திருவொற்றியூர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

தலைவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன் திருவடியை இடையீடின்றி யடையமாட்டாது , மாசுடைய உடம்பு கொண்டே அடைவேனாயினேன் ; அவ் விழி நிலைதானும் நான் அடையத்தக்க தொன்றாகியேவிடுமாயின் , ஒளியிழந்த என் கண்ணுக்கு ஊற்றத்தக்கதொரு மருந்தையேனும் , என் வேண்டு கோளுக்கு விடையாக நீ சொல்லியருள் ; ஏனெனில் , பசு முதலிய வற்றினிடத்திற் பாலை விரும்புவோர் , அவை இடுகின்ற சாணத்தை எடுத்தற் றொழிலைச் செய்தாயினும் அதனைக் கொள்வர் ; அதுபோல , நீ என் குற்றங்களை நோக்கி , இகழாது , உயிர்களிடத்து நீ விரும்புவ தாகிய குணம் என்னிடத்து இருத்தலை நோக்கி என்னை ஏற்றருளுதல் வேண்டும் . அக் குணமாவது ; யான் எப் பிழைசெய்வேனாயினும் , உன் திருவடிக்குப் பிழையைச் செய்யேன் ; வழுக்கிவிழும் பொழுதும் உன் திருப்பெயரைச் சொல்லுதலன்றி , வேறொன்றை அறியேன் .

குறிப்புரை :

திருவடியை இடையீடின்றி அடைதலாவது , உயிர் கருவி கரணங்களோடு கூடாது தூய்தாய் நின்று அடைதல் . ` திருக் கயிலையிலிருந்து அந்நிலையை அடையற்பாலனாகிய யான் இந் நிலையையடைந்தேன் ` என்று இரங்கியவாறு . ` இந்நிலைதான் என்னால் வந்ததே ` என்பார் , ` அதுவும் நான்படற் பாலதொன்றா னால் ` என்றார் . ` படப்பாலதொன்றானால் ` என்னும் பாடம் சிற வாமையறிக . ` பிழுக்கை வாரியும் பால்கொள்வர் ` என்பது ஒட்டணி யாய் நின்றமையின் , அதன் பொருள் வருவித்துரைக்கப்பட்டது . ` திருவடிக்குப் பிழையேன் ` என உருபு விரிக்க . எல்லாம் செய்வது திரு வடியே யாகலின் , அதனை மறந்து , ` யான் செய்தேன் ` என்று எண்ணு வதே திருவடிக்குச் செய்யும் பிழையாதல் உணர்க . ` இப்பிழையைச் செய்யாது , திருவடியை எஞ்ஞான்றும் மறவாது நினையும் இவ் வொன்றன்முன்னே , ஏனைய குற்றங்கள் பலவும் , பாலின்முன் சாணம் போலப் பொருளல்லவாய் ஒழியுமல்லவோ ` என்றபடி . இதனானே , திருவடிப் பிழைத்தலாகிய குற்றத்தின்முன்னே , ஏனைய குணங்கள் பலவும் சிறிதும் பொருளல்லவாய் ஒழியும் என்பதும் பெறப்பட்டது . கண் வேண்டுதலே , கருத்தாகலின் , ` மருந்து ` என்றதற்கு , ` மருந் தேனும் ` என்றுரைத்தலே திருவுள்ளமாதல் அறிக .

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கட்ட னேன்பிறந் தேனுனக் காளாய்க்
காதற் சங்கிலி காரண மாக
எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தீ
என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன்
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன்
பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` எட்டு ` என்னும் எண்ணின் வகையினால் விளங்குகின்ற சிறந்த வடிவங்களையுடையவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தரும் வினையையுடையேனாகிய யான் , அவ்வினை காரணமாக , இம் மண்ணுலகிற் பிறந்தேன் ; பிறந்து உனக்கு ஆளாகி , இடையே மாதரை விரும்பி மணந்தேனாயினும் , உன் திருவடியை மறந்திலேன் ; பிறவற்றைச் செய்யத் தவறினேனாயினும் , திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடைவிடாது நின்றேன் ; என்ன செய்தற் பொருட்டு அவற்றை நான் இப்பொழுது எடுத்துரைப்பேன் ! இத் துன்பமெல்லாம் , என்காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவேயாகும்

