திருவாமாத்தூர்


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

காண்டனன் காண்டனன் காரிகை
யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்
தூர்எம் மடிகட்காட்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று
சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்
தல்லா தவர்கட்கே.

பொழிப்புரை :

அடியேன் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனை , உமையம்மைக்குக் கணவனாகக் கண்டேன் ; அவனுக்கு அடிமை பூண்டேன் ; அடிமையைப் பலகாலும் செய்தேன் ; இவை பொய்யல்ல ; இன்னும் சொல்லுவேன் ; கேண்மின் ; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை நீங்கினேன் .

குறிப்புரை :

` கண்டனன் ` என்பது , நீட்டலாயிற்று . கருத்தன் - தலைவன் . ஆளுதல் - பயன் படுத்துதல் . வித்து - அறிந்தோர் ; அது , வேதப்பொருளை மேலானதாக உணர்ந்து போற்றுவோரைக் குறித்தது . ` அல்லாதவர்கட்கு ` என்பது , உருபு மயக்கம் . இவை , அடியவர் முன்னர்க் கூறியனவாகும் . இத்திருப்பாடலிலும் வருகின்ற திருப் பாடல்களிலும் , வலியுறுத்தற் பொருட்டுப் பலவற்றையும் அடுக்கிக் கூறி யருளினார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

பாடுவன் பாடுவன் பார்ப்பதி
தன்னடி பற்றிநான்
தேடுவன் தேடுவன் திண்ணெனப்
பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளைக்
கூடுவன் கூடுவன் குற்றம
தற்றென் குறிப்பொடே.

பொழிப்புரை :

யான் , இவ்வுலகிற்குத் தலைவனாகிய , திரு வாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை , அவனது திரு வடியைக் கருதிப் பாடுவேன் ; உறுதியாகப் பற்றி அணைத்தற்குத் தேடுவேன் ; தேடிக்கண்டு , என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக் கூடுவேன் ; கூடிய களிப்பினால் ஆடுவேன் .

குறிப்புரை :

` பார்ப் பதி ` என்றதை , ` பாருக்குப் பதி ` என்க . ` பார்வதி ` என்றுரைத்தற்கு ஏலாமை யறிக . இறுதிக்கண் வைக்கற் பாலதாய , ` ஆடுவன் ` என்பதை , செய்யுள் நோக்கி இடைவைத்தார் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ
லாலன்று காமனைப்
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி
னாலன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்
தூர்எம் மடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி
ராட்டியைப் பாகமே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் , அன்று காமனைத் தனது நெற்றிக்கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன் ; அன்று , கூற்றுவன்மேற் காலாற் பாய்ந்து அவனை அழித்தவன் ; எல்லாவற்றையும் நன்குணர்ந்தவன் ; எம்பெரு மாட்டியை ஒருபாகத்தில் ஆரப்பொருந்தியவன் .

குறிப்புரை :

ஆய்ந்தவன் , ` நுணுகியவன் ` எனலுமாம் . ` ஆர ` என்பதன் , அகரந் தொகுத்தலாயிற்று . ` அடிகளார் ` என்றே உரைப்பின் , ` காய்ந்தவன் ` முதலியவற்றோடு இயையாமை அறிக . ` பாய்ந்தவன் பாரத்தினால் ` என்பதும் பாடம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்
ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று
திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி
மென்றோள் தடமுலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்
தூர்ஐயன் அருளதே.

பொழிப்புரை :

யான் , என் உள்ளத்துள்ளே நிலை பெற்றுள்ள ஒளி யுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன் ; அவ்வறிவின் வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன் ; இனி , வெளியே , திருவொற்றியூரிற் புகுந்து , ` சங்கிலி ` என்பாளது மெல்லிய தோளையும் , பெரிய தனங் களையும் பொருந்தினேன் ; இவ்விருவாற்றானும் , இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன் ; இது , திருவாமாத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனது திருவருள் .

