திருவாலங்காடு


பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 1

முத்தா முத்தி தரவல்ல
முகிழ்மென் முலையாள் உமைபங்கா
சித்தா சித்தித் திறங்காட்டுஞ்
சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர்போற்றும்
பரமா பழைய னூர்மேய
அத்தா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

இயல்பாகவே கட்டில்லாதவனே , கட்டுற்ற உயிர்கட் கெல்லாம் வீடளிக்கவல்ல , அரும்புகின்ற மெல்லிய தனங்களை யுடையாளாகிய உமையவளது பாகத்தையுடையவனே , சித்திகளை எல்லாம் உடையவனே , அச்சித்திகளை அடையும் வழியைக் காட்டுகின்ற சிவபெருமானே , தேவர்களாகிய விலங்குகட்குச் சிங்கம் போல்பவனே , அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே , அன்புடையார் பலரும் போற்றும் கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` பற்றா ` என்பது , ` பத்தா ` என மருவிற்று . ` ஆவேனே ` என்னும் ஏகாரம் , தேற்றம் . சுவாமிகள் , முன்னரே அடியார்க்கடியரா யினமையின் , இதற்கு இவ்வாறுரைத்தலே திருவுள்ளமாதல் அறிக . திருவாலங்காடு பழையனூரைச் சார்ந்த காடாதல் பற்றி , அதனை விரும்பியவாறாக அருளினார் ; முன்னை ஆசிரியர் இருவர் தாமும் இவ்வாறே அருளினமை காண்க . இறைவனை இவ்வாறு பல பெயர்களால் விளித்தது , அவனைப் பராவுதற் பொருட்டு ; எனவே , தேவர்ப்பராவும் பாடல் களுக்கு இஃது இயல்பாதல் தெளியப்படும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பொய்யே செய்து புறம்புறமே
திரிவேன் றன்னைப் போகாமே
மெய்யே வந்திங் கெனையாண்ட
மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பையா டரவம் அரைக்கசைத்த
பரமா பழைய னூர்மேய
ஐயா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

மனத்தொடு பொருந்தாத செயல்களையே செய்து , அதனால் உனக்கு மிகவும் சேய்மையிலே திரிவேனாகிய என்னை , அங்ஙனம் அகன்றொழியாதவாறு தடுத்து இவ்வுலகில் நேரே வந்து என்னை ஆட்கொண்ட மெய்ம்மையுடையவனே , மெய்ம்மை யுடையவர்க்கு மெய்ப்பொருளாய் உள்ளவனே , படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை அரையிற் கட்டிய கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` போகாமே ` என்றதன்பின் , ` தடுத்து ` என்பது வருவிக்க . நேரே வந்து ஆண்ட அருமையை எடுத்து ஓதுகின்றாராகலின் , ` என்னை ` என மறித்தும் வலியுறுத்துக் கூறினார் . இறைவன் நாவலூரர்பால் மெய்யனாயது , ` தடுத்தாள்வோம் ` எனக் கயிலையில் அருளியவாறே வந்து ஆண்டது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

தூண்டா விளக்கின் நற்சோதீ
தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பைப் புரம்மூன்றும்
பொடியாச் செற்ற புண்ணியனே
பாண்டாழ் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
ஆண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

தூண்ட வேண்டாது ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே , வணங்குவாரது துன்பத்தை நீக்குபவனே , எலும்பையே அணியாகப் பூண்டவனே , முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்த அறவுருவினனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகளாகிய அவற்றை நீக்கியருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

தூண்டா விளக்கு , இல்பொருளுவமை . ` விளக்கின் ` என்ற இன்னுருபு , ஈறு தொகுத்தலாய் நின்ற , ` நல்ல ` என்னும் குறிப்புப் பெயரெச்சத்தோடு முடிந்தது . இறைவன் பிறர் அறிவிக்க வேண்டாது , தானே அறியும் அறிவினனாதலின் , ` தூண்டா விளக்கின் நற்சோதீ ` என்று அருளினார் . ` புரமூன்றும் செற்ற புண்ணியன் ` உள்ளுறை நகை போல நின்று , தக்கதே செய்தமையைக் குறித்தது . ` பண்டு ` என்பது நீட்டலாயிற்று . பண்டையவற்றை , ` பண்டு ` என்று அருளினார் . ஆண்டான் - தலைவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

