பொது


பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 1

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே
கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே
கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட் டூரானே
மாட்டூ ரறவா மறவா துன்னைப்
பாடப் பணியாயே.

பொழிப்புரை :

காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும் , மலையும் , தளிரும் , கொல்லுந் தன்மையுடைய சிங்க ஏறும் போல்பவனே , பாட்டினை மிகவுணர்ந்தவர் பலராலும் , அப் பாட்டுக்களால் பரவப்படுபவனே , எருதை ஊர்கின்ற அறமுதல்வனே , அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய் .

குறிப்புரை :

காட்டூரூம் , கொழுநலும் வைப்புத் தலங்கள் , காட்டூரை , ` காட்டுப் பள்ளி ` எனினுமாம் . இதன்கண் , ` கடம்பூர் ` கானப்பேர் , கோட்டூர் , அழுந்தூர் , பனங்காட்டூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன . ` மாட்டு ` என்றதில் , டகர ஒற்று விரித்தல் ; ` பாட்டூர் , மாட்டூர் ` என்பன , வைப்புத் தலத்தின் பெயர் என்பாரும் உளர் . பனங்காட்டூர் - வன்பார்த்தான் பனங்காட்டூர் . இஃதன்றி வேறாகக்கொண்டு , வைப்புத் தலம் என்பர் அவர் . கானப்பேர் ஊர் - ` கானப்பேர் ` என்னும் ஊர் . அளவின்மைபற்றி , ` கடல் ` என்றும் , அசைவின்மைபற்றி , ` மலை ` என்றும் , ஆண்மைபற்றி , ` கொல்லேறு ` என்றும் அருளினார் . இறைவரை , ` கடலே , மலையே ` என்றற்றொடக்கத்தனவாகச் சொல்லி மகிழ்கின்றவர் , அவைகளைச் செய்யுட்கேற்ப வைத்து அருளிச் செய்தார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 2

கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்
குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா
வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா
அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட் டாடீ அடியார்
கவலை களையாயே.

பொழிப்புரை :

கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத் தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , மூப்படையாதவனே , வானத்தில் திரிபவனே , தேவர்க்குத் தலைவனே , மணவாளக் கோலம் உடையவனே , சங்கக்குழை பொருந்திய காதினையுடையவனே , அழகனே , எஞ்ஞான்றும் அவியாது எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக்கொண்டு , இரவில் , புறங்காட்டில் ஆடுகின்றவனே , உன் அடியாரது மனக் கவலையைப் போக்கியருளாய் .

குறிப்புரை :

குரக்குத்தளி , வைப்புத்தலம் . இதன்கண் ` குற்றாலம் , வாய்மூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . அடியவர் பலர்க்கு விண்ணில் தோன்றிக் காட்சியளித்தலின் , ` மங்குல் திரிவாய் ` என்று அருளிச்செய்தார் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 3

நிறைக்காட் டானே நெஞ்சத் தானே
நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய்
அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய்
மாகோ ணத்தானே
இறைக்காட் டானே எங்கட் குன்னை
எம்மான் தம்மானே.

பொழிப்புரை :

நின்றியூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , நெறிபிறழாமையையுடைய , சான்றானவனே , அடியவர்கள் நெஞ்சத்தில் இருப்பவனே , அவர்கட்குச் சிறிதும் துன்பத்தைக் காட்டாதவனே , நீர் பொருந்திய சடையை யுடையவனே , நெருப்புப் பொருந்திய கையை யுடையவனே , எம்தந்தைக்குத் தந்தையே , நீ எங்கட்கு உன்னைச் சிறிதும் புலப்படுத்தாதவனோ ?

குறிப்புரை :

` அல்லை யாதலின் , புலப்படுத்தருளுக ` என்பது எதிர்மறை எச்சமாய் வந்தியையும் , இதனுள் , ` நின்றியூர் , மறைக்காடு மாந்துறை , மாகோணம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன . மாகோணம் - கோணமாமலை ( திரிகோணமலை ). ` நிறைக்காட்டான் ` என்றதில் காட்டு - சான்று . இறைவனே எல்லாப் பொருட்கும் சான்றாதல் அறிக . ` மிறைக்காட்டான் , இறைக்காட்டான் ` என்பவற்றில் ககரவொற்று விரித்தல் , ` இறைக்காட்டாயே ` எனப் பாடம் ஓதுவாரும் ` உளர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 4

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே
அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்
கருகா வூரானே
பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான்
பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய்
பாசூர் அம்மானே.