குறிப்புரை :

` ஆதலின் , நீக்கியருள் ` என்பது குறிப்பெச்சம் , ` கட்டம் ` என்பது , அதற்கு ஏதுவாகிய வினைகளைக் குறித்தது . எட்டு மூர்த்தி - அட்ட மூர்த்தம் . ` எடுத்துரைத்தலாற் பயன் என் ` என்றபடி . ` பெட்டேன் ` என்பது , ` பெட்டன் ` என நின்றது ; அதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே
கட்டி யேபலர்க் குங்களை கண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை யமுதே
அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்
சங்கும் இப்பியுஞ் சலஞ்சல முரல
வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

கங்கை பொருந்தியுள்ள சடையையுடையவனே , அடியார்கட்குக் கரும்பும் , கட்டியும் , அகங்கையிற்கிடைத்த நெல்லிக் கனியில் உள்ள அமுதமும்போல இனிமையைத் தருகின்றவனே , அனைவர்க்கும் பற்றுக்கோடாய் உள்ளவனே , தந்தையே , சங்குகளும் , சிப்பிகளும் , சலஞ்சலம் என்னும் சங்குகளும் ஒலிக்க , ` வயிரம் , முத்து , பிற மணிகள் , பொன் ` என்பவற்றை வாரிக்கொண்டு , பெரிய கடலின் கண் உயர எழுகின்ற அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , நீயே எனக்குத் துன்பஞ் செய்வையாயின் , அதனை நான் யாரிடம் நீக்குமாறு எடுத்துச்சொல்வேன் !

குறிப்புரை :

` கங்கை தங்கிய சடையையுடைமை , இருமனைவியரை மணந்து ஒரு மனைவியிடத்துக் கரவாய் நிற்றல் இயல்பாதலைக் காட்டும் குறிப்பினதன்றோ ` என்றபடி . கரும்பு முதலியனவாகக் கூறியது , அடியவர்க்குத் தீங்கு விளைவியாமையைக் குறிக்க வென்க . ` சலசல முரல ` என்பதே பாடம் போலும் ! கடல் எல்லா மணிகட்கும் உறைவிடமாதலின் , அலைகள் அவற்றை வரன்றி வருவவாயின என்க . ` ஓங்கும் ` என்பது குறுகிநின்றது .

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றால்
யாவ ராகில்என் அன்புடை யார்கள்
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற்
சொல்லு வாரையல் லாதன சொல்லாய்
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண்
கொள்வ தேகணக் குவ்வழக் காகில்
ஊன்று கோலெனக் காவதொன் றருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே . ` தாய் பெற்றதனால் கொள்ளப் பட்டதொரு சுற்றம் என்பது ஒருபொருளன்று ; அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் என் என்கின்ற இம்முறைமை பற்றி . நீ உன் னிடத்து அன்புசெய்பவரை , உனது இயற்கை வடிவம் அவர்கட்குப் புலனாகுமாறு வெளிநின்று ஆட்கொண்டுவிட்டால் , அதன்பின் உன் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பவரை , நீ ஒரு ஞான்றும் கடுஞ்சொற்சொல்லுவாயல்லை ; அங்ஙனமாகவும் , மூன்று கண்களை யுடையையாகிய நீ உன் அடியேனது இரண்டு கண்களைப் பறித்துக் கொள்வது , யான் செய்த குற்றங் காரணமாக நீதி நூல்களில் உள்ள முறைமையே யாகில் , எனக்கு உதவியாய் நிற்பதோர் , ஊன்று கோலையேனும் அளித்தருள் .