மறிநே ரொண்கண் மடநல்லார்
வலையிற் பட்டு மதிமயங்கி
அறிவே யழிந்தேன் ஐயாநான்
மையார் கண்ட முடையானே
பறியா வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அறிவே யாலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

தலைவனே , கருமைபொருந்திய கண்டத்தை யுடையவனே , தீர்க்க இயலாத வினைகளையெல்லாம் தீர்த்தருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , மான்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய , இளைய , அழகிய மாதர் ஆசையாகிய வலையில் அகப்பட்டு , அறிய வேண்டுவனவற்றை அறியாது , அறிவு அடியோடே கெட்டேன் ; அவ்வாறே இனியுங் கெட்டொழியாது , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` மதி ` என்றது புத்தியை . ` அறிவே ` என்னும் தேற்றேகாரம் , ` முற்றிலும் ` என்னும் பொருளைத் தந்தது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

வேலங் காடு தடங்கண்ணார்
வலையுட் பட்டுன் நெறிமறந்து
மாலங் காடி மறந்தொழிந்தேன்
மணியே முத்தே மரகதமே
பாலங் காடீ நெய்யாடீ
படர்புன் சடையாய் பழையனூர்
ஆலங் காடா உன்னுடைய
அடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

மாணிக்கம் போல்பவனே , முத்துப் போல்பவனே , மரகதம் போல்பவனே , பால் முழுக்கு ஆடுபவனே , நெய் முழுக்கு ஆடுபவனே , விரிந்த புல்லிய சடையை யுடையவனே , பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் வேல்போலும் , பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகப்பட்டு , உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து , மயக்கம் மிகுந்து என்னையே மறந்தொழிந்தேன் ; இனி அவ்வாறு இராது , என்றும் உன் அடியார்க்கு அடியனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

சிவபிரான் , நெறி சொல்லியது , முதல் நூலில் என்க . முன்னர் , ` நெறிமறந்து ` என்றதனால் , பின்னர் ` மறந்தொழிந்தேன் ` என்றது , தம்மையாயிற்று . தம்மை மறந்தமையாவது , திருவாரூரையும் , வீதிவிடங்கப் பெருமானையும் , அடியவர் திருக்கூட்டத்தையும் நினைக்க மறந்தமை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

எண்ணார் தங்கள் எயில்எய்த
எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகங் காக்கின்ற
கருத்தா திருத்த லாகாதாய்
பண்ணார் இசைக ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

உன்னை மதியாதவரது மதில்களை அழித்த என் தந்தையே , என் தந்தைக்கும் பெருமானே , உலகத்திற்குக் கண்ணாய் நின்று அதனைக் காக்கின்ற முதல்வனே , குற்றமில்லாதவனே , பண் பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர்த் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` உலகு ` என்றது , உயிர்களை . அவற்றிற்குக் கண்ணாதலாவது , ` கட்டு , வீடு ` என்னும் இருநிலையினும் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தல் . ` திருத்தல் ஆகாதாய் ` என்றது , ` திருத்துதல் உண்டாகாத இயல்பினனே ` என்னும் பொருட்டாய் , குற்றம் இன்மையைக் குறித்தது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

வண்டார் குழலி உமைநங்கை
பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த
விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும்
பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

வண்டுகள் நிறைந்த கூந்தலையுடையவளாகிய ` உமை ` என்னும் நங்கைதன் பாகத்தையுடையவனே , கங்கைக்குக் கணவனே , பகைத்தவரது ஊர்களை எரித்த இடப வாகனனே , வேத நெறியை உடையவனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தேவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` பண்டாழ் வினைகள் ` என்றதற்கு , மேலே ( தி .7. ப .52. பா .3.) உரைக்கப்பட்டது . ` அண்டன் ` என்றது , ` தேவன் ` என்னும் அளவாய் நின்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பேழ்வாய் அரவின் அணையானும்
பெரிய மலர்மேல் உறைவானும்
தாழா துன்றன் சரண்பணியத்
தழலாய் நின்ற தத்துவனே
பாழாம் வினைக ளவைதீர்க்கும்
பரமா பழைய னூர்தன்னை
ஆள்வாய் ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