பொழிப்புரை :

ஆரூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே , அமுதம் போல்பவனே , பிறவாத நெறியை உடையவனே , நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன் .

குறிப்புரை :

` ஆதலின் , உன்னையே பரவுவேன் ` என்பது குறிப்பெச்சம் . இதனுள் , அளப்பூரும் , பேரூரும் வைப்புத் தலங்கள் . ` பாரூர் ` என்பதும் , வைப்புத்தலத்தின் பெயர் என்பார் உளர் . இதனுள் , ` ஆரூர் , கருகாவூர் , பட்டீச்சுரம் , பாசூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன . பிறவாத நெறி , வீடுபெறும்வழி ; பிறப்பில்லாதவன் சிவபெருமானே ஆதலின் , அவனே அதனை அடையும் வழியைத் தருதற்குரிய வனாதலறிக . காரூர் பொழில்கள் புடைசூழ் புறவின் - மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் பக்கங்களிற் சூழ்ந்துள்ள முல்லை நிலத்தையுடைய .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 5

மருகல் லுறைவாய் மாகா ளத்தாய்
மதியஞ் சடையானே
அருகற் பிணிநின் னடியார் மேல
அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே
கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க் குன்னைப்
பவளப் படியானே.

பொழிப்புரை :

மருகல் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே . சந்திரனைச் சடையில் அணிந்தவனே , கருகிய கண்டத்தை யுடையவனே , கரும்புபோல்பவனே , கட்டிபோல்பவனே , பவளம் போலும் வடிவத்தையுடையவனே , உன் அடியார்மேல் வருகின்ற , மெலிதற் காரணமான நோய்கள் விலகிச் செல்லவும் , உன்னை அடைந்து இன்புறவும் அவர்கட்கு அருள் செய்யாய் .

குறிப்புரை :

மாகாளம் , வைப்புத்தலம் , அம்பர் மாகாளம் , இரும்பை மாகாளம் எனினுமாம் . இதனுள் , ` மருகல் , வெண்ணி , கானூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . ` குரல் ` என்றது மிடற்றை . ` கருகற் குரல் ` என்பது , வைப்புத் தலத்தின் பெயர் என்பாரும் உளர் . தம்பொருட்டு வேண்டுவார் , அதனோடு ஒழியாது அனைவர்க்குமாக வேண்டினார் என்க .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 6

தாங்கூர் பிணிநின் னடியார் மேல
அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய்
விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்
நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா
பழனப் பதியானே.

பொழிப்புரை :

வேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , இடபம் பொருந்திய கொடியையுடையவனே , நம்பனே , பக்கங்களில் உள்ள ஊர்களிற் சென்று பிச்சை தேடுகின்ற வேறுபட்ட தன்மையனே , மேலானவனே , உன் அடியார்மேல் உள்ள பொறுத்தற் கரிய நோய்கள் விலகிச் செல்ல அருள்புரியாய் .

குறிப்புரை :

வேங்கூர் , நாங்கூர் , தேங்கூர் இவை வைப்புத்தலம் . ` தேங்கூர் ` என்றதனை , ` தெங்கூர் ` என்பது முதல் நீண்டதாக உரைத் தலுமாம் . இதனுள் , ` விளமர் , நல்லூர் , பழனம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . ` தாங்கு ஊர் ` என்றது , ` பொறுத்தல் மிக்க ` எனப் பொருள் தருதலின் , அதற்கு இவ்வாறுரைக்கப் பட்டது .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 7

தேனைக் காவல் கொண்டு விண்ட
கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார்
அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே
அண்ணா மலையானே
ஊனைக் காவல் கைவிட் டுன்னை
உகப்பார் உணர்வாரே.

பொழிப்புரை :

` ஆனைக்கா , அண்ணாமலை ` என்னும் தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே , வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே , அழித்தல் தொழிலை உடையவனே , மேலானவனே , உடலோம்புதலை விட்டு , உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே , உன்னை உணர்வார்கள் .