குறிப்புரை :

` உள்ளத்துள்ளே ` என்றதனால் , ` வெளியே ` என்பது பெறப்பட்டது . ` உள்ளத்துள்ளே நின்ற ஒண்பொருள் ` என வேறு போல அருளினார் , பிறர் மதம் பற்றி அருளுகின்றாராதலின் , ` ஆமாத்தூர் ஐயன் அருளைப்பெறும் பாக்கியம் இல்லாதார் , இருதலைப் போகமும் இழப்பர் ( தி .1 ப .116 பா .10); அதனைப்பெற்ற எம் போல்வாராயின் , அவற்றை ஒருங்கே பெற்றுக்களிப்பர் ` என்று அருளிச்செய்தவாறு . ` அது ` பகுதிப்பொருள் விகுதி . சிறிதுணர்ந்து , ஐயுறுவாரைத் தேற்றுவாராகாது , சிறிதும் உணராதாரை உணர்த்து கின்றாராதலின் , ஏகாரம் , தேற்றம் அன்று ; ஈற்றசை .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

வென்றவன் வென்றவன் வேள்வியில்
விண்ணவர் தங்களைச்
சென்றவன் சென்றவன் சில்பலிக்
கென்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி
நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன் அன்றவன் செய்யருள்
ஆமாத்தூர் ஐயனே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற தலைவன் , தக்கன் வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன் ; சிலவாகிய பிச்சைக்கென்று தெருவிற் சென்றவன் ; நீதியிற் சிறிதும் குறையாதவரிடத்தில் நிலைபெற்று நின்றவன் ; தன்னை அடைந்தார்க்கு அருள்செய்தல் , அடைந்த அன்றேயாகின்றவன் .

குறிப்புரை :

` செய் அருள் ` என்றதனை , ` அருள்செய் ` என மாற்றி யுரைக்க . ` செய் ` முதனிலைத் தொழிற்பெயர் . அன்று , அம்மை - வரும் பிறப்பு என்று உரைத்தல் . ஈண்டைக்கு ஏலாமையறிக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

காண்டவன் காண்டவன் காண்டற்
கரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன்
நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்
தூரையும் எனையுமாட்
பூண்டவன் பூண்டவன் மார்பிற்
புரிநூல் புரளவே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன் , தன் அடியவர்கட்கு எளிதில் காணப்பட்டவன் ; திருமாலும் பிரமனும் தேட , அவர்களால் காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன் ; ஆமாத்தூரையும் ஆண்டவன் ; என்னையும் ஆளாக வைத்து ஆண்டவன் ; மார்பில் முப்புரி நூலைப் புரளப் பூண்டவன் .

குறிப்புரை :

` ஆமாத்தூர் ஐயன் ` என்பதை , மேலைத் திருப் பாடலினின்றும் வருவிக்க . ` ஆண்டவன் ஆண்டவன் ` என்பதை , ` என்னையும் ஆள் ` என்றதனோடுங் கூட்டுக .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

எண்ணவன் எண்ணவன் ஏழுல
கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டும்என்
பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியொர்
பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் , ஏழுலகத்திலும் உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன் ; தன்னை , ` காண்போம் ` என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக் கண்ணாய் உள்ளவன் ; திருமேனி ஒரு பாகம் பெண்ணாகியவன் ; பொருந்திய தலைக்கோலத்தை உடையவன் ; அடையத் தக்கவன் .

குறிப்புரை :

` கருத்தாய் உள்ளவன் ` என்றது , அறிவை உண்டாக்கு தலையும் , ` கண்ணாய் உள்ளவன் ` என்றது , அவ்வறிவிற்குப் பொருள்களைப் புலப்படுத்துதலையும் குறித்தன . ` தங்கள் ` இரண்டும் , சாரியை . ` அவர் ` பகுதிப்பொருள் விகுதி . ` ஏழுலகத்துயிர் தங்கட்கும் ` என்னும் முற்றும்மை , தொகுத்தலாயிற்று .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந்
தென்னைப்போ கவிடா
மின்னவன் மின்னவன் வேதத்தி
னுட்பொரு ளாகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர்
ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என்மனத்
தின்புற் றிருப்பனே.

பொழிப்புரை :

திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன் , அடியார்களுக்குப் பொன்போல்பவனாய் உள்ளவன் ; பொன்னைக் கொடுத்து என்னைத் தன்னினின்றும் நீங்கவொட்டாது பிணித்துக் கொண்ட ஒளிவடிவினன் ; வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத் தன்மையை உடையவன் ; எனக்கு உரிமையுடையவன் ; அவனை , யான் என்மனத்தில் அன்பால் நினைந்து இன்பமுற்றிருப்பேன் ;

குறிப்புரை :

` மின் ` என்றது , அதன் ஒளியைக் குறித்தது . ` ஆர்வத்தால் ` என்புழி , ` நினைந்து ` என்பது வருவிக்க . ` அன்பினால் இன்பம் ஆர்வார் ` என்ற சேக்கிழார் திருமொழியை ( தி .12 தடுத் . புரா .196) இங்கு நினைவு கூர்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

தேடுவன் தேடுவன் செம்மலர்ப்
பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேயொர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.