பெரிய வாயையுடைய பாம்பாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் , பெரிதாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் விரைவில் உனது முதன்மையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு , தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளானவனே , உயிர் , பயனின்றிக் கெடுதற்கு ஏதுவான வினைகளை நீக்கு கின்ற கடவுளே , பழையனூரை ஆள்கின்றவனே , திரு வாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` அரவின் ` என , அல்வழிக்கண் சாரியை வந்தது . ஆயிரம் இதழ்களை யுடைமையின் , ` பெரிய மலர் ` என்றார் . பேழ் வாய் அரவின் அணையும் , பெரிய மலர் இருக்கையும் அவர்தம் பெருமையைக் குறிப்பான் உணர்த்தின . சரண்பணிதல் , தன் காரணந் தோற்றி நின்றது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

எம்மான் எந்தை மூத்தப்பன்
ஏழேழ் படிகால் எமையாண்ட
பெம்மான் ஈமப் புறங்காட்டிற்
பேயோ டாடல் புரிவானே
பன்மா மலர்க ளவைகொண்டு
பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங் காடாஉன்
னடியார்க் கடியேன் ஆவேனே.

பொழிப்புரை :

என் தந்தை , என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ் தலைமுறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே , சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடல் செய்பவனே , பல சிறந்த மலர்களைக்கொண்டு பலரும் வணங்குகின்ற , பழையனூர்க்குத் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

குறிப்புரை :

` ஏழேழ் `, உம்மைத்தொகை . இருவகை ஏழ்தலை முறைகளாவன , தந்தை வழியில் ஏழ் தலைமுறையும் , தாய் வழியில் ஏழ்தலை முறையுமாம் . ` மரபிரண்டும் சைவநெறி வழிவந்த ` எனத் திருஞானசம்பந்தரது குடிபற்றிச் சேக்கிழார் அருளியவாறு அறிக . ( தி .12 திருஞான . புரா . 17) இவற்றோடு தந்தைதன் தாய்வழியில் ஓர் ஏழ்கூட்டி . ` மூவேழ் தலை முறை ` என்றலும் உண்டு . ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை - ஆழா மேஅருள் அரசே போற்றி ` என்ற திருவாசகத்தைக் காண்க . ( தி .8 போற்றித் திருவகவல் - 119) இடுகாடாகிய புறங்காடும் உண்மையின் , ` ஈமப் புறங்காடு ` என விதந்தருளிச் செய்தார் .

பண் :பழம் பஞ்சுரம்

பாடல் எண் : 10

பத்தர் சித்தர் பலர்ஏத்தும்
பரமன் பழைய னூர்மேய
அத்தன் ஆலங் காடன்றன்
அடிமைத் திறமே அன்பாகிச்
சித்தர் சித்தம் வைத்தபுகழ்ச்
சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார்
பரமன் னடியே பணிவாரே.

பொழிப்புரை :

அடியார் பலரும் , சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும் , பழையனூரை விரும்பிய தலைவனும் , ஆகிய திருவாலங்காட்டு இறைவனது அடிமைத் திறத்தின் கண்ணே அன்புடையவராய் , சித்தர்களும் தங்கள் சித்தத்திலே மறவாது வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம் மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர் , சிவபெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர் .

குறிப்புரை :

` அவன் அடிநிழலைப் பெறுவர் ` என்றபடி . ` பலர் ` என்றதனை , ` பத்தர் ` என்றதனோடுங்கூட்டுக . ` அன்பு ` என்னும் பண்புப் பெயர் , பண்பியின்மேல் நின்றது . ` சித்தரும் சித்தம் வைக்கும் புகழ் , சிவபிரானது திருவருளால் வாய்க்கப்பெற்றவன் ` என்பது குறிப்பு . சித்தர் சித்தம் வைத்தமையை , பெருமிழலைக் குறும்ப நாயனாரது வரலாற்றால் அறிக . ` சிறுவன் ` என்பதில் உள்ள சிறுமை , ` அடிமை ` என்னும் பொருட்டு . ` அன்பாகிப் பாடி ஆடுவார் ` என இயையும் .
சிற்பி