குறிப்புரை :

மக்கட்கு ` உறவுமுறை ` என்பது அவர்களை ஈன்ற தாயோடு ஒட்டியே வருவதாகலானும் , அவ்வுறவுமுறைமை இல்லா தார்தாமும் அன்புடையராய வழி , அவரினும் சிறந்து நிற்றல் இயல் பாதலானும் , அன்பை முதன்மையாகக் கொள்ளுதலே சிறந்த முறைமையாக வருதலை எடுத்தோதுவார் , இவ்வாறருளிச்செய்தார் . இறைவனுக்குப் பிறப்பால் உறவாவார் ஒருவரும் இன்மையறிக . ` ஈன்று ` என்றதனால் , ` தாய் ` என்பதே தானே வந்து இயைந்தது . ` ஈன்று ` என்றது , ` ஈன்றதனால் ` எனப் பொருள் தந்தது . கொண்டது - பெற்றது . தோன்றுதலுக்கு வினைமுதலும் , அளித் தலுக்குச் செயப்படு பொருளும் வருவிக்கப்பட்டன . ` சொல்லுவார் ` என்றது , அளிக்கப் பட்டவரையேயாம் . ` அல்லாதன சொல்லாய் ` என்றது , ` வெகுள் வாயல்லை ` எனப் பொருள் தந்து , ` சொல்லுவாரை ` என்றதற்கு முடிபாயிற்று . ` இம்முறைமை யெல்லாம் என்னிடத்தேயும் காட்டிய நீ , இதுபோது என்னை வெகுண்டு என் கண்களைப் பறித்துக் கொண்டாய் ` என்றபடி . ஊன்றுகோலை இறைவனே தரவேண்டியது , அவ்வளவிலேனும் அவனது இரக் கத்தைப் பெறின் , வருத்தம் நீங்கும் என்பது பற்றியும் , அவ்வூன்று கோலே கண்ணாக இயங்குதலை அவன் நெடிது கண்டிரான் என்பது பற்றியுமாம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்
உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்
சுழித்த லைப்பட்ட நீரது போலச்
சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளம்
கழித்த லைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல்பற்றிக் கறகற விழுக்கை
ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , யான் நன்னெறியைத் தலைப் படவே முயல்கின்றேன் ; ஒருஞான்றும் என்னை உன்னைப்போல ஒன்றாலும் தாக்குண்ணாத பெருமையேனாக நினைக்கின்றிலேன் ; அங்ஙனமாகவும் , நீ என் கண்ணைப் பறித்துக் கொண்டதனால் , வழிதெரியாது , சுழியிடத்துப்பட்ட நீர் போலச் சுழலாநின்றேன் . என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது ; இவற்றையும் , கழியிற் பொருந்திய நாயைப் போல ஒருவன் தரும் கோலை விடாதுபற்றி நின்று , அவனால் , ` கறகற ` என்று இழுக்கப்படுதலையும் ஒழித்து , நீ உனது திருவருள்களை எனக்கு அளித்தருள் .

குறிப்புரை :

` வழித்தலைப்படுவான் முயல்கின்றேன் ; உன்னைப் போல் என்னைப் பாவிக்கமாட்டேன் ` என்றது , ` யான் என் செருக் கினால் இக் குற்றம் செய்தேனல்லேன் ` என்றவாறு . உன்னைப் போல் என்னைப்பாவித்தல் என்றது , சிவோகம் பாவனையை ` என்றுங் கூறுப . கழித்தலைப்பட்ட நாய் , கழியிற் கட்டிவைக்கப்பட்ட நாய் ; அஃது ஒருவன் கோலைப்பற்றி நிற்றற்கு உவமை . ` கறகற ` என்பது , விரைவுக் குறிப்பு . ` கறகற ` என்றதன்பின் , ` என்று ` என்பது தொகுத்தலாயிற்று . ` இழுக்கை ` என்றதை , ` இழுக்கப் படுகை ` என்க . ` ஒழித்து ` என்றது , எல்லாவற்றையும் குறித்து , ஒழிக்கப்படுவன பலவாயினமைபற்றி , அருளும் பலவாயிற்று என்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்உன்
சீல முங்குண முஞ்சிந்தி யாதே
நானு மித்தனை வேண்டுவ தடியேன்
உயிரொ டுந்நர கத்தழுந் தாமை
ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , யான் மான்போலும் பார்வையினை யுடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு , உனது செயல்முறையையும் , குணத்தையும் நினையாமலே செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே , நானும் பிறர் போல உன்னை இத் துணை இரந்துவேண்டுவதாயிற்று ; அதனால் , என்றும் உன் அடி யேனாகிய யான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி , எனக்கு உண்டாகிய குறையினை நீக்கி அருள் செய்யாய் .