பொழிப்புரை :

யான் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன் ; அவனை , உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன் ; வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன் ; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன் .

குறிப்புரை :

` நாபிக்குமேலே ஓர் நால்விரலில் நாடுவன் ` என்றது , அகப்பூசையைக் குறித்தவாறு . ` காயமே கோயிலாக ` என்னும் திரு நேரிசையுள் ( தி .4 ப .76 பா .4) திருநாவுக்கரசு சுவாமிகளும் , அகப் பூசையைக் குறித்தருளினார் . ` மாட்டுவன் ` என்பது , எதுகைநோக்கி , இடைக் குறைந்து நின்றது . வெளியிலே உள்ள இறைவன் சத்தியை வாங்கிக் கையை முட்டியாகப் பிடித்து இருதயத்துள் சேர்த்தல் வழி பாட்டு முறை ; இவ்வாறு பிடிக்குங் கையை , ` சங்கார முத்திரை ` என்ப .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

உற்றனன் உற்றவர் தம்மை
ஒழிந்துள்ளத் துள்பொருள்
பற்றினன் பற்றினன் பங்கயச்
சேவடிக் கேசெல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர்மேயான்
அடி யார்கட்காள்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும்
பெயர்த்தும்பிற வாமைக்கே.

பொழிப்புரை :

யான் , மீட்டும் மீட்டும் பிறவாமைப் பொருட்டு , உற்றாரை நீங்கி , உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன் ; திரு வாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனது , தாமரை மலர் போலும் செவ்விய திருவடியிடத்தே செல்ல அவற்றைத் துணையாகப் பற்றினேன் ; அதனால் துன்பங்கள் நீங்கப்பெற்றேன் ; அதன்பின் , அவன் அடியவர்க்கு அடியனாகும் பேற்றையும் பெற்றேன் .

குறிப்புரை :

` உள்ளத்து உள்பொருள் ` என வேறொன்று போல அருளியது , பொதுமையில் உற்றமையை உணர்த்தற்கு . அறுதலுக்கு , ` துன்பம் ` என்னும் வினைமுதல் வருவிக்க . ` சேவடிக்கு ` என்றதனை உருபு மயக்கமாக்கி , ` செல்லல் அற்றனன் ` எனப் பாடம் ஓதுதலுமாம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 11

ஐயனை அத்தனை ஆளுடை
ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு
ளான விமலனை
மையனை மையணி கண்டனை
வன்றொண்ட னூரன்சொல்
பொய்யொன்று மின்றிப் புலம்புவார்
பொற்கழல் சேர்வரே.

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனும் , தந்தையும் , என்றும் உள்ளவனும் , மெய்ம்மையான உள்ளம் உடையவர்க்கு அநுபவப் பொருளாய் விளங்குகின்ற தூயவனும் , திருவருள் மேகமானவனும் , மைபோலும் அழகிய கண்டத்தை உடையவனும் ஆகிய திருவாமாத் தூரை ஆளுதலுடைய இறைவனை , வன்றொண்டனாகிய நம்பி யாரூரன் பாடிய பாடல்களை , வஞ்சனை சிறிதும் இன்றிப் பாடு கின்றவர் , அப்பெருமானது பொன்போலும் திருவடிகளை அடைவர் .

குறிப்புரை :

`சொல்` என்றது முதனிலைத் தொழிற்பெயராய் நின்று இரண்டனுருபுகளை முடித்து, ஆகுபெயராய், சொல்லப்பட்ட பாடலை உணர்த்திற்று. `முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா மின்சொலினதே யறம்` என்னும் திருக்குறளில் (93), `நோக்கி` என்ற வினை யெச்சம், `இன்சொல்` என்றதனோடு முடிந்தவாறறிக. ஒலித்தலை, `புலம்பல்` என்றல், பான்மை வழக்கு. இனி, `அன்பினால் அழுது பாடுவார்` என்று உரைத்தலுமாம்.
சிற்பி