானை முதலியனபோலப் பெருமையுடைய தாகாமை .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

தட்டெனுந் தட்டெனுந் தொண்டர்
காள்தடு மாற்றத்தை
ஒட்டெனும் ஒட்டெனு மாநி
லத்துயிர் கோறலைச்
சிட்டன் திரிபுரஞ் சுட்ட
தேவர்கள் தேவனை
வெட்டெனப் பேசன்மின் தொண்டர்
காள்எம் பிரானையே.

பொழிப்புரை :

மன அலைவையும் , எல்லாப் பொருட்கும் நிலைக் களமாகிய பெரிய நிலத்தின்கண் உள்ள உயிர்களைக் கொல்லுதலையும் நன்னெறிக்குத் தடை என்று உணர்ந்த அடியவர்களே , மேலானவனும் , திரிபுரத்தை எரித்த தேவதேவனும் ஆகிய எம்பெருமானை , வெறுத்துப் பேசன்மின் .

குறிப்புரை :

` பேசின் , கெடுவீர் ` என்பது குறிப்பெச்சம் . இதுவும் , அவன் தன்மை வரையறுக்கப்படாதென்றதேயாம் . தட்டு - தடை . ஒட்டு - சார்பு . அடுக்குக்கள் , வலியுறுத்தற் பொருள் . ` தடுமாற்றத்தை , கோறலை ` என்ற இரண்டனுருபுகளை ` தட்டேனும் ` என்பதற்கு முன்னர் வைத்து உரைக்க . ` தொண்டர் காள் ` என்பவற்றையும் அடுக்காக்கி அதனை விரைவுப் பொருட்டென்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

நரிதலை கவ்வநின் றோரி
கூப்பிட நள்ளிருள்
எரிதலைப் பேய்புடை சூழ
வாரிருட் காட்டிடைச்
சிரிதலைமாலை சடைக்க
ணிந்தஎஞ் செல்வனைப்
பிரிதலைப் பேசன்மின் தொண்டர்
காள்எம் பிரானையே.

பொழிப்புரை :

அடியவர்களே , நரிகள் , இறந்தோரது தலைகளைக் கௌவி இழுக்க , ஓரிகள் கூக்குரலிட , செறிந்த இருட்காலத்தில் , நெருப்பு எரிகின்ற இடத்தில் , பேய்கள் புடைசூழ்ந்திருக்க அரிய இருளையுடைய காட்டில் , சிரிப்பதுபோலும் தலைமாலையைச் சடையின்கண் அணிந்த எம் செல்வனாகிய எம்பெருமானை , விட்டு நீங்குதற்குரிய சொற்களைப் பேசன்மின் !

குறிப்புரை :

` எரிதலை ` என்றதில் , தலை , இடம் . அன்றி , ` நெருப்பு எரிவதுபோலும் தலையை உடைய பேய்கள் ` என்று உரைத்தலுமாம் . ` நரிதலை கௌவ என்பது முதலாக இவ்வாறு எடுத்துச் சொல்லி இகழன்மின் ` என்றவாறு . இவையே அவனது உண்மைநிலையன்று என்றபடி .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

வேயன தோளி மலைம
களைவி ரும்பிய
மாயமில் மாமலை நாட
னாகிய மாண்பனை
ஆயன சொல்லிநின் றார்கள்
அல்ல லறுக்கினும்
பேயனே பித்தனே என்ப
ரால்எம் பிரானையே.

பொழிப்புரை :

மூங்கில்போலும் தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற , வஞ்சனை இல்லாத , பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை , தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும் , அவனைச் சிலர் ` அவன் பேயோடாடுபவன் ; பித்துக் கொண்டவன் ` என்று இகழ்வர் ; எம்பெருமான் , அவர் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என் !

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம் . மாயமில்லாதவன் என்றது அவனது பேரருளைக் குறித்தவாறு . ` மாமலை ` எனப் பட்டது , கயிலை . ` நாடு ` என்றது ` இடம் ` என்னும் பொருளது . ` பேயனே , பித்தனே ` என்னும் ஏகாரங்கள் தேற்றம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

இறைவ னென்றெம் பெருமானை
வானவர் ஏத்தப்போய்த்
துறையொன் றித்தூ மலரிட்
டடியிணை போற்றுவார்
மறையன்றிப் பாடுவ தில்லை
யோமல்கு வானிளம்
பிறையன்றிச் சூடுவ தில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச்சென்று , நன்னெறியிற் பொருந்தி , தூய மலர்களைச் சொரிந்து அவன் அடியிணையைப் போற்றுவர் ; அங்ஙனமாக , அவனுக்கு , பாடும்பாட்டு , மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ ! சூடும் கண்ணி , வானத்திற்செல்லும் இளம்பிறையன்றி , வேறு ஒன்றும் இல்லையோ !