குறிப்புரை :

` பிறர் உணரமாட்டார் ` என்பது , பிரிநிலை எச்சமாய் வந்தியையும் ; ` உகப்பாரே ` என்னும் பிரிநிலை ஏகாரம் விரிக்க . இதனுள் , ` ஆனைக்கா , அண்ணாமலை ` என்னும் தலங்கள் எடுத் தோதப்பட்டன .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 8

துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய்
சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப்
பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை
இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள்
அகல அருளாயே.

பொழிப்புரை :

துருத்தி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , ஒளிவடிவானவனே , சொல்லின்கண் உள்ளவனே , கல்லால மர நிழலில் இருப்பவனே , வெயிலாகியும் , காற்றாகியும் , மற்றும் பல வாகியும் நிற்பவனே , என் மனத்தை மேன்மேல் திருந்தச்செய்து , அதனை இடமாகக் கொண்டவனே , உன்னை அன்புசெய்து அடைந்தவர்களது வினைகள் நீங்க அவர்கட்கு அருள்செய்யாய் .

குறிப்புரை :

இதனுள் , ` துருத்தி , நெய்த்தானம் , பருதி நியமம் , கயிலாயம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன , ` பருதிநியமம் ` என்பது , எதுகைநோக்கி , விரித்தலாயிற்று . அடுக்கு , இடைவிடாமை பற்றி வந்தது . ` அருத்தித்து ` என்றது , ` அருத்தி ` என்னும் பெயரடி யாகப் பிறந்த செய்தெனெச்சம் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 9

புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப்
போதா மூதூரா
பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற
புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்
கடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவிற் கடவூ ராளீ
காண அருளாயே.

பொழிப்புரை :

புலியூர்ச் சிற்றம்பலம் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , ஞான வடிவினனே பழைமையான சிவலோகத்தை உடையவனே , பொலிவு பொருந்திய மூன்று ஊர்கள் எரிந்தொழியுமாறு அழித்த , புரித்த , புல்லிய சடையையுடையவனே , வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனது பெரிய இருபது கைகளையும் நெரித்த , பிறையைச் சூடினவனே , உன்னைக் கண்ணாற் காண அருளாய் .

குறிப்புரை :

இதனுள் , ` புலியூர் , புகலூர் , கடவூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . புலியூர் - பெரும்பற்றப்புலியூர் ; தில்லை . ` சிற்றம்பலம் ` அங்குக் கூத்தப்பெருமான் உள்ள இடம் . கலிசேர் புறவின் - எழுச்சியையுடைய முல்லை நிலத்தையுடைய . மூதூர் , வைப்புத்தலத்தின் பெயர் என்பாரும் உளர் .

பண் :கொல்லிக் கௌவாணம்

பாடல் எண் : 10

கைம்மா உரிவை அம்மான் காக்கும்
பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுர மன்ன
மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன்
அடியன் தமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார்
சிவலோ கத்தாரே.

பொழிப்புரை :

மை தீட்டிய , மாவடுப்போலும் பெரிய கண்களையும் , இனிமை நிலைபெற்ற அழகிய சொல்லையும் , இளமையையும் உடையவளாகிய சிங்கடிக்குத் தந்தையும் , சடையனாருக்கு மகனும் , யானைத் தோலையுடைய பெருமானுக்கு அடியனும் ஆகிய நம்பியாரூரனது இத்தமிழ்மாலையை , அப்பெருமான் எழுந்தருளி யிருக்கின்ற பல தலங்களையும் நினைந்து கவலையற்றிருந்து , சிறந்த வாயாற் பாடுவோர் , சிவலோகத் திருப்பவரேயாவர் .

குறிப்புரை :

` மதுரம் மன்னு அம் மொழியாள் ` எனப் பிரிக்க . இனி , ` மதுரம் ` என்றது ஆகுபெயராய்த் தேனைக் குறித்தது எனக் கொண்டு , ` தேன்போலும் மொழி ` என்றலுமாம் . இறைவனைப் பாடுதலின் , வாய் திருவுடையதாயிற்று .
சிற்பி