குறிப்புரை :

` மானை , தேனை ` என்ற ஐகாரங்கள் சாரியை . இறைவன் சீலமாவது , யார்மாட்டுங் கண்ணோடாது முறைசெய்தல் , குணமாவது , அங்ஙனம் செய்தற்கேற்ற , பற்று இகல் இல்லாத நடுவு நிலைமை . சுவாமிகள் , தம்மிடத்து இறைவன் அவ்வாறு இரான் என்று நெகிழ நினைந்தாராகலின் . ` சிந்தியாதே உற்ற வல்வினை ` என்று அருளினார் . உறுதல் - பொருந்துதல் ; அஃது ஈண்டு , செய்தலின் மேல தாயிற்று . ` வல்வினை ` என்றது , அதற்கு ஏதுவாகிய பெருங் குற்ற மான செயலை . அஃதாவது சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளினைப் பொருட்படுத்தாது கைவிட்டமை , சுவாமிகள் இறைவர்பால் தமக்கு உள்ள தோழமை உரிமையால் , எவற்றையும் நெருங்கி வேண்டி எளிதிற் பெற்றேவிடுவாராக , இது போது அது கூடாதாயினமைபற்றி , ` நானும் இத்தனை வேண்டுவது ` என்றார் . உயிரோடே நரகத்து அழுந்துதலாவது , கண்ணிழந்து அல மருதல் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மற்றுத் தேவரை நினைந்துனை மறவே
னெஞ்சி னாரொடு வாழவு மாட்டேன்
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற
பேதை யேன்பிழைத் திட்டதை யறியேன்
முற்று நீயெனை முனிந்திட அடியேன்
கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , நான் பிறர் ஒருவர் தேவரை நினைந்து உன்னை மறந்தேனில்லை ; அத்தன்மையான நெஞ்சை யுடையவருடன் சேர்ந்திருக்கவும் மாட்டேன் ; அங்ஙனமாக , நீ என்னை முற்றும் வெகுளுமாறு , உன்னை இனிதே பெற்றிருந்தும் பெறாதொழிகின்ற பேதையேனாகிய யான் செய்த பிழைதான் இன்னதென்று அறிகின்றிலேன் ; நான் உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவேனாயினேன் , இதன்மேல் , உன் அடியேனாகிய யான் செய்யக் கடவதாய் எஞ்சி நிற்பதொரு கடமை யாது ! ஒன்றுமில்லையாதலின் , யான் உற்ற துன்பத்தையும் , மிக்க பிணியையும் நீக்கியருள் .

குறிப்புரை :

சுவாமிகள் உடம்பிற் பிணியும் பெற்றமை யறிக . ` திருவாரூரில் உள்ள தேவனும் , ஒற்றியூரிலுள்ள நீயேயன்றி வேறொரு வன் அல்லனே ` எனவும் , ` நல்லனவாயினும் , தீயனவாயினும் என் செயற்கு நானே முதல்வனாவது , உன்னை மறந்து செய்யினன்றோ ` எனவும் , அங்ஙனமின்றி ` உன்னையே நினைந்து செய்யும் யான் குற்ற முடையேனாயது இவ்வாறு என்பது விளங்குகின்றதில்லை ` எனவும் , ` உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவாமைக்குமேல் , உயிர்கள் பெறுந்தூய்மையாவது ஒன்று உண்டோ ` எனவும் அருளியவாறு . ` இமைப்பொழுதும் ` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது . சுவாமிகளது உண்மைநிலை இதுவேயாகவும் , அவர்மாட்டு இறைவன் இவையெல்லாம் நிகழச் செய்தது , உலகிற்கு உணர் வுண்டாக்கவே என்பது இதனாற் கடைப்பிடித்துணர்ந்துகொள்க .

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

கூடி னாய்மலை மங்கையை நினையாய்
கங்கை யாயிர முகமுடை யாளைச்
சூடினாய் என்று சொல்லிய புக்கால்
தொழும்பனே னுக்குஞ் சொல்லலு மாமே
வாடி நீயிருந் தென்செய்தி மனமே
வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி
ஊடி னால்இனி யாவதொன் றுண்டே
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , ` நீ முதலில் மலைமகளை ஒரு பாகமாகப் பொருந்தினாய் ; பின்பு ஆயிரமுகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய் ; இதனை நினைகின்றிலையே ` என்று சொல்லப் புகுந்தால் , அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ ! ` மனமே நீ துன்ப முற்று என்ன பெறப்போகின்றாய் ` என்று மனத்தோடே சொல்லிக் கொண்டு . யான்அடைந்த குற்றத்திற்கு அஞ்சி உன்னிடத்திலே பிணங் கினால் , இனி வருவதொன்று உண்டோ ?