குறிப்புரை :

` மறை ` என்றது , ` ஒருவருக்கும் விளங்காதன ` என்னும் பொருளதாய் , சிறப்பின்மை தோற்றுவித்தது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

தாருந்தண் கொன்றையுங் கூவி
ளந்தனி மத்தமும்
ஆரும் அளவறி யாத
ஆதியும் அந்தமும்
ஊரும்ஒன் றில்லை உலகெ
லாம்உகப் பார்தொழப்
பேரும்ஓ ராயிர மென்ப
ரால்எம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமானுக்கு , மாலையும் , ` தண்ணிய கொன்றைப் பூ , கூவிளையிலை , மிகத் தாழ்ந்த ஊமத்தம்பூ ` என்பன . அளவும் , யாராலும் அறியப்படாத முதலும் , முடிவும் ; அன்பு செய்பவர் சென்று தொழுதற்கு ஊரும் ஒன்றாய் இல்லை ; உலகம் முழுதுமாம் . சொல்வதற்குப் பேரும் ஒன்றல்ல ; ஓர் ஆயிரம் என்று சொல்லி யாவரும் நகைப்பர் ; அவன் இவ்வாறிருத்தல் என்னோ !

குறிப்புரை :

ஆதியும் , அந்தமும் அறியப்படாமை முதலியன அவன் அணுகலாகாது நிற்றலைக் குறிப்பனவாய் , நகுதற்கு ஏதுவாயின .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

அரியொடு பூமிசை யானும்
ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி
திங்களும் மத்தமும்
புரிதரு புன்சடை வைத்த
எம்புனி தற்கினி
எரியன்றி அங்கைக்கொன் றில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

கீற்றுக்களையுடைய பாம்போடு , ` வன்னி , ஊமத்தை , பிறை ` என்பவைகளை , புரித்த புல்லிய சடையில் வைத்துள்ள எம் புனிதனாகிய எம்பெருமானை , திருமாலும் , பூமேல் இருப்பவனாகிய பிரமனும் அடியும் முடியும் அறியமாட்டார் ; பிறர் ஆர் அறிவார் ! அங்கையில் ஏந்துவதற்கு நெருப்பன்றி அவனுக்கு வேறு இல்லையோ !

குறிப்புரை :

` இவனை அணுகுவார் யார் ` என்றபடி . ஆதி - அடி . ` முடியும் ` என்பது எஞ்சி நின்றது . ` இனி ` என்றது , ` மற்று ` என்னும் பொருள்பட நின்றது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

கரிய மனச்சமண் காடி
யாடு கழுக்களால்
எரிய வசவுணுந் தன்மை
யோஇம வான்மகள்
பெரிய மனந்தடு மாற
வேண்டிப்பெம் மான்மதக்
கரியின் உரியல்ல தில்லை
யோஎம் பிரானுக்கே.

பொழிப்புரை :

எம் பெருமானுக்கு கரிய மனத்தையுடைய , கஞ்சியைக் குடிக்கின்ற , கழுமரங்கள் போலத் தோன்றுகின்ற சமணர்களால் , மனம் எரிந்து இகழப்படுதல்தான் இயல்போ ! மலையரையன் மகளாகிய தன் தேவியின் பெருமை பொருந்திய மனம் கலங்க வேண்டி , அவன் மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலல்லது போர்வை வேறு இல்லையோ !

குறிப்புரை :

`` எரிய ` என்னும் எச்சம் , காரணப்பொருட்டு . ` வசை யுணும் ` என்பது , ` வசவுணும் ` என மருவிற்று ; ` வசையுணும் ` என்பதே பாடம் எனினுமாம் . ` தன்மையோ ` என்பதன் முன் , மற்றொரு , ` தன்மை ` என்பது வருவிக்க . ` வசவுணல் ` எனப் பாடம் ஓதினுமாம் . பெரிய மனம் , அருள் மிகுந்த மனம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

காய்சின மால்விடை மாணிக்
கத்தெங் கறைக்கண்டத்
தீசனை ஊரன் எட்டோ
டிரண்டு விரும்பிய
ஆயின சீர்ப்பகை ஞானியப்
பனடித் தொண்டன்றான்
ஏசின பேசுமின் தொண்டர்
காள்எம் பிரானையே.

பொழிப்புரை :

அடியவர்களே , காய்கின்ற சினத்தையுடைய , பெரிய விடையை ஏறுகின்ற எங்கள் மாணிக்கம் போல்பவனும் , கறுப்புநிறத்தையுடைய கண்டத்தையுடைய இறைவனும் ஆகிய பெருமானை , அவன் அடித்தொண்டனும் , மிக்க புகழையுடைய வனப்பகைக்கு ஞானத்தந்தையும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடியனவும் , ஏசிப் பாடியனவும் ஆகிய இப்பத்துப் பாடல்களால் , எம் பெருமானைப் பாடுமின் .

குறிப்புரை :

` பயன் பெறுவீர் ` என்பது குறிப்பெச்சம் . ` காய் சினம் ` என்றது இன அடை . ஞானி - ஞானமுறையினன் . ` ஞானவப்பன் ` எனப் பாடம் ஓதுதலுமாம் . ` ஞானத்தந்தை ` என்றது , வனப் பகையைத் தம் மகளாகவும் , தம்மை அவள் தந்தையாகவும் கருதி நிற்றல்பற்றி .
சிற்பி