குறிப்புரை :

` யான் ` கொண்டது நீ முன்பு செய்து காட்டிய வழியேயன்றோ ; என்னை ஒறுப்பது என் ` என்பதனை அடிமையாகிய நான் சொல்லுதல் கூடுமோ என்றவாறு . ` தொண்டனேனுக்கும் ` என்னும் உம்மை , இழிவு சிறப்பு . ` மனனே ` என்றதன்பின் . ` என்று ` என்பது தொகுத்தலாயிற்று ; இவ்வாறன்றி , இறைவனை நோக்கிக் கூறிமுடித்தபின் , மனத்தை நோக்கிக்கூறி இரங்கி நின்றதாக வேறாகவே வைத்துரைப்பினுமாம் . இறைவன் காட்டிய வழியே செய்ததாவது , பரவையாரை மணந்தபின் , சங்கிலியாரை மணந்தமை . இச்செயலிடத்துச் செய்யும் சூள் சூளன்று என்பது , உன் செயலாலே அறியப்பட்டதே என்றல் திருவுள்ளம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்த னேமணி யேமண வாளா
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால்
அழையல் போகுரு டாஎனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்க ணாமுறை யோமறை யோதீ
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே

பொழிப்புரை :

வேதத்தை ஓதுபவனே , மணி முதலியவற்றைக் கரையிடத்துக் கொணர்ந்து சேர்க்கும் தண்ணிய கடல் அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , எனக்கு வலிமையாய் உள்ளவனே , மணி போல்பவனே , அழகுடையவனே , நீ எனக்கு , ` மகம் ` என்னும் நாண் மீன்கீழ் வந்த , ` சனி ` என்னும் கோள்போல்பவனாயினை ; அகத்தில் உள்ள பெண்டுகள் , நான் , ஆவது ஒரு காரியம் சொன்னால் , ` கண்ணிலியே நீ என் அறிவாய் ; கூவாதே ; போ ` என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன் ; முகத்தில் கண்ணில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன் ? மூன்று கண்களையுடையவனே , இது முறையோ !

குறிப்புரை :

சுவாமிகள் தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறுவாரல்லாராயினும் , அஃது உலகியலாதலின் , அவரிடமும் இஃது உண்டாயின் வியப்பில்லையென்றவாறு . சனி மகத்தில் வந்தால் , நாட்டிற்கும் , மக்களுக்கும் தீங்குவரும் என்றல் , கணிநூல் துணிபு . துன்பம் மிக்கதாயினும் இறைவனை இத்துணை வைது கூறுதல் கூடா தெனினும் , அவன் தன் அடியவரிடத்து இன்னோரன்னவற்றையும் பொறுக்கும் பேரருளாளன் என்பதை விளக்க , இவ்வாறு இத்திரு மொழி எழுந்தது என்க . ` அழையேல் ` என்பதும் பாடம் .

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஓதம் வந்துல வுங்கரை தன்மேல்
ஒற்றி யூருறை செல்வனை நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற
நான்ம றைஅங்க மோதிய நாவன்
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப்
பரக திதிண்ணம் நண்ணுவர் தாமே

பொழிப்புரை :

கடல் அலைகள் வந்து உலவுகின்ற கரையின்மேல் உள்ள திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனை , என்றும் உலகத்தாரால் போற்றப்படுகின்ற நான்கு வேதம் , வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும் , ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பி யாரூரன் பாடிய இப் பத்துப்பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள் , மேலான கதியைப் போய் அடைவார்கள் ; இது திண்ணம் .

குறிப்புரை :

` பெரிதும் மிக ` ஒருபொருட் பன்மொழி . சிறுமை , இங்கு இளமையைக் குறித்தது .
சிற்பி